புரட்சிப் பெருநதி - 39
தோழர்கள் இல்லாமல் போனால்
சு.பொ.அகத்தியலிங்கம்
‘‘தனிப்பட்ட முறையில் கிடைக்கும் ஆதாயத்தின் பொருட்டு நீங்கள் பொய்சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் ; அப்போது ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்கு எதிராகபொய் சொல்வீர்களா?உண்மையைத்தான் சொல்லுவீர்களா?’’
‘‘போட்டி கடுமையாக இருக்கிறது . சில இடங்களே உள்ளன. திறமையான பலர் போட்டியில் உள்ளனர் .நீங்கள் வெற்றி பெற அடுத்தவர் குரல்வளையை நெரித்தாக வேண்டும் ; அப்படிச் செய்வது தப்பில்லை என்று நினைக்கிறீர்களா?’’
‘‘உங்களுக்கென்று ஒரு உறுதியான லட்சியத்தை வரிந்து கொண்டு உறுதி குலையாது உழைப்பீர்களா? அல்லது அதிர்ஷ்டத்தை பொறுத்தது என இருப்பீர்களா?’’
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லுவீர்கள் என சற்று கற்பனை செய்துகொள்ளுங்கள்; கீழே உள்ள பதில்களைப் படியுங்கள்.
முதல் கேள்விக்கான பதில்; ‘‘நீ நேர்மையாய் இருக்க வேண்டும். எப்போதும் உண்மையில் நீ என்ன நினைக்கிறாயோ எதை நினைக்கிறாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். நீ உன்னையே மதிப்பிட்டுக் கொள்ள – மற்றவர்கள் மதிப்பை சம்பாதிக்க – துணிச்சல்மிக்க வலிமைமிக்க மனிதனாய் இருக்க நீ நேர்மையானவனாய்த்தான் இருக்க வேண்டும் .பொய் சொல்லுகிற ஒருவன் உண்மையான நண்பனாக இருக்க முடியாது ; அவனை நம்ப முடியாது . விண்வெளிக்கு எப்போதேனும் பயணம் செய்ய நேர்கையில் நம்முடன் வரும் தோழன் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பொய் சொல்லாதவனாக இருக்க வேண்டும்..’’
இரண்டாவது கேள்விக்கான பதில்; ‘‘வாய்ப்புகள் குறைவாகவும் போட்டி அதிகமாகவும் இருக்கிறது என்பது உண்மை அல்ல; குறைந்தபட்சம் எங்கள் நாட்டில் அப்படி இல்லை. ஒருவனின் உழைப்பு, ஆற்றல், முன்முயற்சி இவற்றைக் கொண்டே எங்கள் நாட்டில் தீர்மானிக்கிறோம்.செயலூக்கமான அணுகுமுறையும், புதுமையைப் புகுத்தும் ஆற்றலுமே பணியில் மிக முக்கிய அம்சமாகும். இன்னொருவன் குரல்வளையை அறுப்பதின் மூலம் வெற்றி பெறுகிறவன் நிச்சயமாக உடல்வலிமையால் மிரட்டியும், பணபலத்தால் பேரம் பேசியுமே தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளுகிறவன் ஆவான். அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறுவார்களேயானால் எல்லா இடங்களிலும் தகுதியற்றவர்களே நிரம்பி வழிவார்கள். எங்கள் நாட்டில் அப்படிப்பட்ட சூழலே இல்லை.’’
மூன்றாவது கேள்விக்கான பதில் ; ‘‘நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய அபாயத்தைப் போலவே ; அதிர்ஷ்டத்தையும் எதிர்கொள்கிறேன் .குறிக்கோளை நோக்கி கடுமையாக உழைப்பவருக்கே அதிர்ஷ்டம் கிட்டும் , என்றாலும் நான் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன் ,வகுத்துக்கொண்ட குறிக்கோள் உழைப்பதற்கு உரியதாய் இருக்கவேண்டும் – உன்னைச் சுற்றிலும் தோழர்கள் இருக்க வேண்டும் .நீ ஊக்கம் குன்றி –குறிக்கோளைக் கைவிடத் துணியும் போது தோழர்கள் தோள்கொடுத்து வெற்றிக்கு உதவுவார்கள் .மகிழ்ச்சியில் பங்கு கொள்வார்கள். நீ தனித்திருந்தால் எந்த வெற்றியும் உனக்கு மகிழ்ச்சியூட்டாது.’’
கனடா நாட்டைச் சார்ந்த இர்விங் லாசர் சோவியத் விண்வெளிவீரர் யூரி ககாரினுக்கு கடிதத்தில் எழுப்பிய கேள்விகளும் ; யூரி ககாரின் எழுதிய பதில்களும்தான் மேலே உள்ளவை . ‘‘லிட்டரேச்சர்நாயா கெஸட்டா’’ ஏடு அதனை வெளியிட்டது . யூரி ககாரின் பதில் தொடங்கும் முன் சொன்ன வரிகள்; ‘‘என்னுடைய நாட்டில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘தோழரே’ என்றுதான் அழைத்துக் கொள்கிறோம்.குழந்தைப் பருவம் தொட்டே நான் நண்பர்கள் ,தோழர்கள் சூழ வாழ்ந்தவன். எட்டு வயதானபோது இளம் பயோனியரில் சேர்ந்தேன் .நாட்டில் குறுக்கே கால் போன போக்கில் சென்றோம்.விளையாடினோம்.காட்டில் முகாம்களில் உறங்கினோம். அந்த வாழ்க்கை தோழமையின் அவசியத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. காலம் ஓடியது. நான் இளம்கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்தேன் .பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன்…’’
கடிதத்தின் நிறைவாக எழுதினான் , ‘‘ஒழுக்க நெறியானது உழைப்பின் நடைமுறையில் கணக்கிடப்படுகிறது . அது உழைப்பின் சமூக இயல்பாலும் ; அதனைத் தூண்டும் சக்தியாலும் தீர்மானிக்கப்படுகிறது.’’
