எத்தனை எத்தனை கட்சிகள் – 8

Posted by அகத்தீ Labels:

 



எத்தனை எத்தனை கட்சிகள் – 8

 

சலிப்பூட்டும் கட்சிப் பிளவுகளும் இணைப்புகளும்

 

 

1977 மார்ச் மாதம் பிரதமரான மொரார்ஜி தேசாய் 1979 ஜூலையில் பதவி இழந்தார். உட்கட்சி முரண்பாடே பிரதான காரணம். ஜனதா கட்சியில் சங்கமமான பின்பும் தங்கள் ஆர்.எஸ்.எஸ் உறவை கைவிட ஜனசங்கினர் மறுத்தனர். இந்த இரட்டை உறுப்பினர் பிரச்சனை பூதாகரமானது. இச்சந்தர்ப்பத்தைக் காங்கிரஸ் கட்சி ரசித்தது; மறைமுகமாக ஊக்குவித்தது. 1979 ஜூலையில் சரண்சிங் பிரதமரானார். 1979-ல் பதவி இழந்தார். மீண்டும் பொதுத் தேர்தலை நாடு சந்திக்க நேர்ந்தது.

 

ஜனதாகட்சியிலிருந்து பிரிந்து ஜெயபிரகாஷ் நாராயணன் சமூக ஜனநாயக ஜனதா கட்சி (மதச்சார்பற்றது) Social-Democratic Janata Party (Secular) என்று தனியானார். தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார். 1980 ஏப்ரலில் முன்பு ஜனதா கட்சியில் சங்கமமான ஜனசங்கம் தன் முகமூடியை மாற்றி ‘பாரதிய ஜனதா கட்சியாகப் பிறந்தது. கொஞ்சம் அதிகாரத்தில் இருந்ததும் பரவலான அறிமுகமும் ஆர்.எஸ்.எஸ் வேரும் கொண்ட அதிதீவிர பாசிஸ்ட் வலதுசாரி பாஜக கட்சி தன் வெறுப்பு அரசியலை மூலதனமாக்கி வளர திட்டமிட்டது.

 

1984-இல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ் பிரதமரானார். கணினி யுகத்தை நோக்கி இந்தியாவைத் திருப்பியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஷாபானு வழக்கில் பல்டி அடித்துத் தலாக்கை ஆதரித்ததும், நெடுங்காலமாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதி கதவைத் திறந்து ராமருக்கு பூஜை செய்ய வழிவிட்டதும் ராஜீவ் காந்தியின் மிகப்பெரும் அரசியல் பிழையானது. வலதுசாரி பாஜகவுக்கு நுழைய இடம் கொடுத்த பெரும் தவறு. இலங்கைப் பிரச்சனையை அவசரகோலத்தில் கையாண்ட விதம் பின்னர் அவர் சாவுக்குக் காரணமானது.

 

ஜனதா தளமும் கூட்டணி ஆட்சிகளும்

காங்கிரஸ்காரரான வி.பி.சிங் ராஜீவ் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தார். குறிப்பாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். போபர்ஸ் ஊழலைச் சுட்டிக்காட்டி 1988-இல் பதவி விலகி ’ஜன் மோர்ச்சாவை உருவாக்கினார். லோக் தளம், ஜன் மோர்ச்சா, ஜெகஜீவன் ராமின் கட்சி எல்லாம் இணைந்து ’ஜனதா தளம் உருவானது .

 

1989-இல் வி.பி.சிங் பிரதமரானார். வி.பி.சிங் தனிப்பெரும்பான்மை பெறாவிடினும் தெலுங்கு தேசம், திமுக, அசாம் கணபரிஷத் கட்சிகள் ஆதரவோடு வி.பி.சிங் தேசிய முன்னணி அமைத்தார். பாஜக ஒரு புறமும் இடது சாரிகள் ஒரு புறமும் வெளியிருந்து ஆதரவு தெரிவித்த விசித்திரம் நிகழ்ந்தது. பதவி ஆசை கொண்ட சந்திரசேகரைத் தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சி வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது. 343 நாளில் பதவி இழந்தார் வி.பி.சிங். சந்திர சேகர் சமாஜ்வாதி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) யில் செயல்பட்டார். காங்கிரஸ் ஆதரவோடு பிரதமரானார். 223 நாளில் ஆட்சி கவிழ்ந்தது.

