சேர்ந்து நிற்பது இனி சாத்தியமல்ல…

Posted by அகத்தீ Labels:


 புரட்சிப் பெருநதி -35


சேர்ந்து நிற்பது 

இனி சாத்தியமல்ல…

சு.பொ.அகத்தியலிங்கம்


“கடவுள் ஏன் இன்னும் மக்கள் மனதில் இருக்கிறார்” 
என்ற கேள்விக்கு லெனின் சொன்ன பதில் 
இன்றைக்கும் வழிகா ட்டுகிறது.

“பொறுத்திரு … இன்னொரு 1905 ஆம் வருடம் வரும்…”
 1905 புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஜார் ஆட்சி அடக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கட்சியின் மேல் தட்டிலிருந்த பலர் தடுமாறினர்; அப்போது தொழிலாளர் கடிதங்களில் நீக்கமற நிறைந்திருந்த மேற்கண்ட வாசகத்தைச் சுட்டிக்காட்டினார் லெனின்.

ஒன்பது மாதம் உழைத்து – பல நூல்களைப் படித்து – 200 க்கும் மேற்பட்ட நூல்களின் மேற்கோளோடு – 340 பக்கங்களில் 1909 அக்டோபரில் எழுதி முடித்தார். லெனின் எழுதிய ஒரே தத்துவ நூல் இது மட்டுமே. ஜெனிவாவில் லெனின் இல்லாத காலத்தில் போக்டனோவ், “ ஒரு தத்துவப்பிரிவின் வீரசாகசங்கள்” எனும் தலைப்பில் உரையாற்ற வந்தார். லெனின் பத்து கேள்விகளைத் தயாரித்து தன் தோழர் டூப்ரோவின்ஸ்கிக்கு அனுப்பி கேட்கச் சொன்னார். இதன் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதே இந்நூல் எனலாம். ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஐந்தாவது மாநாடு லண்டனில் 1907 மே மாதம் நடந்தது. முதலில் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் நடப்பதாக இருந்தது. பிரதிநிதிகள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் டென்மார்க் அரசு தன் நாட்டில் மாநாட்டை நடத்த அனுமதி மறுத்துவிட்டது. அங்கிருந்து அனைவரும் ஸ்வீடன் நாட்டில் மால்மோ என்ற ஊருக்குப் போனார்கள். ஸ்வீடன் அரசாங்கமும் மாநாட்டை நடத்த அனுமதி தரவில்லை. பின்னர் அங்கிருந்து லண்டன் போய்ச் சேர்ந்தனர். அங்கே ஒரு பழைய தேவாலயத்தில் மாநாடு நடைபெற்றது.
நெருக்கடி நேரத்தில் தலைமறைவாய் கட்சியைக் கட்டுவதும்; சட்டப்பூர்வ வாய்ப்பைப் பயன்படுத்துவதும் சவாலான பணி. லெனின் அதற்கு பயிற்றுவித்துக் கொண்டிருந்த போதே தத்துவ உலகிலும் சவால்கள் எழுந்தன. “நாங்கள் ஒரு வேளை தவறாகப் போயிருக்கலாம்; ஆனால் நாங்கள் உண்மையைத் தேடுகிறோம்.” என்றார் லூனா சார்ஸ்கி. அவருடன் பஜரோவ், பக்டனோவ், பெர்மன், ஹெல்பாண்ட், யூஷ்விச், ஸூவரோவ் போன்றோர் மார்க்சியத் தத்துவத்தை திரித்து சீர்குலைவில் ஈடுபட்டனர்.  “தத்துவத்தில் நானும் ‘உண்மையைத் தேடுகிறவன்தான். சகதி போன்ற குழப்பமான, மிகப் பிற்போக்கான ஏதோ ஒன்றை மார்க்சியம் என்று சொல்லித் திரிகிற இந்தப் பேர்வழிகளுக்கு குறுக்கே தடங்கலாக நின்றது எது? உண்மையை கண்டுபிடிக்கும் முயற்சியில்; “பொருள் முதல்வாதமும் ‘அனுபவவாத’ விமர்சனமும் – ஒரு பிற்போக்குத் தத்துவத்தின் மீதான விமர்சன பூர்வக் கருத்துக்கள்” என்ற இந்நூலில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்” என்றார்.
இதுவொரு விசித்திரமே. 1909 ஜனவரியில் பாரீசில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. கட்சிக்குள் சில படிப்பாளிகள் மற்றும் மென்ஷ்விக்குகள் சட்டவிரோத கட்சியைக் கலைத்துவிட்டு சட்டப்பூர்வ அமைப்பொன்றில் கரைந்துவிட யோசனை சொன்னார்கள். லெனின் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்; “கட்சியின் திட்டம் ,போர்த்தந்திரம், பாரம்பரியம் யாவற்றையும் கைவிட நேரினும் கவலைப்படாமல்; கட்சி அமைப்பைக் கலைத்துவிட வேண்டுமென்றும்; சட்டப்பூர்வமாக வேலை செய்யக் கூடிய ஏதோவொரு அமைப்பை உண்டாக்க வேண்டுமென்றும் கூறி கட்சி படிப்பாளிகள் சிலர் [மென்ஷ்விக்குகள்] செய்கிற முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.” மேலும் ‘கலைப்பாளர்களை’ எதிர்த்து உறுதியுடன் போராட மாநாடு அறைகூவல் விடுகிறது.
