கூழாங்கற்கள்

Posted by அகத்தீ Labels:



கூழாங்கற்கள் 



சு.பொ.அகத்தியலிங்கம்.


எதைப் பற்றியும் கருத்துச் சொல்ல
எல்லோருக்கும் உரிமை இருக்கிறது
காது கொடுப்பதோ கடந்து செல்வதோ
முழுக்க முழுக்க விருப்பம் சார்ந்ததுதான்



சரியாகத்தான் சொல்ல வேண்டும் என்று
யாரும் ஒருபோதும் கட்டளையிட முடியாது
பிழையாகவோ அரைகுறையாகவோ சொல்லுவதாலேயே
கழுத்தை நெரித்துக் கொல்ல முடியாது




நேற்று சரியாயிருந்தது இன்று பிழையாகாதா ?
அல்லது பிழையாகத் தோன்றியது சரியாகப்படாதோ ?
பிழை என்பதும் சரி என்பதும் சார்பானதுதானே
காலம் எவ்வளவு மாற்றங்களைச் செய்துகொண்டேயிருக்கிறது



அவரவர் தெரிந்ததைச் சொல்ல விடுங்கள்
அறிவும் அறியாமையும் கலந்தே இருக்கும்
ஆளுக்காள் விகிதாச்சாரம் மாறுபடலாம்
நாளுக்குநாள் அது மாறிக்கொண்டேயிருக்கும்



பார்த்தது படித்தது கேட்டது நம்பியது
ஏமாந்தது ஏமாற்றியது அழுதது சிரித்தது
காலநதியில் அனுபவக் கூழாங்கற்கள் பளபளக்கும்
கூழாங்கற்களின் மீதேறி சிகரத்தைத் தொடமுடியுமோ ?








0 comments :

Post a Comment