புரட்சிப் பெருநதி - 38
அனைத்தையும் சந்தேகி!
சு.பொ.அகத்தியலிங்கம்
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டடைகிறேன்’’
‘‘நான் தத்துவத்தைக் காதலிப்பவன். ஆனால், என் காதலியோ என்னை உதாசீனப்படுத்தி பாராமுகமாக இருக்கிறாள்’’ - சொன்னவர் யார்?
மனிதனின் தத்துவத் தேடல் கிட்டத்தட்ட ஆண்டான் – அடிமை யுகத்திலேயே கருக்கொண்டாலும் ; நெடுநாளாய் அறிவியலும் தத்துவமும் பிணைந்தே கிடந்தது . 19 ஆம் நூற்றாண்டில் வில்லியம் வெவல் என்பவர்தான் அறிவியலுக்கு ஒரு வரையறை செய்து தத்துவத்தையும் அறிவியலையும் வேறுபடுத்தினார் .
பிளாட்டோ, அரிஸ்டாட்டில், தலாமி என சகலரும் இரண்டையும் சேர்த்தே எழுதினர். அவர்கள் இயற்கை தத்துவவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர் .நாம் இங்கு இந்திய தத்துவஞான வரலாற்றுப் போக்கை பேசப்போவதில்லை .பெரிதும் பொருள் முதல் வாதம் சார்ந்த அதன் வரலாற்றை தனியாக அலசவேண்டும் .
19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக இரண்டும் வேறுவேறு துறையாகின .ஆயினும் அறிவியல் பூர்வமாக தத்துவத்தை கட்டி எழுப்ப முயற்சி நடந்துகொண்டே இருந்தது. ஆகபுரட்சிகரமான தத்துவம் மார்க்சியமே.இதனை சூனியத்திலிருந்து மார்க்ஸ் உருவாக்கவில்லை.
‘‘காண்ட்டும் ஃபிஹ்டேயும் தொலைதூரத்திலுள்ள
உலகத்தைத் தேடி வானில் பறக்கிறார்கள் ;
நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன்
அதைத் தெருவில் கண்டடைகிறேன்’’
- என 1837 இல் நையாண்டிக் கவிதை எழுதினார் மார்க்ஸ்.
தம் காலத்து தத்துவஞானங்களை , அறிவியல் உண்மைகளைத்தேடிப் படித்து –விமர்சித்து –கொள்வன கொண்டு , தள்ளுவன தள்ளி பாட்டாளி வர்க்கத்துக்கான சொந்த தத்துவமாக மார்க்சியத்தை உருவாக்கியதே பெருங்கதை.‘‘அனைத்தையும் சந்தேகி!’’ என்கிற பொன்மொழியே தனக்கு மிகவும் பிடித்தமானது என்பார் மார்க்ஸ். ஆனால் அந்த வாசகம் மார்க்ஸ் உருவாக்கியதல்ல . ரெனே டெஸ்கார்ட்ஸ் என்கிற டெமாக்கிரிடஸ் எனும் கிரேக்க தத்துவஞானியுடையது. கல்லூரியில் தம் முனைவர் பட்டத்திற்கான தத்துவ ஆய்வில் டெமாக்கிரிடஸ், எபிகூரஸ், ஃப்ளுடார்க் ஆகியோரை விமர்சன நோக்கில் சுட்டிக்காட்டினார் மார்க்ஸ்.‘‘மனிதவாழ்க்கை மதத்தின் மரணச் சுமையினால் - பூமிப் புழுதியில் அடிமையாகக் கிடந்த போது – ஒரு கிரேக்கன் முதலில் தலைநிமிர்ந்தான் ; கிரேக்க அறிவியக்கத்தின் மாபெரும் பிரதிநிதி அவன்’’ என எபிகூரஸுக்கு புகழாரம் சூட்டினார். கிரேக்க தத்துவஞானி சாக்ரட்டீஸின் ஆளுமை மீதும் இலட்சிய ரீதியான ஈர்ப்பு கொண்டார் மார்க்ஸ். அந்த ஆய்வுக் கட்டுரை பொருள் முதல் வாதத்தை நிரூபிக்க முயலவில்லை. ஆனால் கருத்து முதல்வாதத்தின் மீதான அதிருப்தியும் விமர்சனமும் மேலோங்கி இருந்தது .
