அறிவியல் இறுதியில் சரணடையுமா ஆன்மீகத்தில் ?

Posted by அகத்தீ Labels:








அறிவியல்  இறுதியில் 
சரணடையுமா 
ஆன்மீகத்தில் ?

சு.பொ.அகத்தியலிங்கம் .



·         எல்லாவற்றிற்கும் அறிவியல் விடை கண்டு விட்டதா ? அறிவியலால் விளக்க முடியாத விவகாரங்கள் எவ்வளவோ உண்டே ? கடைசியில் ஆன்மீகத்திற்கு வந்துதானே ஆகவேண்டும் ?

 

·         மதம் உங்களைக் குத்துதா குடையுதா ? பேசாம இது ஒரு பக்கம் இருந்துகிட்டுப் போகட்டும் அறிவியல் அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும் என்று சிலர் சொல்றது சரிதானே ?

 

·         மூடநம்பிக்கைகள்னு மதத்தையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் மட்டுமே பகடி செய்கிறீர்கள் ? கம்யூனிசம் வெற்றிபெறும்னு இன்னும் சொல்லீட்டிருக்கீங்க அது மூட நம்பிக்கை இல்லையா ?

 

·         நீங்க அடிக்கடி வறட்டு நாத்திகர்ன்னு ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் ; அப்படின்னா நாத்திகரில் பலரகம் இருக்கிறதா ? அதுலகூட நீங்க ஒற்றுமையாக இல்லையா ?

 

·         மதம் சாதிப் பகைமை எதுவும் இல்லாத ஒரு பரம்பொருளை ஒப்புக்கொள்வதால் மனிதகுலத்துக்கு நன்மைதானே ! நஷ்டம் இல்லையே ! அந்தப் பரம்பொருளை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம் ?

 

ஏற்கெனவே 25 கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன் . அது சிறு பிரசுரமாகவும் வந்து விட்டது .கேள்விகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. சந்திப்போம் . கேள்வி கேட்கப் பழகுவதே ஞானத் தேடலின் முதல் நிபந்தனை . தயக்கமின்றி கேளுங்கள் ! உங்களோடு நானும் அறிவைத் தேடி அடைய முயல்வேன் .


1] எல்லாவற்றிற்கும் அறிவியல் விடை கண்டு விட்டதா ? அறிவியலால் விளக்க முடியாத விவகாரங்கள் எவ்வளவோ உண்டே ? கடைசியில் ஆன்மீகத்திற்கு வந்துதானே ஆகவேண்டும் ?