”மாநாட்டு தீர்மானத்துக்கு விரோதமாக கட்சியைக் கலைக்கும் முயற்சியில் மென்ஷ்விக்குகள் ஈடுபட்டனர். இன்னொரு புறம் “டூமா”லிருந்து பிரநிதிகளை வாபஸ் வாங்கக் கோரி ஒரு பிரிவினர் குரல் எழுப்பினர். இவர்கள் ‘ஆட்ஜோவிஸ்ட்டுகள்’ எனப்பட்டனர். இந்த இரு முனைத் தாக்குதலில் இருந்து கட்சியைக் காப்பாற்ற லெனினும் போல்ஷ்விக்குகளும் போராட வேண்டியிருந்தது. டிராட்ஸ்கியும் சீர்குலைவாளர் பக்கம் நின்றார். லெனினை எதிர்க்கும் அனைவரையும் ஓரணியாக்க முயன்றார். ஸ்டாலின் முழுமையாய் லெனினை ஆதரித்து நின்றார். மறுபுறம் பல்கலைக் கழகங்களின் மாநாடு, மதுவிலக்கு மாநாடு, மாதர் மாநாடு, தொழிலக டாக்டர்கள் மாநாடு போன்ற சட்டப்பூர்வ மாநாடுகளில் போல்ஷ்விக்குகள் பங்கேற்று தங்களின் சரியான அரசியல் நிலைபாட்டை எடுத்துக்காட்டினர்.
போல்ஷ்விக் பத்திரிகையான “பாட்டாளி” சார்பில் பாரீசில் நடை மாநாடு ஆட்ஜோவிஸ்ட்டுகள் உள்ளிட்ட சீர்குலைவாளர்களை நிராகரித்தது. காப்ரி தீவில் மாக்சிம் கார்க்கி, போக்ட்னனோவுடன் இணைந்து நடத்திய கட்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்டவற்றோடு போல்ஷ்விக்குகளுக்கு உடன்பாடில்லை எனவும் இம்மாநாடு அறிவித்ததோடு புதிய பள்ளி நடத்தவும் முடிவெடுத்தது. தாய் நாவலைப் பாராட்டிய லெனின் கார்க்கியின் தவறான சித்தாந்த நிலைபாட்டை மென்மையாகச் சுட்டிக்காட்டி வென்றெடுத்தார். அவரைக் கட்சியிலிருந்து நீக்கியதாக சிலர் தவறான தகவல் பரப்பினர். உண்மை அல்ல. அடக்குமுறைப் பாணங்களால் அழிக்கப்படாது மிஞ்சி நின்ற சட்டப்பூர்வமான தொழிலாளர் அமைப்புகளிலிருந்து சீர்குலைவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்துவதில் போல்ஷ்விக்குகள் வெற்றியும் கண்டனர். கட்சியின் பால் சற்று அனுதாபத்துடன் நடந்து கொண்ட பிளக்கனோவ் கோஷ்டியுடன் ஐக்கிய முன்னணித் தந்திரத்தை பயன்படுத்தினர்.
நாத்திகப் பிரச்சாரம் குறித்தும் விவாதம் எழுந்தது. லெனின் தத்துவ நூல் எழுதியதைக் கண்டோம், லெனின் உறுதியான நாத்திகர்தான். எனினும் சொன்னார்,” பொத்தாம் பொதுவான சித்தாந்த போதனை மூலம் மட்டுமே மதத்தை முறியடித்துவிட முடியாது. அந்தப் போராட்டத்தை வெறும் போதனையாகச் சுருக்கிவிடக்கூடாது. மதத்தின் சமூக வேர்களைக் கெல்லி எறியும் நோக்குடனான வர்க்க இயக்கத்தின் திட்டவட்டமான நடைமுறையுடன் அது இணைக்கப்பட வேண்டும் என்றார்.
“கடவுள் ஏன் இன்னும் மக்கள் மனதில் இருக்கிறார்’’ என்ற கேள்விக்கு லெனின் சொன்ன பதில் இன்றைக்கும் வழிகாட்டுகிறது; “அச்சம் கடவுளை உருவாக்குகிறது. மூலதனத்தின் குருட்டுத்தனமான வலிமை கண்டு அச்சம். ஏன் குருட்டுத்தனமானது என்றால் அதை மக்கள் திரளால் உணரமுடியாது. அந்த வலிமையானது பாட்டாளிகள் மற்றும் சிறுவுடைமையாளர்களது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ‘திடீர்’, ‘எதிர்பாராத’, ’விபத்து’ அழிவுகளையும், நாசங்களையும், திவால் நிலைமைகளையும், விபச்சாரத்தையும், பட்டினிச் சாவையும் திணிக்கிறது. இதுவே நவீன மதத்தின் ஆணிவேர். இதைப் பொருள் முதல்வாதி முதலில் மனதில் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் பச்சைப் பிள்ளை வகையறா பொருள்முதல்வாதியாக இருக்கமாட்டார்.
”எனச் சுட்டினார். இதன் பொருள் நாத்திகப் பிரச்சாரத்தை மறுப்பதல்ல; வர்க்கப் போராட்டத்துடன் இணைப்பதே! ஒற்றுமைக்காகவே நான்காவது மாநாட்டில் பல சமரசங்களுக்கு இணங்கிய லெனினும் போல்ஷ்விக்குகளும் “மென்ஷ்விக்குகளுடன் ஒரே கட்சியில் சேர்ந்து நிற்பதென்பது இனியும் சாத்தியமல்ல” என்ற முடிவுக்கு அரசியல் சூழல் நெட்டித்தள்ளியது. “அமைப்பு ரீதியாக நாங்கள் பிரிந்துவிட்டோம்” என பகிரங்கமாக அறிவித்துவிட்டு; மிச்சம் மீதமுள்ள மென்ஷ்விக்குகளை வெளியேற்ற வேண்டிய நெருக்கடி முற்றியது.

புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 3/07/2017.

0 comments :

Post a Comment