 

வி.பி.சிங் ஆட்சியில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த மண்டல் கமிஷன் அறிக்கை தூசி தட்டி எடுக்கப்பட்டது. பிற்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த மண்டலுக்கு எதிராக பாஜகவும் சங்பரிவாரும் கட்டற்ற வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ராமர் கோயில் பிரச்சனையை முன்வைத்தனர். மந்திருக்கும் மண்டலுக்குமான மோதலானது. இந்தச் சூழலும் உலகெங்கிலும் தாராளமய உலகமய பொருளாதாரச் சூழல் வந்ததும் இந்தியாவில் அது தீவிரமாக அமலாகத் துவங்கியதும் வலதுசாரி அரசியல் அதிகரிக்க காரணியாயின.

 

1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். காங்கிரஸ் பெரும்பான்மை பெறாவிடினும் பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். அத்வானி தலைமையில் சங்பரிவார் நடத்திய ரதயாத்திரை, கரசேவையைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது இவர் ஆட்சியில்தான். இதில் இவருக்கும் பங்குண்டு என அண்மையில் முன்னாள் காங்கிரஸ் எம்பி மணிசங்கர் ஐயர் கூறினார். பெரும்பான்மை இல்லாவிடினும் தந்திரமாகக் காய்களை நகர்த்திப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார் நரசிம்மராவ்.

 

அடுத்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் வாஜ்பாய் 1996-இல் பிரதமரானார். 16 நாட்களில் ஆட்சி கலைந்தது. ஜெயலலிதாவின் டீ பார்ட்டி ஆட்டத்தில் அஇஅதிமுக ஆதரவைத் திரும்பப்பெற ஆட்சி கவிழ்ந்தது. இடதுசாரிகள் திமுக ஆதரவோடு தேவகவுடா பிரதமரானார். 324 நாளில் ஆட்சி கவிழ்ந்தது. இந்தர் குமார் குஜ்ரால் 322 நாள் பிரதமராகத் தொடர்ந்தார்.

 

1998-இல் வாஜ்பாய் பிரதமரானார் திமுக ஆதரவோடு. இவரின் ஐந்தாண்டு ஆட்சியில்தான் முக்கிய துறைகள் அனைத்திலும் நீதித்துறை நிர்வாகத்துறை உட்பட ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் கச்சிதமாக நடந்தேறியது; அதன் கொடூர விளைவை 2025-லும் நாம் அனுபவிக்கிறோம். மன்மோகன் சிங் 2004-இல் பிரதமரானார் இதிலும் திமுக இடம் பெற்றது. மன்மோகன் சிங் ஆட்சியை சிபிஎம் வெளியே இருந்து ஆதரித்தது. சிபிஐ அமைச்சரவையில் கொஞ்சகாலம் இடம் பெற்றது. 2014 முதல் நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். பாஜகவின் தேசிய கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆக தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. ஆயினும் இப்போது பாஜகவே ஆதிக்கம் செய்கிறது.

 

மாநிலக் கட்சிகளின் பெருக்கம்

ஜனதா தளம் பல்வேறு கட்சிகளாக உடைந்தது. காங்கிரஸிலும் உடைசல்கள் ஏற்பட்டன. இவற்றின் விளைவாக தோன்றிய கட்சிகளின் பட்டியல் நீண்டது. கட்சிகள் உருவான ஆண்டு அடைப்புக் குறிக்குள். முலாயம் சிங் யாதவ் (இப்போது அகிலேஷ் யாதவ் தலைமையிலான) உ.பி-யை மையம் கொண்ட சமாஜ்வாதி கட்சி (1992), லல்லு பிரசாத் தலைமையிலான (இப்போது தேஜஸ்வி யாதவ்) ராஷ்டிரிய ஜனதா தளம் (1996), பசுபதி பாரஸ் தலைமையிலான ராஷ்டிரிய லோக ஜனசக்தி கட்சி (2021) ஆகியன இப்போதும் 2025 நிலவரப்படி இந்தியா கூட்டணியில் தொடர்வன.

