புரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்

Posted by அகத்தீ Labels:






புரட்சிப் பெருநதி -33 



புரட்சிப் பெருநதிகம்யூனிஸ்ட் அறிக்கையின் பிறப்புக் குறிப்புகள்


சு.பொ.அகத்தியலிங்கம் 



166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது. 
உலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது. 
இன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட 
சில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்; 
ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்; 

தத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.




“கடந்த மாநாட்டில் ஒப்புக் கொண்டவாறு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதி பிப்ரவரி 1 ஆம் தேதி - செவ்வாய்க் கிழமைக்கு முன்பு லண்டனில் கிடைக்குமாறு மார்க்ஸ் அனுப்பாவிட்டால் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இதனை அவருக்குத் தெரியப்படுத்துமாறு பிரெஸ்ஸல்ஸ் மாவட்டக்குழுவிற்கு மத்தியக் குழு ஆணையிடுகின்றது. மார்க்ஸ் அறிக்கையை எழுதாவிட்டால் மாநாட்டின்போது அவரிடம் கொடுக்கப்பட்ட ஆவணங்களை அவர் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்றும் மத்தியக் குழு கேட்டுக்கொள்கிறது .”- 1848 ஜனவரி 24 அன்று இக்கடிதம் கார்ல் மார்க்சுக்கு அனுப்பப்பட்டுள்ளது .1848 பிப்ரவரி 21 அன்று ஸதேதியில் மாறுபடுவோரும் உண்டு] ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வெளியிடப்பட்டது.முதல் பதிப்புக்கு வெளியீட்டு விழா நடத்தியதாக ஆதாரப்பூர்வமான குறிப்புகளில்லை .உலகைப் புரட்டிப் போட்ட அறிக்கை ;19 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் போக்கின் விளைச்சல் எனில் மிகையல்ல.

“1847ஆம் ஆண்டு மிகவும் கொந்தளிப்பான காலமாக இருந்தது ” என்கிறார் ஏங்கெல்ஸ். பிரஷ்யாவில் அரசியல் அமைப்பு சட்டமும் , சட்டசபையையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் - இத்தாலியில் வேகம் பெற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக யுத்த அறைகூவல் - ஸ்விட்சர்லாந்தில் உள்நாட்டு யுத்தம் - இங்கிலாந்தில் தீவிரவாதப் போக்கு கொண்ட நாடாளுமன்றம் - பிரான்சில் பெருகிய ஊழல்களும் சீர்திருத்த ஜிகினாக்களும் - மெக்சிகோ மீது அமெரிக்கா படையெடுப்பு - உலகெங்கும் ஏதோ ஒருவித எழுச்சி கனன்று கொண்டிருந்த காலம் என்கிறார்.மார்க்சும் ஏங்கெல்சும் 1845 இறுதியில் லண்டன் வந்தனர். சாசனவாதிகள், நீதியாளர் கழகம் இவற்றுடன் உரையாடினர்.

குறிப்பாக இடதுசாரி ஹார்னி, நீதியாளர் கழக ஷாப்பர், மோல், பெளவர் சைலிஷியாவைச் சார்ந்த வில்ஹெல்ம் உல்ஃப் போன்றோருடன் சேர்ந்து 1846 இல் “கம்யூனிஸ்ட் தொடர்புக் குழு”வை அமைத்தனர். இக்காலகட்டத்தில் ‘தேசங்களின் திருவிழா’ ஸகநயளவ டிக யேவiடிளே]விலும் பங்கேற்றனர். 1847 ஜூன் 2-7 இல் லண்டனில் மாநாடு கூடியது. பணமின்மையால் மார்க்ஸ் பங்கேற்கவில்லை. “கம்யூனிஸ்ட் லீக் ” அமைக்கப்பட்டது .இந்த மாநாட்டில் தயாரிக்கப்பட்ட விதிகளில்தான் முதன் முதலாக, “ அனைத்து மனிதர்களும் சகோதரர்களே!” என்கிற பழைய முழக்கம் கைவிடப்பட்டு “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் ஒன்றுபடுங்கள்!” என்ற முழக்கம் இடம் பெற்றது. மாநாட்டு முடிவுப்படி 1847 செப்டம்பரில் வெளிவந்த “கம்யூனிஸ்ட் ஜைதுங்” ஏட்டின் முகப்பிலும் இம்முழக்கம் இடம் பெற்றது .

