உயிர்த்துடிப்புள்ள ஒன்பதாண்டுகள்

Posted by அகத்தீ Labels:


புரட்சிப் பெருநதி - 37


உயிர்த்துடிப்புள்ள ஒன்பதாண்டுகள் 



அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது,
 மரணதண்டனைக்கு எதிராக - 
மனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.




‘அந்தக் கூட்டத்தில் என்ன நடைபெற வேண்டும், என்ன நிறுவப்பட வேண்டும் என்பதைப் பற்றி மிகவும் தெளிவாக இருந்தவர் ஒருவரே; அவர் ஏற்கெனவே 1848 ஆம் ஆண்டிலேயே உலகிற்கு ‘அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்ற முழக்கத்தை அறிமுகம் செய்தவராவார்’ -இவ்வாறு அக்கூட்டத்தில் பங்கேற்ற ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்.



1863 போலந்து எழுச்சிக்குப் பின்னர், பிரிட்டன், பிரான்ஸ் தொழிலாளர்கள் ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறித்து யோசிக்கலாயினர். ஹென்றிதோலின், பெரோச்சன், லிம்போஸின் ஆகியோர் லண்டனில் செயிண்ட் ஜேம்ஸ் ஹாலில் - போலந்து தொழிலாளர் எழுச்சியை ஆதரித்து கூடியகூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது இக்கருத்து வலுப்பட்டது. முயற்சி தொடங்கப்பட்டது.1864 செப்டம்பர் 28. லண்டன் செயிண்ட் மார்ட்டின் அரங்கில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளும், முற்போக்கு - சோசலிச சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். பலத்த ஆதரவு முழக்கங்களிடையே ‘சர்வதேச பாட்டாளி வர்க்க சங்கம்’ [international working man’s association] உதயமானது.


இதுவே ‘முதலாவது அகிலம்’ எனப்படும் .லண்டன் வர்த்தகக் கவுன்சிலின் ஏடான ‘தேன்கூடு’ [BEEHIVE] அகிலத்தின் ஏடானது.ஜெர்மன் நாட்டுப் பிரதிநிதியாக பங்கேற்றார் காரல் மார்க்ஸ். அவரைக் குறிப்பிட்டு ஏங்கெல்ஸ் சொன்னவையே ஆரம்பத்தில் சுட்டிய வரிகள். நிர்வாகக் குழுவில் காரல் மார்க்சும் இடம்பெற்றார். அகிலத்தின் அடிப்படையான திட்டம், கொள்கை மற்றும் அமைப்பு விதிகளை வகுத்துக் கொடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டார். மாஜினியின் சீடரான லூயிஜி ஒல்ப், பிரெஞ்சுக்காரரான விக்டர் லி லூபேஜ் ஆகியோரும் சில ஆவணங்களை முன்மொழிந்தனர். அக்டோபர் 20இல் நடந்த துணைக்குழு கூட்டத்தில் ஆங்கிலேயர் வில்லியம் கிரிமர், லி லூபேஜ், இத்தாலியன் குஜப்பி பாண்டெனா ஆகியோர் பங்கேற்றனர். மார்க்ஸ் தயாரித்த முகப்புரை, அமைப்பு விதி அனைத்தையும் நவம்பரில் கூடிய பொதுக்குழு ஏற்றுக் கொண்டது.


‘தொழிலாளி வர்க்கத்தின் முழு விடுதலையை தொழிலாளி வர்க்கம்தான் வென்றெடுக்க வேண்டும்’ என கம்பீரமாய் துவங்கிய மார்க்ஸின் முகவுரை வழிகாட்டும் ஆவணமானது ‘சோஷலிச இயக்கத்தின் சர்வதேச குணாம்சத்தை இந்த அமைப்பு தொழிலாளருக்கு எடுத்துக்காட்டும்’ என நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘எண்ணிக்கைக் கணக்கு நிறுத்துப் பார்க்கப் பயன்படும்; ஆனால் கூட்டமைப்புகளின் மூலம் ஒன்றுபட்டால் – அறிவாற்றல் மூலம் தலைமை தாங்கப்படுமானால் நிலைமையே வேறு’ என்று விளக்கியது. இது அடிப்படையில் ஒரு அரசியல் ஸ்தாபனம். ஆனால், இதனை வெறுமே தொழிற்சங்க மேடையாக குறுக்கிப் பார்க்க ஆரம்பம் முதலே பலர் முயன்றனர். முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தனர்.


