சொல் .57

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .57 [ 26 /10/2018 ]

மாலை 5 மணி எனில் 4.55 க்கே வந்து விடுவார் .நேரம் தவறாமை அவரது அருங்குணம் எனச் சிலரைப் போற்றுவோம் . “அவரா ? கல்யாணத்துக்கு வரச் சொன்னால் பிள்ளை பிறந்த நாளுக்குத்தான் வருவார்!” என்பது சிலரைப் பற்றி நம் அபிப்பிராயம் .

நேர மேலாண்மையப் பொறுத்தவரை நம்மில் பெரும்பாலோர் சராசரிக்கும் கீழேதான் .நேரம் பற்றவில்லை என அங்கலாய்க்காதவர் குறைவு. நேரத்தை எப்படிக் கடத்துவது என்பது வேலையில்லாதவர்களுக்கும் ஓய்வுபெற்றவகளுக்கும் கவலை .

நீங்கள் எப்படி தலை கீழாக நின்றாலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் அதனைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது .அப்படியாயின் அதை செலவு செய்வதில் ஒரு திட்டம் இருக்க வேண்டுமா இல்லையா ? நம் பண்பாட்டில் அது இன்னும் பழகவில்லை . ராகு காலம் ,எம கண்டம் ,நல்ல நாள் , கெட்ட நாள் என நாளையும் பொழுதையும் விரயம் செய்வது எந்தவகையிலும் நியாயமில்லை .

நீங்கள் உரிய நேரத்துக்கு ஓர் இடத்துக்குப் போய்ச் சேர்வதோ தாமதமாவதோ போக்குவரத்து நெரிசலைப் பொறுத்தே அமையும் .எனினும் அதற்கும் உரிய வகையில் திட்டமிடல் வேண்டாமோ ? நீங்கள் தாமதம் ஆவதால் உரிய நேரத்தில் வந்தவர்களைத் தண்டிக்கிறோம் என்றே பொருள். உங்கள் தாமத குணத்தால் பிறர் தண்டிக்கப்படல் சரியோ

நேரநிர்வாகம் எனில் 24 மணி நேரம் அட்டவணை போட்டு சீரியஸாக உம்மணாம் மூஞ்சியாய் இருப்பதல்ல ; ஓய்வு ,உறக்கம் ,பொழுது போக்கு அரட்டை என எதையும் இழக்காமல் நாம் பங்கேற்க வேண்டியவற்றில் நேரம் தவறாமையே !இது ஒன்றும் பெரும் சவால் அல்ல .ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் போது பணி நேரத்தில் செல்ல பயிற்சி பெறுகிறோமே .அதுவேதான் .தனக்கு காரியம் ஆக வேண்டுமெனில் நேரம் காப்பதும் ;பொது எனில் தண்ணீர் ஊற்றுவதும் ஆகப்பெரும் தீய பழக்கம் .அது எங்கும் பல்கிப் பெருகி உள்ள வியாதி .

நேர நிர்வாகத்துக்கு பழகிப்பார் அதன் அருமை புரியும் .உடலுக்கும் மனதுக்கும் அது ஊக்க மருந்தாகும் .பழகப்பழக நம் BODY CLOCK எனப்படும் உடல் கடிகாரம் நம்மை இயக்கத் துவக்கிவிடும் . தாமதம் பெரும் வியாதி .நேரக் காத்தல் ஆரோக்கியத்தின் முதல்படி !
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment