ஒவ்வொன்றும் ஒருவாசலைத் திறக்கும்

Posted by அகத்தீ Labels:




ஒவ்வொன்றும்
ஒருவாசலைத்
திறக்கும்


  • சு.பொ.அகத்தியலிங்கம்.
கனவுப் பிரியனின் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான அனுபவத்தைத் தருகின்றன.” - உதயசங்கர் சொல்வதன் பொருளை ஒவ்வொரு கதையைக் கடக்கும் போதும் முழுதாய் உணர்ந்தேன் .






பொதுவாய் குடித்துவிட்டு நடுத்தெருவில் வாந்தி எடுப்பவரை வெறுக்கத்தக்கவராயும் நாகரிகமற்றவராகவுமே பொதுபுத்தியில் யோசிக்கப் பழக்கி இருக்கும் தமிழ்ச்சூழலில் துணிக்கடைக்கார அண்ணாச்சி வாந்தி எடுத்ததோ குடித்ததை. ஆனால் விழுங்கியது….... ? அதுதான் கதையின் சாரம் . அடேயப்பா மனிதம் செத்துபோச்சின்னு சொல்றவங்க நெற்றிப்பொட்டில அறையுதையா இந்தக் கதை . கதையைப் படித்துவிட்டு அணிந்துரை பக்கம் போனால் இந்தக் கதைக்கு உதயசங்கர் முதல் பரிசே கொடுத்திருக்கிறார் . கதையை நீங்களே படிச்சுக்குங்க !



சுமையாவின் கதை ஜெய்ப்பூரில் ஆரம்பித்து சென்னை வழியே பாகிஸ்தானிலுள்ள சியால்கோட் செல்கிறது .கதையின் மூலமோபிரிவினையின் போது சியால்கோட்டில் பிறந்து தாய்தந்தையரை இழந்து சென்னைக்கு வந்த ஆயிஷா சித்தி வழியே நகர்கிறது .கொஞ்சம் வரலாறு ,கொஞ்சம் பூகோளம் ,கொஞ்சம் கால்பந்து, கொஞ்சம் காதல், கொஞ்சம் அரசியல்அடடா செய் நேர்த்தியும் சொல்லும்செய்தியும் நிமிர்ந்து உட்காரவைக்கிறது . அன்று பிரிவினை வந்ததும் அவர்களால்தான்.இன்று …ஊடகங்கள் மூலம் வன்மம் புகுத்துவதே அரசியல்வாதிகளின் பொதுக்குறிக்கோள் ஆகிவிட்டது.” இரு நாட்டின் துயரத்துக்குமான வேரை போகிற போக்கில் சொல்லிச் செல்லும் நேர்த்தி அபாரம் .



மொத்தமுள்ள 21 கதைகளில் ஆறுகதைகள் இஸ்லாமிய சமுதாயப் பின்னணியுடன் எழுதப்பட்டவை .பன்றிக்கறியால் முறிந்துபோன காதலைச் சொல்லும் நேற்றைய ஈரம் கதை . “ குத்தம்தான் , மாட்டுக்கறி திங்கிறான்னு ஆளையே கொல்லுற நாடு இது . நான் வெறும் காதலைத்தான் கொன்னுருக்கேன் .வேண்டாம் மாப்ள இதுல தலையிடாத.” தெறித்த வார்த்தைகள் எவ்வளவோ சேதி சொல்லிவிட்டது .



அது ஒரு மழைக்காலம் கதை என்பதைத் தாண்டி ஜலீல் ஹாஜியாருக்கும் அவர் பேரனுக்குமான உறவும் பாடமும் நமக்கும் சொல்லும் செய்திகள் அதிகம் .



ஷாகிர்க்கா தட்டுக்கடை கதை நாலே பக்கங்கள்தான். ஆனால் மனிதத்தின் ஈரமான இதயத்தை கைமாறு கருதா தூய அன்பைப் பறை சாற்றுகிறது . ஷாகிர்க்காவுக்கும் நாகராஜூக்கும் இடையே முகிழ்ந்த நட்பின் வலிமைதான் மானுடம் மதவெறி நெருப்பில் பொசுங்காமல் இருப்பதன் ரகசியம்.



