எது ஆன்மீகம் ? [ 17 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 17 ]

 

“தியானம் செய்து பார் ! அமைதி கிடைக்கும் ! ஆன்மீகம் புரியும் .ஆன்மீகம் என்பது வாதித்து வெல்லும் சமாச்சாரமல்ல ; உணர வேடியது ; ஒவ்வொருவரும் தனித்தனியே உணர வேண்டியது…” எனக் மிகக் கோவமாக எனக்கு தனியே பின்னோட்டம் அனுப்பிய நண்பருக்காக இன்று நான் சில செய்திகளைச் சொல்ல வேண்டி இருக்கிறது

 

 “தியானம் செய்யும் போது நமது மனம் அமைதி அடைவதும் அதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானமும் மூளையில் உள்ள ரசாயனங்க ளின் விளையாட்டுத்தான்.”

 

போல் ஜோசேப் எனும் மருத்துவர்  “தாய்நாடு”  [ டிசம்பர் 2024 ]என்கிற ஈழத்தமிழர் இதழில்  “போதையால் என்றும் முதுமை இல்லை” ஏனெனில் இளமையிலேயே இறந்து போவீர்கள் என எச்சரித்து எழுதிய கட்டுரையில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் .

 

அந்தக் கட்டுரையில் மூளை குறித்து அவர் தரும் தகவல்கள் நம் கட்டுரைத் தொடருக்கும் பொருந்தும் , உங்கள் வாதத்துக்கும் பதிலாகும் என்பதால் அதிலிருந்து நீண்ட சில பத்திகளை இங்கு கீழே தருகிறேன் . போதை தெளியவும் அது உதவும் .

 

  “நமது மூளையின் அறிவியல் என்பது இன்னும் முழுமையாக புரியாத புதிராக இருந்தாலும் 100 பில்லியன் நியூரோன்ஸ் (Neurons) என்ற நரம்புக்கலங்கைளயும் அவற்றை இணைக்கும் ஸ்னாப்ஸ்(Synapse) என்ற ஆயிரம் ட்ரில்லியன் எண்ணிக்கையிலான இணைப்பான்கைளயும் கொண்ட ஓர் அற்புத படைப்பாகும். … போதையின் விஞ்ஞானத்தை முதலில் சரியா கப் புரிந்து கொண்டாலே அதிலிருந்து வெளிவருவதும் அல்லது அடிமையாகாமல் இருப்பதும் இலகுவானதாகும். “

 

 “… நமது மூளையில் முன் பகுதியானது தீர்மானங்கைளச் சரி யாக எடுப்பதற்கும் தர்க்கரீதியான சிந்தைனை, கற்றல், நல்லது கெட்டது தீர்மானித்தல், முடிவெடுத்தல் இப்படி பல பணிகளுக்கு  பொறுப்பானது. நடுமூளையானது நமது ஐம்புலன்கள், உடலின் அசைவுகள், நடத்தல், ஓடுதல் போன்ற தசைக ளின் இயக்கங்கள், செய்தி பரிமாற்றம் மற்றும் மூளைத் தண்டுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதால் அதனுடன் இணைந்து இதயத்தின் இயக்கம், சுவாசம், உடல் வெப்ப நிலை பேணுதல், குறிப்பாக Survival என்ற தக்கனப் பிழைத்தலும் தப்பித்தலும் செயல்படுவது மூளையின் இந்தப் பகுதி தான். மற்றும் மூளையில் உள்ள லிம்பிக்சிஸ்டம்(Limbic system) என்ற பகுதி மிக முக்கிய மானது, ஏனென்றால் நமது மனம், கனவுகள், கற்பைனகள், உணர்வுகள் உணர்ச்சிகள், பழக்க வழக்கங்கள், உறக்கம் இப்படி பலவிதமான செயல்பாடுகளுக்கு காரண கர்த்தா இவர்தான். நாம் அழுவதும் சிரிப்பதும், அன்பு காட்டுவதும் கோபப்படுவதும், பாசமும் நேசமும், காதலும் ,காமமும், கவைலயும், பயமும் இப்படி எல்லாவற்றிற்கும் பின்புலத்திலிருந்து நம்மை ஆட்டிவைப்பதும் இந்த கதாநாயகன் தான்.”

 

 “ஒருவர் போதைக்கு அடிமையாகிறார் என்றால் அவைர சமூகம் கேவலமாக பார்ப்பதும் தள்ளி வைப்பதும் ஒதுக்குவதும் இயல்பு. அவர் செய்யும் சமூக விரோதச் செயல்களுக்கு யார் பொறுப்பு? அவரா? அவரது மூளையா? அவரது மனமா? வாழ்க்கை முறையா? குடும்பமா? சமூகமா? என்றால் நாம் இதுவைர சொல்லிவரும் பதில்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டுங்கள், இரக்கம் காட்டுங் கள்..., இப்படி தொன்று தொட்டு வாய் நிறைப் பேசுகிறோம். ஆனால், இதற்கும் பின்னால் இருக்கும் விஞ்ஞானத்தைப் பற்றி பலருக்கும்  தெரிந்திருக்க வாய்ப்பில்லை .”

 

“தொடக்கத்தில் குறிப்பிட்ட மூளை நரம்புக் கலங்கள் மற்றும் அதில் உள்ள பல்லாயிரம் கோடி இணைப்புகள் என்ற ஸ்னாப்ஸ்களில்(Synapse) ஆயிரக்கணக்கான நியூரோடிரான்ஸ்மிட்டர்ஸ்(Neurotanmitters) என்ற நரம்பு ரசாயனங்கள் உள்ளன. அவற்றைஅவ்வப்போது தேவைக்கேற்ப சுரப்பது இந்த மூளையின் லிம்பிக் சிஸ்டம் தான். அதில் குறிப்பாக Dopamine, Oxytocin,Serotonin,Endorphine, GABA.., இப்படி பல நூறு. அவசியத்தை பொறுத்து சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஒக்ஸிரோ- ஸின் இல்லை என்றால் நீங்கள் ஒருவைர ஒருவர் நேசிக்க முடியாது, அன்பு காட்ட முடியாது, ஏன் நீங்கள் காதலிக்கவே முடியாது. இந்த என்டோர்பின் மற்றும் டொப்பாமின் இல்லை யென்றால் நீங்கள் சிரித்து மகிழ முடியாது, இன்பத்தையும் வாழ்வின் எந்த சந்தோஷங்கைளயும் அனுபவிக்க முடியாது. அது மட்டுமல்ல, அட்ரினலின் GABA போன்ற நியூரோகெமிக் கல் உங்களிடம் இல்லை என்றால் Survival என்ற சவால்களை எதிர்கொண்டு  போராடி வெற்றி பெறுதல் இல்லாமல், உயிர் வாழ்தலே கேள்வியாகிவிடும். ஆம். இப்படி நமது மூளையைப் பற்றி இன்னும் அறியேவண்டியது ஏராளம் உண்டு.”

 

“இனிப்பை ருசித்து சுவைக்கிறீர்கள், காதலிக்கோ மனைவிக்கோ குழந்தைக்கோ  முத்தங்கள் கொடுக்கிறீர்கள், அது உங்களுக்கும் பிடிக்கிறது. காதலியின் அடுத்த முத்தத்திற்காக காத்திருந்து ஏங்குகிறீர்கள். மேலும் நாங்கள் ஒரு நல்ல விடையத்தை செய்யும்போது யாராவது நம்மைப்  பாராட்டமாட் டார்களா என்று ஒரு சிறிய நன்றிக்காக, பாராட்டுக்காக ஏங்கித் தவிக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறத்துடிக்கிறோம். இப்படி, இவை எல்லாம் ஒருவித போதைதான். இவை மீண்டும் மீண்டும் செய்தாலும், மூளை செய்யத் தூண்டினாலும் அதனால் எந்தவித பாதிப்புகளும் இல்லை. அதேபோலத் தான் நாம் தேநீர், காப்பி அருந்துவதும், ஏன் தியானம் செய்யும் போதும் நமது மனம் அமைதி அடைவதும் அதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானமும் மூளையில் உள்ள ரசாயனங்களின் விளையாட்டுத்தான்.”

