பாலியல் வன்கொடுமை :
விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய்…
’தப்பு’ நாவலைத் தாமதமாகவே படிக்க வாய்ப்பு கிடைத்தது ஆயின் சரியானதைப் படித்தேன் என உறுதியாகச் சொல்லலாம் . கதை நேர்கோட்டுப் பாதையில் எளிமையாய்ச் செல்கிறது . திருப்பங்களும் இயல்பு போக்கிலேயே நடக்கிறது. தப்பு ஓரிடத்தில் மட்டுமே இல்லை திரும்பகிற இடமெல்லாம் தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு ,தப்பு …..
ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு வரும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு . முதலில் குழந்தை மீதான பாலியல் வன்முறை என்ற வகையில் தொடங்குகிறது . பின் 28 வயதுப் பெண் என நகர்கிறது .பெண்ணின் பெயர் சின்னப் பொண்ணு அவள் மனநிலைப் பிறந்தவள் என காணப்பட்டு , அதன் பின் அவள் வயிற்றில் ஏழுமாதக் கர்ப்பமோடு இருப்பதைச் சொல்லி , அப்புறம் அக்குழந்தை வயிற்றில் செத்து இருப்பதை கண்டுபிடித்து … இப்படி நாவல் சிக்கல் மேல் சிக்கலாக நகருகிறது . குற்றவாளி யார் என்பதுதான் சஸ்பென்ஸ் . இது கிரைம் நாவல் அல்ல .சமூக நாவல் . சமூகத்தை ஸ்கேன் செய்து காட்டும் நாவல் .
கிட்டத்தட்ட நாவல் முழுவதும் ஆய்வாளர் மனோன்மணியம் பார்வையில் நகர்கிறது . நாவல் நெடுக மனிதர்களுக்குள் இருக்கும் வன்மமும் போலித்தனமும் தோலுரிக்கப்பட்டுக்கொண்டே கதை நகர்கிறது .
காவல்துறை ,அரசு மருத்துவமனை இவற்றின் செயல்பாடு அன்றாடம் சமூக வாழ்வோடு நெருங்கி இருப்பதால் . இவற்றின் மீது எல்லோருக்கும் எரிச்சலும் கோபமும் இருக்கும் . அதற்கான நியாயமும் உண்டு . பணம் ,அதிகாரம் ,சாதி ,மதம் , அரசியல் செல்வாக்கு இவற்றின் கோரப்பிடி இங்கு வலுவாகவே உண்டு .
இங்கேயும் மனித இதயமும் , நீதி நேர்மைமீது பசிதாகமும் கொண்டவர்கள் இருக்கிறார்கள் . இங்குள்ள ஊழியர்கள் ,டாக்டர்கள் ,காவல்துறையினர் படும்பாட்டை இந்நாவல் காட்டுகிறது .கிராமமோ நகரமோ தோற்றத்தைக் கண்டோ , பேச்சைக் கேட்டோ ஒருத்தரை எடை போட்டுவிட முடிவதில்லை .ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து கிடக்கும் ரகசியங்களும் உண்மைகளும் மிகவும் ஆழமானவை . குரூரமானவை .அருவருப்பனவைகூட .கசப்பானவைம்தான் .
பாலியல் குற்றவாளி யார் ? அவர் தண்டிக்கப்பட்டாரா ? நாவலை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் . ‘ தப்பு’ என உன் ஒற்றை விரல் பிறரை நோக்கி நீளும் போது ஏனைய நான்கு விரல்களும் உன்னை நோக்கி நீள்கிறது . பாலியல் வன்கொடுமை பெரும் அநீதி . அயோக்கியத்தனம் . ஆயின் அதன் விஷ வேர் சமூகம் நெடுக விஷப் பார்த்தீனியமாய் விரவிக் கிடப்பதை இந்நாவல் அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது . 24 வது அத்தியாயத்தின் மனோத்த்துவ மருத்துவரோட உரையாடல் நாவல் வாசிக்கிறவர்களையும் குற்றவாளிக் கூண்டிலேற்றிவிடுகிறது . மனச்சாட்சியை உலுக்கிவிடுகிறது .
நாவலை வாசித்து விடுங்கள். நாவலிருந்து ஒரு சில வரிகளை மேற்கோள் காட்டுவதுகூட முழுவாசிப்புக்குத் தடையாகிவிடக்கூடாது என்பதால் தவிர்க்கிறேன் .கட்டாயம் வாசியுங்கள் !
தப்பு [ நாவல் ], நாராயணி கண்ணகி , எழுத்து பிரசுரம் , zerodegreepublishing@gmail.com , 89250 61999 , பக் : 284 , விலை : ரூ. 340 /
சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :
Post a Comment