கவிதையை ஒன்றைப் பார்ப்போம்.
‘‘வேண்டாம்! வேண்டாம்! ஒருவர் பிழைப்பிற்காக இரு உயிர்கள் சித்திரவதைப்பட வேண்டாம் ;
வேண்டாம்! வேண்டாம்! கீரியையும் பாம்பையும் மோதவிடவே வேண்டாம் ; வேண்டாம்!
வேண்டாம்! மனிதர்கள் ஒருவரையொருவர் கொத்தி வேதனைப்படுத்த வேண்டாம்; வேண்டாம்
! வேண்டாம் ! நாடும் நாடும் மோதி அழிய வேண்டாம்.’’
இந்தக் கவிதை பிறந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. இந்திய – சோவியத் நட்புறவு அடிப்படையில் இந்தியா வந்தார் உக்ரேனைச் சார்ந்த இளங்கவிஞர். தில்லி வீதியிலே பாம்புக்கும் கீரிக்கும் சண்டைவிடப் போவதாய் மோடிமஸ்தான் வித்தை காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டார் . ஊர் திரும்பியதும் கவிதை ஆக்கினார் . இவர் பெயர் தெரியவில்லை. ரஷ்ய இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டும் கவிதையானது.
சண்டைகளை குற்றவுணர்ச்சியின்றி வேடிக்கை பார்க்கும் நம் உளவியலும் ; சதா எங்கும் சமாதானத்தை விழையும் ருஷ்ய உள்ளமும் எதிர் எதிரே இருப்பதை இது படம் பிடிக்கிறது . சோவியத் இலக்கியங்களில் கலையும் விழுமியங்களும் ஓங்கியிருந்தது. லெனினை கதாநாயகனாக வரித்து எழுதப்பட்ட நாவல்கள், சிறுகதைகள் ஏராளம்; பட்டியல் நீளும். அதில் மரீய்ட்டா ஷாகினியா எழுதிய ‘‘உல்யானவ் குடும்பம்’’ என்ற இரட்டை நாவல் புகழ்பெற்றது. ‘‘….. ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லாமல் – ஒரு ஆசிரியர்கூட இல்லாமல் –எழுத்து வாசனை கூட இல்லாமல் ; வயல்களில் புல்லைப்போல் நசுங்கும் – லட்சக் கணக்கான குழந்தைகள் – ஏன் ஒரு மனிதக் கூட்டமே விடப்பட்டிருக்கிறது; அறியாமை வாழ்க்கையைக் குறுக்கிவிடுகிறது’’ என வருந்தும் ஒரு கல்வி அதிகாரி.
‘‘குழந்தையானது எதுவும் எழுதப்படாத புத்தம் புதிய கரும்பலகை; எவனொருவனும் விரும்பியதை எல்லாம் கிறுக்குவதற்காக துடைத்துவைக்கப்பட்ட கரும்பலகை அல்ல; குழந்தையும் ஒரு மனிதனே; அவ்வாறுதான் கருதப்பட வேண்டும்’’ என பேசுகிறார் அந்த கல்வியதிகாரி – லெனினின் தந்தையை – அவர் பள்ளிக்கூடமில்லா ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டுவர எடுத்த முயற்சியை முன்வைத்து இலியா நிக்கோலியாவிச் எனும் கதாபாத்திரத்தை இந்நாவலில் அதன் ஆசிரியர் உருவாக்கி இருப்பார் .
சிங்கிஷ் அய்த்மாதோவின் கதையொன்றின் கதாநாயகன் டூயீஷென் – முன்னாள் செம்படை வீரன் – எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டதே செம்படையில்தான். புரட்சிக்குபின் 1920இல் தன் படைவீரன் உடுப்போடு பின்தங்கிய கீர்கீழ் கிராமத்துக்கு ஒரு ஆசிரியனாய் வருகிறான் . ஒரு மனிதரின் படத்தைக் காட்டி ‘‘இவர்தான் லெனின்’’ என தன் மாணவர்களுக்குப் பாடம் தொடங்குகிறான். எழுத்தறிவின்மையை சோவியத் யூனியன் வெற்றிகண்ட ரகசியம் அதுதான். சோவியத் புரட்சி படைத்தது புதிய மனிதனை – புதிய வாழ்க்கையை …
.
புரட்சி தொடரும்
புரட்சி தொடரும்
நன்றி : தீக்கதிர் , 31 /07/2017
0 comments :
Post a Comment