புரட்சிப் பெருநதி -36
உடன்பாடும் இல்லை: சமரசமும் இல்லை…
அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச் சாளரங்களூடே அவர் செய்த பிரச்சாரம் படைவீரர்களை வீறுகொள்ளச் செய்தது. அவர்கள் இவரை விடுதலை செய்தனர். திரைப்படக் காட்சி போல் தோன்றும் இச்சம்பவம் உண்மையில் 1849இல் நடந்தது எனில் ஆச்சரியப்படுவீர்கள். இந்த உண்மைக் கதையின் நாயகன் வில்ஹெல்ம் லீப்னெக்ட். லீப்னெக்ட் 1826இல் ஜீஸ்சென் எனும் ஜெர்மன் நகரில் அதிகாரியின் மகனாய்ப் பிறந்தவர்; தாய், தந்தையரை ஆறு வயதுக்குள் இழந்தவர். 16வயதில் ஜீஸ்சென்னில் தொடங்கி பெர்லினிலும் கல்லூரியில் தத்துவம், மொழியியல், இறையியல் பயின்றார்.
கல்லூரியில் கிறிஸ்துவத்தின் சாரம் – உழைப்பு பற்றி தீவிர விவாதங்களில் பங்கேற்றார். படிப்பு முடிந்து ஊர்திரும்பும் வழியில் ஆஸ்திரிய ஆதிக்கத்திலுள்ள சாக்ஸ்னி, பொஹிமா ஆகியவற்றிற்கு சென்றார். அங்கு ஆட்சிக்கு எதிரான எழுச்சியில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டு – நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அரசியலால் ஈர்க்கப்பட்டு; மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துகளைத் தேடித் தேடி வாசித்தார். 1847இல் சுவிட்சர்லாந்தில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதே ஜெர்மன் எதிர்க்கட்சிப் பத்திரிகை ‘மான்ஹெய்னர் அபெண்ட்ஸெய்டங்’கின் நிருபரானார். பேடன் நகர் சென்று முதலாளித்துவ ஜனநாயகவாதி குஸ்டாவ்ஸ்ட்ரூக் தலைமையில் நடந்த எழுச்சியில் பங்கேற்றார். அரசு படையிடம் லீப்னெக்ட்டும் தோழர்களும் சிக்கிக் கொண்டனர். விடுதலையானதும் ஸ்ட்ரூவின் தளபதியானார்.
பிராஸ்டட்டில் மீண்டும் கைதானார். அந்த சம்பவம்தான் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டது. பேச்சாற்றலால் விடுதலையானார். பிரஷ்ய ராணுவத்தை எதிர்த்த இறுதிப் போரில் பங்கேற்றார். ஜெர்மனிக்குள் இவர் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ஜெனீவாவில் குடியேறினார். அங்கு ஏங்கெல்சைச் சந்தித்தார். ஜெனீவாவில் ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையின் தலைவராக லீப்னெக்ட் தேர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் தனிக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். பின்னர் நாடுகடத்தப்பட்டார். லண்டனில் குடியேறினார் . அங்கு மார்க்ஸின் நெருங்கிய தோழரானார். சீடரானார். குடும்ப நண்பரானார். 1862இல் ஜெர்மன் திரும்பினார். 1863இல் லாஸ்ஸல் தோற்றுவித்த ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சபையில் இணைந்து செயல்படலானார்.
‘பிஸ்மார்க் பிற்போக்குவாதி அல்ல’ என நம்பவைக்க லஸ்ஸால் முயன்றார்; லீப்னெக்ட் நம்பாதது மட்டுமல்ல 1865 ல் அச்சுத் தொழிலாளர் மத்தியில் உரையாற்றும் போது, ‘‘முற்போக்குக் கட்சியோ –பிரஷ்ய அரசாங்கமோ தொழிலாளர் சமுதாயக் கோரிக்கையை தீர்க்கமாட்டா அரசாங்க உதவி பற்றிய அனைத்து பேச்சுகளும் போலி புலமைவாதப் பேச்சுதான். சொல் அலங்காரம்தான். முதலாளித்துவத்தை முற்றாகத் தகர்த்து தரைமட்டமாக்கும்வரை தொழிலாளருக்கு மெய்யான விடுதலை இல்லை’’ என்றார். சும்மா இருக்குமா அரசு, ‘ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ எனக் கைது செய்யப்பட்டு – நாடு கடத்தப்பட்டார் . அங்குதான் ஜெர்மன் சோஷலிஸ்ட் பேபலைச் சந்தித்தார் .தான் ஒரு சோஷலிஸ்டாக மாற்றம் பெற லிப்னெக்டே காரணம் என்றார் பேபல் .
