கம்யூனிஸ்டாக வாழ்வதென்பதின் பொருள்.... ??? சு.பொ.அகத்தியலிங்கம்.

Posted by அகத்தீ Labels:

கம்யூனிஸ்டாக 
வாழ்வதென்பதின் 
பொருள்.... ???


சு.பொ.அகத்தியலிங்கம்.
 “ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது , 
“ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா ?”
என கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.
தோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள்


 ஒரு நூலைப் படித்துவிட்டால் உடனே நூல் அறிமுகமோ , விமர்சனமோ ,குறிப்போ எழுதுவது என் வழக்கம் ; இந்நூலைப் படித்துவிட்டு எழுதச் சொற்களின்றி இரண்டு மூன்று நாட்கள் இடிந்து உட்கார்ந்துவிட்டேன்.தூக்கத்திலும் தோழர் கோடேஸ்வரம்மா என்னோடு உரையாடிக்கொண்டே இருந்தார் . கட்சி, தத்துவம் , உள்கட்சிப் போராட்டம் ,தனிமனிதப் பண்பு என எவ்வளவோ பேசியும் பேச்சு முடியவில்லை.கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாறான  “ஆளற்ற பாலம்” வெறுமே தனிமனிதக் கதை என்பதைத்தாண்டி ; ஆந்திர கம்யூனிஸ்ட் இயக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவும்  அகம் புறமாகவும் உள்ளது .இந்த நூலை அவர் எழுதும் போது அவருக்கு வயது 92.  " திருமணம் ஆவதற்கு முன் அவர் சிறுவயதில் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்திருக்கக்கூடும் .அதன் பின் வாழ்நாள் முழுவதும் துக்கத்தை சுமந்துகொண்டே அலைந்திருக்கிறார்.தன் வாழ்க்கைக் கதையைச் சொல்லும்போதும் அந்தத் துக்கச் சுமையின் முடிச்சை அவிழக்கவில்லை.அவிழ்க்கப்படாத  அந்தச் சுமைமூட்டையில் நம் இதயம் பாரமாகிவிடும்.” என ஓல்கா முன்னுரையில் சொல்லியிருப்பது மிகை அல்ல .


 “இவளுக்குக் கணவன் இறந்துவிட்டானாம் ;அதுதான் இவளை நன்றாகாப் பார்த்துக் கொள்கிறார்கள்.” என சக மாணவிகள் பள்ளியில் சுட்டிப் பேசும்வரை தனக்கு திருமணம் ஆனதே தெரியாமல் வளந்தவர்தாம் கோடேஸ்வரம்மா . நாலு வயதிலேயே  விதவையான அவருக்கு மறுமணம் செய்துவைக்க அம்மா மற்றும் சீர்திருத்த எண்ணம் கொண்ட சிலர் முயற்சி எடுக்க கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த கொண்டபல்லி சீதாராமய்யாவுடன் 1939 ல் திருமணம் நடைபெற்றது ;அப்போது அவர் வயது பதினெட்டு. அதுவே அன்றைய சமூகச் சூழலில் மிகப்பெரும் சாகசம் .


சிறுவயதில் தேசிய இயக்கத்தில் இணைந்து தேசபக்திப் பாடல்களைப் பாடிவந்த கோடேஸ்வரம்மா - சீர்திருத்த இயக்கத்தோடும் கைகோர்த்த அவர் கம்யூனிஸ் இயக்கத்தால் கவரப்பட்டதும் ; தன் கணவனோடு அந்த இயக்கத்தில்  ஈடுபட்டதும் வியப்பே அல்ல ; அதுதான் அவர் இயல்பு .


தலைமறைவு வாழ்க்கையின் கொடுமைகளை அணுஅணுவாய் அனுபவித்தவர் .கட்சிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக தலைமறைவாக வாழும்போது கிராமிய முறையில் கருகலைப்பு செய்து  ; மரணத்தின் விழிம்பில் தப்பிப் பிழைத்தவர் . அப்போது அருவருப்பு பாராமல் உதவிய ஆண் தோழர்களை கோடேஸ்வரம்மா விவரிக்கும் போது தோழமையின் கனம் மனதுள் வியாபிக்கிறது .அதே நேரம் தலைமறைவு வாழ்விலும் தன் உடலிச்சையை தணிக்க முயன்ற சிலரின் குணகேடுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டியது .


