எத்தனை எத்தனை கட்சிகள் – 7

Posted by அகத்தீ Labels:

 

 

எத்தனை எத்தனை கட்சிகள் – 7

ஜனதா கட்சியாய் ஒன்றிணைந்த தடம்

 

 

முந்தைய அத்தியாயங்களில் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் சோஷலிசம் குறித்தும் சில செய்திகளைச் சொல்லி வந்திருக்கிறோம். இங்கே கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்படும் முன்பே அதன் சித்தாந்தமும் ஈர்ப்பும் பரவிவிட்டது. இந்தப் பின்னணியில் 1920-இல் முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை தாஷ்கண்டில் துவக்கப்பட்டது. இது சிபிஎம் வரலாற்றுப் புரிதல். சிபிஐ இதனை ஏற்கவில்லை; 1925-இல் கான்பூரில் உருவானதையே தொடக்கமாகக் கொள்கின்றனர்.

 

1920 அக்டோபர் 17 ஆம் நாள் சோவியத் யூனியனில் தாஷ்கண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை துவக்கப்பட்டது. வங்கத்திலிருந்து சென்ற புரட்சியாளர் நரேந்திரநாத் (இவர் தன் பெயரை மனபேந்திர நாத் ராய்எம்.என்.ராய் என மாற்றிக் கொண்டார்), அவரது மனைவி ஐரோப்பியரான ஈவிலின் டிரெண்ட் ராய், அபானி முகர்ஜி, அவரது மனைவி ரஷ்யரான ரோசா ஃபிட்டிங், முகமது ஷாபிக் சித்திக், தமிழகத்தைச் சார்ந்த எம்.பி.பி.டி. ஆச்சார்யா ஆகியோர் அக்கிளையில் இருந்தனர். முகமது ஷாபிக் சித்திக் செயலாளரானார்.

துருக்கியைப் பிரிட்டிஷாரிடமிருந்து மீட்க நடை பயணமாகச் சென்றவர்கள்முஜாஹிர்கள்என அழைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் காபூல் வழி மாஸ்கோ சென்று பயிற்சி பெற்றனர். மாஸ்கோ ராணுவக் கல்லூரியில் பயின்ற முஜாஹிர்களையும் சந்தித்த லெனின் இந்தியா செல்லுமாறும்; இந்திய விடுதலைப் போரில் பங்கு பெறுமாறும்; இந்தியச் சூழலை நன்கு கணித்து அதற்கொப்ப கட்சியைக் கட்டுமாறும் ஆலோசனை வழங்கி அனுப்பினார்.

 

முதல் அகிலத்தின் வழிகாட்டுதலும் சரிலெனின் ஆலோசனையும் சரி – ‘இந்தியச் சூழலை நன்கு கணித்து; சுதேசித் தன்மையுடன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுகஎன்பதாகத்தான் இருந்தது. ஆனால் நாடு திரும்பியோர் சந்தித்தது அடுக்கடுக்கான சதி வழக்குகளே! பிறந்த உடனேயே தாஷ்கண்ட் சதி வழக்குகள் ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924), மீரட் சதிவழக்கு (1929) என வரிசையாக சதி வழக்குகளை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது.

 

1929-ஆம் ஆண்டின் புனையப்பட்ட மீரட் சதிவழக்குதான், வரலாற்றில் நெடுங்காலம் நடந்த சதிவழக்கு. கிட்டத்தட்ட மூன்று ஆண்டு ஏழுமாதம் விசாரணை. 320 பேர் அரசு சாட்சிகள். 3500 ஆவணங்கள் என நீண்டது. கம்யூனிஸ்டுகள் வழக்கு மேடையை கம்யூனிஸ்ட் இயக்க பிரச்சார மேடை ஆக்கினர். மூவர் விடுவிக்கப்பட்டனர். முசாபர் அகமதுக்கு ஆயுள் தண்டனை. பிலிப்ஸ் ஸ்பிராட் (பிரிட்டிஷார்), டாங்கே, நிம்கர், ஜோக்லேகர், காட்டே ஆகியோருக்கு 12 ஆண்டு சிறை; பென் பிராட்லி (பிரிடிஷார்), மிராஜ்கர், சவுகத் உஸ்மானி, அப்துல் மஜித் ஆகியோருக்கு 10 ஆண்டுச் சிறை; ஏனையோருக்கு 7 ஆண்டு, ஐந்து ஆண்டு தண்டனைகள்.

