எத்தனை எத்தனை கட்சிகள் – 5
கட்சி பிளவுகளின் பின்னால் சித்தாந்தங்கள்
இந்தியாவில்
சோஷலிஸ்ட் கட்சியோ கம்யூனிஸ்ட் கட்சியோ உருவாவதற்கு முன்பே இங்கு அதன் மார்க்சிய சித்தாந்தமும் அரசியலும் பரவத் தொடங்கிவிட்டது. 1871 ஆகஸ்ட் 15 ஆம் தேதியே கம்யூனிஸ்ட் சர்வதேச அகிலத்துக்கு கொல்கத்தாவிலிருந்து ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கம்யூனிஸக் கிளை ஒன்றை இந்தியாவில் துவங்க விருப்பம் தெரிவித்துள்ளார். ரஷ்யப் புரட்சிக்கு முன்பே இங்கு மார்க்சியம் பரவத் தொடங்கிவிட்டது.
அப்போது
பிரிட்டிஷ் ஆட்சி இருந்தது. மார்க்சிய புத்தகங்கள் உள்ளே வருவதற்கும் தடை இருந்தது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சில புத்தகங்களே கிடைத்தன. வெளிநாடு என்று படித்த அல்லது வெளிநாட்டோடு ஏதேனும் வர்த்தக / அரசியல் / கல்வி தொடர்புடையவர்களே இந்த தத்துவத்தை அறிந்துகொள்ள வாய்ப்பு அமைந்தது. இந்தச் சூழலிலும் அக்கருத்து இங்கு பரவத் தொடங்கியது.
1917-இல்
ரஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து சோஷலிசம் மற்றும் கம்யூனிசம் ஈர்ப்பு மையமானது. 1927-இல் நேருவும், 1930-இல் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரும், 1931-இல் பெரியாரும் (ரஷ்யா போவதற்கு முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழியாக்கம் செய்து குடியரசு ஏட்டில் வெளியிட்டுவிட்டார்) இன்னும் பல முக்கிய ஆளுமைகளும்
ரஷ்யப் பயணம் மேற்கொண்டதும் சோவியத் நாடு பற்றி பேசியதும் சோஷலிச கருத்துக்கு வலுசேர்த்தது. தமிழ்நாட்டில் பிறந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 1920-களிலேயே சோஷலிசம் பற்றி பேசத் தொடங்கிவிட்டார். 1922 கான்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலேயே சோஷலிசம் பற்றி பேசிவிட்டார். 1923-ல் முதன் முதல்
மேதினம் கொண்டாடி செங்கொடியை ஏற்றினார். விவசாயி – தொழிலாளர் கட்சி ஒன்றையும் அறிவித்தார்.
சோஷலிஸ்ட்
கட்சியின் தோற்றம்
ஆச்சார்ய
நரேந்திர தேவ், சம்பூர்ணானந்த ஆகியோர் உத்திரபிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தயாரித்த சோஷலிஸ்ட் திட்டத்தை 1931-இல் காங்கிரஸ் மாநாட்டில் விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டது. தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய ஜெயபிரகாஷ் நாராயணன் மார்க்சிஸ்ட் சித்தாந்ததை தெரிந்து வந்தார். காங்கிரசில் சேர்ந்தார். அதே போல் ஜெர்மனியில் முனைவர் பட்டம் பெற்ற ராம் மனோகர் லோகியா இந்தியா திரும்பி காங்கிரஸில் சேர்கிறார். இவரும் மார்க்சியம், சோஷலிசம் இவற்றால் ஈர்க்கப்பட்டவர்.