 

“மாறாக, போதை மருந்துகளும் மதுவும் கஞ்சாவும் அப்படி அல்ல. அதில் உள்ள ரசாயனங்கள் மூளையிலும் உடலிலும் உள்ளத்திலும் பல பாதிப்புகைள உண்டாக்குகின்றன. முதல் முறை எடுக்கும் போது ஒரு தற்காலிகமாக, நான் முன்பு குறிப்பிட்ட நியூரோ கெமிக்கல்ஸ்(Neurochemicals) போன்றவற்றை தூண்டி ஒருவித கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் மனதில் இன்பத்தையும் உண்டாக்கி விடுகின்றது. இந்த உணர்வுகள் மூளையின் லிம்ப்பிக் சிஸ்டத்தில் உள்ள நினைவுப் பதிவுகளில் உள்வாங்கப்பட்டு ஒரு புதிய, புதிய அனுபவம் என்பதைப் பதிவு செய்கிறது. மீண்டும் அந்த நியூரோ கெமிக்கல்ஸ் குறையும் போது லிம்பிக் சிஸ்டமானது நடுமூளைக்கு தகவல் கைளை அனுப்பி நமது வழக்கமான அன்பு பாசம், பாராட்டு மகிழ்ச்சி, வெற்றி இவைகைள விட செயற்கையான போதை ரசாயனங்களால் கிடைக்கும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உயர்ந்தது, எந்தவித முயற்சியும் இல்லாமல் இலவசமாக இலகுவாக கிடைக்கிறது, அதனால் மீண்டும் மீண்டும் இதுவே பரவாயில்லை என்ற உணர்வினை தீர்மானங்களை எடுக்கும் முன்மூளைக்கு தகவல்களைச் சொல்லும். அதை ஏற்றுக் கொண்டு முன்மூளையும் முடிவெடுப்பதால் போதை மருந்துகளின் மீது ஒரு ஆசையினைத் தூண்டி தொடர்ச்சியாக எடுப்பதில் ஆர்வம் உண்டாகிறது.”

 

“அதன் பின்பு இப்படி பல நாட்கள் தொடர்ந்தபிறகு, நடுமூளையினையும் நான் முன்பு குறிப்பிட்ட லிம்பிக் சிஸ்டம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும். பிறகென்ன போதை மருந்தோ, மதுவோ, கஞ்சாவோ எதுவோ... அதை எடுக்கவில்லை என்றால் நடுமூளை தனது வேலையைக்  காட்டத் தொடங்கிவிடும். கை, கால் நடுக்கம், இதயப் படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், பதட்டம், பயம், மனச்சோர்வு, எதிலும் விருப்பமின்மை, பசியின்மை, தலைவலி, தூக்கமின்மை, உடல் வலி... இப்படி பல அறிகுறிகளை உண்டாக்கிவிடும். இவைதான் மருத்துவத்தில் வித்ரோவல் சிம்டம்ஸ்(Withdrawal symptoms) என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் போதை ஏறும்போது மட்டுமே இந்தக் குணங்குறிகள் எல்லாம் மறைந்துவிடும். “

 

“பின்னர் நடுமூளை Survival என்ற உயிர் வாழ்தலுக்கு தக்கனப் பிழைத்தல் எனும் தன் ஆயுதத்தைக்  கையில் எடுத்துக் கொள்ளும். எப்போதுமே முழு மூளையினையும் உடலையும் மதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து மிரட்டிக் கொண்டே இருக்கும். இந்த நிலை போதைக்கு அடிமையான ஒருவருக்கு ஆபத்தான கட்டமாகும். இதை மருத்துவத்தில் அடிக்சன்(Addiction) என்று அழைக்கிறோம். இவ்வாறாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்கள் பல்வேறு விதமான உடல், உள நோய்களுக்கு ஆளாகின்றனர். சமூகத் தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனிமை உணர்வு மேலாங்குகிறது. பாதுகாப்பற்ற உணர்வும் அதனால் சமூக விரோத செயல்கள் மீதான தொடர்பும் ஈடுபாடும் தலைதூக்கும். “

 

ஆக, போதைக்கு அடிமை ஆக்குவதும் மூளையின் செயல்பாடுதான் . அன்புக்கோ காதலுக்கோ நட்புக்கோ அடிமையாக்குவதும் மூளையின் வேலைதான் .மனம் என்பதும் மூளையின் செயல்பாடுதான் . மூளை எவ்வளவு நுட்பமானது என்பது இதன் மூலம் விளங்க வில்லையா ? தியானத்தில் மன அமைதி கிடைப்பதும் மூளையின் வேலைதான் . டீ காபி தியானம் எல்லாவற்றையும் ஒரு கோட்டில்தான் இணைக்கிறது மூளை .தியானத்துக்கு என ஸ்பெஷல் எதுவும் கிடையாது .இப்படியே நீட்டினால் ஆத்மா ஆன்மவிருப்பம் என்பது  எல்லாம் மூளை ஆட்டுவிக்கும் செயல்தான் . வேதியியல் வினைதான் என்பது விளங்கும் . விளங்காமல் அதற்கு சிலர் அடிமை ஆகி இருப்பதும் மூளையின் வேதியியல் விளையாட்டே .ஆம் போதை பழக்கம் எப்படி அடிமை ஆக்குகிறது என்பதைப் பார்த்தோமே, அப்படித்தான் இந்த ஆன்மீக மனோபாவமும் .

 

இவ்வளவு சொல்லக் காரணம் ஒரு நண்பர் மதம் ,மூடநம்பிக்கை ,சம்பிரதாயங்கள் எல்லாம்  நான் நம்பவில்லை.ஏற்கவில்லை .ஆனால் ஆன்மீகம் அறிவியலுக்கு நெருக்கமானது என்று சொன்னார் . ஆயின் உண்மை அதுவல்ல என்பதை போதைக்கு அடிமையாக்கும் மூளை பற்றிய விவரணையே சொல்லும் .

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் “ கடவுள் உண்டா ?” என்கிற ஒரு சிறு பிரசுரம்  எழுதி இருந்தார் .அதில் கடைசியில் சொல்லுவார் .நீ தினசரி காலையில் காபி சாப்பிடுகிறாய் .ஒரு நாள் சாப்பிடாவிட்டால் தலைவலிக்கிறது என்பாய் .அது பழக்கத்தால் வந்தது .காவி குடிப்பதிலிருந்து விடுபடுவது பெரும் போராட்டம் .கடவுள் நம்பிக்கையும் பழக்கத்தால் மனதில் உறைந்து போயுள்ளது .ஒரே நாளில் தூக்கி எறிவது சிரமம்தான் .ஆயினும் முடியும் மெல்ல மெல்ல விடுபட வேண்டும் . [ அந்த பிரசுரம் யாரிடமாவது இருந்தால் வாங்கிப் படியுங்கள் ]

 

அது சரி ! ஆனாலும் என இழுப்போருக்கு மேலும் சொல்வோம்

 

தொடர்வோம்

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

ஆன்மீகம் எது ? [18]

Posted by அகத்தீ Labels:

 

ஆன்மீகம் எது ? [18]

 

 

 “ உங்க வாதத்துக்கே வருகிறேன் , மூளையில் மத நம்பிக்கை பதிந்து போனபின் அதை  அகற்றுவது எளிதல்ல ஆகவே எங்கள் நம்பிக்கையைக் காயப்படுத்தாதீர் எனக் கேட்பதில் என்ன பிழை ?”

இது இன்னொரு நண்பரின் வினா .

 

நேற்றைய பதிவில் போதைக்கு அடிமை ஆவது மூளையின் வேதியல் விளையாட்டு என்று மருத்துவர் சொன்னதைச் சுட்டினோம். போதை பழக்கமும் மூளையில் பதிந்து அடிக்ட்டாக அடிமையாக ஆக்கிவிட்டது என்பதற்காக ஏற்க முடியுமா ? முடியாது .கூடாது . அதை குடிநோயாகக் கருதி மருத்துவ சிகிட்சை அளிக்க வேண்டும் அல்லவா ? மீண்டெள வேண்டும் அல்லவா ?

 

மூளையில் பதிந்த பண்பாட்டின் ஒரு கூறே பெண்ணடிமைத்தனம் .அது காலங்காலமாகப் புகட்டுப்பட்டு வந்ததால் விளைந்த வினை . அதற்காக அதனை அப்படியே தொடர விடலாமா ? கூடாது . தொடர் விழிப்புணர்வுப் போராட்டங்களும் சட்ட நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றதே !

