எத்தனை எத்தனை கட்சிகள் – 4

Posted by அகத்தீ Labels: ,



எத்தனை எத்தனை கட்சிகள் – 4

 


முதல் பொதுத் தேர்தலிலேயே 53 கட்சிகள்

 

1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் மொத்தம் 53 கட்சிகள் போட்டியிட்டன. அகில இந்திய அளவில் போட்டியிட்ட தேசிய கட்சிகள் எனப்பட்டவை 14 மட்டுமே. ஆயினும் நாடாளுமன்றத்திற்கு வென்று சென்ற கட்சிகள் 22 தான். இந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமான விதை 1947-ற்கு முன்பே போடப்பட்டுவிட்டது. இந்த கட்சிகளோடு பல குட்டிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலே கூட்டணிகளில் இருந்தன. அகில இந்திய அளவில் போட்டியிட்ட 14 கட்சிகளும் சின்னங்களும் விவரம் வருமாறு:

 

1. போல்ஷ்விக் கட்சி (Bolshevik Party): ஐந்துமுனை நட்சத்திரம்

 

2. அகில இந்திய பார்வேர்ட் பிளாக் [மார்க்சிஸ்ட்] கட்சி (All India Forward Bloc): சிங்கம்

 

3. அகில பாரதிய ஹிந்து மகாசபா (Akhil Bharatiya Hindu Mahasabha): குதிரை மீது வீரன்

 

4. ஆல் இண்டிய ஷெட்டூல்ட் காஸ்ட் பெடரேஷன் (All India Scheduled Caste Federation): யானை

 

5. அகில இந்திய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி (Revolutionary Communist Party of India): தீப்பந்தம்

 

6. அகில பாரதிய ராம் ராஜ்ய பரிஷத் (Akhil Bharatiya Ram Rajya Parishad): உதய சூரியன்

 

7. சோஷலிஸ்ட் கட்சி (Socialist Party): ஆலமரம்

 

8. அகில இந்திய பாரதிய ஜனசங் கட்சி (All India Bharatiya Jan Sangh Party): அகல் விளக்கு

 

9. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (Indian National Congress): இரட்டைக் காளை

 

10. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India): கதிர் அரிவாள்

 

11. புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி (Revolutionary Socialist Party): மண்வெட்டியும் மண்வாரியும்

 

12. கிரிஷிகர் லோக் கட்சி (Krishikar Lok Party): கலப்பை

 

13. அகில இந்திய பார்வேர்ட் பிளாக் (All India Forward Bloc): கைச் சின்னம்

 

14. கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி (Kisan Mazdoor Praja Party): குடிசை

 

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் என் தந்தையின் கடைச் சுவரில் குடிசைச் சின்னம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. ஏன் என்று எனக்கு அப்போது தெரியாது. நான் அரசியலில் ஆர்வம் காட்டிய போதுதான் என் தந்தை காங்கிரசை எதிர்க்க குடிசையை ஆதரித்ததாகச் சொன்னார்.

 

தமிழ்நாட்டின் அரசியல் களம்

தமிழ்நாட்டில் கொஞ்சம் மாறுபட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி (Indian National Congress), சோஷலிஸ்ட் கட்சி (Socialist Party), கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி (Kisan Mazdoor Praja Party), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India), கிரிஷிகர் லோக் கட்சி (Krishikar Lok Party), அகில இந்திய பார்வேர்ட் பிளாக் (All India Forward Bloc) ஆகிய அகில இந்திய அளவில் போட்டியிட்ட கட்சிகளோடு மேலும் அதிகமாக சில கட்சிகளும் தமிழ்நாட்டில் (அப்போது மதறாஸ் பிரசிடென்சி) போட்டியிட்டன.

 

அவை வருமாறு: குடியரசுக் கட்சி (Republican Party), மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி (Commonweal Party), ராமசாமிப் படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers Party), மெட்ராஸ் ஸ்டேட் முஸ்லீம் லீக் கட்சி (Madras State Muslim League Party): ஏணி, நீதிக் கட்சி (Justice Party): தராசு சின்னம். ஆக மொத்தம் பதினோரு கட்சிகள் 1952 பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் (மதறாஸ் பிரசிடென்சியில்) போட்டியிட்டன. ஒன்பது கட்சிகளே வெற்றி பெற்றன. ஆயினும் ஆங்காங்கு வேறு சில சிறிய கட்சிகளும் களங்கண்டன. இதுபோக பல குட்டிக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாமலே கூட்டணிகளில் இடம் பிடித்தன.

