புதைக்கப்படும் உண்மை

Posted by அகத்தீ Labels:புதைக்கப்படும் உண்மை
பொய் சிரித்துக்கொண்டிருக்கிறது
உண்மை அழுதுகொண்டிருக்கிறது

பொய்க் கூடி கும்மாளமடிக்கிறது
உண்மை தனித்து முடங்கிக்கிடக்கிறது

பொய் வண்ண விளக்கொளியில் ஜொலிக்கிறது
உண்மை கும்மிருட்டில் தடயமற்று இருக்கிறது

பொய் ஊரே இரண்டுபட உரக்க ஊளையிடுகிறது
உண்மை மென்மையாய் ஜீவனற்று ஒலிக்கிறது

பொய்க்கு பல திவ்ய நாமங்கள் பலமுகமூடிகள்
உண்மைக்கு ஒரே முகம் முகமூடி ஏதுமில்லை


என்னதான் சொல்ல வருகிறீர்கள் ?
பொய் வெல்லப்பட முடியாததா ?
உண்மை வலுவற்ற நோஞ்சானா ?
அழிந்துதான் போகவேண்டுமா ?


யார் சொன்னது ?
உண்மை அவதூறு செய்யப்படும்
உண்மை வஞ்சிக்கப்படும்
உண்மை அடித்து துவைக்கப்படும்
உண்மை தண்டிக்கப்படும்
உண்மை புதைக்கப்படும்

புதைக்கப்பட்ட உண்மை
எரிமலையாய் வெடித்துச் சிதறும் போது
பொய் எரிந்து சாம்பலாகிவிடும் .


0 comments :

Post a Comment