 

இந்த வழக்கின் போதே காந்தியும் நேருவும் சிறையில் கம்யூனிஸ்டுகளைச் சந்தித்து சட்ட மறுப்பு இயக்க ஆதரவு கேட்டனர். குடியரசு ஏட்டில் தந்தை பெரியார் எழுதிய உணர்ச்சி கொப்பளிக்கும் கட்டுரையில் குறிப்பிட்டார்:

பொதுவுடைமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரை சமணர்களைக் கழுவிலேற்றியது போல நடுத்தெருவில் நிறுத்தி கழுவிலேற்றிக் கொல்வதன் மூலமோ அடக்கி விடலாம் என நினைப்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பை நெய்விட்டு அணைத்துவிடலாம் என்று எண்ணுவது போல்த்தான் போய் முடியும். ஆடவே மீரட்டின் முடிவை நாம் மேளதாளத்துடன் வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாராப் பாராட்டுகிறோம். முக்காலும் பாராட்டுகிறோம். நமக்கும் நம் போன்ற வாலிபர்களுக்கும் இப்பெரும்பேறு கிடைக்கவில்லையே என வருந்தி மற்றொரு முறை பாராட்டுகிறோம்.”

 

இப்படி நாடு தழுவிய சதி வழக்கு மட்டுமல்ல நெல்லை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, சென்னை சதி வழக்கு என்பன போன்று நாடெங்கும் எண்ணற்ற சதி வழக்குகளைச் சந்தித்து நெருப்பில் நீந்தி வந்தது கம்யூனிஸ்ட் இயக்கம். கம்யூனிஸ்ட் கட்சி பிரிட்டிஷ் ஆட்சியில் பெரும்பாலும் தடை செய்யப்பட்டே இருந்தது. எனவே காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தே இயங்கியது உண்டு. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோ காங்கிரஸ் கட்சியின் உள்ளே இயங்கியது. ஆக ஒன்றுக்குள் ஒன்றாக, அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிகாங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் கட்சி என்றே 1934 முதல் 1940 வரை இயங்கியது. பொதுவாக சோஷலிஸ்ட் குழுக்களும் பொதுவுடைமை நேசித்த தலைவர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பாசம் கொண்டிருப்பினும்; பல கருத்துகளில் முரண்பட்டும் இருந்தனர்.

 

உலகப்போர் மற்றும் பிளவுகள்

1942 இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில் யுத்தத்தை கடுமையாக எதிர்ப்பவர்களாக கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தனர். அதனால் பல தலைவர்கள் சிறைப்பட்டனர். ஆனால் நிலைமை மாறி ஹிட்லர் சோவியத் யூனியனைத் தாக்கியதும் யுத்தத்தின் போக்கு திசை மாறியது. கம்யூனிஸ்ட் கட்சி தன் நிலைபாட்டை மாற்றி பாசிசத்தை முறியடிக்க பிரிட்டன் அமெரிக்கா ரஷ்யா கூட்டணியை ஆதரிக்க முடிவெடுத்தனர்.

 

தேசபக்த கனலோடு பிரிட்டிஷ் எதிர்ப்பில் தீவிரமாக இருந்த முற்போக்காளர்களால் கூட இதனை ஏற்க முடியவில்லை. இதுவரை கம்யூனிஸ்ட்டுகளிடம் அனுதாபம் காட்டிய ஒரு சாரார் கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கத் துவங்கினர். அன்றைக்கு அரசியல் ரீதியாக எடுத்த முடிவு மிகச்சரிதான். ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் கொஞ்சம் எச்சரிக்கையோடும் சாதுரியத்தோடும் இருந்திருக்க வேண்டும் என பின்னர் கட்சித் தலைமை சுயவிமர்சனம் செய்து கொண்டது.

இந்தியா சுதந்திரமடைந்த சூழலில் ஆந்திராவில் நடைபெற்ற விவசாயிகளின் ஆயுதப் புரட்சியை முன்னெடுக்க முடியாத சூழலில் கட்சி சவாலை எதிர் கொண்டது. இந்திய ஆளும் வர்க்கம், சமூக அமைப்பு, புரட்சிக்கான பாதை இவற்றைத் தீர்மானிப்பதில் உள்கட்சி தத்துவார்த்த மோதல் தீவிரமானது.

