ஆத்மா - வாள் - மூளை: ஐக்கிய இத்தாலி

Posted by அகத்தீ Labels:




புரட்சிப் பெருநதி -34


ஆத்மா - வாள் - மூளை:
ஐக்கிய இத்தாலி

சு.பொ.அகத்தியலிங்கம்



இயக்கத்தில் சேர்ந்தால்
தலை துண்டிக்கப்படும்
என்கிற முடியரசின் மூர்க்க கட்டளையும் மீறி
இளைஞர்கள் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்தனர்






மலைகளுக்குச் செல்லுங்கள்!
ஆலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் செல்லுங்கள்!
அவர்களுடன் உணவருந்துங்கள்!
அவர்களது உரிமைகளைப்பற்றிப் பேசுங்கள்!
அவர்கள் மீதான எல்லையற்ற அடக்குமுறைகளை உணரவையுங்கள்.”



இந்தக்குரல் இத்தாலியை சிலிர்த்தெழத் தூண்டியது .19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட ஸ்பெயின், ஆஸ்திரியா, போப், குறுநிலமன்னர்கள் ஆதிக்கம் என துண்டுதுண்டாய்க் கிடந்த நாட்டை இணைத்து ‘ஐக்கிய இத்தாலி’யை உருவாக்க கனவு கண்டு சாதித்துக் காட்டியவர் மூவர்.இத்தாலியின் ‘ஆத்மா’ மாஜினி; ‘வாள்’கரிபால்டி; ‘மூளை’ காவூர் என தன் கவிதையில் புகழ்மாலை சூட்டினார் ஆங்கிலக் கவிஞர் ஜார்ஜ் மெரி-டித் .கார்போனாரி (கரி எரிப்போர்) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இத்தாலிய விடுதலைக்காக உழைத்தனர். 16ஆம் வயதிலேயே இந்த இயக்கம் மாஜினியை கவர்ந்தது. 1829 இல் அந்த ரகசிய இயக்கத்தின் உறுப்பினர் ஆனார். 1830 இல் அதற்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது கைதானார்; ஆறு மாதம் தண்டனை பெற்று, ஸாவோனா சிறையில் அடைக்கப்பட்டார் .  “இளம் இத்தாலி” எனும்  இயக்கம் காணத் திட்டம் தீட்டினார்.நாடு கடத்தப்பட்டார்.



நாடுநாடாய் திரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . 1832இல் “இளம் இத்தாலி” எனும் பெயரில் இதழ் ஒன்றும், அதே பெயரில் தம் நாட்டின் விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் ஓர் அமைப்பும் தொடங்கினார்.ஆஸ்திரிய அமைச்சர் “ஒன்றுபட்ட இத்தாலி என்பது புவியியல் மாயை” என கூறியபோது “ஒன்றுபட்ட இத்தாலி தவிர்க்கமுடியாதது, இளம் இத்தாலியர்கள் அதை சாதித்து காட்டுவார்கள்” என மாஜினி நம்பிக்கையை எங்கும் விதைத்தார்.‘தேசம் என்பது வெறும் எல்லைக் கோடல்ல. மண்ணும் கட்டடங்களும் மட்டுமே தேசமல்ல. மக்களின் பாசமும் நேசமும் பிசைந்த உணர்வில் கலந்த ஒரு மாபெரும் கருத்தாக்கம். உரிமையும் வளர்ச்சியும் கலந்த மாபெரும் கனவு.’ என்கிற மாஜினியின் வரையறை உத்வேகத்தை அளித்தது .இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன கவித்துவமான வரிகள் மாஜினியுடையது ; மந்திரச் சொல்லாய் இளைஞர்களை முடுக்கிவிட்டது .



இயக்கத்தில் சேர்ந்தால் தலை துண்டிக்கப்படும் என்கிற முடியரசின் மூர்க்கக் கட்டளையும் மீறி இளைஞர்கள் ’இளம் இத்தாலி’ இயக்கத்தில் சேர்ந்தனர் . மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவரும் காலம் வரை ஐரோப்பிய இளைஞர்களின் ஈர்ப்பாக விளங்கியவர் மாஜினியே. கம்யூனிஸ்ட் அகிலத்தில் மாஜினியின் கருத்தோட்டம் வலுவாக இருந்ததையும்; அவரது சீடர் லூயிஜி ஒல்ப் நகல் அமைப்பு விதிகளை முன்மொழிந்ததையும் அதில் எல்லா இடத்திலேயும் மாஜினியே எட்டிப்பார்த்ததையும்; தெளிவற்ற பிரெஞ்சு சோசலிசமே மூக்கை நுழைத்ததையும் தன் சகா ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.“ஜெர்மனியைப் போலவே இத்தாலியும் புரட்சிகர ஜனநாயக வழியில் ஒன்றுபடவேண்டும். நெப்போலியன் பாணியிலான ஒருங்கிணைப்பைக் காட்டிலும் புரட்சிகர ஜனநாயக முறையிலான ஒருங்கிணைப்பே உறுதியானது, சரியானது…