இக்காலகட்டத்தில்
பீகார், பஞ்சாப், உத்திர பிரதேசம், உள்ளிட்ட பல மாகாணங்களில் (அன்றைக்கு
பெரிய பெரிய மாகாணங்கள்தாம் இப்போதைய மாநிலங்கள் கிடையாது) பல்வேறு சோஷலிஸ்ட் கட்சி அமைப்புகள் உருவெடுக்கின்றன. அப்துல் பாரி, கங்கா சரண்சிங், பூலன் பிரசாத் வர்மா, ராகுல் சாங்கிருத்தியாயனாக பின்னால் மாறிய கேதர்நாத் எனப்படும் பாராண்டோர் தாஸ், பேராசிரியர் பிரிஷ்நரேன், பெரோஷ் சந்த், அசோக் மேத்தா, எஸ்.என்.ஜோஷி உள்ளிட்ட பலர் இதில் ஈடுபட்டனர். முதலில் காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ்ட் கருத்து முன்னெடுக்கிற காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவாகத்தான் செயல்பட்டது. ஆனால் காங்கிரசைத் தாங்கள் விரும்பிய திக்கில் செலுத்த முடியாது என்பதால் 1934-ல் சோஷலிஸ்ட் கட்சி
உருவாக்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சார்ய நரேந்திர தேவ், சம்பூர்ணானந்த, லோகியா போன்ற பலர் முன்நின்றனர்.
1951-இல்
ஜே.பி.கிருபாளனி உருவாக்கிய
கட்சி குறித்து ராமச்சந்திர குஹா சொல்வதை இங்கு கொஞ்சம் பொருத்திப் பார்க்கலாம்.“இதற்கிடையில்
காங்கிரஸில் வளர்ந்து வரும் இந்துத்துவம், சில ஆவேசமான தலைவர்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறக் காரணமாகிவிட்டது. ஏற்கெனவே 1948-க்கு முன் சில சிறந்த இளம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேறி சோஷலிஸ்ட் கட்சியைத் தொடங்கி இருந்தனர். 1951 ஜூனில் மதிப்பிற்குரிய காந்தியவாதி ஜே.பி.கிருபாளனி,
காங்கிரஸில் இருந்து விலகி கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி (கே.எம்.பி.பி.) என்ற கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சி விவசாயி, தொழிலாளர் மற்றும் பிற கஷ்டப்படும் மக்கள் நலனுக்காக நின்றது. புருஷோத்தம தாஸ் டாண்டன் தலைமையில் கட்சி பழமைவாதிகளின் அமைப்பாகிவிட்டது எனக் கிருபாளனி கூறினார்.” (இந்திய வரலாறு: காந்திக்கு பிறகு. பாகம்.1. ராமச்சந்திர குஹா).
காங்கிரஸுக்குள்
வலது இடது மோதல் வலுவாக நடந்தது. நேருவும் டாண்டனை கடுமையாகவே எதிர்த்தார். பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் டாண்டனை கழற்றிவிட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது வரலாறு. தேர்தலில் நேரு மாபெரும் வாக்கு ஈர்ப்பாளரானார் என்பதை அவரை கடுமையாக எதிர்க்கும் ’கரண்ட்’ ஏட்டின் அரசியல் விமர்சகர் டி.எஃப்.கராக்கா
ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அப்போது பம்பாய் செளபாத்தி கடற்கரையில் நடந்த நேரு கலந்து கொண்டு உரையாற்றிய பெரும் கூட்டத்தை வர்ணித்து எழுதினார். நேருவின் பேச்சில் வெளிப்பட்ட ஒவ்வொரு செய்திக்கும் வாக்கு அதிகரித்துக் கொண்டே போனது என நாடக பாணியில்
விவரிப்பார். பேச்சின் முடிவில் காந்தி பற்றி நேரு பேசியது குறித்து இப்படி எழுதுகிறார் குஹா:
“கடற்கரையில்
நின்றுகொண்டோ, மணலில் உட்கார்ந்து கொண்டோ இருப்பவர் முகத்தில் ஒரு கண்ணீர் துளி – இரண்டு துளிகள்..
ஒரு
பெண்மணி சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. அவளுடைய ஓட்டை நேருவுக்குத்தான் அளிப்பாள்.