 

1962-இல் இந்தியசீன யுத்தம் துவங்கிய காலகட்டத்தில் கட்சிக்குள் உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டி பிளவை நோக்கி நகர்ந்தது. 1964-இல் வலது கம்யூனிஸ்ட் கட்சி என மக்களால் அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இடது கம்யூனிஸ்ட் கட்சி என அழைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) கட்சி என இரண்டாகப் பிரிந்தன.

பின்னர் ஆயுதப் போராட்டத்தை முன்வைத்து நக்சலைட்டுகள் சிபிஎம்மிலிருந்து பிரிந்தனர். பின்னர் நக்சலைட்டுகள் பல கூறுகளாயினர். சிபிஐ, சிபிஎம்மிலிருந்து மேலும் சில தனிப்பட்ட தலைவர்கள் பிரிந்து சென்று சில கட்சிகளை குழுக்களை உருவாக்கினர். முதல் பொதுத் தேர்தலிலேயே கம்யூனிஸ்ட் என்ற பெயரைத் தம்மோடு கொண்ட ஓரிரு கட்சிகளைப் பார்த்தோம். இப்படி சில சிறிய குழுக்களும் முளைத்தன. இவ்வளவுக்குப் பிறகும் சிபிஎம் இருக்கிற கம்யூனிஸ்டுகளில் பெருமளவு சரியான பாதையில் செல்வதாகவும், இருப்பதில் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாகத் திகழ்வதாகவும் இருக்கிறது.

 

இந்திய சமூகத்தின் வர்க்க வர்ண வேறுபாடுகளைச் சரியாக உள்வாங்குவதிலும் அதற்கொப்ப வியூகம் சமைப்பதிலும் ஏற்பட்ட பலவீனமும், தாராளமய உலகச் சூழலும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னேற்றத்தில் தொய்வை ஏற்படுத்தின எனினும் கம்யூனிஸம்தான் பாசிசத்துக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்பது மெல்ல உறுதியாகி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவு இடதுசாரிகள் பலவீன மடைவதில் கொண்டுபோய் விட்டன. உலகமய தாராளமய சூழலில் வலுதுசாரி தத்துவம் கொஞ்சம் வேகமெடுக்கத் துவங்கியது.

 

காங்கிரஸ் பிளவு மற்றும் ஜனதா கட்சி

1964-ல் நேரு மறைவுக்கு பிறகு அடுத்து யார் என்பதில் கடும் போட்டி எழுந்தது. காமராஜ்கிங் மேக்கர்ஆனார். லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். மொரார்ஜி தனக்கு உரிய வாய்ப்பு கைதவறிப் போனதாகக் கருதினார். 1966-இல் சாஸ்திரி மறைவுக்குப் பின் மீண்டும் காமராஜ்கிங் மேக்கர்ஆனார். இந்திரா காந்தி பிரதமரானார். மொரார்ஜி மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளானார். பகை புகைய ஆரம்பித்தது.

பிரதமர் பதவிக்கு தகுதியானவராக ஒய்.பி.சவான் இருந்த போதிலும் அவர் எப்போதும் அடக்கி வாசிப்பவராக இருந்ததால் தன் அரசியல் குரு ஒய்.பி.சவானுக்கு பிரதமர் பதவி கிட்டாமல் நழுவிப் போனதுபோல், தனக்கும் நழுவிப் போனதாகஎன் வாழ்க்கைப் பயணம்என்ற நூலில் சரத்பவார் மறைமுகமாகச் சொல்லியுள்ளார், “அதிகாரத்தின் நுழைவுவாயில் வரைஎன அவர் அந்நூலுக்கு உபதலைப்பிட்டது அதனால்தான். காங்கிரஸுக்குள் மோதல் வலுத்ததற்கு சரத்பவார் வாழ்க்கை வரலாற்று நூலும் சாட்சியாகிறது.

 

காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்துக்கு முன்பே கோஷ்டி சண்டை நிறைய உண்டு. 1907-லேயே தீவிரவாதிகள், மிதவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவானது. சூரத் கட்சிக் காங்கிரஸில் பகிரங்கமாகவே வெளிப்பட்டது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால் போன்றோர் தீவிரவாத முகாம். கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் மிதவாதிகள். தீவிரவாதிகள் இந்து பழமைவாதத்தைத் தூக்கிப் பிடித்ததும்; மிதவாதிகள் முற்போக்கை முன்மொழிந்ததும் நகை முரண்.