1820 தொடங்கி ஆஸ்திரியா இத்தாலியை வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் ஆண்டு வருகிறது’….. இதற்கு ஒரே தீர்வு , ‘ஆஸ்திரியாவின் மேலாதிக்கத்தை முறியடிப்பது.’ இத்தாலியில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதற்கும் இது பொருந்தும்” என்றார் ஏங்கெல்ஸ்.1849இல் சார்டீனியாவின் புதிய மன்னராக, விக்டர் இமானுவல் பொறுப்பேற்றார். காவூர் எனும் ராஜதந்திரி, 1851 இல் அவருடைய பிரதமர் ஆனார். காவூர் ஒன்றுபட்ட இத்தாலியை உருவாக்கி இமானுவேலுக்கு முடி சூட்டிப் பார்க்க ஆசைப்பட்டார். காவூர் சூழ்ச்சி செய்து பிரெஞ்சு நாட்டில் நெப்போலியனுக்கும் ஆஸ்திரியாவுக்கும் சிண்டு முடிந்துவிட்டார். 1859 இல் இது நிகழ்ந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர். இந்த சந்தர்ப்பத்தைக் கரிபால்டி பயன்படுத்தி நேபிள்ஸ் - சிசிலி மீது படை எடுத்தார் .1859ஆம் ஆண்டு பிரான்ஸும் பிட்மாண்டும் போரிட்டுக் கொண்டன.



இந்தப் போர் இத்தாலியர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட எழுச்சிகள் தேசிய விடுதலைப் போராட்டமாக உருவெடுத்தது. இதனை சற்றும் எதிர்பாராத மூன்றாம் நெப்போலியன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஏப்ரல் 1860 இல் சிசிலியில் இன்னொரு எழுச்சி ஏற்பட்டது. மே மாதம் கரிபால்டி தலைமையில் தன்னார்வலர்களின் பெரும்படை ஒன்று புறப்பட்டு தெற்கு நோக்கிச் சென்றது. கிராமங்களூடே செல்லும் போது ‘வாருங்கள், என் படையில் சேருங்கள். வீரமுரசு ஆர்க்கும்போது வீட்டுக்குள்ளிருப்பவன் கோழை. உங்களுக்கு நான் போரும் துன்பமும் களைப்பும் அளிக்கிறேன். ஒன்று நாம் வெல்வோம் அல்லது வீழ்வோம்.’ என கரிபால்டி முழக்கமிட்டார். இத்தாலிய இளைஞர்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியில் இழுத்து வந்தது இந்த அழைப்பு.






ஏராளமானோர் படையில் சேர்ந்தனர். செப்டம்பர் 7ஆம் தேதி, கரிபால்டியின் படை நேபிள்ஸில் நுழைந்த போது வெற்றி கண்களுக்குத் தெரிந்தது. விரைவில் தெற்கு இத்தாலி விடுவிக்கப்பட்டது.ஏங்கெல்ஸ் கரிபால்டியை வெகுவாகப் புகழ்ந்தார். கரிபால்டியின் அசாதாரணமான ராணுவத் திறனையும், செயல்திட்டத்தையும் ஏங்கெல்ஸ் பாராட்டி எழுதினார். ‘ஆயிரம் பேரைக் கொண்டு நேபிள்ஸை கரிபால்டி வீழ்த்தியிருக்கிறார். போனபார்ட்டின் அரசியலை முறியடித்து, இத்தாலியை ஒருங்கிணைத்திருக்கிறார்’ என்றார்.காவூரின் அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கையாலும், கரிபால்டி மற்றும் அவருடைய வீரர்களின் தாக்குதலாலும், மாஜினியின் பிரச்சாரத்தாலும், ஒத்துழைப்பாலும் இத்தாலி படிப்படியாக விடுதலை பெற்றது.



இருப்பினும் மாஜினி விரும்பியதுபோல் அது குடியரசு ஆகவில்லை; 1871-இல் ரோமைத் தலைநகராகக் கொண்டு முடியரசாகவே மலர்ந்தது.கரிபால்டி உருவாக்கிய தொண்டர் படையின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. இவரது தலைமையில் ஆஸ்திரியா, வெர்சி, கோமோ ஆகிய பல இடங்கள் கைப்பற்றப்பட்டன. இத்தாலி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர், ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை.லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ராணுவப் புரட்சிகளில் முக்கியப் பங்காற்றியதால் ‘ஹீரோ ஆஃப் தி வேர்ல்ட்ஸ்’ என்று போற்றப்பட்ட கரிபால்டி 74 வயதில் மறைந்தார். தாம் பிறந்த ஜெனோவாவிற்குத் தெற்கில் உள்ள பைசா நகரில் 1872 மார்ச் 10இல் மாஜினி இயற்கை எய்தினார். ஆங்கிலக் கவிஞர்களான ஸ்வின்பர்ன், மெரிடித், எலிசபெத் பாரட் பிரெளனிங் ஆகியோரின் கவிதைகள் நெஞ்சை ஈர்ப்பன. ஸ்வின் பர்ன் எழுதிய “ரோமாபுரிக்கு முன் தங்குதல்” [THE HALT BEFORE ROME ] எனும் நெடுங்கவிதை காவியமாகும். கிரீஸ் விடுதலை போரை கவிஞர் பைரன் பாராட்டுவார்.



உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போரை பாராட்டும் ஆங்கிலக் கவிஞர்கள் தங்கள் நாட்டு அரசென வந்தால் பேசா மடந்தை ஆகிவிடும் இரட்டை நிலையை ஜவஹர்லால் நேரு தன் நூலில் பகடி செய்வார். இங்கிலாந்துக்கு பக்கத்திலுள்ள ஐரீஸ் விடுதலை, தொலைதூர இத்தாலி, இந்திய விடுதலை எனில் மாக்சிம் துப்பாக்கியும் வெடி குண்டுகளும் அனுப்புவதைக் கண்டு கொள்ளாதது ஏன் என்பது அவரது ஆதங்கம்.



புரட்சி தொடரும்...

நன்றி ; தீக்கதிர் , 26/05/2016






0 comments :

Post a Comment