அன்று சிந்திய ரத்தம் கதையை எழுத அசாத்திய துணிச்சலும் மானுடத்தின் மீது காதலும் வேண்டும். இம்மி பிசகினாலும் பெரும் தலைவலியாகிவிடும் கதைக்களம் . ஈரானுக்கு பிழைப்பு நிமித்தம் போகும் இந்திய ,பாகிஸ்தானிய , கத்தார் நாட்டு முஸ்லீம் இளைஞர்கள் . அவர்களோடு வந்து சேரும் டென்மார்க் இளைஞர் . முகமது நபியை கார்ட்டூன் போட்டு பிரச்சனை சூடாயிருக்கும் காலம்; அந்த டென்மார்க்கிலிருந்து வந்த இளைஞன் எனில் சிக்கலைக் கேட்கவும் வேண்டுமோ ;உறவும்உரையாடலுமாய் நகரும் கதை. தீவிரவாதமும் மனிதமும் அருகருகே கழைக்கூத்தாடியின் சாமர்த்தியத்தோடு கதையை நகர்த்தியிருக்கிறார் . படித்த பின் நம்மை அறியாமலே ஒரு நிம்மதிப் பெருமூச்சு வரும் பாருங்க அங்கேதான் கனவுப்பிரியனின் வெற்றி புன்னகைக்கும் .



மன்னார் வளைகுடா -பிலிப்பைன்ஸிலிருந்து கொண்டுவரப்பட்ட கப்பாபைகஸ் ஆல்வரோசி எனும் கேடு விளைவிக்கும் கடற்பாசி- பெப்சி நிறுவனம் - சேர்ந்து செய்யும்சதி ; உள்ளூர் தாதா - விலைபோய்விட்ட அரசு இவற்றைத் தோலுரிக்கும் ஆவுளியா கதையும் ; அசாமில்
செத்துவிழும் பறவைகளுக்குபின்னே இருக்கும் மர்மக் கரம் சர்வதேச போதை வியாபாரிகளுடையது என்பதை துப்பறியும் தற்கொலைப் பறவைககதையும் இரண்டுமே நம்மைத் திடுக்கிட வைக்கும் . இது போல் எவ்வளவு மர்மங்கள் இத்தேசத்தில் உள்ளதோ என பதறவைக்கும்


ஒரு நூலறிமுகத்தில் எல்லாக் கதையைப் பற்றியும் சொல்லித்தான் தீரவேண்டும் என்கிற கட்டாயம் ஏதேனும் இருக்கிறதா என்ன ? ‘நீ வந்தது விதியானால் கதை மட்டும் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை என்பதைசொல்லுவது தப்பில்லையே?



இவரது பரந்த வாசிப்பும் அவதானிப்பும் கூர்மையான பார்வையும் எல்லா கதைகளிலும் காணமுடியும்.இரா. முருகவேள் சொல்வது போலபாறைபோல் அழுத்தும் சோகங்களை ,வலியை ….... இயல்பாக அலட்சியமாக வாழ்வின் ஒரு பகுதிபோல் சொல்லிச் செல்லும் கனவுப் பிரியனின்சிறுகதைகளை நீங்களும் வாசித்து அனுபவியுங்கள் !இந்தத் தொகுப்பைப் படித்ததும் இவரின் முதல் தொகுப்பான கூழாங்கற்கள் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.



சுமையா ,
ஆசிரியர் : கனவுப்பிரியன்,
வெளியீடு : நூல்வனம்,
எம் 22 , ஆறாவது அவென்யூ,அழகாபுரி நகர், ராமாபுரம்,
சென்னை - 600 089.
பக் : 216, விலை : ரூ .160 /-














1 comments :

  1. Rathnavel Natarajan

    !இந்தத் தொகுப்பைப் படித்ததும் இவரின் முதல் தொகுப்பான கூழாங்கற்கள் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. - மகிழ்ச்சி. கூழாங்கற்கள் புத்தகம் விரைவில் அனுப்பி வைக்கிறேன். நன்றி சார்.
    இந்த அற்புதமான மதிப்புரையை எனது பக்கத்தில் பகிர்கிறேம். மகிழ்ச்சி சார் திரு ‎Su Po Agathiyalingam‎

Post a Comment