கேள்வியில் முதல்பகுதி மெய்யே ! வானில் எத்தனை நட்சத்திரம் உள்ளது எண்ணி முடிக்கவில்லையே அறிவியல் !பால்வெளியில் அறிவியல்  ஆய்ந்தறிய வேண்டியவை இன்னும் அதிகம் உண்டு .சூரியக் குடும்பத்தில் கோளங்கள் ஒன்பதா எட்டா ? முன்பு ஒன்பது என்றது அறிவியல் இப்போது அதனை திருத்தி எட்டு என்கிறது .    புதன்  வெள்ளி (சுக்கிரன்),  பூமி ,செவ்வாய், வியாழன் ,சனி, யுரேனஸ், நெப்டியூ என எட்டை மட்டுமே இப்போது அறிவியல் கோள் என்கிற வரையறையில் கொண்டுவந்துள்ளது .ஃபுளோட்டோ கோளல்ல என்ற கருத்து இப்போது வலுபெற்றுள்ளதே ! புளூட்டோ. செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயெ என்பவை 2006 ஆம் ஆண்டிலிருந்து குறுங்கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன . இப்படி அறிவியல் தன்னை இன்னும் நுட்பமாகச் செம்மை படுத்திக்கொண்டே செல்லும் .நம் உடலைப் பற்றி மருத்துவ அறிவியல் இன்னும் எல்லாவற்றையும் அறிந்துகொண்டிருப்பதாகக் கூறமுடியாது . இன்னும் மருத்துவ உலகில் பல சவால்கள் உண்டு . அறிவியல் அறிந்ததைவிட அறியவேண்டியது இன்னும் அதிகமே ! தேடல் தொடர்கிறது . ஆனால் ஒன்று மட்டும் உறுதி என் முப்பாட்டன் அறிந்ததைவிட நான் அறிந்தது அதிகம் . என் பேரன் என்னைவிட அதிகம் அறிவான் . அறிவியலில் தனித்தன்மையே தவறை ஒப்புக்கொண்டு சரியை நோக்கி முன்னேறுவதுதானே ! அறிவியலிலும் விடை தெரியாத பல மர்ம முடிச்சுகள் உண்டு . அதை யாரும் மறுப்பதில்லை . அதனை நோக்கித் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . நேற்று புதிராய் இருந்த பலவற்றுக்கு இன்று அறிவியல் புதிரை அவிழ்த்து விடை கண்டுள்ளது . மீத முள்ள புதிர்களை அவிழ்க்க ஆய்வு தொடர்ந்து கொண்டே இருக்கும் . இங்கு அறிவியலில்  “விடை தெரியவில்லை” என்று சொல்வதைவிட  “விடை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது” என்று சொல்வதே சாலப்பொருந்தும்.ஆனால் ஆன்மீகம் அப்படியல்ல விடைதெரியாது என்பதை அவர்கள் மனம் திறந்து ஒப்புக்கொள்வதே இல்லை . “ எல்லாம் அவன் செயலென்றோ” “ ஈசன் விளையாட்டென்றோ” பழியை சுலபமாய் உறுதி செய்யப்படாத ஒன்றின் மீது சுமத்திவிட்டு தமக்கு  “ஞானத் தெளிவு” ஏற்பட்டுவிட்டதாய் தன்னையும் ஏமாற்றி சமூகத்தையும் ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பதே மெய்! ஆக ,விடை தெரியாத வினாக்கள் அறிவியலிலும் உண்டு ; ஆன்மீகத்திலும் உண்டு . அறிவியல் தொடர் முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக அடிமேல் அடியெடுத்துவைத்து விடையைத் தேடிக்கொண்டே இருக்கும் .ஆனால் , ஆன்மீகம் கதவை அடைத்துவிட்டு கடவுளிடம் சரணடைந்துவிடும் .இதுதான் இரண்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு . இரண்டும் இரண்டு பாதை . ஆக அறிவியலார் ஆன்மீகத்தில் சரணடையத் தேவையே எழவில்லை . ஏதேனும் தனிப்பட்ட அறிவியல் அறிஞர் சிலர் ஆன்மீகத்தில் சரண்டைந்தால் அது அவர் தேடல் முயற்சியை கைவிட்டதின் வெளிப்பாடாகவோ அல்லது தன் துறைக்கு வெளியே அறிவை விருத்தி செய்து கொள்ளாதவராகவோ இருக்க வேண்டுமே தவிர  அது அறிவியலின் வீழ்ச்சியாகாது .


2] மதம் உங்களைக் குத்துதா குடையுதா ? பேசாம இது ஒரு பக்கம் இருந்துகிட்டுப் போகட்டும் அறிவியல் அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும் என்று சிலர் சொல்றது சரிதானே ?
பல நேரங்களில் பல இடங்களில் நேரடியாக என்னிடம் இப்படிச் சொன்னவர்கள் உண்டு . அவர்கள் அறிவியலை நிராகரிப்பவர்களும்  அல்லர் ; மதநல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்களும் அல்லர் . எனவே இப்படி சொல்லுகிறவர்கள் நிச்சயமாய் எதிர்வரிசையில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் அல்லர் . அதே சமயம் மதம் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சரியான பாதையில் மனிதகுலம் முன்னேறிச் செல்ல தடையாக இருக்கிறது என்பதையும் மறுக்கவே இயலாது . இரண்டு உலக யுத்தங்களில் பலியானதைவிட மதக்கலவரங்களிலும் மத அடிப்படையிலான யுத்தங்களிலும் பலியானவர்கள் அதிகமல்லவா ? தனிப்பட்ட முறையில் என் சகமனிதனுக்கு ஏற்பட்ட சோதனையும் சோகமும் என்னைக் குத்தாமல் குடையாமல் இருக்குமா ? அப்படி இருந்தால் நான் மனிதனா ? அறிவியல் மனித குலத்துக்கு அளித்துள்ள தீமையைவிட நன்மையே பலமடங்கு அதிகம் . தீமை என நிரூபிக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை எதிர்ப்போம் . எடுத்துக்காட்டு : அணுகுண்டு , அணு உலை .மதமோ தீமையையே அதிகம் செய்திருக்கிறது . மதமெனும் பேய் பிடியாதிருக்கட்டும் !