 

பழையன கழிதலும் புதியன புகுதலும் கூட மூளையில் சாத்தியமே .ஆகவே மத ,சாதிய ,மூடநம்பிக்கைகளுக்கு எதிராக புத்தியைத் தீட்டச் சொல்வது எப்படி நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகும் ? எதெற்கெடுத்தாலும் மனம் புண்படுகிறது என்பதே ஓர் அழுகிணி தற்காப்பு வாதமே ! உண்மையை எதிர்கொள்ள முடியாத போது ஆடுகிற அழுகிணி ஆட்டமே !

 

 “அதெல்லாம் சரி ! புராண ஆபாசங்களை பழைய குப்பைகளைக் கிளறி நாற்றம் வீசச்செய்து வாதிடுவது சரியான அணுகுமுறையா ? சிலர் தமிழ்நாட்டில் அதையே முழுநேரமாகச் செய்து கொண்டிருக்கிறார்களே ! நீங்களும் ஆதரிக்கிறீர்களே ! “ இப்படி ஒரு கேள்வியை வீசினார் நண்பர் .இம்முறை வீசியது அறிவியலாய் சிந்திக்கக்கூடிய ஒரு நபர்தான் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது .

 

இக்கேள்விக்கு சரி /தவறு என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது . எல்லா கேள்விகளுக்கும் ஒற்றை வரிப் பதில் சாத்தியமில்லை.

 

யார் கேட்கிறார் ? யாரிடம் கேட்கிறார் ? ஏன் கேட்கிறார் ? எப்போது கேட்கிறார் என்பன போன்ற கேள்விகளோடு இணைந்தது பதில் . யாரிடம் பேசுகிறோமோ அவர் புரிதலுக்கு ஏற்பவும் பேசவேண்டும்தானே !

 

நான் அதை இரண்டு கோணங்களில் பார்க்கிறேன் .முதல் கோணம் நான் எழுதிய “கீதை தரும் மயக்கம்” எனும் என் நூலில் இருந்து மேற்கோளாகத் தருகிறேன்.

 

“ அடுத்த கேள்வி கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணன் ஒரு வரலாற்று நாயகனா ? கற்பனைப் பாத்திரமா ?

 

கி.வீரமணி ‘கீதையின் மறுபக்கம்’ நூலில் கிட்டத்தட்ட 40 பக்கங்கள் [ பக்கம் 39-79] இந்த ஆய்வுக்கு ஒதுக்கி இருக்கிறார். இதில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல விஷயங்கள் குறித்து கேள்விக்கணைத் தொடுத்திருக்கிறார் .காதல் லீலைகள் , அவதாரத் தன்மை இந்த இரண்டு முரண்பட்ட தன்மைகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் விவரித்துள்ளார் . அதுபோல் ‘கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே’ எனும் 88 பக்கங்கள் கொண்ட சிறிய நூலில் ஜோசப் இடமருகு புத்தருக்குப் பின்னர் தோன்றிய கற்பனையே கிருஷ்ண அவதாரமும் கிருத்து பிறப்பும் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார் .வாசிப்பதற்குரிய நூல்கள் அவை .வாசகர்கள் வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் படிக்கவும்.

 

அதே சமயம் ‘ மார்க்சியமும் பகவத் கீதையும்’எனும் நூலில் எஸ். ஸி. சர்தேசாயும் ,திலிப் போஸும் கூறியுள்ள கீழ்க்கண்ட வரிகள் முக்கியமானவை :

 

‘ பண்டைய காலத்தின் எல்லா நாடுகளிலும் சமுதாயச் சிந்தனையில் ,சமுதாயக் கற்பனையில் அன்றைய காலச் சமுதாய அமைப்பு நிலைக்கு ஒரு பெரிய மனிதர் அவசியப்பட்டதால் அத்தகையவர்கள் வந்திருக்கிறார்கள் .’

 

‘இந்திரன் என்பவன் இருந்திருக்கிறானா ? இல்லை .அதுவும் கற்பனைதான்.இருப்பினும் ரிக் வேத காலத்து சமுதாயம் என்பதை இந்திரனுடைய பாத்திரம் இல்லாமல் கருதிப்பார்க்க முடியாது .இப்போது கிருத்துவினுடைய வரலாற்றுத் தன்மையும் வாதத்திற்குரிய பிரச்சனையாக இருப்பதைக் காணலாம்.’

 

‘எனவே , கீதை என்னும் சங்கை யார் ஊதி இருந்தாலும் அவர்தான் கிருஷ்ணன். அந்தப் பாடப் பொருளை அறிவியல் பூர்வமாக ஆய்ந்திட அது போதும்’ “

 

இந்த மிக நீண்ட மேற்கோள் ஆய்வு தளத்தில் பேசியது ; அங்கு நிதானமாகவும் நடுநிலையாகவும் வாதிடுவது தேவையாகிறது . இது சரியே !

 

இப்படி வாதிட்ட சர்தேசாயும் , திலிபோஸும்கூட முடிவாகச் சொன்னது என்ன ?

 

“கீதையின் அடிப்படையான மாற்ற முடியாத ,மீற முடியாத கட்டமைப்பு சதுர் வர்ண – நாலுவர்ண –வர்ணாரமும் வேதாந்தமும் ஆகும் . சதுர்வர்ணம் என்றால் உள்ளமைந்த குலப்பிரிவுக்கு உட்பட்ட பிறப்பின் அடிப்படையிலான சாதி வேறுபாடுகளைக் கொண்ட அமைப்பாகும் .வேதாந்தம் என்றால் மருட்சி வாதம் ஆகும்.”

 

கி.வீரமணியும் ’வர்ணாஸ்ரம காப்பே’ கீதையின் சாரம் என நிறுவி இருப்பார் .

இருவர் வாதமும் சொல்லும் பாணியும் வேறுபடினும் முடிவில் வந்து சேருமிடம் ஒன்றே.  இரண்டும் சரியே ! இரண்டும் தேவையே !

 

இன்னொரு பாதையைப் பார்ப்போம் . மகாபாரதத்தில் திரெளபதி ஐவருக்கு மனைவி .உப கதையில் கர்ணனோடு அவளுக்கு ஒரு பார்வை இருந்தது என்று சொல்வதும் உண்டு . கிருஷ்ணன் தன் அத்தை ராதையை கோபியராக்கினான் என்றொரு கதை உண்டு .தான் பெற்ற மகள் சரஸ்வதியையே பிரம்மா தாரமாக்கினார் என்றொரு கதை உண்டு . ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன் என்றொரு கதை உண்டு .இவை எல்லாம் நாகரிகமாகச் சொன்னது . இதனை மிஞ்சும் எண்ணற்ற ஆபாசக் கற்பனைகளும் புளுகுகளும் உண்டு . இவற்றை எடுத்துச் சொல்லும் போது குமட்டத்தான் செய்யும். இந்தியாவில் மட்டுமல்ல - இந்து மதத்தில் மட்டுமல்ல உலகெங்கும் எல்லா மதங்களிலும் - எல்லா பண்பாடுகளிலும் அறிவுக்குப் பொருந்தாக் கதைகள் நிரம்பி வழியும் .

 

இவற்றை கட்டற்ற பாலுறவு கொண்ட ஆதிசமூகத்தின் மீள் நினைவுகளாய் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டதாய் கொள்ளின் அது சமூகப் பார்வை. அது பிழை இல்லை . ஒவ்வொரு சமூகத்திலும் அதன் முந்தைய சமூகங்களின் எச்ச சொச்சமும் கதையாய் , சடங்குகளாய் , சில நம்பிக்கைகளாய்த் தொடரத்தான் செய்யும் .அவற்றை சமூக இயல் நோக்கில் ஆய்வு செய்யும் போது சில சமூக உண்மைகள் புலப்படும் .

 

ராகுல் சங்கிருத்தியாயன் எழுதிய “ வால்கா முதல் கங்கை வரை” இது போன்ற சமூகப் பார்வையை நமக்கு வழங்கும் . ஜார்ஜ் தாம்சனின் “ மனித சமூகத்தின் சாரம் “ வாசிக்கும் போது எப்படி கடந்த காலத்தை உள்வாங்க வேண்டும் என்கிற தெளிவு கிடைகும் . ஆய்வாளர் டி.டி.கோசாம்பி போன்றோர் எழுதியவை புதிய பார்வையை செதுக்க உதவும் .

 

ஆனால் புராணப் புளுகுகளுக்கு தெய்வீக முலாம் பூசி - கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புனிதமாய் நம் தலையில் திணிக்கும் போது ; அதன் எதிர்வினை அந்த அபத்த ஆபாச கற்பனைகளை தோலுரிப்பதில் போய்த்தானே முடியும் . இதில் என்ன பிழை ? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டுதானே !

