எழுச்சியான துவக்கம் சோகமான முடிவு

Posted by அகத்தீ Labels:
புரட்சிப் பெருநதி-32


எழுச்சியான துவக்கம் சோகமான முடிவு

சு.பொ.அகத்தியலிங்கம்


விவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது
 லாஸ்ஸலை 
எல்லோரும் உற்று நோக்கச் செய்தது. 
மார்க்சும் ஏங்கெல்சும் 
இவ்வழக்கை கூர்ந்து கவனித்தனர்.“இந்தச் செய்தியைக் கேட்டு நான் எவ்வளவு தூரம் மனம் உடைந்து போனேன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்கவும் இயலாது. தனிநபர் என்கிற முறையில் லாஸ்ஸல் எப்படிப்பட்ட மனிதராக இருந்தாலும் சரி. கற்றறிந்த மேதை அவர். அரசியலுக்கு மிகுந்த மதிப்பளித்தவர், இந்தவகையில் முக்கியமானவர்களுள் ஒருவர். நமக்கு இப்போது நம்ப முடியாத நண்பனாக இருந்தாலும்; எதிர்காலத்தில் அவர் விரோதியாகத் தான் மாறுவார். அது எவ்வாறு இருப்பினும்;

ஜெர்மன் நாடு குறைவாகவோ கூடுதலாகவோ திறமையானவர்களைச் சீர்குலையச் செய்வதைப் பார்ப்பதற்கு மிகுந்த வேதனையாக உள்ளது. அங்கு உற்பத்தியாளர் மத்தியிலும் - முன்னேறிச் செல்லும் நாய்கள் மத்தியிலும் ஆனந்தக் கூத்திடுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏனெனின் ஜெர்மனியில் அவர்களுக்கு குலைநடுக்கம் ஏற்படச் செய்த ஒரே மனிதர் லாஸ்ஸல் தான்”.இந்த இரங்கற் செய்தியே அவர் குறித்த ஒரு சித்திரத்தை உங்கள் நெஞ்சில் வரைந்திருக்கும்.

இந்த இரங்கற் செய்தியை ஏங்கெல்ஸ் எழுதி மார்க்ஸுக்கு அனுப்பினார் எனில் அதன் பொருள் இன்னும் ஆழமானதல்லவா?1825 ஆம் ஆண்டு பிரெஸ்ல்லாவில் பணக்கார வியாபாரியின் மகனாகப் பிறந்தார் பெர்டினண்ட் லாஸ்ஸல். தந்தையைப் போல் வியாபாரத்தில் ஈடுபட விருப்பமற்று கல்லூரி காலத்தில் இலக்கியத்தில் தோய்ந்தார், ஹெயின் போல் கவிஞனாக கனவு கண்டார். ஆயின் நாட்டு நடப்பு அவருள் நெருப்பை மூட்டியது. லாஸ்ஸல் மாணவர் பேரணியில் அவர் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஃபாயர்பர்க்கை ஆதரித்தே உரையாற்றினார், அவர் மீது வழக்கு பதிந்து; நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் பாரீஸ் சென்று கவிஞர் ஹெயினை சந்தித்தார். தனக்கு கிடைத்த பேராசிரியர் பதவியை மறுத்தார். சட்டம் பயின்றார். 1844 இல் சீமாட்டி ஹேட்ஸ் பெல்ட்டிக்காக விவாகரத்து வழக்கில் ஆஜராகி வாதிட்டது லாஸ்ஸலை எல்லோரும் உற்று நோக்கச் செய்தது. அந்த சீமாட்டியை கணவர் கொடுமைப்படுத்தியதை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். “பெண்களின் சமவுரிமைக்குப் போராடும் மாவீரன்” என பெண்கள் மகிழ்ந்து கூத்தாடினர். மார்க்சும் ஏங்கெல்சும் இவ்வழக்கை கூர்ந்து கவனித்தனர். தொழிலாளர்களிடையேயும் பெரும் அனுதாபம் உருவானது. எட்டாண்டுகள் இழுத்தடித்து, சமரசத்தில் முடிந்தது.1848 புரட்சியின் போது தான் வாழ்ந்த டஸ்ஸல்டோர்ப் நகர மக்களைப் பார்த்து, “வரி கொடுக்காதீர்! அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்பீர்! “ என அவர்விடுத்த அறைகூவல் ஆட்சியாளரை கோபம் கொள்ளச் செய்தது. கைது செய்யப்பட்டார். தேசத்துரோக வழக்கு புனையப்பட்டது. ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். மார்க்சும் ஏங்கெல்சும் நியூ ரெயினிஸ்ச் ஸெய்டங் பத்திரிகையில் இவர் பக்க நியாயங்களை எடுத்துவைத்தனர்.

