தாய் பிறந்த போர்க்களம்

Posted by அகத்தீ Labels:

புரட்சிப் பெருநதி – 31

தாய் பிறந்த போர்க்களம்


சு.பொ.அகத்தியலிங்கம்30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை,
 பசி, நோயால் இறந்தனர். ஒவ்வொரு ஐந்து நாளிலும் 
நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


அறை கலகலப்பான நகைச் சுவையால் மூச்சுத்திணறியது ; ‘யாராவது ஒரு பாட்டுப் பாடுங்கள்’ என்கிற வேண்டுகோளோடு உரையை அவர் முடிக்க… இசைவெள்ளம் பெருக்கெடுத்தது.1905 நவம்பரில் வெளிநாட்டிலிருந்து ரகசியமாய் வந்து பீட்டர்ஸ்பர்க்கில் தலைமறைவாய் இருந்தபடியே லெனின் போராட்டங்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார் .

டூமா எனப்படும் ரஷ்ய நாடாளுமன்றத்தைக் கூட்ட ஜார் மன்னர் உத்தரவிட்டார். சட்டமியற்றும் அதிகாரமில்லாத வெறும் பேச்சுமடமாக டூமா கூட்டப்படும் சதியை சுட்டிக்காட்டி டூமாவைப் புறக்கணிக்குமாறு லெனின் வேண்டுகோள் விடுத்தார்.போராட்ட உணர்வு மேலோங்கும் சூழலில் பின்லாந்தில் டாமர்போர்ஸ் எனுமிடத்தில் நடந்த சிறப்பு மாநாட்டில் போல்ஷ்விக், மென்ஷ்விக் ஒற்றுமை குறித்தும், டூமா பகிஷ்கரிப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டில் தான் லெனினை ஸ்டாலின் முதல் முறையாக நேரடியாகச் சந்தித்தார்.நாடு முழுவதும் ராணுவச் சட்டத்தை ஜார் பிரகடனப்படுத்தினார். மாநாடு மாஸ்கோ பொது வேலைநிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தது. டிசம்பர் 7 ஆம் நாள் தொடங்கியது. 9 ஆம் தேதி ஆயுதபாணியாய் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வீதித்தடையரண்களை எழுப்பி உக்கிரமாய் போரைத் தொடங்கினர். கிரஸ்நயாபிரஸ்நாயா, கிரஸ்னோயார்ஸ்க், மோடோவிலிகா, கிரோன்ஸ்டாட், சோர்மோவோ என பல நகரங்களுக்கும் போராட்டம் பரவியது. ராணுவம் பீரங்கித் தாக்குதலை நடத்தியது.

கொன்றுக் குவிக்கத் துவங்கியது. டிசம்பர் 19 வரை நீண்ட இப்போர் ரத்தச் சகதியில் மூழ்கடிக்கப்பட்டது.ரயில்வே போக்குவரத்தை முடக்க முடியாததாலும் ,கிராமப்புறங்களை முழுமையாய் ஈடுபடுத்த முடியாததாலும் தோல்வி ஏற்பட்டது; எனினும் இன்னும் உறுதியுடன் தீவிரமாகப் போராட வேண்டுமென லெனின் சொன்னார். ஆயுதம் ஏந்தியதே தவறென்றார் பிளக்கனோவ். இப்படி இரு வேறு கருத்தை சொல்லிடினும் ஒற்றுமை முயற்சியும் சூடுபிடித்தது.மென்ஷ்விக்குகள், போல்ஷ்விக்குகள் இணைந்த மத்தியக்குழு உருவாக்கப்பட்டது. மென்ஷ்விக்குகளின் ’தீப்பொறி’ ஆசிரியர் குழுவும், போல்ஷ்விக்குகளின் ‘பாட்டாளி’ ஆசிரியர் குழுவும் இணைந்து ‘பார்ட்டினியே இஸ்வெஸ்தியா’ ஸ கட்சிச் செய்தி] எனும் ஏடு -1906 பிப்ரவரி ,மார்ச் மாதங்களில் இரண்டு இதழ் வெளிவந்தன.1906 ஏப்ரல் 23 முதல் மார்ச் 8 வரை ஸ்டாக்ஹோமில் சமூக ஜனநாயகக் கட்சியின் நான்காவது மாநாடு ஒற்றுமை மாநாடாக நடைபெற்றது .57 குழுக்கள் பங்கேற்றன. மென்ஷ்விக்குகளே அதிகம்.

சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட இரண்டாவது டூமாவில் பங்கேற்பது என மாநாடு முடிவெடுத்தது மத்திய கமிட்டியிலும் அவர்களுக்கே பெரும்பான்மை . இம்மாநாடு குறித்து ஸ்வெர்த்தாலாவா என்ற புரட்சிக்காரி எழுதிய வரிகளையே ஆரம்பத்தில் பார்த்தோம். லெனின் வேண்டுகோளை ஏற்று பியானோ வாசித்து இவானவிச் பாட அனைவரும் சேர்ந்திசைக்க அரங்கம் அதிர்ந்ததை குறிப்பிட்ட அவர். புரட்சிக்காரர்கள் உம்மணாம் மூஞ்சியாகத்தான் இருப்பார்கள் என்பதை லெனின் சொல்லாலும் செயலாலும் மாற்றிக் காட்டினார். இசையை ரசித்தார். ஊக்குவித்தார், நகைச்சுவையால் கலகலப்பாக்கினார் என்றார்.கட்சியின் ‘சமூக ஜனநாயகம்’ ஏடு மென்ஷ்விக்குகள் கைக்கு போய்விட்டதால்; ’வோல்னா’ஸஅலை]எனும் தினசரி மே,ஜூன் மாதங்கள் வெளியிடப்பட்டது. ‘ முன்னேறு’, ‘எக்கோ’ ஸஎதிரொலி] எனும் இரு ஏடுகள் வெளிவரலாயிற்று.

