எத்தனை எத்தனை
கட்சிகள் – 9 [ தொடர் நிறைவு ]
வர்க்க
நலனே – வர்ண நலனே ஒளிந்துகொண்டிருக்கிறது…
இத்தனைக்
கட்சிக்கொடிகளையும் சின்னங்களையும் ஒருவர் நினைவில் வைத்துக் கொள்வது என்பதே மிகப்பெரும் சவால்தான். ஆனால் ஒவ்வொன்றும் எந்தச் சூழலில் பிறந்தது என்பதை வரலாற்றுத் தகவல்கள் ஓரளவுக்குச் சொல்லி இருக்கும்.
இதுவரை
சொல்லப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் விரிந்து பரந்தவை. அனைத்தையும் முழுமையாகச் சொல்வதாயின் பல ஆயிரம் பக்கங்கள்
தேவை. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களில் அவற்றை சுண்டக் காய்ச்சி தந்திருக்கிறேன். நோக்கம் வரலாறு பல்வேறு சூழலில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கிக் கொண்டும் அழித்துக் கொண்டும் இருக்கின்றது என்பதை சுட்டவும் அது தொடர்பான கேள்விகளை எழுப்பவும் தான்.
முதலில்
பிரிட்டிஷாரிடம் சலுகை பெற என்பதுதான் இங்கே அரசியல் கட்சிகள் தோன்ற ஆதிக் காரணமாயின. தோன்றும் போதே இந்நாட்டின் மதங்கள், சாதிகள், மொழிகள் அனைத்தும் அதில் வினையாற்றத் துவங்கிவிட்டன. உலகெங்கும் பரவிய சமூகசீர்திருத்தம், மறுமலர்ச்சி இயக்கம், புத்தொளி இயக்கம், ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் எல்லாவற்றின் வீச்சும் இங்கேயும் பரவி அதன் பங்கை ஆற்றின. ஆங்கிலக் கல்வியே அனைத்துக்கும் தூண்டுகோலாக அமைந்தது. எல்லாவற்றிற்கும் இங்கு நிலவிய வர்க்க, வர்ண வேறுபாடுகளும் ஆசைகளும் ஆதிக்க உணர்வும் கட்சிகளின் உள்ளுறையானது. ஆகவே இந்திய சமூகத்தின் எத்தனை வேற்றுமைகள் இருக்குமோ ஏற்றதாழ்வுகள் இருக்குமோ அத்தனையும் கட்சிகளாய் குழுக்களாய் முகங்காட்டுகின்றன.
ஆயின்
இந்த ஜனநாயக அமைப்பிலேயே சகலத்தையும் தீர்த்துவிட முடியும் என்கிற பிழையான நம்பிக்கையோடு கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் (கம்யூனிஸ்டுகளைத் தவிர) இயங்குகின்றன. “பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டி எழுப்பவோ முடியவே முடியாது”
என்று மார்க்சியம் கற்பிப்பதை இங்கு நினைவில் நிறுத்துங்கள்.
பாழடைந்து
சிதலமடைந்து கொண்டிருக்கும் வீட்டிற்கு சுண்ணம் அடித்து பூசி மெழுகினால் போதும் என்று நம்புகின்றன. இந்த சமூக அமைப்பில் பெரிய மாற்றம் ஏதும் செய்யாமல் அங்கும் இங்கும் சலுகைகளும் சில்லறை சீர்திருத்தங்களும் செய்தால் போதும், எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனக் கருதுகின்றன, பொதுவாக முதலாளித்துவக் கட்சிகள். இந்த பாதையில் செயல்படுவதில் படுபிற்போக்காய் ஒரு கூட்டம் தலைதெறிக்க ஓடுகிறது. இந்தப் பாதை சுரண்டல் சமூக அமைப்பிற்கு எவ்வித சவாலும் இல்லை என்பதால் சுரண்டும் கூட்டம் இக்கட்சிகளுக்கு ஆசி கூறி அள்ளிக் கொடுத்து தட்டிக்கொடுத்து வளர்க்கிறது.