மக்களுக்கு
காந்தியின் நினைவுகள் திரும்பின. மகாத்மாவின் பக்கத்தில் நேரு நின்ற நினைவுகள். காந்தி விட்டுச் சென்ற அரசியல் வாரிசு நேரு. ஐம்பதாயிரம் ஓட்டுகள்! நூறாயிரம்! இரு நூறாயிரம்!” (மேற்படி நூல்)
காந்தியும்
நேருவும் மக்களை ஈர்க்கும் காந்தமாக இருந்த சூழலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சிகள் துவங்கிய போதும் அவர்களால் பெரும் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை எனினும் தங்கள் தேர்தல் கணக்கைத் துவக்கவே செய்தனர்.
கம்யூனிஸ்ட்டுகளோடு
ஆரம்பத்தில் நெருக்கமாக இருந்தது. காங்கிரசுக்குள் செயல்பட்ட சோஷலிஸ்ட் குழுவுக்குள் கம்யூனிஸ்டுகள் உட்குழுவாகச் செயல்பட்டனர். இ.எம்.எஸ்ஸும்
அதில் அங்கம். ஆயின் அரசியல் அணுகுமுறை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த பிணைப்பு நீடிக்கவில்லை.
1951 தேர்தலில்
12 பேர் சோஷலிஸ்ட் கட்சிகள் மூலம் தேர்வு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, விவசாயி தொழிலாளர் கட்சி உட்பட சில கட்சிகள் அப்போதே சோஷலிஸ்ட் முகாமிலிருந்து தலைஎடுத்துவிட்டன. பின்னர் அரசியலில் தலை எடுத்த முலாயம் சிங் (சமாஜ்வாதி), லல்லுபிரசாத் (ராஷ்டிரிய ஜனதா தளம்) எல்லோரையும் ’லோகியா சிந்தனைப் பள்ளியின்’
(School of Lohia Thought) மாணவர்கள்
என்றே அரசியல் வட்டாரத்தில் அழைப்பார்கள். பொதுவாக வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட
சமூகத்தின் அரசியல் முகமாகவே லோகியா வட்டம் தன்னை நிலை நிறுத்தியது. பிற்பட்ட சமூகத்துக்குள்ளும் ஒவ்வொரு வட்டாரத்திலும் யார் ஆதிக்கம் செய்வது என்கிற போட்டியும் தனிநபர் ஈகோவும் வட்டார / பிரதேசத் தேவைகளும் பல தலைவர்களையும் கட்சிகளையும்
உருவாக்கிக் கொண்டே இருந்தது. இப்போதும் தொடர்கிறது.
அண்மையில்
(09/10/2025) ஆனந்தவிகடனில்
யோகேந்திர யாதவ் எழுதிய கட்டுரை, சோஷலிஸ்ட் கட்சியின் 90-வது ஆண்டை ஒட்டி நடைபெற்ற ஒரு மாநாடு பற்றி பேசியது. அக்கட்டுரை முக்கியமானது. அதில் ஓரிடத்தில் எழுதியிருப்பார்:
“நம்
ஞாபகமறதியின் காரணமாக, இந்திய சோஷலிச அரசியலின் அச்சாணியான லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் (ஜே.பி) அவர்களை
காந்திய சர்வோதயத் தலைவராக மட்டுமே நினைவில் வைத்திருக்கிறோம். நெருக்கடி நிலை காலத்தில் ஜனதா கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர் அவர். இதேபோன்ற ஞாபகமறதி பலர் விஷயத்தில் நடந்துவிட்டது. இந்தியக் கைவினைக் கலைகள் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக கமலாதேவி சட்டோபாத்யாய் நினைக்கப்படுகிறார். ஆச்சார்ய நரேந்திர தேவா வெறுமனே ஓர் அறிஞராக மட்டுமே கருதப்படுகிறார். பழங்குடித் தலைவர் பாலேஷ்வர் தயாள் வெறுமனே சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமே அறியப்படுகிறார். உஷா மேத்தா வெறும் சுதந்திரப் போராட்டத் தியாகியாக மட்டுமே நினைவில் நிற்கிறார். இந்திய சோஷலிச இயக்கத்துக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் மறக்கடிக்கப்பட்டு விட்டன. ராம் மனோகர் லோகியாவை மட்டும் நாம் சோஷலிஸ்ட் என்று குறிப்பிடுகிறோம். ஆனால், அவருமே இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமாக அமைந்த
மண்டல் கமிஷனின் தலைவராக இருந்த மண்டலின் குருவாகவே அறியப்படுகிறார். ஏழை மக்களின் நிலையைக் கண்டு வருந்தி, இந்தியாவில் சோஷலிச சிந்தனைக்கு அடித்தளமிட்ட மாபெரும் தலைவராக லோகியாவை நினைப்பதில்லை.”