 

இந்தியா முழுவதும் 53 கட்சிகள் போட்டியிட்ட போதும் இந்திய தேசிய காங்கிரஸின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. 22 கட்சிகளே பாராளுமன்றத்திற்கு வெற்றி பெற்று செல்ல முடிந்தது. அதே வேளை தமிழ்நாட்டில் காங்கிரஸ் போதுமான பெரும்பான்மை பெறாததால் மாணிக்கவேல் நாயக்கரையும், ராமசாமி படையாட்சியையும் சேர்த்துக் கொண்டு சுயேட்சைகள் ஆதரவோடு ராஜாஜி கொல்லைப் புறம் வழி முதல்வரானார். ஆம், தேர்தலில் போட்டியிடாமல் மேலவை மூலம் நுழைந்தார். ஜம்மு காஷ்மீர் நிலை தனி. அங்கே ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியும் இந்துத்துவ சார்பு பிரஜா தந்திரி கட்சியும் செயல்பட்டன. வேறு சில கட்சிகளும் இயங்கின. 1952-ல் அங்கு தேர்தல் இல்லை.

 

இந்த இரண்டு பட்டியலையும் கூர்ந்து கவனித்தால் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பல இடது சாரிக் கட்சிகளும் மதவாதக் கட்சிகளும் சாதிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் அப்போதே களத்துக்கு வந்துவிட்டன. பிற மாநிலங்களிலும் அங்குள்ள சூழ்நிலை சார்ந்து பல புதிய கட்சிகள் களங்கண்டன. இன்னும் கூர்ந்து கவனித்தால் இந்திய சமூகத்தின் வர்க்க, வர்ண, மத, சாதி, மாநில, வட்டார, முதலாளித்துவ, சோஷலிச, கம்யூனிஸ என எல்லா முகமும் வெட்டவெளிச்சமாயின.

 

அரசியல் கட்சி என்ற ஜனநாயக வடிவம் பிறந்து நூறு ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியாவில் இவ்வளவு கட்சிகள் எனில் அதற்கான சமூகத் தேவை என்ன இருந்தது? தனி நபர் ஈகோ அல்லது பதவிப் பித்து சில இடங்களில் கட்சிகளைப் பிளந்திருக்கலாம் அல்லது புதிய கட்சியை உருவாக்க நிர்பந்தித்திருக்கலாம் மறுக்க முடியாது. ஆயினும் அது மட்டுமே வினையாற்றியதாகச் சொல்ல முடியாது. இந்திய சமூகம் வர்க்கம், வர்ணம், சாதி, மொழி, இனம், பொருளாதார வேறுபாடு, மாநில நலன், வட்டார ஏற்றத்தாழ்வு, அதையொட்டிய தேவைகள், கோரிக்கைகள், பிரஸர் டேக்டிஸ் எனப்படும் அழுத்தம் கொடுக்கும் யுத்தி என ஒவ்வொரு கட்சி பிறப்புக்குப் பின்னாலும் ஏதோ ஒரு சமூகக் காரணி செயல்பட்டிருக்கிறது. அதன் விளைவுதான் ஆரம்ப ஆண்டுகளிலேயே பல்வேறு கட்சிகள் களத்துக்கு வரத்துவங்கின. இந்தக் கட்சிகள் எல்லாவற்றையும் ஒரே கூடையில் அள்ளி வெளியே கொட்டவும் முடியாது. எல்லாவற்றையும் ஒருசேர நாற்காலியில் உட்கார வைக்கவும் முடியாது. ஆக தேர்தல் போராட்டம் ஆரம்பம் முதலே பல்வேறு சமரசங்களும் முரண்பாடுகளுமாய் மாறிப்போனதில் வியப்பில்லை.

 

கட்சிகளின் வகைப்பாடு

இப்படி பிறக்கும் கட்சிகளை வகைப்படுத்திப் பார்ப்பதும் வரலாற்று நோக்கில் தவிர்க்க முடியாததே! பொதுவாக உலகில் கட்சிகளை இருவிதமாகப் பகுத்துப் பார்ப்பார்கள்.

முதலில், கட்சிகளை 1) கன்சர்வேடிவ் கட்சிகள் (Conservative Parties) அதாவது பழமைவாதக் கட்சிகள். 2) லிபரல் கட்சிகள் (Liberal Parties) அதாவது தாராளவாதக் கட்சிகள் எனப் பகுத்துப் பார்ப்பார்கள். இரண்டாவதாக, இன்னொரு விதமாக பகுப்பார்கள்: 1) மாஸ் பார்ட்டி (Mass Parties) எனப்படும் வெகுஜனக் கட்சி, 2) கேடர் பேஸ்டு பார்ட்டி (Cadre Based Parties) எனப்படும் தொண்டர்கள் அடிப்படைக் கட்சி.

 

நாம் புரிந்து கொள்ள வசதியாகச் சொல்கிறேன்; தலைவரைப் பின் தொடர்கிற வெகுஜனங்களைக் கொண்ட கட்சி. இதில் தலைவர் சொல்லே வேதம். அவரைச் சார்ந்துதான் பாதை, பதவி எல்லாம். ஆனால் தொண்டர் அடிப்படைக் கட்சியில் ஒரு கருத்துநிலை சார்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பே அதன் வேர். தலைவர் வரலாம் போகலாம் அமைப்பு நீடிக்கும்.

 

முதல் வகைக் கட்சிகளில் பழமைவாதக் கட்சியோ தாராளவாதக் கட்சியோ தாம் செயல்படுகிற சமூக அமைப்புக்குள் சில சீர்திருத்தங்களை, சலுகைகளை முன்வைக்கிற கட்சிகளே தவிர அடிப்படை சமூக மாற்றம் கோருகிற கட்சிகளல்ல. வெளிப்படையாகச் சொல்லப்போனால் சுரண்டல் சமூக அமைப்பை முதலாளித்துவத்தை அப்படியே பேணிப் பாதுகாத்துக் கொண்டே சில்லறை நிவாரணங்களை அளிப்பது, அவ்வளவுதான். சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் எதிராக மக்கள் புரட்சி வெடித்துவிடாமல் காக்கும் ஷேப்டி வால்வுகளே (குக்கர் விசில் போல்) இக்கட்சிகள்.

 

சுருங்கச் சொன்னால் பழமைவாதக் கட்சியோ தாராளவாதக் கட்சியோ இரண்டுமே முதலாளித்துவக் கட்சிகளே! இருப்பினும் பழமைவாதக் கட்சி பழமைவாதத்தில் ஊன்றி நின்று சமூகத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற கொடுஞ்செயலில் ஈடுபடும். தாராளவாதக் கட்சிகள் தங்கள் முதலாளித்துவ நலனைக் காத்துக்கொண்டே கொஞ்சம் சுதந்திரச் சிந்தனைக்கு இடம் கொடுக்கும். ஆகவே இது அதைவிட மேல்.

 

வெகுஜனக் கட்சியோ, தொண்டர் அடிப்படைக் கட்சியோ இரண்டிலும் சமூகத்தை அப்படியே பாதுகாத்து சில்லறை சலுகைகளோடு திருப்தி அடையச் சொல்கிற கட்சிகளும் உண்டு; மாறாக சமூக அமைப்பில் கொள்கைரீதியான மாற்றம் தேவை என்று கருதுகிற கட்சிகளும் உண்டு. சமூக மாற்றத்தை விரும்புகிற கட்சிகள் கட்டுக்கோப்பான அமைப்பாகத் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் தேவையும் உண்டு. நாட்டுக்கு நாடு ஆங்காங்கு நிலவும் சமூக பொருளாதார பண்பாட்டு சூழலுக்கு ஏற்ப இக்கட்சிகள் முகங்காட்டும். வரலாற்றுப் பின்புலத்தோடு அவற்றை பார்க்காமல் தனித்துப் பார்த்து சரியான முடிவுக்கு வர இயலாது.

 

நான் மாஸ்கோ உலக இளைஞர் விழாவுக்கு சென்ற போது, “காங்கிரஸ் கட்சி கன்சர்வேட்டிவ் கட்சியா லிபரல் கட்சியா?” என கேள்வி கேட்டனர். அவர்கள் நாட்டு சூழலில் அந்தக் கேள்வி சரிதான். ஆனால் இங்கு காங்கிரஸ் தோற்றம் முதல் ராஜேந்திர பிரசாத், பட்டாபி சீத்தாராமய்யா, வல்லபாய் பட்டேல், மொரார்ஜி போன்றோர் கன்சர்வேட்டிவ்களும்; தாதாபாய் நெளரோஜி, நேரு, நேதாஜி போன்ற லிபரல்களும்; காந்தி போன்ற வெகுஜன தலைவர்களும் நிரம்பிய கட்சியை சட்டென்று ஒரு பிரிவில் தள்ளிவிட முடியுமா?

 

இவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்டு சமூகத்தை தலைகீழாக மாற்றுவதே தம் இறுதி இலக்கு; சுரண்டல் சமூக அமைப்புக்கு எதிராக சமத்துவ சமூகத்தை உருவாக்குவதே தம் பாதை என அறிவித்துவிட்ட கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மற்ற கட்சிகளெல்லாம் தாம் மக்கள் கட்சி, எல்லோருக்குமான கட்சி என்றெல்லாம் வெளிப்படையாக அறிவித்துவிட்டு முதலாளித்துவ நலனைப் பாதுகாப்பதையே செய்யும். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தான் பாட்டாளி வர்க்கக் கட்சி என பகிரங்கமாக தன் வர்க்க சார்பை அறிவித்து செயல்படுகிற கட்சி. அது தேர்தல் கட்சியா அல்லது ஆயுதம் தாங்கிய கட்சியா என்பது அந்தந்த நாட்டின் தனித்துவமான அரசியல் சமூகப் பொருளாதாரச் சூழலைப் பொறுத்தது. நம் நாட்டு அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, இடதுசாரி கட்சிகள் விடுதலைப் போரிலேயே களத்துக்கு வந்துவிட்டன; அது குறித்து கொஞ்சம் புரட்டுவோம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம்

 

  

0 comments :

Post a Comment