சொல்.48

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .48 [ 16 /10/2018 ]

அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை . இப்படிச் சொல்லாத பெரியவர்கள் மிகக்குறைவு.இதில் வேடிக்கை என்னவெனில் அவர்கள் இளைஞர்களாக இருந்த போது அவர்களின் தாத்தாவும் இதே வார்த்தைகளைச் சொன்னார்கள் என்பதுதான்.

காலம் ஓடிக்கொண்டே இருக்கும் .மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் . நல்லதும் கெட்டதும் கலந்தேதான் மாற்றங்கள் இருக்கும் . கடந்த காலத்தின் நல்லவற்றை அல்லது தமக்கு பிடித்தவற்றை மட்டும் அசைபோட்டு அங்கலாய்ப்பது பெரியோர் இயல்பு . புதியதின் நல்வாய்ப்பை மட்டுமே பார்த்து பழமையைப் பழிப்பது இளையோர் இயல்பு .

முன்பெல்லாம் ஒரு தலைமுறை என்பது குறைந்தது 35 வருடங்களாவது இருக்கும் .அப்போது மாற்றங்கள் மெதுவாக நிகழ்ந்தன .இப்போது பதினைந்து வருடங்களில் ஒரு தலைமுறை சிந்தனை மாறிவிடுவதாய் பத்தாண்டுகளுக்கு முன்னர் சொன்னார்கள். மாற்றம் அவ்வளவு வேகம் கொண்டுள்ளது .இப்போது பத்தே ஆண்டுகளில் எவ்வளவோ மாறிவிடுகின்றன .

மாறாதது எதுவுமில்லை .மாற்றங்களே நிரந்தரம் . மாற்றங்களூடே தன்னைத் தகவமைத்துக் கொள்வதும் , தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வதும் காலத்தின் கட்டாயம் .

பெரியவரோ இளைஞரோ அன்றாடம் நிகழும் மாற்றங்களை உள்வாங்கி தன்னை வளர்த்துக் கொள்ளாவிடில் தொழிலில் ,வாழ்க்கையில் ,சமூகத்தில் தோற்கடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடுவோம் ! இதுதான் காலநியதி ! இது தனிநபருக்கு மட்டுமல்ல .நிறுவனங்களுக்கு ,இயக்கத்துக்கு அனைத்துக்கும் பொருந்தும் .

மாற்றங்களூடே உங்களைச் செதுக்கிக்கொண்டே இருங்கள் !









































































0 comments :

Post a Comment