கிட்டத்தட்ட
தலித் பிரிவினரிடமும் பலகட்சிகள் தோன்ற உட்சாதி பிரிவுகளின் நலன்களும், அதிகாரப் பங்கு கோரும் அழுத்தமும், தனிநபர் விருப்பு வெறுப்பும், ஈகோவும், வட்டார / பிரதேச சூழலும் என பல உட்காரணிகள்
காரணமாயின. கம்யூனிஸ்ட் கட்சியில் வரலாற்றை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அதற்கும் முன் முதலாளித்துவத்தை பகிரங்கமாக ஆதரித்த கட்சி ஏதேனும் உண்டா? ஆம். இந்திய அரசியல் வரலாற்றில் அப்படி ஒரு திருப்பமும் உண்டு.
சுதந்திரா
கட்சியின் தோற்றம்
என்.ஜி.ரங்கா ஆந்திராவில்
விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர். காங்கிரஸ்காரர்தான். உள் முரண்பாட்டால் ’கிரிஷிகார் லோக் கட்சி’ என்ற ஒரு கட்சியைத் துவங்கினார். இவர் ராஜாஜியோடு நெருக்கமானவர். ராஜாஜி ஒருத்தர்தான் பகிரங்கமாக முதலாளித்துவத்தை ஆதரித்தவர். சுதந்திராக் கட்சியை நிறுவியவர். அக்கட்சியின் கொள்கை முதலாளித்துவமே என மறைக்காமல் சொன்னவர்.
ராஜாஜி
1958-இல் ’சுதந்திரச் சிந்தனை தேவை’ என எழுதிய கட்டுரையில்
‘ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு, மாறுபட்ட எதிர்ப்புடைய சிந்தனை தேவை. ஒரே மாதிரி சிந்திக்கும் பலர் தேவை இல்லை” என்றார். சுதந்திராக் கட்சியை 1959-இல் துவக்கினார். பொதுத்துறையை எதிர்த்தார். தனியார் பெரு முதலாளிகளை ஆதரித்தார். நேருவையும் மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரத்தையும் எதிர்த்தார். சுதந்திரச் சந்தையை ஆதரித்தார். எல்லா பழமைவாதத்துக்கும் முட்டுக்கொடுத்தார். நேருவை கடுமையாக எதிர்த்தார். இதில் நகைமுரண் என்ன தெரியுமா? ஒரு காலத்தில் “அபேதவாதம்”
(சோஷலிசத்தைத்தான் அந்தப் பெயரில் அழைத்தார்) என்ற நூலை 1940-களில் ராஜாஜி எழுதினார். பின்னர் அதைத் திரும்பப் பெற்றுவிட்டார்.
முதல்
குடியரசு தலைவராக ராஜாஜியையே நேரு முன்மொழிய விரும்பினார். ராஜாஜி பழமைவாதியாக இருப்பினும் மதவெறி அரசியலை ஆதரிக்கவில்லை. அதனால் காங்கிரஸில் ஓங்கி இருந்த இந்துத்துவ கைகள் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தை முன்மொழிந்து, குடியரசு தலைவராகவும் ஆக்கிவிட்டது. நேருவுக்கு எதிராக ராஜாஜி திரும்பினார்.