 

சரண்சிங்கின் பேரன் சவுத்திரி ஜெயந்த் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் (1996), ஹெச்.டி. தேவகவுடா தலைமையிலான ஜனதா தளம் (மதச்சார்பற்றது) (1999), நிதிஷ்குமார் தலைமையிலான ஜனதா தளம் (ஐக்கியம்) (2003), ஜிட்டின் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (2015), சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன் சக்தி கட்சி (ராம் விலாஸ் பாஸ்வான்) (2021), உபேந்திரா குஷ்வா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (2023) உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளன. இது போக ஓம் பிரகாஷ் தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் (1996), அஜீத் சிங் சவுதாலா தலைமையிலுள்ள ஜனநாயக் ஜனதா கட்சி (2018) முதலியன எந்தப் பக்கமும் சேராமல் தனித்து நிற்கின்றன.

 

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம் என எளிதாகக் கடந்து போகிறோம். நீதிக் கட்சி தொடங்கி 1990 வரையிலான திராவிட இயக்க பிளவுகளை ‘திராவிட இயக்கத்தில் பிளவுகள் என்ற தலைப்பில் 148 பக்க நூலாக பேராசிரியர் கோ.கேசவன் தந்துள்ளார். வாய்ப்புள்ளோர் தேடிவாசிக்க வேண்டிய நூல். சில நினைவில் நிற்கும் பிளவுகள் வருமாறு: எம்ஜிஆர் தலைமையில் 1972-இல் திமுக பிளவைச் சந்தித்தது. ‘அஇஅதிமுக தோன்றியது. தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக தன்னை வலுவாக ஊன்றிக்கொண்டது. வைகோவின் மறுமலர்ச்சி திமுக (1994)-இல் திமுகவில் இருந்து பிரிந்து இன்னும் களத்தில் தொடர்கிற கட்சி. டி.ராஜேந்தர் தலைமையிலான தாயக மறுமலர்ச்சிக் கழகம் (1991) மற்றும் லட்சிய திமுக (1996) கொஞ்சகாலம் மினுமினுப்பு காட்டியது. அஇஅதிமுக (ஜெ அணி) & (ஜானகி அணி (1988), நெடுஞ்செழியன் தலைமையில் ’மக்கள் திமுக (1977), எஸ்.டி.சோமசுந்திரம் தலைமையிலான ’நமது கழகம் (1984), பாக்கியராஜ் தலைமையில் மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் ராமராஜனின் தனிக்கட்சி இப்படி அஇஅதிமுக விலும் பல துண்டுகள் பிரிந்ததும் பின்னர் சேர்ந்ததும் வரலாற்றில் காணாமல் போனதும் நடந்தது. இப்போதும் அஇஅதிமுக எடப்பாடி, தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என தனித்தனியே செயல்படுவதும் வரலாறு. செங்கோட்டையன் பிரிந்து சென்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வது போன்ற செய்திகள் அண்மைக் கூத்து.

 

உழவர் உழைப்பாளர் கட்சி, காமன்வீல் கட்சி இரண்டும் வன்னியர் கட்சி என்றே அரசியல் அறிந்தோர் பகர்வர். 1989-இல் ராமதாஸ் உருவாக்கிய பாட்டாளி மக்கள் கட்சியும் அப்படியே. அது குறிப்பிடத்தக்க கட்சியாக வட மாவட்டங்களில் இருக்கிறது ஆயினும் அதிலும் ராமதாஸ், அன்புமணி மோதல் துவங்கிவிட்டது. பாமகவில் இருந்து பிரிந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி (2012) ஒரு சிறுவட்டத்தில் இயங்குகிறது.

 

ஏ.சி.சன்முகத்தின் புதிய நீதிக் கட்சி (2001), பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி (2010), கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம் (2009), கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி (2013). பார்வேர்ட் பிளாக் தமிழ்நாட்டில் முக்குலத்தோர் கட்சியாகிவிட்டது. அதில் தேசிய பார்வேர்டு பிளாக், அய்யண்ணன் அம்பலத்தின் பசும்பொன் பார்வேர்ட் பிளாக், பி.கே.முத்துராமலிங்கதேவரின் பார்வேர்ட் பிளாக், நடிகர் கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை (2016) என அதில் பல கூறுகள். இப்படி சாதி, வட்டாரம் இவற்றை சுற்றி பல கட்சிகள்.