 

இன்று மத அடிப்படைவாதம் மேலோங்கி எல்லா குப்பைகளையும் புனிதம் எனச் சொல்லி ; கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டதாய் தூக்கிச் சுமக்கச் சொல்லும் போது இவை குப்பை எனச் சொல்லத்தான் வேண்டும் .வேறு வழியே இல்லை .

 

குப்பைகளைக் கிளறி நாற்றம் எடுக்கச் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது அந்தந்த சூழலுக்கு ஏற்ப எதிர்வினை வடிவம் கொள்ளும் .எல்லா காலத்துக்கும் எல்லா இடத்துக்கும் ஒரே மாதிரி எதிர்வினைகூடாது .நமது ஆயுதத்தை நம் எதிரியே தீர்மானிக்கிறான் .கருத்துக் களத்திலும் இதுவேதான்.

 

“ கம்பி வலைச் சிறைக்குள் அறிவியல் மலராது .அறிவியல் என்பது தேவையை அதிகரிப்பதாகும்.அறிவியல் என்பது பரிசோதனை,பகுப்பாய்வு மற்றும் தேவை அறிதல் ஆகும். அறிவியலும் சுதந்திரமும் முன்னோக்கி மட்டுமே பயணிக்கும்.சுதந்திரத்தை அழிக்கும் போர்வெறி அறிவியலையும் அழிக்கும் .” என்றார் டி.டி.கோசாம்பி.

 

 இன்றைக்கு மதவாதம் அறிவியல் பார்வை மீது போர் தொடுத்துள்ளது . ஒரு இருண்ட காலகட்டத்தில் நிற்கிறோம் . உணர்ச்சிகள் கொம்பு சீவப்படும் காலம் . ஆகவே இப்போதை அணுகுமுறை இடத்துக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவுமே அமைய முடியும் . ஓர் விரிந்த அணியைக் கட்டி எழுப்ப சமரசங்களும் நட்பு முரண்பாடுகளும் தவிர்க்க இயலாதவை .

 

சில இடங்களில் அறுவை சிகிட்சை தேவைப்படும் .சில இடங்களில் ஊசி மட்டும் போதும் .சில இடங்களில் மாத்திரை மட்டும் போதும் . சில இடங்களில் சில கட்டுப்பாடுகளும் பயிற்சியும் போதும் .இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து மருத்துவர் முடிவெடுக்க வேண்டிய விஷயம் .கஷாயம் மட்டுமே போதுமான இடத்தில் கத்திவைக்க வேண்டியதில்லை .கத்திவைக்க வேண்டிய இடத்தில் கஷாயம் மட்டும் போதுமானது அல்ல . இதுதான் இந்த சமூக வியாதிக்கும் பொருந்தும் வழி .

 

ஆன்மீகம் என்று பேசத் துவங்கினாலும் அவர்களின் பேச்சு மதம் , கட்டுக்கதை ,மூடநம்பிக்கை இவற்றை சுற்றியே வட்டமிடுகின்றன .ஆன்மீகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டதென சொல்லுவோரும் கடைசில் இங்கேதான் வந்து சேர்கின்றனர் .ஆகவே நமக்கு நிறைய வேலை இருக்கிறது .

 

சென்னை மாகாண முதல் நாத்திகர் மாநாட்டில் பேசிய தோழர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெண்களிடம் கேட்டுக்கொண்டார் , “ இங்கு பெண் மக்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். குழந்தைகளுக்குக் ‘கடவுள்’,’சாமி’ என்று அழைத்துச் சென்றால் ,இது ‘சிவன் பொம்மை’, ‘இது பெருமாள் பொம்மை’, ‘இது அறுபத்தி மூவர் பொம்மை’என்று குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் .அதன்படி எனது வீட்டிலுள்ள 4 வயது சிறுவனுக்கு உற்சவத்தில் பொம்மைகளைத் தூக்கி வருகிறார்களென்றே சொல்கிறேன்.” [சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் பக்கம் 163]

 

தோழர் சிங்காரவேலர் ஊட்டிய சிந்தனைகளை மீண்டும் ஞாபகபடுத்தவேண்டிய காலகட்டம் இது .செய்வோம்.

 

தொடர்வோம்.. [இடைவேளை]

 

சுபொஅ.

 

 

 

 

 

 


எது ஆன்மீகம் [ 19 ]

Posted by அகத்தீ Labels:

 

 எது ஆன்மீகம் [ 19 ]

 

சென்ற அத்தியாயத்தில் ‘ சிவன் பொம்மை’ ,பெருமாள் பொம்மை’ என குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்கிற சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மேற்கோளை சுட்டி இருந்தேன்.  இதனால் ‘மனக்காயம்’ அடைந்த ஓர் ஆன்மீக அன்பர் .உங்கள் நாத்திக குப்பையை குழந்தைகள் தலையில் திணித்து நஞ்சை விதைக்காதீர் எனக் காட்டமாக பதில் சொல்லி இருந்தார் .

 

சரி ! நாத்திகத்தை நாங்கள் திணிக்கவில்லை .நீங்கள் ஆத்திகத்தைத் திணிக்காதீர்கள் என சொன்னால் ஏற்பார்களா ? 18 வயதுக்கு பிறகு அவனோ அவளோ  யாரோ சுயமாக மதம் ,கடவுள் குறித்து முடிவெடுக்கட்டும் ;யாரும் எதையும் குழந்தைகள் ,சிறுவர்கள் மீது திணிக்க வேண்டாம் என விட்டுவிடலாம் தயாரா ?

 

நாய் பொம்மைக்கும் நாய்க்கும்  உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியும். பொம்மைக் காருக்கும் உண்மைக் காருக்கும் உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியும் . ஏனெனில் இரண்டையும் பார்க்கின்றது .பழகுகின்றது .சிவன் பொம்மை ,பெருமாள் பொம்மை ,மேரிமாத பொம்மை எங்கும் பொம்மைதான் ;கடவுளை பார்க்க முடியாது .ஆகவே குழந்தைகள் தலையில் திணிக்காதீர்கள் .தாங்களாக சரி எது தவறு எது எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள் .

 

ஜீ டிவில் ’சரி கம ப’ எனும் ஓர் நிகழ்ச்சி வருகிறது .அதில் பங்கேற்கும் குழந்தைகளில் ஆற்றல் வியக்க வைக்கிறது .குரல் சொக்க வைக்கிறது .நானும் என் இணையரும் விரும்பிப் பார்க்கிறோம்.

 

அதில் பல குழந்தைகள் கழுத்தில் உத்திராட்சக் கொட்டையும் கையில் வண்ணக் கயிறுகளும் உள்ளன . நானறிய உத்திராட்சம் என்பது தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே அணிந்து வந்தனர் .நான் படித்த பள்ளியில் நானும் இன்னும் ஒரிரு பேரே அணிந்திருந்தோம் . இன்று அது பரவலாக்கப்பட்டிருக்கிறதே .இது குழந்தைகள் விரும்பி அணிந்ததா ? இல்லையே ! வீட்டார் அணிவித்தனர் .ஏன் ? இது திணிப்பில்லையா ? நான் என் கழுத்தில் தொங்கிய உத்திராட்சக் கொட்டையை எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறுத்து எறிந்துவிட்டு அப்பாவிடமும் மாமாவிடமும் அடிவாங்கினேன்.அது தனிக்கதை .

 

அது போகட்டும் டிசம்பர் 7 ,8 தேதிகளில் பக்திப் பாடல் ரவுண்ட் குழந்தைகள் அற்புதமாகப் பாடி அசத்தினர் . நானும் இணையரும் ஒவ்வொரு குழந்தையின் குரலையும் ஆட்டத்தையும் வியந்து பார்த்தோம்.கேட்டோம்.பாராட்டுகிறோம்.

 

அம்மன் பாட்டு , முருகன் பாட்டு ,கர்ணன் படப்பாடல் ,விநாயகர் பாட்டு ,அய்யப்பன் பாட்டு, சுடலை மாடன் பாட்டு ,கருப்பசாமி பாட்டு , ’ராமன் அப்துல்லா’  படத்தின் இடம் பெற்ற ‘உன்மதமா என் மதமா ?” என்ற பாட்டு எல்லாவற்றையும் குழந்தைகள் பாடி அசத்தினர் .  ஒரே ஒரு சமஸ்கிருதப் பாடல் இடம் பெற்றது ; என்னைப் பொறுத்தவரை ரசிக்க முடியாத பாடல் அதுமட்டுமே . கிராமிய பாடல்கள் எல்லோரையும் ஆடவைத்தது .

