தோல்வியின்
வாக்குமூலம்
ஒரு நாள்
ஒரே ஒரு நாள் மட்டும்
அரசியல்
பேசாமல் இருக்க உன்னால்
முடியுமா ?
சவால்விட்டது
நண்பன்தான் எனினும்
ஏதோ ஒரு
வேகத்தில் ஒப்புக்கொண்டேன்.
10..9..8..7..6..5..4..3..2..1..
மரணம்
எப்போது வரினும் வரவேற்க
தயார்
என்ன நண்பா
அரசியல்
பேசமாட்டேன் என்றவன்
மரணத்தைப்
பேசத் தொடங்கிவிட்டாய் …
வாழ்வு
குறித்து பேசத் தொடங்கினால்
அரசியல்
நிச்சயம் வந்துவிடும் என்பதால்
மரணம்
குறித்து பேசுகிறேன்
சரி … ஒரு
சின்னக் கேள்வி
மரணத்தில்
அரசியல் இல்லையா ?
கேள்வியை
வீசிவிட்டு
வெற்றிப்
புன்னகை பூத்தான் நண்பன்.
அதுதானே
சிசு மரணம்
விவசாயிகள்
தற்கொலை
பட்டினிச்
சாவுகள்
சாவின்
அரசியல்
வாழ்வின்
தொடர்ச்சி அல்லவா?
நண்பனிடம்
தோல்வியை ஒப்புகொள்வதில்
கவுரவம்
என்ன வேண்டிக்கிடக்கிறது.
சு.பொ.அகத்தியலிங்கம்
06 /07/2017
0 comments :
Post a Comment