1867இல் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .அங்கு பேபலுடன் இணைந்து திறமையாகச் செயல்பட்டார் . 1869ல் இவ்விருவர் முயற்சியில் ‘வோல்க்ஸ்ட்டாட்’ எனும் ஏடு துவக்கப்பட்டது. லீப்னெக்ட் ஜெர்மன் பிரதிநிதியாக ‘முதல் அகிலத்தில்’ பங்கேற்றார் . 1870இல் ராணுவத்துக்கு நிதி ஒதுக்குவதை எதிர்த்து இருவரும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்; தேசத்துரோக வழக்கில் சிறையிலடைக்கப்பட்டார். 1874இல் சிறையிலிருந்தபடியே லீப்னெக்ட் வென்றார். 1875இல் கோதா எனுமிடத்தில் நடைபெற்ற மாநாட்டில் –இரண்டு கட்சிகள் இணைந்த மாநாட்டில் ஒரு செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இது ‘கோதா திட்டம்’ மார்க்சிய நோக்கில் இல்லை என மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தனர்.
1877 தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி ஐந்து லட்சம் வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து; சோஷலிசக் கருத்துகள் பரவுவதைத் தடுக்க கடும் சட்டம் பிறப்பித்தனர் ஆட்சியாளர். 1879இல் ‘சோஷியல் டெமாக்ரட்’ என்ற சட்டவிரோத ஏடு துவங்கினர். முதலாம் அகிலத்தில் லீப்னெக்ட் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. லண்டனில் இருந்து திரும்பியதும் லீப்னெக்ட் கைது செய்யப்பட்டார். ஆறுமாதம் தண்டனை பெற்றார். விடுதலை செய்யப்பட்ட பின்பும் போலீஸ் கண்காணிப்பு வளையத்திலேயே வைக்கப்பட்டார் .
1881இல் தேர்தலில் போட்டியிட்டு கட்சி மூன்று லட்சம் வாக்குகள் வாங்கியது. கட்சிக்கு நிதி திரட்ட 1886இல் லீப்னெக்ட் பலநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த அனுபவங்களை ‘ புதிய உலகம்: ஒரு பார்வை’ எனும் நூலாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் எழுதிய ‘‘பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு’’ நூல் பல பதிப்புகளைக் கண்டது. ‘‘சிலந்தியும் ஈயும்’’ என்ற தலைப்பில் தொழிலாளி வர்க்கத்தோடு அவர் பேசிய உரை ஒரு சிறு வெளியீடாக வந்தது. ஈக்களை தன் வலைப் பின்னலில் விழவைத்துப் பின் அவற்றைக் கொலைவெறியோடு உண்ணும் சிலந்தியை முன்வைத்து பாட்டாளிகளுக்கு நீங்கள்தான் அந்த ஈக்கள், உங்கள் ஆண்டைகளும் முதலாளிகளும்தான் சிலந்திகள் என்று புரிய வைக்கிறார்.
விதியை நோவதற்கு மாறாக எண்ணிக்கையில் அதிகமான ஈக்களெல்லாம் ஒன்றாக முடிவெடுத்தால் தங்களின் சிறகசைப்பில் எத்தனை சிக்கலான வலைப் பின்னல்களையும் அறுத்தெறிந்து விடுதலை பெற முடியும் என்பதை ஆவேசத்துடன் விளக்கும் இப்பிரசுரம் லீப்னெக்ட் பெயரை உலகெங்கும் தொடர்ந்து உச்சரிக்கச் செய்தது; இன்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விழைகிற ஒவ்வொருவரும் அவசியம் படிக்கும் பிரசுரம் இதுவாகும். 1881ல் அடக்குமுறை சட்டம் திரும்பப் பெறப்பட்டது. கட்சி மாநாடு ஹாலேயில் நடைபெற்றது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘வோர்வார்ட்ஸ் பெர்லினர் வோல்க்ஸ்பிளாட்’ மலர்ந்தது .லீப்னெக்ட் அதன் ஆசிரியரானார். பிரஸ்ஸல்சில் நடந்த இரண்டாவது அகிலத்தில் பங்கேற்றார். 1869இல் லீப்னெக்ட் 70 வது பிறந்த நாள் பெர்லினில் விழாவாகக் கொண்டாடப்பட்டது ஹனோவரில் நடந்த மாநாட்டில் பங்கேற்க இயலாத போதும் இவர் எழுதி அனுப்பிய உரை பிரசுரமானது. ‘‘சமரசங்களே கிடையாது! தேர்தல் உடன்பாடுகளும் கிடையாது’’ என்பது முக்கிய ஆவணமாக வழிகாட்டியது ‘‘ஒரு சமூக ஜனநாயகவாதி முதலாளித்துவ முகாமிலிருந்து வரக்கூடிய ஒவ்வொரு நண்பனின் ஆபத்தான நோக்குகளையும் அம்பலப்படுத்தும் திறமை படைத்திருக்க வேண்டும். அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. லீப்னெக்ட் இதனை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளார்’’ என்பார் லெனின்.
இறுதி மூச்சுவரை மார்க்சியத்தை உயர்த்திப் பிடித்தும்; அதற்கு எதிரானோரை விமர்சித்தும் போராடிய லீப்னெக்ட் 1900இல் இயற்கையெய்தினார் . அவரது மகன் கார்லினால் தன் தந்தையின் அடிச்சுவட்டில் கட்சியை முன்னெடுத்தார்.
புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் ,10/07/2017
0 comments :
Post a Comment