சமூகத்தைத் தோலுரிக்கும்
வரலாற்றின்
வலி மிகுந்த பக்கங்கள் .
சு.பொ.அகத்தியலிங்கம்.
[ கனமான 744 பக்கங்கள் கொண்ட நூலென்பதாலும் அடர்த்தி அதிகம் கொண்டது
என்பதாலும் அறிமுகமும் நீண்டிவிட்டது .அருள்கூர்ந்து முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.
]
’சாதிப் பெருமை’
நூலின் துணைத் தலைப்பான ‘ இந்து இந்தியாவில்
சமத்துவத்திற்கானப் போராட்டம்’ என்பது , உள்ளடக்கத்தை
உரக்கச் சொல்வது மட்டுமல்ல ; இந்தியாவின் சமூக உளவியலில் ஆழப்புதைந்துள்ள பாசிச வேர்களைச்
சுட்டுவதுமாகும்.
1795 இல் பிரிட்டிஸ் கிழக்கிந்திய கம்பெனி சனாதன மநு அதர்மத்தை
அடியொற்றி பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விதிவிலக்கு அளித்தது தொட்டு இன்றுவரை
ஏதோ ஒரு வகையில் மநு அநீதி தொடர்வதையும் ; அதற்கு எதிரான போராட்டம் எவ்வளவு கடினமானது
வலிமிகுந்தது என்பதையும் இந்நூல் நெடுக நிறுவுகிறார்
நூலாசிரியர் மனோஜ் மிட்டா . சட்ட உருவாக்கத்தின் போதும் , வழக்கு மன்றங்களிலும் நடந்த
விவாதங்களில் வழிதான் இந்நூல் நகர்வதால் அசைக்க முடியா சான்றாதாரங்களைச் சார்ந்து நிமிர்ந்து
நிற்கிறது .
நம்ம ஊர் ஆளுநர் ரவி மட்டுமல்ல துணிந்து பொய் பேசும் அனைத்து
சங்கிகளும் என்ன சொல்கிறார்கள் ? ‘சாதிக் கொடுமை
நம்மிடையே கிடையாது … எல்லாம் பிரிட்டிஷ்காரன் திணித்ததுதான்’ . ஆயின் உண்மை என்ன ? இந்தியாவில் நிலவிய வர்ணாஸ்ர அநீதியை
பிராமணிய மேலாண்மையே சூத்திரர் , பஞ்சமருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டும் காணாமல்
நடந்து கொண்டது .
ஆயினும் ,சமூக நிர்ப்பந்தத்தால் சில சீர்திருத்தங்களைச்
செய்ய வேண்டிய சூழல் உருவான போதும் எப்படித் தட்டிக் கழித்தது ,தாமதப்படுத்தியது ,
பிராமணர்களுக்கு வலிக்காமல் எப்படி நடந்துகொள்ள முயற்சித்தது பிரிட்டிஷ் அரசு என்பது
நெடிய வரலாறு. அதாவது இந்த மண்ணில் இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கொடிய புற்றுநோயே சாதியும் சனதனமும் என்பதற்கான ஆதாரமாகவும் இந்நுல் உள்ளது எனலாம். சாதி மற்றும்
சனாதனத்தின் ரணமொழுகும் காயங்களும் வலிகளும் அதற்கு எதிராக எழுந்த போராட்டங்களும்தான்
இந்நூல் எனில் மிகை அல்ல.
இந்நூல் முக்கியமாக ஐந்து பகுதிகளாக உள்ளது ; அநீதிகளுக்கு எதிராக ஐந்து முனைப் போராட்டங்களைச்
சொல்கிறது ;
1] தாழ்த்தப்பட்ட
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட ’காலில் மரச்சட்டகம் பூட்டும்’ ’ஸ்டாக்ஸ்’ எனும்
கொடிய தண்டனையை நீக்க நடந்த போராட்டமும் ; பிராமணர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்ட
அநீதியும் … மார்பங்களை மறைக்க கீழ்நிலை சாதிப் பெண்களுக்கு இருந்த தடையை நீக்க நடந்த
போராட்டங்களும் … மனைவியை உயிரோடு எரிக்கும் உடன்கட்டை எனும் ஸதிக் கொடுமை ஒழிக்க எடுத்த முன்னெடுப்புகளும்… இப்படி நடந்த “ஆரம்பச் சட்டப்” போராட்டங்கள் .