சீத்தாரமய்யா - கோடேஸ்வரம்மா லட்சியத் தம்பதிகளாய் - போராளிகளாய் வலம் வந்தனர் .பிரஜா நாட்டிய மண்டலி ,மாதர் சங்கம் என பணிகளை தன் தோள்மீது சுமந்து திரிந்தார் . மேடை தோறும் இயக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பிவந்தார் .ஆண்களே பெண் பாத்திரம் ஏற்று நடிக்கும் காலம் ; பெண்கள் நடித்தால் வசை சொற்களில் குளிக்க வேண்டிவரும் .கோடேஸ்வரம்மா துணிந்து பெண் வேடமேற்று இயக்கமேடைகளில் நடிக்கலானார் . அதுமட்டுமா தெலுங்கான போராட்டத்தில் ஆயுதங்களை கொண்டு சேர்க்கும் சாகசப் பணியிலும் ஈடுபட்டுள்ளார் .கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு வந்த போது அது இவரை மிகவும் பாதித்தது .இரு பக்கமும் கருணை வற்றிப் போய் வறட்டுப் பிடிவாதம் மேலோங்கியது .


சீத்தாராமய்யா வாழ்விலும் சறுக்கல் ஏற்பட்டது . இருவரும் பிரிய நேரிட்டது .சீத்தாராமய்யா வெறொரு பெண்ணோடு வாழ - தன் கையை நம்பி கோடேஸ்வரம்மா வாழ்க்கைப் போரட்டத்தில் திக்குமுக்காடினாள் ; யாரிடமும் கையேந்தாமல் சொந்த உழைப்பில் நின்றார் ; அவரின் சுயமரியாதை உணர்வு படிக்கும் போதே நம்மைத் தொற்றிக் கொள்ளும் .


சீத்தாராமய்யா நக்சலைட் இயக்கம் பீப்பிள்ஸ் வார் குரூப்பின் தலைவரானார் . தலைமறைவாய் அவர் பயணமும் தொடர்ந்தது .மகணையும் மகளையும் வளர்க்கும் பொறுப்பை சீத்தாராமய்யாவே ஏற்க - அவர்களையும் பிரிய வேண்டிய நிலை கோடேஸ்வரம்மாவுக்கு .மீண்டும் படித்து ஒரு ஹாஸ்டல் வார்டனாய் வாழ்க்கையைத் துவங்கினார் .


கால ஓட்டத்தில் மகனும் தன் தந்தையின் இயக்கத்தில் சேர்கிறான் ; போலிஸாரால் கொல்லப்படுகிறான் .மகளின் கணவரும் திடீரென மரண மடைய - மனமுடைந்த மகளும் தற்கொலை செய்துகொள்ள தீப்பட்ட காயத்தில் தேளாய் கொட்டிய துயரத்தின் தொடர்கதை .வாழ்நாளெல்லாம் துணையாய் வந்த தாயும் மரணமடைய அப்பப்பா எவ்வளவுதான் ஒருவரால் தாங்க இயலும் ..

.

  “ அவருக்கு உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறதாம்.. “ 36 வருடங்களுக்குப் பிறகு அந்த புரட்சிக்காரனின் விருப்பத்தை நண்பர்கள் சொன்னபோது , “ எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்போல் இருக்க வேண்டாமா ?”என கோடேஸ்வரம்மா திருப்பிக் கேட்டது புரட்சிக்காரியின் மன உறுதிக்கும் பழுதற்ற பெண்சமத்துவப் பார்வைக்கும் சாட்சியாகும்.
தோழர்கள் சிலரே வற்புறுத்திய போது கோடேஸ்வரம்மா கேட்டாள் . “மனு சாஸ்திரம் ,இந்து மனப்பாண்மை என்னுள் ஜீவித்திருந்து ; எத்தனை வேதனைகளை அனுபவித்திருந்தாலும் -  பதிவிரதையைபோல் கணவனைக் காப்பாற்றுவேன் என நான் சொன்னால்கூட  ; வேண்டாம் என தடுக்க வேண்டிய கம்யூனிஸ்ட்டுகளாகிய நீங்கள் அடக்கிவைக்கப்பட்ட பெண்ணினத்திற்கு அநியாயம் செய்யலாமா ? கடிந்து கொள்ள வேண்டிய நீங்களே அவரைப் போய்ப் பார்க்கச் சொல்வது விநோதமாக இருக்கிறது..” 