 

எந்தப் பாடலையும் குழந்தைகள் தேர்வு செய்திருக்க முடியாது பயிற்சியாளர்கள் திட்டமிடலே அவை .  இந்த ஷோவில் சாமி வேடமிட்டு குழந்தைகள் நடிக்கவும் செய்தனர் . வேடிக்கை என்ன வெனில் வேடமிட்ட சாமியை வந்தவரெல்லாம் கும்பிட்டு அடிபணிந்ததுதான். இது என்ன வகை நம்பிக்கை ? கடைசியில் ஐயப்ப வழிபாடும் இடம் பெற்றது .அதில் இடம் பெற்ற நடுவராக வந்த பெண் பாடகர் ,” ஐயப்பன் கோவிலுக்குத்தான் போக முடியவில்லை .இங்கேயாவது ஐயப்பனை தரிசிப்போம்’ என்றது பஞ்ச் . ’உன் மதமா ? என் மதமா ?’ பாடலை இது பாடல் அல்ல செய்தி , ஸ்டேட்மெண்ட் [ STATEMENT ] என நடுவராக வந்த பிரபல பாடகர் கூறியது சரியா ? சித்தர் பாடல்களை எல்லாம் அப்படித்தான் சொல்வாரா ? அந்த சிறுவனிடம். 'நீ எந்த மதம் ?''என தொகுப்பாளினி கேட்டது அபத்தத்தின் உச்சம்.

 

சரி ! விஷயத்து வருவோம் . போட்டி சரிதான் . அது பாட்டுத் திறமையை நிரூபிக்கத்தான் .சந்தேகமில்லை .ஆயின் அது வடிவமைக்கப்பட்ட விதம் ஆத்திகத் திணிப்பு இல்லையா ? இதுபோல் பகுத்தறிவுப் பாடல்கள் என ஒரு ரவுண்ட் வைத்து ; அப்போதும் இதுபோல் அறிவியல் காட்சிகள் அமைக்கப்பட்டால் ‘மனம் புண்படும் கோஷ்டிகள்’ சும்மா இருப்பார்களா ?

 

குழந்தைகளுக்கு ஆத்திகத்தையும் திணிக்காதீர்கள் ! நாத்திகத்தையும் திணிக்காதீர்கள் ! அறிவியல் உண்மைகளைச் சொல்லுங்கள் . அறிவியல் வரலாற்றைச் சொல்லுங்கள் . என்ன ? எங்கு ? யார் ? எப்போது ?ஏன் ? எதற்கு ? எப்படி ?  என்பன போன்ற கேள்விகளைக் கேட்க பயிற்றுவித்தால் நன்று . பொம்மையை பொம்மை என்றுதானே சொல்ல வேண்டும் .

 

ஆனால் ஒரு சமூக யதார்த்தம் என்னவெனில் எந்தக் குழந்தையும் மதம் , கடவுள் ,பக்தி , சடங்குகள் ,சம்பிரதாயங்கள் ,மூடநம்பிக்கைகளை அறியாமல் ,பழகாமல் இந்த சமூகத்தில் வளரவே முடியாது .குடும்பச் சூழலும் சமூகச் சூழலும் ஐந்திலேயே வளைத்து விடுகிறது . இங்கே அறிவியலாய் சிந்திக்கத்தான் மெனக்கெட்டு பயிற்சி கொடுக்க வேண்டி இருக்கிறது .அப்படி எங்காவது ஒரு சிறு முயற்சி எனில் உடனே ‘மனம் புண்படும் கோஷ்டி’ வந்து கூப்பாடு போடத் துவங்கி விடுகிறது .

 

கங்கை எங்கே உற்பத்தியாகிறது ? இந்தக் கேள்விக்கு ,“இமயமலையில்  உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கி பாகிரதி நதியாகிறது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.” என்று பதில் சொன்னால் சரி . மாறாக சிவபெருமான் தலையில் உற்பத்தியாகிறது என்பது ஒரு கற்பனை .புனைவு .கதை . இப்படிச் சொன்னால் மனம் புண்படும் என்றால் அதற்காக குழந்தைகளுக்கு உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா ?

 

உலகம் எப்படி கடவுளால் படைக்கப்பட்டது என்கிற பைபிள் கதையை கதை என்றே சொல்லுங்கள் . பரிணாமக் கோட்பாட்டை ,பெருவெடிப்பு சித்தாந்தத்தை கூடவே சொல்லிக் கொடுங்கள் .

 

பூமிதான் மற்ற கிரகங்களோடு சூரியனைச் சுற்றி வருகிறது என்ற வானியல் அறிஞர் ஜியார்டானோ புரூனோ கத்தோலிக்க மதபீடத்தால் உயிரோடு எரிக்கப்பட்டார் . பரிணாமக் கோட்பாடு பைபிளுக்கு எதிராக இருப்பதாக கத்தோலிக்க மத பீடம் எதிர்த்தது . புரூனோவை எரித்ததற்காக கத்தோலிக்க மதபீடம் மன்னிப்பு கேட்டுவிட்டது .பரிணாமக் கொள்கையை பட்டும்படாமலும் ஒப்புக் கொண்டுவிட்டது . இதனைச் சொல்லுங்கள் .

 

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்  1932ல் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட சில பத்திகளை இங்கு நினைவூட்டுவது காலத்தின் தேவை எனக் கருதுகிறேன்.

 

“பஞ்ச தந்திரக் கதைகளில் சொல்லியிருக்கும் கதைகளை உண்மை என நம்பும் குழந்தைகளுக்கும் ,வேத ,புராண ,விவிலிய நூல்களில் சொல்லும் கதைகளை உண்மை எனச் சொல்லும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் ?”

 

“ வேதங்கள் தெய்வ வாக்கானவை என்று நம்புகின்றபடியால் ,அவைகளில் கூறியுள்ள கதைகளை உண்மை என்று கொள்ளல் வேண்டுமென்பார் .இந்த வாதத்தில் முதல் வழக்கு என்னவெனில் ,வேதங்கள் தெய்வவ வாக்கு என்று நிரூபிக்கப்படும் வரை ,இவர்கள் கூறும் வாதம் பொருந்தாது . ஆதலின் அடுத்து வேத புராணங்களில் கூறியுள்ள அபூர்வ காரியங்கள் தற்காலத்தில் நடவாமையால் ஈஸாப் கதைகளைப் [ easop’s fables ] போன்ற கதைகளெனவே ஏற்படும்.”

 

அவர் அந்தக் கட்டுரையில் ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கதையை கேள்விக்கு உள்ளாக்குவார் . சில வேளைகளின்  செத்துவிட்டதாக நாம் தவறாக் கருதியவர்கள் பிழைத்துக் கொள்வதும் உண்டு . அதோடு ஒப்பிட்டாலும் அதற்கும் சரித்திர சாட்சி இல்லை .செயிண்ட் ஜான் [Saint John]  , செயிண்ட் மார்க் [ Saint Mark ] எழுதிய சுவிசேஷங்களில் உயிர்த்து எழுந்தது இல்லவே இல்லை . ஏன் எனக் கேட்கிறார் ? துணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனச் சொல்லும் பிரகலாதன் கதையும் நரசிம்ம  அவதாரமும் வெறும் கற்பனையே . சைவ வைணவச் சண்டையில் வைணவத்தின் பெருமையைச் சொல்ல புளுகிய கதையே என்கிறார்.

 

இறுதியில் சொல்வார், “ வேத ,புராண திருவிளையாடல் யாவும் வெறும் கற்பனையாகவே முடிவதைக் கண்டோம்.”

 

மேலும் சொல்கிறார் , “ பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்த வரை,இருக்கும் பிராணிகளிலே மனிதனைப் போன்ற மூடப் பிராணி இல்லை என்றே சொல்லலாம்.  இல்லாத தெய்வங்களையும் பிசாசுகளையும் தானே சிருஷ்டித்துக் கொண்டு ,அந்த சொற்களுக்கு நற்குணத்தையோ துர்க்குணத்தையோ காட்டி , தான் கொடுத்த குணத்துக்கு தானே பயந்து ,அந்த பயத்தை போக்க பிரார்த்தனையும் பூசையும் வலியையும் காவைவும் செய்து ,அவைகளால் தன்னையும் பிறரையும் இம்சித்துக் கொண்டு ,இவ்வுலகில் உயிர்வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாகச் சொல்லலாம்.”