2] வாரிசு ,தத்துஎடுத்தல் ,திருமணத்தில் பிராமணர் பங்கு
,கலப்புத் திருமணம் இவற்றில் சாதி சனாதனத்தின்
கோரப்பிடி இவற்றிலிருந்து மீள நடந்த கடும் முயற்சிகள் சாதரணமானதல்ல ”அசுத்தப் பெரும்பான்மை”யின்
மீது ஏவப்பட்ட சனாதன கிடுக்கிப் பிடி… திருமணம் என்பது எப்படி சனாதன சமூகத்தில் மட்டுமல்ல
இன்றும் பெரும் சாதிய நெருக்கடியாக இருக்கிறது ; பாலின சமத்துவமற்ற சாதிய ஆதிக்கம்
மிகுந்த ஓர் சடங்காகவே திருமணம் இன்றும் அணுகப்படுகிறது
. 1918 இல் வித்தல்பாய் பட்டேல் தொடங்கிய கலப்புத் திருமண சட்ட அங்கீகார முயற்சி ; தமிழ்நாட்டில் அண்ணாவல் கொண்டுவரப்பட்ட
‘சுயமரியாதைத் திருமணம் ‘ வரை நீள்கிறது .முயற்சி முடியவில்லை . ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் இன்றைக்கும் தேவைப்படுகிறதே
; கோரிக்கையாகிறதே …
3] சாலைகள் ,நீர்நிலைகள் ,சத்திரம் , சுடுகாடு , மண்டபம்
, கல்விக்கூடம் உள்ளிட்ட பொது இடங்களை அணுக
இருந்த சாதித்தடை ,தீண்டாமை இவற்றுக்கு எதிராக நடந்த நெடிய போராட்டங்களும் , சட்டப்
போராட்டங்களும், எப்படி எல்லாம் விதவிதமாக
வியாக்கியானம் செய்து தடுத்தார்கள் என்பதும் ‘தடுக்கப்பட்ட வழிகளும்’ …அப்பப்பா
!!!
4] எல்லோரும் இந்து என வாய்ப்பறை ஒரு புறம் ; கோவிலில்
நுழைந்து சாமி கும்பிடக்கூட எவ்வளவு பெரிய நெடிய வலிமிகுந்த போராட்டத்தை நடத்த வேண்டி
இருந்தது . 1897 இல் கமுதியில் தொடங்கி இன்னும் தொடர்கிறது … கோவில் நுழைவு போராட்டங்கள்
சனாதனத்தின் முகமூடியை கிழித்தெறியும் …
5] வெண்மணி , சுண்டூர் , கயர்லாஞ்சி ,பெல்ச்சி என எங்கும்
நடந்த சாதிய மற்றும் ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயக் கூலிகள் மீதான வன் தாக்குதல்கள் ; நீதி
தேவனின் வர்க்க ,வர்ண வாசமும் மயக்கமும் எப்படி ‘ வன்முறைக்கு பாதுகாப்பாயின’…
இந்த வரலாற்றை படிக்கும் போது
அ] இதுவரை நாம் பொதுவெளியில் அதிகம் அறியாத பலரின் கடும்
முயற்சிகளும் போராட்டங்களும் நமக்குத் தெரிய வருகின்றன …
ஆ] முற்போக்காளராய் நாம் கொண்டாடும் சிலர்கூட சில சந்தர்ப்பங்களில்
தடுமாறி சனாதன பிடியில் விழுந்ததையும்….
படுபிற்போக்காளரான
சிலர் அரிய சந்தர்ப்பங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியாக முகங்காட்டியதையும்….
சனாதனக் கூட்டம்
சகுனியாட்டம் ஆடி காய் நகர்த்துதலில் காட்டிய சாதுரியத்தையும்
வரலாறு நெடுக நிறைந்து கிடக்கும் ’சுடும் உண்மை’களையும்
, இந்நூல் தக்க ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறது .
ஈ] ‘ உண்டு’ என்று சொல்வது ஓர் வகை ; ‘இல்லை’ என்று சொல்வது
அதன் எதிர் ; ’உண்டு ’ஆனால் ’நாக்குபடாமல் நக்கு’ எனச் சொல்வது
எவ்வளவு வஞ்சகமானது ; குறுமதியானது ; அது நம் சனாதனிகளுக்குக் கைவந்த கலையாய் இருக்கிறது
என்பதே இந்நூல் நெடுக நாம் நுட்பமாகக் காண்பது.