பாரூச் ஸ்பின்னோசா, ,காட்ஃபிரை வில்ஹம் லீப்னிக்ஸ், ஃபிரான்சிஸ் போகன், தாமஸ் ஹாப்ஸ், ஜன் லாக், ஜார்ஜ் பெர்க்லி, டேவிட் ஹியூம், வால்டர், ரூசோ,தீதரோ என தத்துவ முகாமில் தோன்றிய ஒவ்வொருவரும் தமக்குரிய பங்கை வழங்கினர். ‘‘அறிவதற்கு அச்சம் தவிர்’’ என்றார் இம்மானுவேல் காண்ட் ; அவர் சொன்ன ஒரு வரியே கட்டுரையின் துவக்கத்தில் நாம் குறிப்பிட்டதாகும். ‘தூய காரணியம் குறித்த விமர்சனம்.’ ஸஉசவைiளூரந டிக யீரசந சநயளடிn ] எனும் நூல் இவரின் முக்கியப் பங்களிப்பு.ஹெகலின் தத்துவத்தை காண்ட் தத்துவத்தின் தர்க்கரீதியான தொடர்ச்சியாகவே மார்க்சியர்கள் காண்கின்றனர்,ஜார்ஜ் வில்கெம் ஃபிரடெரிக் ஹெகலி-ன் கருத்துமுதல்வாதமும் , லூத்விக் ஃபாயர்பாக்கின் பொருள்முதல் வாதமுமே மார்க்சிய தத்துவஞான அடிப்படையானது. பாய்ந்து முன்னேறிய அறிவியல் ;குறிப்பாக டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாடு மார்க்சை மிகவும் ஈர்த்தது.
இளம்ஹெகலியர் தத்துவ முகாமில் மார்க்ஸ் இருந்தார். ‘‘உண்மையைச் சொல்வதென்றால் நான் கடவுள் கூட்டத்தை வெறுக்கிறேன்’’ என்று கிரேக்க புராணத்தில் வரும் எஸ்கிலசின் புரோமித்தியாஸ் கூறியதை ‘‘வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்து கடவுள்களுக்கும் எதிரானதாக’’ மார்க்ஸ் திருப்பினார். கதைப்படி புரோமித்தியாஸை வானகக் கடவுளான ஜோஸ்வாவுக்கு பணியும் படிச் செய்ய ஹோர்மஸ் என்கிற தேவதூதன் முயற்சிப்பான். கை, கால் விலங்கால் பிணைக்கப்பட்டபோதும் பணியமறுத்து போராடி பூமிக்கு நெருப்பைக் கொணர்வான் புரோமித்தியாஸ் . இதை உவமேயமாக்கி மார்க்ஸ் எழுதினார்;
‘இது உறுதி; என்னுடைய நிலையை
உங்களுடைய அடிமைத்தனத்திற்கு
மாற்றிக்கொள்ளவே மாட்டேன்
ஜோஸ்வாக்கு ஊழியம் புரிவதைக் காட்டிலும்
இந்த மலைக்கு ஊழியம் செய்வது மேல்’’
மார்க்சின் அதிதீவிர சீற்றம் கண்டு அராஜகவாதியான புரூனோ பெளவ்ரே அதிர்ந்தார். ஆயினும்இரண்டே வருடங்களில் தன் நிலையை மார்க்ஸ் தெளிவுபடுத்திவிட்டார். வர்க்கப் போராட்டத்தோடும் வாழ்க்கைப் போராட்டத்தோடும் இணைந்து மதவிமர்சனத்தை தொடர்வதே வழி என்றார் . மதத்தைப் பற்றிய விமர்சனமே எல்லா தத்துவ விமர்சனங்களுக்கும் ஆரம்பம் என்றார்.