மோஸ்ஸ் ஹெஸ் 1844 தயாரித்த “நம்பிக்கையின் கோட்பாடு” [confession of faith] அன்பை மையமாக நிறுத்திய கேள்வி - பதில் வடிவிலான ஆவணம். இதனை ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தார், இம்மாநாடு புதிய ஆவணம் தயாரிக்கும் பொறுப்பை ஏங்கெல்சுக்கு வழங்கியது. அவரும் கேள்வி - பதில் வடிவத்தில் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” [principles of communism] எனும் ஆவணத்தை தயார் செய்தார்.1847 நவம்பரில் மார்க்சுக்கு ஏங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் 1847 ஜூனில் தான் அவசர அவசரமாக எழுதிய ஆவணத்தில் மானுட சமுதாய வரலாற்றையும் சேர்க்க வேண்டியிருப்பதால் கேள்வி - பதில் வடிவம் பொருத்தமல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கிடையில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதிய “ தத்துவத்தின் வறுமை”. “அரசு - புனித குடும்பம் - சொத்து உறவுகள்” “ கூலி-உழைப்பு - மூலதனம்” “பிரான்ஸ் வர்க்கப் போராட்டம்”. “ஜெர்மன் தத்துவஞான விமர்சனம்” முதலியன நூல்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கி இருந்தது.

கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாடு 1847 நவம்பர் 29- டிசம்பர் 8 லண்டனில் நடைபெற்றது. மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் இருவருக்கும் அறிக்கையை எழுதி முடிக்கப் பணித்தது. இதன் தொடர்ச்சியாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தை ஆரம்பத்தில் பார்த்தோம். இருவரும் சேர்ந்து விவாதித்து எழுத காலமும் சூழலும் அமையவில்லை. முந்தைய ஆவணங்களை அலசி மார்க்சே எழுதினார். உடனே லண்டனுக்கு அனுப்பினார்.சிவப்பில் அல்ல - கரும்பச்சை நிறத்தில் அட்டை அமைந்த - ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” 1848 பிப்ரவரியில் லண்டன் பிஷப் கேட் பகுதியிலுள்ள லிவர்பூல் தெருவில் 46 ஆம் இலக்கமிட்ட ‘தொழிலாளர் கல்வி சங்க’ கட்டிடத்தில் ஜே. ஈ.புர்கார்ட்டஸால் அச்சிடப்பட்டது.கம்யூனிஸ்ட் லீக் வெளியிட்டதாய் சொல்லப்படவில்லை.

“கட்சி” என்ற வார்த்தை அப்போது சிந்தனைப் போக்கையே குறிக்கும். ஏனெனில் நவீனகால கட்சி அமைப்புகள் உருப்பெறாத காலம் அது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் !”என்றே பொதுவாய் மொழியாக்கம் செய்யப்படும். ஆனால் மார்க்சோ ஏங்கெல்சோ தேசங்கள் பல இருப்பதை நிராகரிக்கவில்லை. ஒரே உலக ஆட்சி எனக் சொல்லவில்லை working men of all countries, unite என்றுதான் சொல்லுகிறார்கள். working men of world, unite எனச் சொல்லவில்லை. எனவேதான் ’அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!’ எனச் சரியாக இப்போது மொழியாக்கம் செய்யப்படுகிறது.1931 இல் அக்டோபரில் பெரியார் நடந்தி வந்த சுயமரியாதை ஏடான ‘குடியரசு’ அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டது. ‘சமதர்ம அறிக்கை’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. அறிக்கையின் முதல் பகுதி ஐந்து இதழ்களில் பிரசுரிக்கப்பட்டது.

பெரியார் ரஷ்யப் பயணம் இதன் பின்னரே நடை பெற்றதே. கம்யூனிஸ்ட் அறிக்கையை இப்போது படிக்கும்போது புரிவதில் சிரமம் ஏற்படும். நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியிட்டுள்ள எஸ் .வி.ராஜதுரையின் மொழியாக்கத்தில் - தக்க குறிப்புகளோடு - விளக்கங்களோடு வெளிவந்துள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை படிப்பது பயனுள்ளதாக அமையும்.“ஐரோப்பாவை ஒரு பேய் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது- கம்யூனிசம் எனும் பேய்…” எனத் தொடங்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை 166 வருடங்களைக் கடந்த பின்பும் இளமைத் துடிப்போடு ஈர்க்கிறது. உலகில் சில மாற்றங்களைச் சாதித்திருக்கிறது. இன்றும் சமூக மாற்றத்தின் மைய அச்சாய் இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட சில செய்திகள் இன்றைக்கு பொருந்தாமல் போகலாம்; ஆனால் அதன் புரட்சிகர உள்ளடக்கமும்; சமூக அறிவியல் நோக்கும்; தத்துவ வீரியமும் நீர்த்துப் போகவில்லை; கனன்றுகொண்டே இருக்கிறது.

புரட்சி தொடரும்...
நன்றி : தீக்கதிர் , 19/06/2017.

0 comments :

Post a Comment