தினம் ஒரு சொல் .53 [ 22 /10/2018 ]
விதவிதமான டிசைன்களில் பல்வேறு வண்ணங்களில்
வரிசையாய் புடவைகள் தொங்க விடப்பட்டிருக்கின்றன அந்த ஜவுளிக் கடையில் . ஒரு பெண் முகத்தைச்
சுழித்து ஒதுக்கும் ஒன்றை இன்னொரு பெண் ரசித்து அணைக்கிறாள் . ஒருத்தி ரசித்து எடுக்கும்
ஒரு புடவையை இன்னொருத்தி இது என்ன ரசனையோ என முணுமுணுக்கிறாள் .பெண்கள் மட்டுமல்ல ஆண்களின்
தேர்விலும் இது போன்றே நிகழும் .
சிலருக்கு பளிச் நிறங்களில் ஒரு ஈர்ப்பு இருக்கும்
.வேறு சிலரோ உறுத்தாத நிறமாக எடுங்கள் என்பர் . நான் இளைஞனாக இருந்த போது வேலைதேடி
செல்கையில் சிவப்பு ,கறுப்பு ,பச்சை என அடர் நிறங்களை தவிர்க்க யோசனை சொல்வர் . இப்போது கணினி ஊழியர் மட்டுமல்ல உயர் பதவியில் இருப்பவர்களும்
இது போன்ற நிறங்களை விரும்பி அணியக் காண்கிறோம் . கணினியின் வருகை நிறம் குறித்த பார்வையை
உடைத் தெறிந்துவிட்டதோ ?
கிராமத்துக்கும் நகரத்துக்கும் , கணவனுக்கும்
மனைவிக்கும் ,அப்பாவுக்கும் மகனுக்கும் ,அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே போல் ரசனை அமைவது
அபூர்வம் .பள்ளியில் /அலுவலகத்தில் சீருடையில் இருப்போருக்கு ஒரு நாள் விதிவிலக்கு
எனில் கொண்டாட்டமே !குழந்தையின் ஈர்ப்பு இளைமையில் மாறும் ,முதுமை இன்னொன்றை நாடும்
.காலந்தோறும் ரசனை மாறிக்கொண்டே இருக்கும் .
பெரும் பொருட் செலவில் விளம்பரம் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட
நிறமும் டிசைனும் கூட ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரையே ஈர்க்கும் . எது உயர்ந்த ரசனை
? எது தாழ்ந்த ரசனை ? அளவு கோல் எது ? எது வளமான பண்பாடு ? எது வறண்ட பண்பாடு ? சொல்ல
முடியுமா ?
ஒருபோதும் ஒற்றை ரசனை சாத்தியமே இல்லை .ஒரு
ஜவுளிக்கடையில் இவ்வளவு வண்ண வேற்றுமை ரசனை எனில் காலங்காலமாக முகிழ்த்த பண்பாட்டில்
எவ்வளவு இருக்கும் ! எங்கும் ஒற்றைப் பார்வை எப்போதும் இல்லை !விதவிதமாய் மனிதர் !
ஒவ்வொருவரையும் ரசிப்போம் ! மகிழ்ந்து கூடிக் குலாவுவோம் ! சரிதானே !
Su Po Agathiyalingam
0 comments :
Post a Comment