தினம் ஒரு சொல் .37 [ 5 /10/2018 ]
யோகா செய் ,தியானம் செய் ,உடற்பயிற்சி செய்
,நடை பயிற்சி செய் ,இப்படி ஆளுக்காள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் . இதைச் சாப்பிடு,
அதைச் சாப்பிடு, இப்பிடி சாப்பிடு. அப்பிடி சாப்பிடு என உபதேசம் செய்து கொண்டிருக்கிறார்கள்
.
உடல் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பது
மிகச்சரி .ஆனால் எல்லோருக்கும் ஒரே மாதிரி யோசனை உதவாது .கடும் உடல் உழைப்பாளிகளின்
தேவையும் , உட்கார்ந்து நாற்காலியைத் தேய்ப்பவரின் தேவையும் ஒன்றல்ல .
கடலில் மீன் பிடிக்கப் போகிறவரின் சவால்மிகு
வாழ்க்கையும் கல்லுக்கு முன் உட்கார்ந்து மந்திரம் முணுமுணுப்போரின் வாழ்க்கையும் ஒன்றல்ல .நேர் எதிரானது . எல்லோருக்கும்
ஒரே உபதேசம் இயந்திரத்தனமானது .நடைமுறைக்கு ஒவ்வாதது .
அவரவர் பணிச்சூழல் ,வாழ்க்கைச்சூழல் ,பண்பாட்டுச்
சூழல் சார்ந்தே எதை உண்பது, எதைச் செய்வது, எதைத் தவிர்ப்பது என்பதை தீர்மானிக்க இயலும்
.
கெட்டுப்போன மீனின் நாற்றத்துக்கும் கருவாட்டின்
வாசனைக்குமான வித்தியாசத்தை உணர்ந்தவனே அறிவாளி என அண்மையில் நண்பர் பாவேல் ஒரு பதிவில்
குறிப்பிட்டிருந்தார் .எவ்வளவு பொருள் பொதிந்த சொல் .யோசிக்க யோசிக்க விரியும் .
தன்னைப் போல் பிறரை நேசிக்க வேண்டும் .என்பது
சரி !தனக்குப் பிடித்ததே எல்லோருக்கும் பிடிக்க வேண்டுமென்பது எப்படிச் சரியாக இருக்க
முடியும் ?
வீடோ ,ஊரோ ,நாடோ ,தேசமோ வெறும் மந்தையல்ல
.மானுடம் என்பதே பன்மையின் பூந்தோட்டம் தானே . ஒற்றைப் பார்வை கவைக்கு உதவாது .
0 comments :
Post a Comment