கோடேஸ்வரம்மாவை வாட்டி வறுத்த எந்த துயரமும் அவரின் கொள்கை உறுதியை சிதைக்கவே இல்லை .அவர் எழுதிய சிறுகதை ,கவிதை எல்லாம் அவற்றை உரக்கப் பேசின . இலக்கிய உலகில் பரிசுகளையும் விருதையும் அவருக்கு கொண்டுவந்து சேர்த்தன .இலட்சியவாதி -இயக்கவாதி -இலக்கியவாதியும் ஆணாள்.
சிபிஐ ,சிபிஎம் , நக்சலைட் என மூன்று இயக்கத்தோடும் தொடர்பு உண்டு ;கட்சி பிளவு பட்ட பின் எந்தப் பிரிவிலும் உறுப்பினர் இல்லை . ஆனால் எப்போதும் மக்கள் தொண்டில் கம்யூனிஸ்ட்தான் . காம்ரேட்தான்.


ராஜேச்வர ராவ் , புச்சபல்லி சுந்தரயா ,.மாணிகொண்ட சூர்யவதி, தாபி ராஜம்மா , மத்துக்கூரி சத்திரம் இன்னும் பல தோழர்களின் அர்ப்பணிப்பு மிக்க கட்சி வாழ்க்கையூடே ,தெலுங்கானா போராளிகள் தொட்டி குமரய்யா ,சித்தபல்லி பாப்பா, இப்படி பலரின் தியாகக் கதைகளூடே மாபெரும் கம்யூனிஸ்ட் இயக்கம் பட்டபாட்டையும் சிந்திய இரத்தத்தைதையும்  சுயநலமற்ற அர்ப்பணிப்பையும் இந்நூலோடு பிசைந்து ஊட்டி இருக்கிறார் கோடேஸ்வரம்மா .


கட்சி பிளவுண்டபோது அரசியல் வெறுப்பு மேலோங்கி பழகிய நட்பும் தோழமையும் பட்டுப்போனதை ; கொள்கை மாறுபட்டவர் உடல்நலிவுற்றபோதும் கண்டுகொள்ளாமல் இருந்ததை சொல்லும் கோட்டேஸ்வரம்மா , ஒரு முறை சுந்தரையா மனைவி லீலாவதியிடம் , ஆண்கள் இப்படித்தான் வறட்டுத்தனமாக இருப்பார்கள் நாம் பெண்கள் அப்படி இருக்க முடியுமா எனக்கேட்டு இருவரும் ஒரு தோழரை பார்க்கப் போனதைச் சொல்கிறார் .


கொள்கை உறுதியை மெய்சிலிர்க்க சொல்லுவதுபோல் , வாழ்க்கையை வறட்டுத்தனமாய் அணுகும் சில புரட்சிக்காரர்களையும் அடையாளம் காட்டுகிறார் .ஓரிடத்தில் கோடேஸ்வரம்மா எழுத்கிறார் ;


 “ஆண் - பெண் இருவரும் சமம் என்ற உணர்வைக் கட்சிதான் எங்களுக்குள் ஏற்படுத்தியது .பெண்கள் ,ஆண்கள் ,தலித்துகள் ,மற்றவர்கள் எல்லாம் ஒன்றுதான் ; ஏற்ற தாழ்வுகள் கூடாது என வலியுறுத்தியது.சொல்லியதோடன்றி எங்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்ததும் கட்சிதானே .அன்று கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்த சுதந்திரத்தினால்தான் நாங்கள் எத்தனையோ காரியங்கள் செய்தோம் . ஆனால்...” இதனை அடுத்து கோடேஸ்வரம்மா சுட்டுவதுதான் மிக முக்கியம் .


 “ஆனால் ஆண்களைவிட பெண்கள் ஓரடி முன்னே வைத்தால் மட்டும் அவர்களின் ‘ ஆணாதிக்கம்’ தென்படும் .பெண்களிடம் அவர்களுக்கு வெறுப்போ , அடக்கி வைக்கும் எண்ணமோ இல்லை என்றாலும்  ‘ தான் உயர்ந்தவன்’ என்கிற நினைப்பு ஒரேயடியாகப் போய்விடாது.அவர்களும் இந்த சமுதாயத்தில் பிறந்தவர்களில்லையா ? ஆனால் சமச்சீர் சமுதாயம் உருவானால் இதெல்லாம் தானாக மறைந்துவிடும் எனக் கட்சி நம்பி வந்தது . எது எப்படி இருந்தாலும் மற்ற ஆண்களைவிட தோழர்கள் மேல்தான்.” ஆம். இன்றும் அப்படித்தானே சொல்ல முடிகிறது .பெண்ணின் வலியை சுந்தரய்யா போல் , ராஜேஸ்வரராவ் போல் புரிந்து கொண்டோர் எத்தனை பேர் ? ஆணாதிக்கத்திற்கு எதிரான போர் கட்சிக்குள்ளும் ; ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய ஒன்றல்லவா ?