 

1923-லேயே சித்தரஞ்சன் தாஸ், மோதிலால் நேரு, விட்டல்பாய் பட்டேல் ஆகியோர் சுவராஜ்ய கட்சி (Swaraj Party) யைத் துவங்கினர் என்பது வரலாறு. 1922 செளரி செளராவில் ஒத்துழையாமை இயக்கத்தின் போது வெடித்த மோதலை, உயிர்பலியைக் காரணம் காட்டி மகாத்மா காந்தி போராட்டத்தைக் கைவிட்டதைத் தொடர்ந்த எதிர்ப்பு இது. கட்சி நீடிக்கவில்லை.

 

ஆட்சி அதிகாரம் வந்த பின், அதை சுவைக்க கடும் போட்டியும் பொறாமையும் மிக்க பல்வேறு குழுக்கள் இயங்கின. இந்திரா காந்தி காலத்தில் வெடித்தது. இந்திரா காந்தி வங்க தேச யுத்தத்தில் வென்று வங்க தேசம் தனிநாடாக உதவியது வரலாறானது, வங்கிகள் தேசிய மயம்சோஷலிச மாதாவேடத்துக்கு உதவியது. மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்தார். ஆனால் கட்சிக்குள் மோதலும் தீவிரமானது. குறிப்பாக 1975-இல் குடியரசு தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக; இந்திராகாந்தியின்மனச்சாட்சிப்படி வாக்களிங்கஎன்கிற வேண்டுகோள், வி.வி.கிரி குடியரசு தலைவராக வெற்றி பெறுவதில் போய் முடிந்தது.

 

காங்கிரஸ் இண்டிகேட், சிண்டிகேட் என இரண்டாக உடைந்தது. சிண்டிகேட் எனப்படுவது நிஜலிங்கப்பா தலைமையிலான பழைய காங்கிரஸ் எனப்படும் ஸ்தாபன காங்கிரஸ் Congress (O), இண்டிகேட் எனப்பட்ட இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் (R) என்றானது.

 

ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில்முழுபுரட்சிஎன்கிற போராட்டம் நாடெங்கும் வலுத்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தப் பல்வேறு சக்திகள் முயன்றன. தேசந்தழுவிய ரயில்வே போராட்டம் வெடித்தது. ஜார்ஜ் பெர்ணாண்டஸ் கதாநாயகன் ஆனார். பின்னர் அவர் பாஜக கூட்டணியில் கரைந்து மோசமான வரலாறாய்ப் போனார். வலது சாரிகள் அவர்கள் பாணியில் முயற்சித்தனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஜனநாயக உரிமைகள் முடக்கப்பட்டன.

 

1977 இந்திராகாந்தி அவசரநிலையைத் திரும்பப் பெற்று தேர்தலை அறிவித்தார். ஜனவரி 19-ஆம் நாள் மொரார்ஜி தேசாயின் இல்லத்தில் நான்கு கட்சித் தலைவர்கள் சந்தித்தனர். இதில் முக்கியமான கட்சிகளாவன: சரண்சிங் தலைமையிலான பாரதிய லோக் தளம் (இது அடிப்படையில் விவசாயிகளின் கட்சி), சோஷலிஸ்ட் கட்சி, மொரார்ஜியின் பழைய காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் முகமான ஜனசங்கம் ஆகியவை. சேர்மானத்தைப் பார்த்தாலே முரண்பட்டவர்களின் சங்கமம் என்பது விளங்கும். ’ஜனதா கட்சியாக ஒன்றிணைந்தது. ஜெயபிரகாஷ் நாராயணன் தொடங்கி வைத்த மாநாட்டில் ஜனதா கட்சி முறையாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸின் மிக நம்பகமான தலித் தலைவர் ஜெகஜீவன் ராமும் விரக்தி அடைந்து காங்கிரஸிலிருந்து விலகிஜனநாயகத்துக்கான காங்கிரஸ்என்ற பெயரில் தனிக்கட்சி கண்டு ஜனதாவோடு கூட்டணி ஆனார். அடுத்து இந்த ஜனதா கட்சி உடைந்து சிதறியதையும் இதரச் செய்திகளையும் பார்ப்போம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்

 

 


0 comments :

Post a Comment