3] மூடநம்பிக்கைகள்னு மதத்தையும் அது சார்ந்த நம்பிக்கைகளையும் மட்டுமே பகடி செய்கிறீர்கள் ? கம்யூனிசம் வெற்றிபெறும்னு இன்னும் சொல்லீட்டிருக்கீங்க ; அது மூட நம்பிக்கை இல்லையா ?

நெற்றியடிக் கேள்வி . மூடநம்பிக்கை மதத்தில் மட்டுமே இருப்பதாகச் சொல்வதும் பேசுவதுமே மூடநம்பிக்கைதான் . ஆயின் மதம் சார்ந்த நம்பிக்கைகளில் சடங்குகளில் அது அதிகம் வெளிப்படும் . அடையாளம் காண்பதும் . எதிர்ப்பதும் எளிது . இந்த கிரீம் உபயோகித்தால் சிகப்பாகிவிடுவோம் என விளம்பரத்தை நம்பி கிரீம் வாங்குவதும் மூடநம்பிக்கையே ! ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்தால் திடீர் கோடீஸ்வரனாகிவிடலாம் என ஏமாந்ததும் மூடநம்பிக்கையே ! ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே அறிவுஜீவி என்பதும் மூடநம்பிக்கையே ! தனிப்பட்ட  ஒருவர் இந்தியாவின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடுவார் என நம்புவதும் மூடநம்பிக்கையே . அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படாத – அல்லது அறிவியல் சோதனைக்கு உட்பட மறுக்கிற எதுவும் மூடநம்பிக்கையே . மூட நம்பிக்கை என்ற சொல்லைக் கூட அறிவியலார் ஏற்பத்தில்லை . சரியான நம்பிக்கை , தவறான நம்பிக்கை என்றே வகைப்படுத்துவர் . எனினும் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் அர்தமற்ற சடங்குகள் , சம்பிரதாயங்கள் , குருட்டு நம்பிக்கைகளை எதிர்க்க மூடநம்பிக்கை என்ற சொல்லை பயன்படுத்துவது தவிர்க்க இயலாது . அதுமட்டுமல்ல இன்னும் சாமியார்களை நம்பியும் சோதிடர்களை நம்பியும் வாழ்வை வீணாக்குவோர் அதிகம் உள்ளனரே ! ஆராதனை மூலமே நோய்குண்மாகும் எனவும், முடவர்கள் நடக்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் என சொல்லித் திரிகின்றனரே ! எனவே மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளை முதன்மைப் படுத்தி எதிர்க்கவேண்டியுள்ளது . மற்ற மூடநம்பிக்கைகளில் சூடுபட்டதும் உதறிவிடுவார்கள் . ஆனால் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளில் அவ்வாறு நிகழ்வதில்லை . எனவே மதம் சார்ந்த மூடத்தனங்களை – அது எந்த மதமாக இருப்பினும் எதிர்ப்பது காலத்தின் கட்டாயம் . இது தவறு என்று சொல்வதால் ஒருவர் மனது புண்படுமாயினும் தவறை தவறெனச் சொல்லாமல் இருப்பது பெருந்தவறல்லவா ? சரி ! அடுத்த பகுதிக்கு வருவோம்  !கம்யூனிசம் வெற்றி பெறும் என்று சொல்வது சமூக அறிவியல் விருப்பமே ! அது மூட நம்பிக்கையாகாது .ஏனெனில் சுரண்டல் தளையிலிருந்து மனிதகுலத்தை முற்றாய் விடுவிக்கும் ஒரே சமூக விஞ்ஞானமாய் இருப்பது மார்க்சியமே ! வசதி படைத்தவர்கள் தர மாட்டார்கள் ; வயிறு பசித்தவர்கள் விடமாட்டார்கள் . இங்கு வசதி படைத்தவர் எண்ணிக்கை மிகக்குறைவாகவும் வயிறுபசித்தவர்கள் எண்ணிக்கை ஆகப் பெரும்பான்மையாகவும் இருப்பதால் ; [ இவர்களில் பெரும்பாலோர் மத நம்பிக்கையுள்ளவராக இருப்பினும்  ] இவர்கள் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதும் ; அதற்காக உழைப்பதும் மூடநம்பிக்கையாகது . சமூக அக்கறையாகும் .