 

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் புற்றுக்குள் இருக்கும் பாம்புக்கு உணவளித்தவர் யார் என இன்றைக்கும் கேட்பவர் இருக்கிறார்கள் .அன்றைக்கும் கேட்டிருக்கிறார்கள் . அவர்களை நோக்கி உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியில் சாகும் போது எந்த மதக் கடவுளும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பியதோடு ; ஒரு சவாலும் விட்டார் ,

 

“வேண்டுமானால் காற்று ,கிரணம் [சூரிய ஒளி],ஜலம் நுழைய வழி இல்லாத ஒர் பெட்டி ஒன்றில் [ hermetically closed box ] ஒரு தவளையை இரண்டொரு நாள் மூடிவைத்து பிறகு அதை உயிருடன் பார்வதி ,பரமசிவன் வைத்திருக்கின்றார்களா என்று தெரிந்து நமக்குத் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

 

இப்படி மனித மூடத்தனத்தின் மீது பாய்ந்த சிங்கார வேலர்தான் அறிவியலை பரப்ப முழுக்க முழுக்க அறிவியல் பரப்ப என ‘புது உலகம்’ என்ற ஏட்டை துவக்கினார் . ஏட்டை துவக்கும் போது அவரின் வயது 76 . தமிழில் அறிவியல் சாத்தியமா எனக் கேட்பவர்களுக்கு 1936 லேயே  செயல் மூலம் பதில் சொன்னவர் .

 

மூடநம்பிக்கைகளை ,சாதியை ,மதத்தை ,ஆன்மீகப் புரட்டை  ஒரு பக்கம் தோலுரித்துக் கொண்டே மறுபக்கம் மனித குலத்தின் மெய்யான விடுதலை வறுமை ,வேலையின்மை ,ஏற்றதாழ்வு அற்ற சமத்துவ உலகை படைக்க எது வழி எனவும் காட்டியவர் சிங்கார வேலர் . அடுத்து பார்ப்போம்.

 

தொடர்வோம் [இடை வேளை ]

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 

 

 

 

 


எது ஆன்மீகம் ? [ 20 ]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [ 20 ]

 

முந்தைய அத்தியாயத்தில் ‘சரி கம ப ‘நிகழ்ச்சி குறித்து எழுதிய விமர்சனத்தில்  ‘பக்தி ரவுண்ட்’ வைத்ததைப் போல்  ‘பகுத்தறிவு’ ரவுண்ட் வைப்பார்களா என கேள்வி எழுப்பி இருந்தேன் . அதற்கு பதில் சொல்வதாகக் கருதிக் கொண்டு ஒரு நண்பர் ‘ சினிமாவில் பகுத்தறிவுப் பாடல் எத்தனை தேறும் ?’ என நக்கலடித்திருந்தார் .

 

உண்மைதான் . தேடிச் சலித்தால் சிலவே தேறும் .ஆளும் வர்க்க கருத்துகளே [ ஆளும் கட்சி அல்ல ] சமூகத்தில் ஓங்கி இருக்கும் .சுரண்டும் வர்க்கத்தின் அகழியும் மதிலுமாய் இருக்கும் மதமும் மதம் சார்ந்த பண்பாடும்தான் ஓங்கி இருக்கும் .கலை இலக்கியத்திலும் அதுவே ஆதிக்கம் செலுத்தும் . தமிழ் திரை உலகில் பகுத்தறிவு பார்வை தூக்கலாக இருந்த காலமும் உண்டு . ஆகவே வேறெந்த மொழிகளைவிடவும் தமிழில் அறிவுபூர்வமான பாடல்கள் அதிகம் .இதனை கேள்வி கேட்ட அன்பர் மறந்துவிட்டார் போல.

 

 “பறவையை கண்டான் விமானம் படைத்தான்

பாயும் மீன்களில் படகினை கண்டான்

எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

எதனை கண்டான் பணம்தனை படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்” இது பாவமன்னிப்பு படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் . வேடிக்கை என்னவெனில் “ எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்” என்றுதான் கண்ணதாசன் எழுதி டி.எம்.செளந்தரராஜன் பாடியிருப்பார் . மதத்தில் ஏறிவிட்டான் என்கிற அடுத்த வரியே சாட்சி . சென்சார் ஆட்சேபனையால்  ‘மதம்தனை’ என்பது ’பணம்தனை’ என பின்னர் மாற்றப்பட்டது.இப்படிப்பட்ட மத சித்தாந்த ஆதிக்கம் உள்ள திரைத்துறையில் பகுத்தறிவுப் பாடல்கள் மிகக் குறைவாகத்தான் இருக்கும் . தேடித்தான் பாட வேண்டும்.

 

 

பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து சரி ! தேசிய கீதம் சரி ! கடவுள் வாழ்த்தென ஒவ்வொரு பள்ளிலும் மதம் சார்ந்த பாடலை – பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சமஸ்கிருதப் பாடலைப் பாடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும் .சமயபுரம் தனியார் பள்ளி ஒன்றில் கீழ்க்கண்ட பாரதியார் பாடலை பாடுகின்றனர் .இது ஞாநியின் தேர்வெனச் சொன்னார்கள் .

 

“ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.”

 

இப்பாடலும் மதச்சார்பின்மைக்கு அறிவியல் சாட்சி ஆகாது .எனினும் எல்லா மதத்தையும் இணைக்கும் சமரச ஏற்பாடென்பதால் தற்காலிகமாக ஏற்பதில் குற்றம் காண முடியாது .

 

 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏராளமான அறிவியல் பாடல்களைப் புனைந்திருக்கிறது .அவற்றை நன்கு இசை அமைத்து பெரிய அளவில் பிரபலப்படுத்தி பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு செல்லலாமே ! அறிவியல் இயக்கமும்  நான்கு ஐந்து பாடல்களை தேர்வு செய்து

 அழகான டிஜிட்டல் காட்சி அமைப்புகளுடன் பாடல் வீடியோ வெளியிடலாமே ! என் ஆசையைச் சொன்னேன்.

 

 

குழந்தை வளர்ப்பிலும் கல்வியிலும் மிகப்பெரும் மாற்றம் காண வேண்டும் . ஆனால் ’பந்தயக் குதிரைகளாய்’ போட்டிக்கு தயார் செய்கிற அணுகுமுறையையே இன்றைய நவீன தாராள மய உலகம் விதிக்கிறது . இந்த போட்டியில் குழந்தமை மட்டுமல்ல மனிதமும் கூடவே புதைக்கப்படுகிறது .

 

 

இந்த போட்டியில் மத ,சாதி அடையாளங்களும் ஒரு குழந்தைக்கு சாதகமாகவோ [Positive ]  பாதகமாகவோ [Negative ] அமைந்துவிடுவதைப் பார்க்கிறோம் .ஆகவே தனக்கு சம்மந்த மில்லாத ஒரு பண்பாட்டுக்குள் குழந்தைகள் வலிந்து திணிக்கப்படும் சமூகச்சூழல் நிலவுகிறது .இங்கு குழந்தைகளை சுயமாக வளர்த்தெடுப்பது மாபெரும் சவாலாகிறது எனில் மிகை அல்ல. ஆகவே நடப்பது வெறும் ஆத்திக vs பகுத்தறிவுச் சண்டை மட்டுமல்ல சமூக ,பொருளாதார ,பண்பாட்டு அரசியல் சவாலாகும் . சமூகத்தை அறிவியல் கண்கொண்டு நோக்கினால் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாய் கழலும் .

 

 

 

விஞ்ஞான முறைக்கும் மதங்களின் மூடநம்பிக்கைக்கும் வித்தியாசத்தைக் காட்ட “ தோலும் கொம்புமாய் முடியும்” என்றொரு பஞ்சதந்திரக் கதையை மேற்கோள் காட்டினார் சிந்தனைச் சிற்பி தோழர்  சிங்காரவேலர் . அக்கதையை என் வார்த்தைகளில் சொல்லுகிறேன்.