1871 ஆம் ஆண்டு முந்தைய ஆறாண்டுகாலத்தை அசைபோட்டு மார்க்ஸ் எழுதினார். ‘அகிலத்தின் வரலாறு என்பது ;தொழிலாளி வர்க்கத்தின் உண்மையான இயக்கத்திற்கு எதிராக - அகிலத்திற்குள் தங்களைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முயற்சித்த தனிக்குழுக்கள் மற்றும் அரைவேக்காட்டுப் பரிசோதனைகளுக்கு எதிராக பொதுக்குழு நடத்திய தொடர்ச்சியான போராட்டமாகும்’ ஜெனீவா, லாஸ்ன்ஸ், பிரசல்ஸ், ஹேக் என நடந்த மாநாடுகளில் அவர்களின் தவறான அணுகுமுறைக்கு எதிராக தத்துவப் போர் நடத்திய மார்க்ஸ்; மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஒன்றுதிரட்ட முனைந்தார். ‘தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை’ என்றார். 1867 வரை இவ்வமைப்பு ஆண்களின் அமைப்பாகவே இருந்தது .


அந்த பொதுக்குழுவில்தான் சிறந்த பேச்சாளரான ஹரியட் லா பொதுக்குழுவில் சேர்க்கப்பட்டார். முதல் அகிலம் கலைக்கப்படும்வரை அவர் ஒருவர் மட்டுமே பெண் பிரதிநிதி.ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த முதலாவது அகிலத்தை வளர்த்தெடுப்பதில் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார். எட்டுமணி நேர வேலை, வேலைநிறுத்த உரிமை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு என்பதற்கும் அப்பால் தன் பணிகளையும் பார்வையையும் விரிவுசெய்தது.பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம், ஜெனீவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பாரீஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம் ஆகியவற்றுக்கு சகோதர ஆதரவு நல்கியது.
வேலைநிறுத்தங்களை உடைக்கும் முயற்சிக்கு எதிராக லண்டன், எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியது.



உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.


அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டபோது, மரணதண்டனைக்கு எதிராக - மனித உரிமைகளுக்காக முதலாவது அகிலம் போராடியது.


போலந்தின் விடுதலை இத்தாலியின் ஐக்கியம் , அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போர் இவற்றுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.


தொழிலாளர்கள் அரசியல் அதிகாரத்தை வென்றெடு க்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-இல் பாரீஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.


1872 -இல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது.1873 செப்டம்பர் 23 சோர்ஜி என்பவருக்கு எழுதிய கடிதத்தில், ‘இன்றுள்ள ஐரோப்பிய நிலைமைகளை நான் காணும் போது அகிலத்தின் சம்பிரதாயமான அமைப்பு முறை அவசியமில்லை என்றும்; அதை இப்போது தற்காலிகமாக பின்னணிக்கு தள்ளிவிடலாம் என்றும்’ மார்க்ஸ் எழுதினார். நடைமுறையில் அகிலம் பிளவுபட்டு அதன் தன்மையை இழந்துவிட்டது.1875இல் மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். ‘தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசிய நடவடிக்கை எந்த வகையிலும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை - அகிலத்தைச் சார்ந்து, அதை நம்பி இருக்காது. அந்த நடவடிக்கைகளை மையப்படுத்துவதற்கு அது ஒரு முயற்சிதான்.


அந்த முயற்சி பெரும் வெற்றியைத் தந்திருக்கிறது. அகிலம் அதற்கு தூண்டு விசையாய் இருந்திருக்கிறது. ஆனால் பாரீஸ் கம்யூன் வீழ்ச்சி அடைந்த பிறகு அகிலத்தில் முதல் வரலாற்று வடிவம் தொடர்ந்து நீடிக்க இயலாமல் போய்விட்டது’1883இல் மார்க்சின் நினைவஞ்சலி உரையில் ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்; ‘மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது… இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியமானது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…’முதலாவது அகிலம் கலைந்தாலும் பின்னர் இரண்டாவது, மூன்றாவது அகிலங்கள் களத்துக்கு வந்தன.


புரட்சி தொடரும்…

நன்றி : 17/07/2017

0 comments :

Post a Comment