மார்க்ஸோடு கடிதத் தொடர்பால் கம்யூனிஸ்ட் அறிக்கையெல்லாம் படித்தார் . ஆனால் அது அவரைக் கவ்வவில்லை.ஹெகலை, பிரெளதனைப் பின்பற்றினார்.1860 இல் ஜெர்மனிய பாட்டாளி வர்க்க அரசியல் அமைப்பொன்றின் தேவையை ஓங்கி ஒலித்தார் ,லீப்ஸிக் தொழிலாளருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் அனைவருக்கும் வாக்குரிமை சமாதானப்பூர்வமான வழிமுறை, நாடாளுமன்ற முறை இவையே சரியான மாற்று. அதற்காக ஒரு பொது அமைப்பின் கீழ் திரள வேண்டும் என்றார்.அதே நேரம் வர்க்கப்புரட்சி என்பதை நிராகரித்தார் .1862 வசந்த காலத்தில் பெர்லினில் பொதுக்கூட்டங்களில் முழக்கமிட்டார். தன் கோட்பாடுகளை நூலாக்கினார்; இறுதிப் பகுதியில் “உழைக்கும் மக்களின் செயல் திட்டம்” ஒன்றை வெளியிட்டார். இந்த அறைகூவல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையொட்டி நடந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கையில் அரசின் கட்டுப்பாட்டில் - அரசின் உதவியோடு - சுதந்திர உற்பத்திக் கழகங்கள் என கனவுத் திட்டத்தை முன்வைத்தார்.சோற்றுக்கும் துணிக்கும் மட்டுமே கூலி கொடுத்தால் போதுமென வாதிட்டார் லாஸ்ஸல்.

மார்க்ஸ் இதனை மறுதலித்தார் . கூலி விகிதங்களின் அளவு என்பது தொழிலாளியின் உணவு உடை போன்ற சில வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே சார்ந்ததாக இருக்க முடியாது .தொழிலாளர்களின் பண்பாட்டுத் தேவை, வளர்ச்சி - அரசியல் உணர்வு - புரட்சிகர கண்ணோட்டம் - அமைப்பு வலு - முதலாளிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் என பலவற்றைச் சார்ந்தது என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார்.ஜெர்மன் பொதுத் தொழிலாளர் சம்மேளனத்தை அமைத்திட முயற்சி மேற்கொண்டார், நாடு முழுவதும் பயணித்து கனல் கக்கும் உரைகளால் தொழிலாளி வர்க்கத்தை ஈர்த்தார். பெருமளவில் உறுப்பினர்களும் சேர்ந்தனர்.

அதன் தனிப் பெரும் தலைவராக லாஸ்ஸல் திகழ்ந்தார்.பிஸ்மார்க்குடன் சமரசம் செய்ய முனைந்தார் .அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை, அளித்து தொழிலாளி வர்க்கத்திற்கு மணிமகுடம் சூட்டுங்கள் என யோசனை சொன்னார். பிஸ்மார்க்கோ நரி; இவரிடம் இனிக்கப் பேசி சில சலுகைகள் தருவதாய்ப் போக்குக்காட்டி ஏமாற்றிவிட்டார்.மனந்தளராமல் 1864 இல் தொழிலாளர் சம்மேளனத்தில் மேலும் அதிக தொழிலாளரை உறுப்பினராக்க லீப்சிக், சோலிங்கன், ப்ரெமன், கொலோன், வெர்மல்ஸ் உட்பட பல நகரங்களில் இவர் ஆற்றிய உரை ஆட்சியாளர் அடிவயிற்றைக் கலக்கியது. ரோன்ஸ்டோர்பில் ஆற்றிய உரைக்காக கைது செய்யப்பட்டு; நீதிமன்றத்தால் ஆறுமாதம் தண்டனை பெற்றார் . சிறையில் உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்டது .அரசியலைவிட்டு விலகி விஞ்ஞான பிரச்சாரத்தில் கவனம் குவிக்க விழைந்தார் . 1864 இல் மருத்துவ ஓய்வுகாக சுவிட்சர்லாந்து சென்றார். அங்கும் சும்மா இருக்கவில்லை “சிக்கனம் கடைப்பிடித்து சுயமூலதனத்தில் சுய தொழில்” என சுல்ஸ் டெலிட்ஸ்க் முன் வைத்த கருத்தோட்டத்தை நிராகரித்தார்.

மறுப்பு நூல் எழுதினார். இதுவும் மார்க்சிய அடிப்படையில் அமையாமல் அரசு உதவியோடு என்கிற தன் பழைய பார்வையோடு நின்றது .இந்நூல் எந்த அசைவையும் தொழிலாளர் மத்தியில் உருவாக்காததால் மனம் சோர்ந்தார்.1862 இல் ஹெலன் எனும் பேரழகியை சந்திதார். அப்போதே அவருக்கு அவள் மீது மயக்கம் ஏற்பட்டது .1864 ல் சுவிட்சர்லாந்தில் மீண்டும் சந்தித்தபோது முழுதாய் அவள் மீது மையல் கொண்டார். வெறியோடு காதலிக்கலானார். ஆனால் ஹெலனுக்கும் ருமெனிய பெரும் செல்வர் ஜங்கோவான் ரகோவிட்ஸ்சுக்கும் ஏற்கெனவே நிச்சயமாகி விட்டது. ஆயினும் இவர் காதலை தெரிவிக்க ஜங்கோவனுக்கும் இவருக்கும் மோதல் வெடித்தது. 1864 ஆகஸ்ட் 31 ஆம் நாள் லாஸ்ஸல் கொல்லப்பட்டார்.ஏங்கெல்சின் இரங்கற் செய்தி பொருள் பொதிந்தது அல்லவா?

புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 12/06/2017.

0 comments :

Post a Comment