 

“ஒரு காட்டில்  தமனகன் ,கரடகன் என்ற இரண்டு நரிகள் இருந்தன . காட்டில் திடீரென ஒரு சப்தம் கேட்டு மிரண்டன .அது காட்டில் முன்னெப்போதும் கேட்டிராத சப்தம் . அது யாருடைய சப்தம் ? எங்கிருந்து வருகிறது ? இரண்டும் குழம்பின . தமனகன் அது குறித்து நாம் சுற்றிலும் தேடலாம் என்றது .கரடகன் வேண்டாம் வேண்டாம் வீண் விபரீதத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம் என அலறியது . ஆயினும் தமனகன் பிடிவாதமாய் கரடகனை இழுத்துக் கொண்டு சப்தம் வந்த திசையில் தேடச் சென்றது. அங்கே ஓர் இடத்தில் ஓர் தோல் மேளமும் கொம்பும் இருக்கக்கண்டன . அவை காற்றில் உரசிய சத்தமே அது . காற்று வேகமாக வீசும் போது கொம்பு படபடக்க மேளம் அடிப்பதுபோல் சப்தம் அதிகமாயின .உண்மை புரிந்து இரண்டும் கெக்கொலி கொட்டிச் சிரித்தன. இதனைக் குறிக்கத்தான் ‘ கொம்பும் தோலுமாய் முடியும்’ எனும் வழக்குச் சொல் உருவாயிற்று .

 

 

ஆம். சில அற்ப விஷயங்களைக் கண்டு பயந்து சாகிறோம் .அல்லது நம்பிக்கை அதிகமாகி விழுந்து வணங்குகிறோம் அல்லது ஏதேனும் பரிகாரம் ,சடங்கு என ஓடுகிறோம் ; கொஞ்சம் மெனக்கெட்டு தேடினால் விடை கிடைக்கும் .வெளிச்சம் பிறக்கும் .

 

 

ஆகவேதான் சிங்காரவேலர் அழுத்திச் சொன்னார் , “ உலக அரசியல் சீர்கெட்டு உழல்வதற்கு முக்கிய காரணம் அரசியல் நடத்துவோருக்கு போதுமான விஞ்ஞானப் பழக்கம் இன்மையே ஆகும் . அரசியல் நடத்துவதற்கும் குடும்பம் நடத்துவதற்கும் விஞ்ஞானம் அவசியமாகும்.” ஆம் .ஆம்.ஆம். குடும்பம் நடத்துவதற்கும் அறிவியல் பார்வை தேவை.

 

 

“ நீங்களும்தான் ‘எது ஆன்மீகம்’ என தொடர்ந்து எழுதுகிறீர்களே எது நாத்திகம் என வரையறை செய்து விட்டீர்களா ?” என ஓர் நண்பர் கேள்வி எழுப்புகிறார் . கிடுக்கிப் பிடி போடும் போது இப்படி சட்டென வேறு பக்கம் பாய்வது அவர்களின் வழக்கம்தானே .நாம் அதனையும் எதிர்கொள்வோம்.

 

நான் இத்தொடரின் ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஆத்திகம் ஆயினும் நாத்திகம் ஆயினும் ஒற்றை முகாமாக இல்லை .எண்ணற்ற கிளைகளும் உப கிளைகளுமாக பிரிந்து நிற்கின்ற வரலாற்று உண்மையைச் சொன்னேன் .

 

ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு காலத்திலும் எழும் சமூக சவால்களை எதிர்கொள்ள அவரவர் மேற்கொள்ளும் வியூகத்திற்கு ஒப்பவும் தேவை மற்றும் புரிதலுக்கு ஏற்பவும் பல வடிவங்கள் எடுக்கும் . ஆத்திகம் ,நாத்திகம் இரண்டுக்கும் இது பொருந்தும் .

 

இந்தியாவில்கூட பழைய பகுத்தறிவு வாதம் மிக வித்தியாசமானது .கடவுள் மறுப்பைக்கூட நிந்தா ஸ்துதி என ஏற்றுக்கொண்ட சனாதனம் ,இங்கு வைதீக எதிர்ப்பைத்தான் நாத்திகம் என முத்திரை குத்தியது . தமிழர் சித்தர் மரபு வைதீக எதிர்ப்பு சார்ந்தது அல்லவா ?

 

ஆக ,நாத்திகம் பகுத்தறிவு என்பவை குறித்த புரிதலும் தேசம் ,இடம் ,மாநிலம் ,சூழல் ,தேவை .அறிவியல் புரிதல் ,மானுட நேயம் இவற்றுக்கொப்ப காலத்துக்கு ஒப்ப மாறுபடவே செய்யும். யார் ஒரு அடி முன்னோட்டு வைத்தாலும் அது எவ்வளவு சிறியதாக இருப்பினும் மகிழ்ச்சியே ! அதே நேரம் பகுத்தறிவு பேசிவிட்டு சாதிச் சிமிழுக்குள் அடைப்பட்டுக் கிடப்போரை ஏற்க இயலாது . புரட்சி பேசிவிட்டு சனாதனத்தை கண்டு கொள்ளாமல் இருப்பதையும் ஏற்க இயலாது . ஆக சவால் கடுமையானதுதான்.

 

 

ஆத்திக நாத்திகச் சண்டை நேற்றும் இருந்தது .இன்றும் இருக்கிறது .நாளையும் இருக்கும் . மனித குலம் இருக்கும் வரை இருக்கும் . இரண்டு மனிதர்கள் இருந்தால் நிச்சயம் இரண்டு கருத்துகள் இருக்கத்தான் செய்யும் . ஒவ்வொருவர் மூளையும் அவரவர் சூழல் ,புரிதல் ,தேவை  ,முயற்சி இவற்றை சார்ந்து விதவிதமாய் யோசிக்கும் . மனிதர்கள் யோசிக்கிற வரை கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் . சிலர் சரியாக யோசிக்கலாம் ; சிலர் தவறாக யோசிக்கலாம் .அவ்வளவுதான்.

 

சிங்காரவேலர் சொல்வார் ,”…மனிதன் பல்லாயிரம் வருஷங்களாகப் பேசத் தெரியாதவனாக இருந்தான் . அந்த காலத்தில் ‘கடவுள்’ என்ற சொல் வழங்காதிருந்தது .அதைப் பற்றி யாரும் பேசுவாரில்லை ;யாரும் சொல்வாரில்லை .ஆனால் உலகில் உயிர் முளைத்து நூறுகோடி ஆண்டுகள்தான் இருக்கும்  .இந்தக் காலங்களில் வாழ்ந்து மடிந்த கோடி கோடி கோடான கோடி இவ்வுயிர்களுக்கு இச்சொல்லை தெரிந்திருக்காது .இந்த கற்ப காலங்களில் எந்த உயிரும் இந்தச் சொல்லை சொல்லவும் இல்லை .மனிதன் மிருகத்திலிருந்து பேச ஆரம்பித்தான். இவன் பேசின பிறகும் வெகுகாலம் இச்சொல்லை உச்சரிக்காது இருந்தான் .மனித பாஷை அபிவிருத்தி அடைந்த பிறகே கடவுள் என்ற சொல்லை கற்பனை செய்யத் தொடங்கினான் .எனவே கடவுள் என்ற சொல் மனிதன் உலகில் தோன்றிய பிறகே உண்டாயிருக்க வேண்டும். “

 

இந்த கற்பனைச் சொல்லை சுற்றியே  கோயில் ,மேள தாளம் ,பூஜை ,புனஸ்காரம் , மந்திரம் ,வழிபாடு ,சடங்கு ,சம்பிரதாயம் ,சொர்க்கம் ,நரகம் ,கர்மா ,  பூணூல் ,புனிதம் , வேதியர் , பக்தி ,முக்தி ,ஆன்கீகம் இப்படி எண்ணற்ற மூடத்தனங்கள் விரிந்தன என விவரிக்கிறார் . இவைகளில் இருந்து விடுபட்டு மனித நேயத்தை ,சகோதரத்துவத்தை , பேரன்பை சொல்ல முயன்ற ஆன்மீக ஞானிகள்கூட அவர்கள் மறைவுக்கு பிறகு வெறும் வழிபாட்டு பிம்பமானதே வரலாறு . சுரண்டல் வர்க்கத்தின் ராட்சச கரங்களில் ஆன்மீகமும் ஒரு  போதை மருந்தே !

 

இப்படி கடவுள் மீதும் மதத்தின் மீதும் கேள்விக்கணைகளை , அறிவியல் தாக்குதல்களை நடத்திய சிங்காரவேலர் அதுமட்டுமே பகுத்தறிவு என்று சொல்லவில்லை . பகுத்தறிவு என்று சொன்னால் என்னவென்று இலக்கணமும் வகுத்தார் .

