தினம் ஒரு சொல் .47 [ 15 /10/2018 ]
சிலரின் ஞாபக சக்தி வியக்க வைக்கும் .எதைச்
சொன்னாலும் மிகத் துல்லியமாக நினைவுகூர்ந்து சொல்லிவிடுவார்கள் .வருடம் ,மாதம் ,நாள்
,பெயர் எதுவும் தப்பாது .
சிலருக்கு தன் தொலைபேசி எண்கூட நினைவில் இருக்காது
;தப்புத்தப்பாகவே சொல்வர் .அதிலும் கைபேசி வந்தபிறகு எல்லாம் அதற்குள் அடங்கிவிட ஞாபகம்
வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் சுருங்கிவிட்டது .
வீட்டில் ஆண்களின் ஞாபக சக்தி சோதனைக்குள்ளாகும்
.அலுவலகம் விட்டு வரும்போது வாங்கிவருவதாகச் சொன்னவற்றை மறந்து வந்ததே அதிகம் .அது
உண்மையில் ஞாபக மறதியா அல்லது காரிய மறதியா என்பது இதுவரை சந்தேகத்துக்கு உரியதாகவே
உள்ளது.
இந்த புடவை இங்கு டூர் போகும் போது வாங்கியது
, இந்த குண்டான் அந்தத் திருவிழாவில் வாங்கியது என ஒவ்வொன்றிலும் ஞாபகச் சுவடுகளைத்
தடவிப்பார்த்து மனைவி சொல்லும் போது கணவன் முகத்தில் அசடு வழியும் .
ஏன் இந்த நிலை ? ஒரு வேளை ஆண்களைவிட பெண்களுக்கு
ஞாபக சக்தி அதிகமோ ?அப்படி எல்லாம் இல்லை .ஞாபக சக்திக்கு பாலின பாகுபாடெல்லாம் கிடையாது
.எதில் மனம் லயித்து செய்கிறோமோ அது ஞாபகத்தில் நிலைக்கும் .
ஞாபகம் என்பதுகூட ஈடுப்பாட்டின் இன்னொரு அளவுகோல்
என்று சொல்லிவிடலாம் . இதில் வேடிக்கை என்னவெனில் எதை எதை நினைவில் வாழ்நாளெல்லாம்
சுமக்க வேண்டுமோ அதை மறந்துவிடுவதும் ; எதை எதை அவ்வப்போதே மறந்துவிட வேண்டுமோ அதைத்
தூக்கிச் சுமந்து தானும் வருந்தி பிறரையும் வருத்தப்பட வைப்பதும்தான் .
ஞாபகம் மட்டுமல்ல ஞாபக மறதியும் வாழ்க்கை மகிழ்ச்சியின்
ரகசியமே ! எதெது எனத் தேர்வதில்தான் துயரத்தின் களிம்பும் காயமும் அடங்கும் .
0 comments :
Post a Comment