மினு
மசானி, பிலு மோடி, கே.எம்.முன்ஷி,
என்.ஜி.ரங்கா உட்பட
சிலர் ராஜாஜியோடு இருந்தனர். என்.ஜி.ரங்கா 1957 முதல்
1970 வரையிலும், பின் 1980-91யும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்.ஜி.ரங்கா காங்கிரஸ்
சார்பில்தான் பெரும்பாலும் இருந்தார். 1967-70 மூன்றாண்டுகள் சுதந்திராக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
இடது
சாரி பிளவு மட்டுமல்ல வலதுசாரி பிளவும் காங்கிரஸில் ஏற்பட்டது. இந்துத்துவா பேசிய இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் பல அமைப்புகளைப் பின்னிருந்து
இயக்கின.
பொதுவாக
ஒவ்வொரு கட்சியும் தமக்கென இளைஞர், மாணவர், தொழிலாளர், விவசாயி, பெண்கள், பண்பாடு என பல பிரிவுகள்
வைத்திருக்கும். இந்த அமைப்புகளைக் கட்சிகளே கட்டுப்படுத்தும். ஆர்.எஸ்.எஸ் மட்டுமே தனக்கென ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி இன்னும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. ஜனசங்கமும் பின்னர் பாரதிய ஜனதா கட்சி என பெயர் மாறியது.
இந்து மக்கள் கட்சி போல் வேறு பல கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ் ஆல் இயக்கப்படும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சொற்படி ஆடும். ஆபத்தான பாசிச போக்கு இது.
மகாத்மா
காந்தியை எடை போடுவது மிகச் சிரமம். அவர் காலந்தோறும் தன் பல நிலைபாடுகளைத் தளர்த்தி
உள்ளார். அவர் தீவிர ராமபக்தர், மதவாதி, சனாதனி. ஆனால் என் ராமர் வேறு என்றார். குறுகிய மதவெறியை எதிர்த்தார். சாதி வெறியை எதிர்த்தார். அரிஜன சேவை என்றார். இந்திய மக்கள் ஒற்றுமைக்கு பாடுபட்டார். இந்திய மக்களை பெருமளவு சுதந்திரப்போரில் ஈர்த்தார். அவரோடு கொள்கை ரீதியாக பெரிதும் மாறுபட்ட நேருவை தன் வாரிசாக முன்நிறுத்தினார். இது முரண்பாடு. ஆயின் இந்தியாவுக்கு அவர் செய்த மிகப்பெரிய சரியான முன்மொழிவு. இல்லையேல் இந்தியா எப்போதோ ’இந்து தாலிபான் ஸ்டேட்’ ஆக அதாவது இந்துமதவெறியர்
வலதுசாரிகள் கையில் சீரழிந்திருக்கும். நேரு மீது இன்றுவரை சங்கிகளுக்கு கோபம் தீராததற்கு இதுதான் காரணம்.
ஆக,
விடுதலைப் போரிலேயே கருக்கொண்ட தாராளசிந்தனை (லிபரல்), மத பழமை வாதம்,
பொருளாதார வலதுசாரி வாதம், இடதுசாரி வாதம், சோஷலிச வாதம், கம்யூனிசம், சாதிய வாதம், பிரதேச வாதம், மொழி வாதம், மாநில வாதம் இன்னபிற கூறுகள் இந்திய சமூகத்தில் விதவிதமான பெயர்களோடும் கொடிகளோடும் முகங்காட்டின. இன்னும் இந்த போக்கு முடியவில்லை. புதிய புதிய கட்சிகளை முளைக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. அவை குறித்து பேசும் போது மொழிவாரி மாநிலம் குறித்தும் பேசியாக வேண்டும்.
தொடரும்…
-சு.பொ.அகத்ததியலிங்கம்.

0 comments :
Post a Comment