ஒரு
கட்சி பெயர் நாறத் துவங்கியதும், மேலோட்டமான சில உணர்ச்சிகளை கொம்பு சீவிவிட்டும் இன்னொரு கட்சியை அரியாசனத்தில் ஏற்றி தன் நலனை காத்துக் கொள்கிறது சுரண்டல் வர்க்கம். அன்னா ஹசாரே, ராமர் கோயில், போபர்ஸ், 2ஜி, குடும்ப ஆட்சி என ஏதாவது ஒன்றை
ஊதி பெரிதாக்கினால் போதும் எனக் கருதுகின்றன. அன்னா ஹசாரே மட்டுமல்ல அவ்வப்போது இப்படிப்பட்ட சில பிம்பங்களை ஆளும் வர்க்கம் முன்நிறுத்தும்.
இப்படி
நாம் சொல்லும் போது கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும் ஒரே தட்டில் வைப்பது போலத் தோன்றும். இது நியாயமில்லை. ஒருவகையில் இந்த சமூக அமைப்பை அப்படியேப் பழமையாக பத்தாம் பசலியாகப் பாதுகாக்க விரும்புவோர்களையும்; சில சீர்திருத்தங்களை முன்மொழிவோர்களையும்; சில ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் நலனை பிரதிபலிப்போர்களையும், சிறுபான்மையோர் உரிமைக்கு நிற்போர்களையும் ஒரே தட்டில் வைக்க முடியாதுதான். அப்படி வைக்கவும் இல்லை. முதலாளித்துவ நலனைக் காப்பதில் இக்கட்சிகள் எல்லாம் ஒன்றுதான் என்பதே எம் வாதம். கம்யூனிஸ்டுகள் லட்சியம் தொலைதூரத்தில் இருப்பதாலும் நிகழ்காலச் சூழலில் சில சமரசப் போக்கோடு இயங்குவதாலும் எல்லா பக்கமும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் எதிர் கொள்ளுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகளின்
கடமை
ஜெர்மன்
தொழிலாளி வர்க்கத்திற்கு 1874-இல் வழங்கிய அறிவுரையிலேயே எங்கெல்ஸ் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசக் கடமைகளை வரையறுத்து தந்துள்ளனர். அதில் முக்கியமானவை சில:
அ.
மிக அரதப் பழசான உலகப் பார்வையிலிருந்து விடுபட்டு தெளிவான புரட்சிகரமானத் தத்துவப் பார்வையைத் தொழிலாளி வர்க்கம் கைக்கொள்ள வேண்டும்; சோசலிசம் ஒரு விஞ்ஞானமாகிவிட்டது. அதனை உணர்ந்து பயில வேண்டும்.
ஆ.
அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளையும் உறுதியாகக் கட்டி எழுப்ப வேண்டும். (அரசியல் அமைப்பு என்பது கட்சியையே குறிக்கும்).
இ.
நாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் தொழிலாளிவர்க்கக் கட்சிப் போராட்டத்தை நடத்த வேண்டும்.
ஈ.
ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை – சர்வதேச எழுச்சியுணர்வைத் தொழிலாளி வர்க்கத்திடம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.
“முதலில்
கிராமப்புறத்துக்குச்
சென்று அங்கே விவசாய வர்க்கத்தினை நேச சக்தியாக கட்டாயம் அணி திரட்ட வேண்டும். மிகவும் பரிதாபமாக வஞ்சிக்கப்படும் விவசாயிகளை, அவர்களில் ’பொய்யான ரட்சகர்கள்’ கையில்
விட்டவோ ஆலைத் தொழிலாளர்களின் எதிரிகளாய் அவர்கள் நிற்கும்படியோ அவர்களைத் தொழிலாளி வர்க்கம் விட்டுவிட முடியாது”
என்கிறார் எங்கெல்ஸ்.
கம்யூனிஸ்ட்
கட்சிகளைப் புரிந்து கொள்ள இந்த அணுகுமுறை தேவைப்படுகிறது. அதுமட்டுமில்லை பலவேறு வர்க்கங்களாய், சாதிகளாய், வர்ணங்களாய், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாய் பிரிந்து கிடக்கும் இந்திய சமூகங்களைப் போல கட்சிகளும் இருப்பதால் பிற எல்லா கட்சிகளையும் சுண்டு விரலால் தள்ளிவிட முடியாது; நட்பு கட்சிகள் பகைக் கட்சிகள் எனப் பிரித்தும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் எதிர் உள்ள சவால் மிகப் பெரிது; மிகக்கடிது.