 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ எனப்படும் சமூக ஜனநாயக கட்சி இன்னும் பல்வேறு முஸ்லீம் குழுக்களும் உண்டு. அதுபோல் கிறுத்துவர்களுக்கும் பெயரளவில் சில கட்சிகள் உண்டு. திருமாவளவனின் தலித் பாந்தர் இயக்கம் 1982-இல் தொடங்கி பின்னர் விடுதலைச் சிறுத்தை கட்சியாக ஒடுக்கப்பட்டோர் முகமாக உள்ளது; இதனை பொது நீரோட்டத்தில் இணைக்க முயல்கிறார். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் (1999), இரா.அதியமானின் ஆதித் தமிழர் பேரவை (1994), பூவை மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சியும் இன்னும் சில குட்டிக் கட்சிகளும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வார்ப்பாகும். பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு இரண்டாகிவிட்டது. தமிழருவி மணியன், மூப்பனார் மகன் வாசன் போன்ற தனிநபர் கட்சிகளும் உண்டு. இன்னும் பல கட்சிகள் தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன.

 

இது போல் ஆந்திராவில் தெலுங்கு தேசம் உட்பட சில கட்சிகள், மகாராஷ்டிராவிலும் சிவசேனா, பவாரின் தேசிய காங்கிரஸ் இவற்றில் பிரிந்த கட்சிகள், தொழிலாளி விவசாயி கட்சி, அம்பேத்கரிய கட்சிகள், ஒரிசாவிலும், அசாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், உத்திர பிரதேசத்திலும், பீகாரிலும் பல பல கட்சிகள்.

 

இந்தியாவில் இடதுசாரி மையம், கம்யூனிஸ்ட் தளம் என்று சொல்லப்பட்ட மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா மூன்றிலும் கூட பல கட்சிகள் இயங்கின. கேரளாவிலும் பல்வேறு சாதி, மத, வட்டாரக் கட்சிகள் உண்டு. மேற்கு வங்கத்தில் சில இடது சாரிக் கட்சிகளும், வங்க காங்கிரஸ், திரிணாமுல் போன்ற கம்யூனிஸ எதிர்ப்பு கட்சிகளும் உண்டு. விடுதலைக்கு முன்பு இந்துமகா சபையும் முஸ்லீம் லீக்கும் சேர்ந்து மேற்கு வங்க அமைச்சரவையில் பங்கு கொண்ட வரலாறும் உண்டு. திரிபுராவிலும் பழங்குடியினர், வங்காளிகள், திரிணாமூல் என பல கட்சிகள் உண்டு. இடது சாரிகளுக்கும் இதர கட்சிகளுக்கும் இடையே ஆன உறவில் கேரளம் தனிப்பாதை. மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் ’இடது முன்னணி; இப்போது பதவியில் இல்லை. கேரளாவில் ’இடது ஜனநாயக முன்னணி. ஆட்சியில் தொடர்கிறது. இந்த வேறுபாடு முக்கியமானது. இந்த மாநிலங்களைத் தனியே ஆய்வு செய்ய வேண்டும்.

 

சலிப்பூட்டும் விவரங்களை பெயர் பட்டியலை சொல்லுவது கட்டுரையைத் தொய்வடையச் செய்யும். ஆயின் இந்தியா முழுவதும் எப்படி பல கட்சிகள் களத்திற்கு வந்தன; போயின; அணி மாறின என்பது ஒட்டு மொத்த பிரச்சனையைப் புரிய உதவும் அல்லவா? ஏன் இத்தனை கட்சிகள்? விஜயின் ’தமிழக வெற்றிக் கழகம் போல் புதியன முளைக்கின்றன. எல்லாம் எதை நோக்கி? தேவை என்ன? அதைப் பேசி இக்கட்டுரைத் தொடரை நிறைவு செய்வோம்.

 

தொடரும்

 

-சு.பொ.அகத்தியலிங்கம் .


0 comments :

Post a Comment