கோடேஸ்வரம்மா காட்டிய மனவுறுதி , சுயமரியதை ,தன்னம்பிக்கை , சொந்தக்காலில் நிற்கும் உழைப்பு உறுதி  என ஒவ்வொன்றும் பெண்ணியத்தின் முக்கிய கூறுகளன்றோ ?இந்நூல் பெண்ணிய நூல் - தன்னம்பிக்கை நூல் - கட்சி வரலாற்று நூல் - போராளியின் தன்வரலாற்று  நூல் . 


ஒவ்வொரு ஆண் பெண் கட்சித் தோழரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் ;கோடேஸ்வரம்மாவின் கஷ்ட வாழ்க்கையோடும் போராட்ட வாழ்க்கையோடும் எந்தச் சூழலிலும் கட்சி மீதும் கொள்கை மீதும் பற்று அறாத  அவரின் உணர்வோடும் ஒவ்வொருவரும் தன்னை உரசிப் பார்த்து  ; நம்மை நாமே செதுக்கிக் கொள்ள இந்நூல் ஒரு பட்டறைக்கல்லாகும்..


 “ தனியாளாய் தனிமையில் ஒடுங்காமல்
துக்க சம்பவங்களால் பெருகிய கண்ணீர் ஆறாகி
விண்ணைத் தொட்ட இயக்கத்தின்
கலாச்சார நினைவுகளில் கடலாகி
கொள்கை முத்துகளை எதிர்காலத்திற்காக
தவிப்புடன் பாதுகாத்து
வயது கடந்தும் பொறுமையுடன் அம்முத்துகளை
எழுத்தில் வடித்து
ஆறுதல் அடைகிறேன்” 


என்கிறார்  ‘நிஜன வாராதி’ [ஆளற்ற பாலம் ] எனும் இந்நூலில் கோடேஸ்வரம்மா ; படிக்காமல் கடக்க முடியுமோ  உங்களால் ?


ஆளற்ற பாலம் 

ஆசிரியர்  : கொண்டபல்லி கோடேஸ்வரம்மா,தமிழில் :கெளரி கிருபானந்தன் ,

வெளியீடு :  காலச்சுவடு பப்பிளிகேஷன் [பி]லிட்,669 , கே.பி.சாலை , 
நாகர்கோவில் - 629001.

பக் :272 , விலை : ரூ.295.


நன்றி : இளைஞர் முழக்கம் ,ஜூலை ,2017.09 /07/2017 ல்

ஆளற்ற பாலம் மொழிபெயர்ப்பு, கௌரிகிருபானந்தன் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்தது ஆனால், எங்குமே நீங்கள் மொழிபெயர்ப்பு பற்றியோ மொழிபெயர்ப்பாளர் குறித்தோ இந்த விருது குறித்தோ குறிப்பிடவில்லை. முன்பொருமுறை, சுப்பாராவ் மொழிபெயர்ப்பின்போதுகூட உங்களிடம் இது பற்றி சில ஆண்டுகளுக்குமுன் பேசிய நினைவு.

எஸ் வி வியின் மின்னஞ்சல்

தோழர் எஸ் வி வி ! நீங்கள் சுட்டிக்காட்டும் பிழையை செய்துவிட்டேன் .இப்போது வருந்துகிறேன். மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றிய மதிப்புரைகளில் இப்பிழை எனக்குத் தொடர்கிறது. மன்னிக்க முடியாத தவறுதான் . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . கெளரி கிருபானந்தன் மின்னஞ்சல் தெரிவிக்கவும் . அவரிடமும் வருத்தம் தெரிவித்து விடுவதுதான் நாகரிகம் . இதையே பிறபதிவுகளிலும் சேர்த்துவிடுகிறேன் .

சுபொஅ

Attachments area

2 comments :

  1. kashyapan

    அருமை -அருமை ! கொடெஸ்வரம்மாக்கள் இன்றும் இருக்கத்தன் செய்கிறார்கள் தோழர்---காஸ்யபன்.

  1. vimalavidya

    நினைவு சூழலின் மகத்தான உணர்வுகளை "அவர் " மட்டும் சொல்லி விடவில்லை.. மதிப்புரையும் சொல்லி உள்ளது- பொது வாழ்க்கையிலும்
    மனித உணர்வுகளை நசுக்கிவிடுவதும் அதை தாங்கி கொள்வதும் எந்த அளவு சாத்தியம் ?
    பாராட்டுக்கள் சு.பொ ..

Post a Comment