இப்படியே
கட்சிகளின் எண்ணிக்கைகள் பெருத்துக் கொண்டே போவது நல்லதா? இக்கேள்விக்கு ’ஆம்’ என்றோ ’இல்லை’ என்றோ டக்கென பதில் சொல்லிவிட முடியாது. ஏனெனில் வெறுமே ஈகோ, பதவி ஆசை, குறுக்கு வழி, விலை போதல் போன்ற பின்னணியோடு கட்சிகள் பெருத்துக் கொண்டு போவது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லைதான். அதனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் கோட்பாட்டு அடிப்படையில் சில கட்சிகள் பிளவுபடுவதையோ, புதிதாக சில உருவாவதையோ பிழை எனச் சொல்லிவிட முடியாது. உருவாகிற கட்சி யார்பக்கம் நிற்கிறது என்பது மட்டுமே அளவுகோல் ஆகமுடியும். முதலாளித்துவ ஜனநாயகம் நீடிக்கும் வரை இந்நிலை தொடரத்தான் செய்யும்.
அம்பேத்கர்
ஒரு முறை எச்சரித்தார், “மனித இனத்தின் ஒவ்வொரு பிரிவிலும், கட்சி அல்லது நிறுவனத்திலும் அதன் வளர்ச்சி நின்றுவிடும் காலகட்டம் ஒன்று வருகிறது. அவற்றின் இரத்த நாளங்கள் இறுகிப் போகின்றன. அதன் இளைஞர்கள் தொலை நோக்கு அற்றவர்கள் ஆகிறார்கள். முதியோர் சோம்பிக் கிடப்பார்கள். முதியோர்கள் பழமையில் வாழ்ந்து கொண்டு, பழமையையே என்றென்றும் நீட்டிப்பதற்குத் தீவிரமாக முயற்சிப்பார்கள். அரசியலில் இதுபோன்ற நிலை ஏற்படுவதை ‘போர்போனிசம்’ (Bourbonism) என்கிறோம்.
(போர்போனிசம் என்பது பிரெஞ்சு சொல். அங்குள்ள ஓர் அரசனின் செயலற்றதனத்தை குறித்த சொல்). போர்போனிசத்தின் அறிகுறி என்னவெனில், இரத்த நாளங்கள் பழுதாகிவிட்டதை உணராமலும், அதற்கான சிகிட்சையை தேடாமலும் இருப்பதுதான். மாறி வரும் புதிய சூழலுக்கு ஒத்துப் போகமுடியாமல் இற்றுப்போன சாய்வு நாற்காலியில் வீழ்ந்து கிடக்கும் கிழவனைப்போல் பிற்போக்காளன் பழமையில் வீழ்ந்து கிடக்கிறான்.” (சமூக சீர்திருத்தவாதி ரானடே நினைவுச் சொற்பொழிவில் அம்பேத்கர்).
இப்படிப்பட்ட
நெருக்கடியான சூழலில் ஆளும் சுரண்டல் வர்க்கம் முன்முயற்சியில் சில ”நாயக பிம்பங்கள்” முன்னிறுத்தப்படும்.
அதுமட்டுமல்ல திடீர் திடீர் ’ஆபத்பாந்தவர்கள்’ சிலர்
அவதாரம் எடுப்பார்கள். அவர்களையே ’மகாரட்சகர்களாய்’ ஊடகங்களும்
முன்நிறுத்தும்.
2011-14 காலகட்டத்தில்
அன்னா ஹசாரே அப்படிப்பட்ட ஆபத்பாந்தவராய் ஊடகங்களால் தூக்கிப் பிடிக்கப்பட்ட போது 2012 ஆகஸ்ட் மாதம் நான் எழுதிய ஒரு கட்டுரையில் எழுதியவற்றில் இரண்டு பெரிய பத்திகளை இங்கு நினைவூட்டுவது தேவை எனக் கருதுகிறேன்.