 

“ பகுத்தறிவின் தன்மை என்ன ? எல்லா விஷயத்திலும் [ரீசன் ] பகுத்தறிவை உபயோகித்தல் .எங்கே கொடுங்கோன்மை தாண்டவமாடுகிறதோ ,அங்கே பகுத்தறிவு எதிர்த்துப் போராடும் .எங்கே சுதந்திரத்திற்கு அபாயம் நேரிடுகிறதோ ,அங்கே பகுத்தறிவு இத்யாதி அபாயத்தைத் தடுக்கச் செல்லும் .எங்கே பசியும் ,பிணியும் ,வறுமையும் , அறியாமையும் வருத்துகின்றனவோ அங்கேயும் பகுத்தறிவு பசித்தோருக்கும் வருந்துவோருக்கும் உதவி புரிந்து நிற்கும் .இவைதான் உண்மையான பகுத்தறிவின் அடையாளம் மற்றவைக ளெல்லாம் போலி பகுத்தறிவே.”

 

போலிகளையும் உண்மைகளையும் பகுத்தாய சிங்காரவேலரே வழியும் காட்டி இருக்கிறார் .அவரைத் தேடித்தேடி வாசிப்பீர் !

 

இத்துடன் இத்தொடர் முடிகிறது . மீண்டும் சந்திப்போம் .விரைவில் .

 

[ இத்தொடரை நான் ஆரம்பிக்கும் போது நாலய்ந்து அத்தியாயம் எழுதவே திட்டமிட்டிருந்தேன் .இடையறா பின்னோட்டங்கள் ,கேள்விகள் தொடர அவற்றிற்கு பதில் சொல்ல தொடர் 20 அத்தியாயமாய் நீண்டு விட்டது . இன்னும் கேள்விகள் விமர்சனங்கள் முடியவில்லை . ஆயினும் நீட்ட விருப்பமின்றி இப்போது முடித்துக் கொண்டேன் .மீண்டும் தேவைப்படும் போது வருவேன் : சுபொஅ.]

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

 

ஒரு கொலை …. பரபரப்பான ஒரு நூல் விற்பனை….

Posted by அகத்தீ Labels:

 






ஒரு கொலை  …. பரபரப்பான ஒரு நூல் விற்பனை….

 

26 வயது இளைஞன் பட்டப்பகலில் ஒரு ஹோட்டல் வாசலில் ஓர் தொழில் அதிபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் 2024 டிசம்பர் 9 ஆம் நாள் கைது செய்யப்படுகிறார்  . ஆனால் அந்த கொலையைச் செய்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்காவே குரல் கொடுக்கிறது . ஆச்சரியம் தான் .நடந்தது என்ன ?

 


அந்த இளைஞன் பெயர் லூயிஜி நிக்கோலஸ் மஞ்ஜானி [Luigi Nicholas Mangione ] .இந்த இளைஞன் நன்கு படித்தவன் . அறிவாளி .வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவன் . நல்லதோர் பணியில் இருப்பவன் . எந்த குற்றச் செயலிலும் ஈடுபடாதவன் .

 

சுட்டுக்க்கொல்லப்பட்டவர் பெயர் பிரைன் தாமஸ் [Thompson] . அமெரிக்க யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் [American united health insurance ] நிறுவனத்தில் உயர்  பொறுப்பில் உள்ள நிர்வாக இயக்குநர் . சுட்டுக்கொல்லப்பட்ட இடம் நியூயார்க்  மான்ஹாட்டனில் உள்ள ஹில்ட்டன் மிட்டவுன் ஹோட்டல் [New York Hilton Midtown hotel] வாயில் .சுட்டுக் கொல்லப்பட்ட நாள் டிசம்பர் 24 .

 

காரணம் என்ன ?

 

அமெரிக்காவில் மருத்துவரை அணுகுவது மிக சிரமம் .பெரும் பொருட்செலவு .இன்சுரன்ஸ் இல்லாதவர் மருத்துவ உதவி பெறவே இயலாது .கொரானாவின் போது அமெரிக்காவில் உயிர் இழப்பு அதிகம் ஆனதற்கு அங்குள்ள மருத்துவத்துறை ஏழை மக்களுக்கு எட்டாத உயரத்தில் இருந்ததே ஆகும் .

 

அமெரிக்காவில் 1கோடியே 40 லட்சம் பேர் மருத்துவக் கடனைத் தீர்க்க தன் சாப்பாட்டுச் செலவைக் குறைத்து வயிற்றை இறுக்கக் கட்ட வேண்டி இருக்கிறதாம் .

 

அங்குள்ள மருத்துவ இன்சுரன்ஸ் மிகவும் கெடுபிடியானது . 16 சதவீதம் இன்சுரன்ஸ் கோரும் மனுக்கள் தள்ளுபடி ஆகிவிடுகிறதாம். அமெரிக்க யுனைட்டெட் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்திலோ 32 % சதவீத மனுக்கள் குப்பையில் எறியப்பட்டுவிடுமாம் .அதாவது மூன்றில் ஒரு பாகம் மனுக்கள் நிராகரிக்கப்படுகிறதாம்.

 

உலகில் மருத்துத்திற்கு தனிமனிதர் செலவிட நேரிடும் தொகை மிக அதிகமுள்ள நாடு என்பதில் முன்வரிசையிலும் ; உயிர் காப்பில் 42 வது இடத்திலும்தான் அமெரிக்கா இருக்கிறது .

 

மஞ்ஜானி தன் முதுகுத் தண்டுவட பிரச்சனைக்காக  சிகிட்சை எடுத்துக் கொண்டதற்காக மேற்படி இன்சுரன்ஸ் நிறுவனம் சரியாக நடந்து கொள்ளாததால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது .ஆயின் அதனை அந்நிறுவனம் மறுத்திருக்கிறது .

 

ஆனாலும் இந்த இளைஞனுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் குரல் கொடுக்கிறார்கள் .ஏன் எனில் அமெரிக்க மருத்துவ இன்சுரன்ஸ் நிறுவனங்கள் மீதான அதிருப்தியும் கோபமும் உச்சத்தில் மக்களிடம் உள்ளது .

 

இந்த இளைஞனுக்கு ஆதரவாக டிசம்பர் 4 சட்ட உதவிக் க்குழு [December 4 th Legal Committee] அமைத்து நிதி திரட்டுகின்றனர் . இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர் நிதி திரண்டிருக்கிறது . மஞ்ஜானியின் டுவிட்டர் பக்கத்தில் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது .மஞ்ஜானி குறித்து இணையத்தில் தேடுவோர் மிகவும் அதிகரித்து விட்டனர் . விக்கிபீடியா இப்போதே அவருக்கு ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டது .

 

தனிநபர் கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு அல்ல ; அதனை நியாயப்படுத்தவும் முடியாது .எனினும் மருத்துவ வசதிக்காக மக்களைக் கசக்கிப் பிழியும் கடன்காரனாக்கும் முதலாளித்துக் கொள்ளைக்கு எதிரான கொதிப்பே இப்பிரச்சனையில் கொப்பளிக்கிறது .

 

 "மறு", "தாமதி", " தூக்கி எறி",[“deny,” “delay” and “depose”, ] என்கிற தந்திரத்தை இன்சுரன்ஸ் நிறுவனங்கள் பின் பற்றுவதாகக் கூறப்படும் நிலையில் .கொலை செய்யப்பட்ட இடத்தில் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பெரும் பரபரப்பாகி விட்டது .

 

இந்நிலையில் இன்சுரன்ஸ் கொள்ளை குறித்து  ஜெய் எம் பெயின்மென்  [Jay M Feinman ] எழுதிய  தாமதி மறு அதை நியாயப்படுத்து என்கிற தாலைப்பில் Delay deny defend / Jay M Feinman ] எழுதிய நூல் பலவருடங்களுக்குப் பின் பரபரப்பாக விற்பனை ஆகிறதாம் .

 

ஒரு கொலை ஒரு நூல் விற்பனையைத் தூண்டியதா ? அல்லது மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடா ?

 

[இந்தச் செய்தியை சில வாரங்கள் முன் வாசித்தேன் .கடந்து போய்விட்டேன்.இந்த மாத “ காக்கைச் சிறகினிலே” மாத இதழில் எம். பாண்டியராஜன் எழுதிய நான்கு பக்கக் கட்டுரையை வாசித்தபின் முகநூலில் அச்செய்தியை பகிரத்தோன்றியது . என் மொழியில் பகிர்ந்துவிட்டேன் . இச்செய்தி சொல்லும் செய்தி நூறு !!]

 

சுபொஅ

05/01/25.