4] நீங்க அடிக்கடி வறட்டு நாத்திகர்ன்னு ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள் ; அப்படின்னா நாத்திகரில் பலரகம் இருக்கிறதா ? அதுலகூட நீங்க ஒற்றுமையாக இல்லையா ?

ஆம் ! நான் வறட்டு நாத்திகர் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவது உண்மையே ! அதற்கு நியாயமான காரணங்களும் உண்டு . தத்துவ உலகம் இரு  பெரும் முகாங்களாகப் பிரிந்து நிற்கிறது . இது குறித்து மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ்சும் எங்கெல்சும் கூறுவதென்ன ? . “ எல்லா தத்துவங்களுக்கும் குறிப்பாக நவீன காலத் தத்துவத்திற்கு இருக்கக்கூடிய ஆகப் பெரும் அடிப்படைக் கேள்வியானது சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு குறித்ததாகும் .. இந்தக் கேள்விக்கு தத்துவ ஞானிகள் அளித்துள்ள பதில்கள் அவற்றை இரு பெரும் முகாம்களாகப் பிரித்துள்ளன . இயற்கையைவிட ஆன்மா முந்தையது என்று வலியுறுத்தியதுடன் ஏதோ ஒரு வடிவத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று  இறுதி முடிவுக்கு வந்துவிட்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமில்  உள்ளடங்குவார்கள்  . இயற்கை முந்தியது என்று கருதியவர்கள் பொருள் முதல் வாதத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களாவார்கள்”. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் மக்களறிந்த சொற்களில் கூறுவதனால் ஆன்மீகவாதிகள் , வேதாந்திகள் , மதநம்பிக்கையாளர் என்படுவோர் ஒரு சாரார் . இவர்களை கருத்து முதல்வாதிகள் எனலாம் . நாத்திகர் , பகுத்தறிவாளர் , சார்வாகர் , லோகாயதவாதிகள் என்படுவோர் இன்னொரு சாரார் . இவர்களை பொருள்முதல் வாத முகாமில் அடக்கலாம் . உலகைப் புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் பொருள்முதல் வாதிகள் எல்லோரும் ஒரே நிலையில் இல்லை . அறிவியல் வளர வளர புரிதல் வெகுவாக மாறலாயிற்று ; ஆயினும் இப்படி மாறிக்கொண்டே இருக்கும் நிலையை அல்லது இயங்கிக்கொண்டே இருக்கும் நிலையை புரியாமல் பேசியவர் உண்டு . இன்றும் பேசுகிறவர் உண்டு . எல்லா பிரச்சனையையும் கடவுள் தீர்த்துவைப்பார் என்று நம்புவது எவ்வளவு தவறோ ; அதேபோல்  கடவுளை நம்புவதுதான் எல்லாச்சிக்கல்களுக்கும் அடிப்படை என்று வாதிடுவதும் ஆகும் . இத்தகையோரைச் சுட்டவே வறட்டு நாத்திகர் என்ற சொல்லைப் பயன் படுத்த வேண்டிவந்தது . அதுமட்டுமல்ல நாத்திகம் , பகுத்தறிவு பேசிய – பேசுகிற அனைவருமே சரியான புரிதலோடு பார்க்கிறார்கள் - பிரச்சனைகளை அணுகுகிறார்கள் என்று சொல்ல முடியாது .அவர்களும் இந்த சமூகத்தை ஆய்வுசெய்வதில் சில இடங்களில் தவறிவிட்டார்கள் .இதனை சரியான சமூக அறிவியல் கோணத்தில் அலசி நேரான தடத்தில் நடை போடவைத்தவர் மார்க்ஸே ! ஆகவே மார்க்ஸ்ஸின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பயில்வது அவசியமாகிறது . தொடர்ந்து  கேள்விகள்  பதில்கள் மூலம் அத்திக்கில் செல்வோம் . அதே சமயம் நாத்திகர்கள் மற்றும் பகுத்தறிவாளர்களை நாம் எதிர்நிலையில் பார்ப்பதும் பிழையாகிவிடும் . அவர்களோடு சிலவற்றில் முரண்படுவோம் சிலவற்றில் உடன்படுவோம் . நட்பாக விமர்சனபூர்வமான உரையாடல்களூடே உண்மையை நோக்கிப் பயணிப்போம்.

5 ] மதம் சாதிப் பகைமை எதுவும் இல்லாத ஒரு பரம்பொருளை ஒப்புக்கொள்வதால் மனிதகுலத்துக்கு நன்மைதானே ! நஷ்டம் இல்லையே ! அந்தப் பரம்பொருளை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம் ?

இந்த கற்பனை கேட்பதற்கு உவப்பாக இருக்கிறது . ஆனால் உன்மையின் பக்கம்கூட நெருங்கவில்லை .பரம்பொருள் என்பதே மதவாதிகள் கற்பிதமே தவிர உண்மை அல்ல ; எந்த மதமும் தாங்கள் கூறுவதே மெய்யான பரம்பொருள் என்பதுடன் ஏனையோர் கூறும் பரம்பொருளை எள்ளி நகையாடவும் செய்கின்றனவே . இஸ்லாமை எடுத்துக்கொண்டால் தாங்கள் வணங்கும் ஏக இறைவனைத் தவிர வேறெதையும் ஒப்பார் . மற்றவர்கள் அனைவரையும் நாத்திகர் என்றே கூறுவர் . இந்திய மரபில் வேதத்தை நம்பாத அனைவரையும் நாத்திகர் என்றே கூறுவர் . இப்படியே தங்கள் மத்தத்தைத் தவிர மற்றவர்களை மூடர்களாகவே ஒவ்வொரு மதமும் சித்தரிக்கும் . ஆகவே மதம் சாதிப் பகைமை அற்ற பரம்பொருள் என்கிற கற்பிதத்தை முதலில் எந்த ஆத்திகராவது ஒப்புக்கொள்கிறாரா ? கிடையாது . ஒரு சின்ன விளையாட்டில் இறங்குவோம்  மூன்று வட்டங்கள் வெள்ளையாக வரைவோம் . அதில் கீழே ஒன்றில் கிறுத்துவர் . இன்னொன்றில் முஸ்லீம் . இன்னொன்றில் கிறுத்துவர் என எழுதி வைப்போம் . மெய்யான பரம் பொருளை ஏற்காதவர் யாரென கணித்து இவ்வட்டத்தில் கருப்புமை பூசுக என இந்து ,முஸ்லீம் ,கிறுத்துவர் என மூவரிடமும் கருப்புச் சாயத்தைக் கொடுங்கள் . இறுதியில் எல்லா வட்டமும் கறுப்பாகவே இருக்கும் . இதனை நீங்கள் பரிட்சித்துப் பார்க்கலாம் .

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் 1 மார்ச் 2015

0 comments :

Post a Comment