”கையூட்டு,
லஞ்சம், லாவணியம், ஊழல், முறைகேடு இவை எல்லா காலத்திலும் இருந்துவந்துள்ளது. ஆளும் வர்க்கமும் சுரண்டும் கூட்டமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில ஓட்டைகளை உருவாக்கும். குறுக்கு வழியில் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும் – கோடீஸ்வரர் ஆகமுடியும் என்ற மயக்கவலையை விரிப்பதன் மூலமும், சில எலும்புத்துண்டுகளை வீசி எறிவதன் மூலமும் வாலைக் குழைக்கும் நாய்களைத் தன்னைச் சுற்றிவரச் செய்வது ஆளும் வர்க்கத்தின் தேவை. மக்களின் பார்வை சுரண்டலின் ஆணிவேரை அடையாளம் காணவிடாமல் தடுக்கவும் மக்கள் எழுச்சியை முடிந்தவரைத் தள்ளிப்போடவும் அது ஒரு உத்தியாகும். அதே சமயம் ஊழலுக்கு எதிராக உரக்கக் குரைப்பதன் மூலம் தங்களை மீட்பர்களாக முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும்; அதாவது கொள்ளைகாரர்களே நியாயவாதிகளாய் மாறும் ரசவாதம் நிகழும். சுரண்டலுக்கும் ஊழலுக்கும் இடையிலான மர்ம முடிச்சை அறுத்தெறியாமல் திசைதிருப்பும் வித்தையை ஆளும் வர்க்கம் நுட்பமாக அறியும். அந்த நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றவும் செய்யும்.
அதிலும்
உலகமய யுகத்தில், தாராளமய சகாப்தத்தில் ஒரு நாட்டின் இயற்கை வளத்தையும், செல்வாதாரங்களையும் தங்குதடையின்றி சூறையாட பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தப் பசியோடு நுழையும். அதனை சாத்தியமாக்க; இயல்பாக எழும் உள்ளூர் கோபங்களைச் சரிக்கட்ட தனக்கு கையாட்களை வளைத்துப் போடும். அதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவு பணம் கைமாறும். புதிய திடீர் கோடீஸ்வரர்கள் உருவாக்கப்படுவார்கள். சுயநல அரசியல்வாதிகள் பணமழையில் திளைப்பார்கள். தற்போது இந்தியாவில் நடப்பது இதுதான். ஆனால் இந்த தாராளமயக் கொள்கைகள் மக்கள் வாழ்வை பெரும் பள்ளத்தில் உருட்டிவிடுவதால் எழும் கோபத்தை மடைமாற்ற ஊழல் எதிர்ப்பையே ஆளும் வர்க்கம் ஆயுதமாக்குவதுதான் முரண்நகை.. இப்போது இந்தியாவில் நடப்பது இதுதான். அவர்களின் படைப்பே அன்னா ஹசாரே.”
இளைஞர்களுக்கான
எச்சரிக்கை
இது
போல் இப்போது உலகெங்கும் ஊழலுக்கு எதிராக என்கிற போர்வையில் இன்றைய ஜென் இசட் (Gen Z) தலைமுறையினரை குறிவைத்து நகர்த்தப்படும் காய்கள் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது அதனை எச்சரிக்க வேண்டியுள்ளது. ஆம். இங்கே ஓர் வலுவான எச்சரிக்கையை சொல்வது நம் கடமை.
பதின்
பருவ இளைஞர்கள் உளவியலாய் கொதிநிலையிலும் கொண்டாட்ட நிலையிலும் இருப்பார்கள். பயம் அறிய மாட்டார்கள். எதையும் ஆழ யோசித்தோ தெரிந்து
கொண்டோ செய்வதைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப்படுவார்கள். விடுதலைப் போராட்ட காலந்தொட்டு தீவிரவாத இயக்கத்தில் முன்நின்றவர்கள் இளைஞர்களே!