லெனின் தொடர்ந்து எழுதலானார் .புரட்சி நசுக்கப்பட்டாலும்,1907 ஆம் ஆண்டு 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கு கொண்ட வேலை நிறுத்தங்கள் நடந்தன. 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய கலகங்கள் வெடித்தன. 1905 பேட்டில்ஷிப் போத்தம்கின் கப்பற்படை எழுச்சிக்குப் பின் 1906 செப்டம்பர் வரை 230 சிறு போராட்டங்களும் 21 பேரெழுச்சிகளும் இராணுவத்தில் நடந்தன. சுமார் ஒரு லட்சத்து 24 ஆயிரம் படைவீரர்கள் பங்கேற்றனர்.1907-1908 ஆண்டுகளில் மட்டும் அரசியல் குற்றங்களுக்காக 28,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் . 1905 -12 காலகட்டத்தில் 30,000க்கும் அதிகமானோர் சிறைச்சாலையில் சித்ரவதை, பசி, நோயால் இறந்தனர் .

ஒவ்வொரு ஐந்து நாளிலும் நான்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது .பலர் மீண்டும் மீண்டும் தண்டிக்கப்பட்டனர். எடுத்துக்காட்டாக ; ஸ்வெர்டுலோவ் மூன்று முறை கைது செய்யப்பட்டார், இரு முறை நாடு கடத்தப்பட்டார்; மொத்தத்தில் 12 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். ஆர்டுஜோனிகிட்ஷே கடுஞ்சிறை ,கடும் உழைப்பு முகாம் , நாடுகடத்தல் என 14 ஆண்டு வாடினார். இருமுறை கைது செய்யப்பட்ட டிஜெர்ஷின்ஸ்கி 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.

பட்டியல் பெரிது.ஜார் மன்னனின் ‘குண்டாந்தடிக் கொள்கை’ ஒரு புறம்; மறுபுறம் புரட்சிகர உறுதியை சிதற அடிக்க கறுப்பு நூற்றுவர் ,ரஷ்ய மக்கள் சங்கம் ,முடியரசு வாதிகள் ,ஐக்கிய பிரபுக்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் சித்தாந்த தாக்குதல். ஒரு கணித மேதை பல்வேறு கணக்குகளைப் போட்டுக்காட்டி எப்படிக் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தாலும் ஜாரை முறியடிக்க முடியாதென வாதிட்டார். மென்ஷ்விக்குகள் சீர்குலைவு பிரச்சாரத்தில் மூழ்கினர். பிளக்கனோவ் மட்டுமல்ல டிராட்ஸ்கியும் எதிர்முனையில் நின்றார்.இந்தச் சூழலில்தான் மாக்ஸிம் கார்க்கி தன் புகழ் பெற்ற படைப்பான “தாய்” நாவலை எழுதினார். அந்நாவல் உந்துவிசையாய் மாறியது.

“காலத்துக்கேற்ற மிகவும் முக்கியமான புத்தகம்” என லெனின் உச்சிமோந்தார்.முதல் டூமா புறக்கணிப்புக்கு பின்னர் லெனின் சுயவிமர்சனமாகச் சொன்னார்,” 1906 இல் டூமாவைப் புறக்கணித்ததானது சிறிய, சுலபத்தில் நிவர்த்தி செய்யக்கூடிய தவறாகும் .தனி நபர்களுக்கு எது பொருந்துகிறதோ அது அவசியமான திருத்தங்களுடன் அரசியலுக்கும் பொருந்தும் .புத்திசாலி என்பவன் ஒரு தவறும் செய்யாமலிருப்பவனல்ல ; அத்தகைய மனிதர்கள் யாருமில்லை; இருக்கவும் முடியாது ;மிகப் பெரும் தவறுகளைச் செய்யாதிருப்பவனும்; செய்த தவறுகளை விரைவாகவும் சுலபமாகவும் திருத்திக் கொள்பவன்தான் புத்திசாலி.” “முதல் டூமா கலைக்கப்பட்டபோது லெனின் எழுதிய “டூமா கலைப்பும் பாட்டாளி கடமைகளும்” என்ற பிரசுரமும்;

இரண்டாவது டூமாவில் பங்கேற்க வேண்டி அவர் ஆற்றிய உரைகளும் “ சமூக ஜனநாயகவாதிகளும் தேர்தல் உடன்பாடும்” என்ற பிரசுரமும் முக்கியமானவை .முதல் டூமாவில் 18 பேர் இடம் பெற்றனர். இரண்டாம் டூமாவிற்கு தேர்வான 65 பேரில் 18 பேர் மட்டுமே போல்ஷ்விக்குகள். ஒரு வேடிக்கை பீட்டர்ஸ்பர்க்கில் மென்ஷ்விக்குகள் சீர்குலைவாளர்களோடு செய்த ரகசிய உடன்பாட்டை அம்பலப்படுத்தி “ பீட்டர்ஸ்பர்க் தேர்தலும் 31 மென்ஷ்விக்குகளின் மாய்மாலமும்” என எழுதிய கட்டுரை பிரச்சனையானது. லெனின் மீது விசாரணைக் கமிஷனைக் கட்சி அமைத்தது. லெனில் தக்க ஆதாரங்களோடு வாதிட அந்த விசாரணை அப்படியே முடங்கிப்போக விடப்பட்டது.

புரட்சி தொடரும்...
நன்றி ; தீக்கதிர் . 05/06/2017.

0 comments :

Post a Comment