கருத்து முதல்வாதம் எனும் கூண்டுக்குள் சிக்கிக்கிடந்தது ஹெகலியம். கூண்டைத் திறந்துஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையிலிருந்த பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் ஏங்கெல்சும் எடுத்துக்கொண்டு, மேன்மேலும் நவீன அறிவியலோடு வளர்த்தனர்.ஃபாயர் பர்க்கின் பொருள் முதல்வாதக் கோட்பாடு கருத்து முதல்வாதத்துக்குள்ளும் - இயக்க மறுப்பாகவும்- மதசம்பந்தமான நெறிமுறைக்குள்ளும் சிக்கிக் கிடந்தது.
இதையெல்லாம் விலக்கிவிட்டு ஃபாயர்பாக் பொருள் முதல்வாதத்தின் உள்சாராம்சத்தை எடுத்து அதை அறிவியல் தத்துவக் கோட்பாடாகவே வளர்த்துச் சென்றனர்.
மார்க்சியம் என்பது இந்த தத்துவஞானத்தை மட்டும் குறிப்பதாகாது. காண்ட், ஹெகல், ஃபாயர்பாக் ஆகியோரின் ஜெர்மன் தத்துவஞானம்; ஜீன்ஸ் ,, போரியர், சைமன் உள்ளிட்ட பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிஸ்டுகளின் சிந்தனை; ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ உள்ளிட்டோரின் அரசியல் பொருளாதாரம் இவற்றை விமர்சன பூர்வமாக அடிஉரமாக்கி அறிவியல் ரீதியாக வளர்த்தெடுத்த புரட்சிகர வர்க்கப் போராட்ட சித்தாந்தமே மார்க்சியம். மற்ற தத்துவங்கள் உலகை வியாக்கியானம் செய்தன;
ஆனால் உலகை மாற்றியமைக்க நெம்புகோலானது மார்க்சியமே. அது திண்ணை வேதாந்தமல்ல; செயலுக்கான சித்தாந்தம்.மார்க்சும் ஏங்கெல்சும் தத்துவயியல் குறித்து அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ற அளவு நூலேதும் எழுதவில்லை . ஆனால் ஏங்கெல்ஸ் எழுதிய ‘‘டூரிங்கிற்கு மறுப்பு’’ , ‘‘இயற்கையின் இயங்கியல்’’, ‘‘லுத்விக் ஃபாயர்பாக்கும் செவ்வியல் ஜெர்மன் தத்துவத்தின் முடிவும்’’ ஆகிய மூன்று நூல்களும் அப்பணியை பெருமளவு செய்தன . லெனின் எழுதிய ‘‘பொருள்முதல்வாதமும் அனுபவ விமர்சனமும்’’ எனும் நூல் தத்துவப் போரின் மார்க்சிய பார்வையை நுட்பமாகப் போதித்தது.
‘‘பொருள் முதல்வாத அடிப்படையிலான இயங்கியல் விதிகள் மார்க்சியத்தின் கண்டுபிடிப்பு எனலாம் .அதனால்தான் மார்க்சியம் ஒன்றுமட்டுமே முழுமையாக அறிவியல்பூர்வமாக விளக்கவல்லதும் எதிர்காலப் போக்கைக் கூறவல்லதுமாகும்’’‘‘மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதமும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அருளிச் சென்றதல்ல .அவர்கள் துவக்கிவைத்ததுதான் .அது முழுமையும் நிறைவும் அடைந்துவிட்ட அறுதிப் பொருள் [FINISHED PRODUCT]அல்ல. இதில் ஏங்கெல்ஸ் மிகத் தெளிவாக இருந்தார் .ஒவ்வொரு காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சிக்கொப்ப இயங்கியல் பொருள்முதல்வாதமும் புதுப்பிக்கப்படவேண்டும் எனக் கூறியுள்ளார்’’ என்கிறார் புரட்சியில் பகுத்தறிவு நூலில் ப.கு.ராஜன்.புரட்சி தொடரும்…
புரட்சி தொடரும்…
0 comments :
Post a Comment