ஆனால்
இன்று நடப்பது என்ன? சமூகத்தில் நிலவும் எல்லாவித அரசியல் போக்குகளும் இளைஞர்களிடமும் வெளிப்படும். சமூகம் எந்த அளவு பொறுப்பாக இருக்கிறதோ அந்த அளவு இளைஞர்களும் பொறுப்பாக இருப்பார்கள். தாராளமயம் உச்சத்தை நோக்கிப் போகிற இன்றைய சமூகத்தை நுகர்வெனும் பெரும்பசி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. மக்களின் தேவை, சந்தையின் ஏற்ற இறக்கம் இவற்றை அனுசரித்தே பொருட்களை உற்பத்தி செய்கிற பழைய சந்தை காலாவதி ஆகிவிட்டது. கார்ப்பரேட் உற்பத்தி செய்கிற பண்டங்களை பெரும் பசியோடு நுகர்கிறவர்களாக மக்களை மாற்றி வடிவமைப்பது தான் இன்றைய பொருளாதாரம்.
குழந்தைகள்,
பதின் பருவத்தினரை குறிவைத்தே விளம்பர உத்திகளைத் தீர்மானித்து தங்கள் பண்டங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக மக்களுக்கான சந்தையில்லை. சந்தைக்கான நுகர்வோர்களாக மக்களை மாற்றுவதே புதிய பொருளாதார யுக்தி. இந்த பொருளாதாரத்தின் நீட்சியாக அரசியலை வடிவமைக்க, பண்பாட்டை வடிவமைக்க கார்ப்பரேட்டுகள் கடுமையாக உழைக்கின்றனர். ஆம். மக்களுக்கான அரசியல் அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கான அரசியலை நோக்கி இளைஞர்களை பொறிவைத்துப் பிடிப்பதே இன்றைய சூழல்.
‘ஒரே
நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்பது ‘ஒரே சந்தை, கார்ப்பரேட்டுக்கு லாபம்’ என்பதன் பொருளும் நடைமுறையும் ஆகிப்போகிறது. மதவாதம், சாதிய வாதம், பழமை வாதம், போலி அறிவியல், தனிநபர் பிம்ப அரசியல் எல்லாம் அதற்கு சேவகம் செய்யவே! பதின் பருவத்தினர் கோபம் மடை மாற்றப்படவில்லை எனில் அது புரட்சிகரப் பாதைக்கு திரும்பிவிடும் என்பதை அறிவார்கள். உலகெங்கும் ஏகாதிபத்தியத்தின் ஒரே கவலை இதுதான். அவர்களால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதைக் கலாச்சாரம் ஒரு மடை மாற்றமே. இதில் ஒரு பகுதியினரை மட்டுமே ஈர்க்க முடியும்.
பல்வேறு
டிஜிட்டல் ஆப்புகள் மூலம் Sex – Drugs –
Violence (காமவெறி – போதை மயக்கம் – வன்முறை ஆட்டம்) போன்றவற்றை விளையாட்டோடு சேர்த்து ஊட்டுவது என்பதும் நடக்கிறது. அதுவும் இளைய சக்தியை மடை மாற்றி சீரழிக்கும் யுத்தியே. ஏடிஎம்மில் கார்டு சொருகினால் பணம் வருவது போல், கைபேசியில் நொடியில் பண பரிவர்த்தனை நடப்பது
போல், தாம் விரும்பியது எல்லாம் நொடியில் நடந்துவிட கனவு காணும் இளைஞர்கள் உளவியலை உந்தி மேலும் மேலும் அவசரக் குடுக்கைகளாய் இளைஞர்களை மாற்றுவது என்பது ஊடகங்கள் மூலம் செய்யப்படுகிறது.
அவர்களைக்
கொம்பு சீவி ஜென் இசட் (Gen Z) தலைமுறை ஈர்க்கிறது. உலகின் பலநாடுகளிலும் இந்த அரசியல் நடக்கிறது. அண்மையில் நேபாளத்தில் நடந்தது. குபீர் போராளியாக்கும் முயற்சி இதற்கு பின்னால் இருந்து இயக்குவது கார்ப்பரேட் கரங்களே. இளைஞர்களை ‘குபீர் போராளி’ ஆக்குவதும் அதன் பின்னர் தாம் விரும்பும் பொம்மைகளை வைத்து ஆட்சி நடத்துவதும் அதன் திட்டம். தொலை நோக்கில், உணர்ச்சி வசப்பட்ட இளைஞர்கள் விரைவில் நம்பிக்கை இழந்து ஓய்ந்துவிடுவார்கள். சுயநலமான சிறுபகுதி இளைஞர்கள் அவர்கள் கைக்கருவி ஆகிவிடுவார்கள். அதன் மூலம் தீவிர சமூக மாற்றத்தை முடிந்தவரை தள்ளிப்போடலாம். ஆதவ் அர்ஜுனா இந்த ஜென் இசட் ஆசையை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்திவிட்டு, வழக்குக்குப் பயந்து நொடியில் பின்வாங்கிவிட்டார்.
திரைப்பட
கதாநாயகர் கவர்ச்சியையும் முதலீடாக்கிச் செய்யும் பிம்ப அரசியலின் / நாயக அரசியலின் உள்ளுறை அது தான். அதாவது பதின்பருவத்தினரை இலக்கோ செயல் திட்டமோ இல்லாமல் வேகமாக அரசியலுக்கு ஈர்ப்பதும்; விரைவில் மனச் சோர்வடைந்து விரக்தி அடைந்து ஒதுங்குவதும் நடக்கவே அது உதவும். இந்த திடீர்ப் புரட்சி எல்லாம் விரைவில் வற்றி வறண்டு போவதையும், நிலைமை முன்னிலும் கொடுமை ஆவதையும் உக்ரைன் முதல் உலகின் பலநாடுகளில் காண்கிறோம். எனினும் இடதுசாரி முற்போக்கு அரசியல் பக்கம் போகாமல் கணிசமான இளைஞர்களை தள்ளிவிடவே இது முயலும். கார்ப்பரேட்டின் நோக்கம் அதுதான்.
‘நீ
பாசிஸ்ட் பக்கம் போ அல்லது தனிநபர்
பிம்பத்தின் / நாயகக் கவர்ச்சியின் பின்னால் போய் பாழாய்ப் போ! சமூக மாற்றம் பக்கம் போய்விடாதே’ என்பதே!
அண்ணல்
அம்பேத்கர் அரசியல் சாசன அவையில் இறுதி உரையாற்றும் போது, இந்திய சமூகத்தில் ‘நாயக வழிபாடு’ எவ்வளவு பேராபத்து எனச் சுட்டிக்காட்டி கூறியவற்றை இங்கு அசை போடுவது சாலப் பொருத்தமே:
“ஜான்
ஸ்டூவர்ட் மில் சனநாயகவாதிகளுக்கு விடுத்த எச்சரிக்கையை நாம் பின்பற்றத்தக்கதாகும். உங்களுடைய உரிமைகளை எந்தவொரு பெரிய மனிதனின் பாதங்களின் முன் வைக்காதீர்கள்; உங்களுடைய சமூக அமைப்புகளைச் சீர்குலைக்கக்கூடிய அதிகாரங்களை எந்தப் பெரிய மனிதனிடமும் அளிக்காதீர்கள் என்பதே ஜான் ஸ்டூவர்டின் எச்சரிக்கையாகும். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த உயர்ந்த மனிதர்களிடம் நன்றியுடன் இருப்பதில் தவறு இல்லை. ஆனால் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதற்கு வரம்புகள் உள்ளன. இது குறித்து அயர்லாந்து நாட்டின் தேசாபிமானியான டேனியல் ஓ’கானல் ‘எந்தவொரு மனிதனும் தன் சுயமரியாதையை இழந்து நன்றி பாராட்ட மாட்டான்; எந்தவொரு பெண்ணும் நன்றி உணர்ச்சிக்காகத் தன் கற்பை இழக்கமாட்டாள்; எந்தவொரு நாடும் சுதந்தரத்தை இழந்து நன்றி பாராட்ட முன்வராது’
என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இந்த
எச்சரிக்கை வேறு எந்தவொரு நாட்டையும் விட இந்தியாவுக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. ஏனெனில் பக்தி அல்லது பக்தி மார்க்கம், அல்லது தலைவர் வழிபாடு என்பது அரசியலில் செல்வாக்குச் செலுத்துகிறது. உலகில் வேறு எந்தவொரு நாட்டிலும் இருப்பதைவிட ஒப்பிட முடியாத அளவில் இந்தியாவில் தலைவர் வழிபாடு அல்லது பக்தி அரசியலில் ஆதிக்கம் செய்கிறது. மதத்தில் பக்தி என்பது ஆன்மாவின் விடுதலைக்கான ஒரு வழியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் பக்தி அல்லது தலைவர் வழிபாடு என்பது உறுதியாக அழிவுக்கே இட்டுச் செல்லும்; இறுதியில் சர்வாதிகாரமாக மாறும்.”
ஆம்.
ஆம். ஆம். அதிதீவிரம், மகாபுனிதம், பழமையின் பெருமிதம், தூய்மை வாதம் எல்லாம் பேசி புதிது புதிதாய் கார்ப்பரேட்டுகளால் மகா ஊடக விளம்பரத்துடன் களம் இறக்கப்படும் ஒவ்வொருவரையும் உரசிப் பார்த்தால் மேலே சொன்ன உண்மை பல்லிளிக்கும். உலகெங்கிலும் நடக்கும் அனைத்தையும் நாம் கற்றறிய வேண்டும். அதனை அப்படியே நகல் எடுக்க முனையக்கூடாது. இந்த மண்ணின் போக்குகளை காத்திரமான ஆய்வுக்கு உட்படுத்தி காத்திரமான முடிவுக்கு வரவேண்டும். அதுவும் அவ்வளவு சுலபமல்ல. கம்யூனிஸ்டுகள் அந்த முயற்சியில் பல துண்டுகளாக உடைந்தனர்.
அதில் சிபிஎம் (CPIM) தான் பெருமளவு சரியானது. சுயவிமர்சனம் மூலம் இன்னும் சரியான பாதையை நோக்கி அக்கட்சி நகரவேண்டும்.
ஏனெனில்,
ஒரு நாட்டைப் போல் இன்னொரு நாட்டில் தேர்தல் முறையோ / ஆட்சி முறையோ இல்லை. அந்தந்த நாட்டின் சூழலுக்கு ஏற்பவும் தனித்துவமாகவும் இருக்கும். அதே வேளை முதலாளித்துவ அமைப்பை, சுரண்டல் அமைப்பை பாதுகாப்பதில் ஓர் ஒற்றுமையும் இருக்கும். புரட்சி நடைபெற்ற நாடுகளிலும் நாட்டுக்கு நாடு மாறுபட்ட காட்சிகள்தாம். அது அந்தந்த நாட்டில் வர்க்க, பண்பாட்டு சூழல் சார்ந்தது. ஆயினும் தொழிலாளி வர்க்க நலனுக்கு முன்னுரிமை அளிப்பதில் ஓர் ஒற்றுமையும் இருக்கும்.
முடிவுரை:
ஜனநாயகம் மற்றும் அரசு
கடைசியாக
ஜனநாயகம், அரசு, அரசியல் பற்றி சில செய்திகளைச் சொல்லாமல் இந்தத் தொடர் முழுமை அடையாது. ஆபிரகாம் லிங்கன் சொன்னார், “மக்களால் மக்களுக்காக மக்களைக் கொண்டு ஆளுவதே ஜனநாயகம்.” [Democracy is
“government of, by and for the people”.]
மக்களாட்சி
அல்லது ஜனநாயகம் (Democracy) என்பது “மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்”
என முதலாளித்துவ அறிஞர்களும் கூறுகின்றனர். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறினாலும்; சிறுஎண்ணிக்கையிலான ஆளும் வர்க்கம் (முதலாளி) பெரும்பான்மையிலான உழைக்கும் ஏழை எளிய மக்கள் மீது நிறுவும் ஆட்சியதிகாரம் எப்படி மக்களாட்சி ஆகிவிடும்? அதனால், இந்த “தூய ஜனநாயகம்”
(Pure Democracy) நடைமுறையில்
என்ன ஆனது என்பதே கேள்வி. சுரண்டும் வர்க்கத்தின் திருஉளப்படி, ஆளும் வர்க்க நலனுக்காக மக்களை கருத்தாலும் சட்டத்தாலும் நிர்வாகத்தாலும் அரசு அதிகாரத்தாலும் ஆட்டுவிப்பதே இந்த ’தூய ஜனநாயகம்’
ஆகும்.
வர்க்கங்களாகப்
பிளவுபட்டுள்ள சமூகத்தில் “தூய ஜனநாயகம்”
பற்றி பேச முடியாது, வர்க்க சார்பான ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும் என்கிறார் தோழர் லெனின். ”தூய ஜனநாயகம்”
என்பது தொழிலாளர்களை ஏய்க்க விரும்பும் ஒரு தாராளவாதியின் பொய்யுரையாகும் என்று காவுத்ஸ்கிக்கு பதில் சொல்லும் கட்டுரையில் குறிப்பிடுவார்.
முதலாளித்துவ
நாட்டில் ஜனநாயகம் என்பது பாட்டாளி மக்கள் மீது ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் சர்வாதிகாரமே என்பதுதான் உலக அனுபவமும் இந்திய அனுபவமும். இந்த ஜனநாயக அமைப்பின் மீது பெருந்திரள் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் வரை இதற்குள் செயல்பட வேண்டிய அரசியல் விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய இரட்டைக் கடமைகளோடு செயல்படும் கம்யூனிஸ்டுகள் படும்பாடு சொல்லில் அடங்காது.
அரசு
(State) என்பது ஓர் நவீனச் சொல்லாடல். ‘ஸ்டேட்டஸ்’
(Status) எனும் சொல்லில் இருந்து உருவானதாகச் சொல்லப்படுகிறது. நிக்கோலோ மாக்கியவல்லி (1469 – 1527)
எனும் அறிஞர்தான் முதன் முதலில் அரசு எனும் சொற்பிரயோகத்தைத் தமது படைப்புக்களில் பயன்படுத்தினார் என்பது வரலாறு. மார்க்சியம்தான் அரசின் மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து அம்பலப்படுத்தியது. மார்க்சிய அளவு கோல்படி அரசு என்பது ஓரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை (அல்லது வர்க்கங்களை) அடக்கி ஒடுக்கி ஆள உருவாக்கப்பட்ட ஓர்
இயந்திரம் அல்லது அமைப்பு எனலாம்.
அரசு
என்பது நாடாளுமன்றம், நிர்வாகம், அடக்குமுறைக்கருவிகள் (ராணுவம், போலீஸ், ஒடுக்குமுறை சட்டங்கள்), நீதிமன்றம், ஊடகம். இவை அனைத்துமே ஆளும் சுரண்டல் வர்க்கத்திற்கு சேவை செய்வதே ஆகும். இந்த அரசை அறிவியல் ரீதியாகப் புரிந்து எதிர்வினை ஆற்றுவதே அரசியலாகும். ஆனால் இதனை சரியாகப் புரிந்து கொள்ளத் தவறுகிற சமூகச் சூழலில்தான் இவ்வளவு கட்சிகள் கதகளி ஆடுகின்றன. அரசு, அரசியல், ஜனநாயகம் இவற்றின் இயங்கு சக்தியாக உள்ள பொருளாதாரம், தத்துவம் இவற்றை ஆழப் பயில்வதே சமூக மாற்றத்தின் ஒரே வழி.
ஒவ்வொரு
வார்த்தைக்குப் பின்னாலும் ஓர் வர்க்கத்தின் நலன் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவரை அரசியலில் நாம் ஏமாளிகளே என மார்க்ஸ் சொன்னார்.
இந்தியச் சூழலில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் வர்க்க நலனும் வர்ணநலனும் ஒளிந்து கொண்டிருப்பதை அறியாதவரை நாம் அரசியலில் ஏமாளிகளாகவே இருப்போம்.
நிறைவு .
-சு.பொ.அகத்தியலிங்கம்
0 comments :
Post a Comment