உ] பிரிட்டிஷ் அரசு உள்நாட்டு ’மத விவகாரங்களில் தலையிடாமை’
என நேர்மையாளர் போல் காட்சி அளித்து ‘ பிராமணியம் ,சனாதனம் , தீண்டாமை , பெண்ணடிமைத்தனம்
இவற்றை நிலை நிறுத்த மறைமுகமாக உதவியதை இந்நூல் வெட்ட வெளிச்சமாகிறது . இப்போதும் பலசந்தர்ப்பங்களில்
ஆளும் வர்க்க செயல்பாடு அதனை அடியொற்றித்தான் இருக்கிறது .
ஊ] இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் சில பிரிட்டிஷ் அதிகாரிகள்
மனித உரிமை ,பெண்கல்வி ,பெண்ணுரிமை , தலித் மற்றும் சூத்திரருக்கு கல்வி ,பால்ய விவாகத்தடை
,ஸதிக்குத்தடை போன்ற விழுமியங்களுக்காக எடுத்த முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் அளித்த
ஊக்கங்களையும் மறந்துவிடலாகாது . இதில் வேடிக்கை
என்ன வெனில் அவர்களின் இந்த நல்ல முயற்சிகளைத்தான் சனாதனிகள் கடும் குரோதத்துடன் அணுகினார்கள்
.
இப்படி இந்த நூலில் நாம் அறிய வேண்டிய செய்திகளும் பாடங்களும்
மிகமிக அதிகம் …
1829 ஆண்டு பெண்டிங் பிரபு ஸதி எனும் உடன் கட்டை ஏறுதலை
’கொலைக்குற்றம்’ என அறிவித்தார் அதை ஒட்டி சதிக்கு எதிராகத் தொடங்கியப் பெரும் முயற்சியையும்
தொடர் போராட்டங்களையும் மீறி வஞ்சகமாய் ஸதி தொடர்ந்தது . ரூப்கன்வர் உடன் கட்டை ஏற்றிக் கொல்லப்பட்ட பின்னர் 1987 இல்
ராஜீவ் காந்தி கொண்டுவந்த சட்டம்தாம் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளிவைத்தது . இடையில்
கிட்டத்தட்ட 157 ஆண்டுகள் . இதில் ஒரு வேடிக்கையும் உண்டு நேருவின் தந்தை ராஜீவின்
கொள்ளுத்தாத்தா மோதிலால் நேரு ஒரு வழக்கில்“ சிதை தன்னிச்சையாகத் தீப்பிடித்து எரிந்ததது”
, ”அற்புதம்” என கதைவிட்டார் . ஸதிக்கு எதிராகப் போராடிச் சட்டம்
கொணர முயற்சித்த ராம் மோகன் ராய் கூட வர்ணாஸ்ரமத்தை குலைக்கு விரும்பவில்லை என்பது
நகை முரண் .நேரு ,இந்திரா காந்தி ஆகியோர் சனாதனிகள்
நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ளத் திணறியதும் சுட்டப்பட்டுள்ளது .
தீண்டமைக்கு விளக்கம் சொல்வது ; தடுப்பது ; தண்டனை விதிப்பது
இவற்றுக்கான போராட்டத் தடங்களை வாசிக்க வாசிக்க இச்சமூகத்தின் இரட்டை நிலை
[hypocriti ] மிகநுட்பமாக எங்கும் வியாபித்திருப்பதைப் பார்க்க முடிகிறது . சாதி வித்தியாசம்
இல்லாமல் ஒவ்வொருவர் மூளையிலும் இன்றைக்கும் இது ஆழமாக உள்ளது . அளவு மாறுபடலாம் அவ்வளவுதான்
. இன்றும் இதுதானே நிலைமை .
வித்தல்பாய் பட்டேல் , மனெக்ஜி தாதாபாய் ,பி.வி.நரசிம்ம
ஐயர் ,காளிச்சரண் நந்த்கோவ்லி ,ஹரிசிங் கவுர் ,எம் .ஆர் .ஜெயகர் ,எம்.சி.ராஜா , இரட்டை
மலை ஆர்.சீனிவாசன், ஆர்.வீரையன் , எஸ்.கே.போலே , ஜி ஏ காவாய் , தாகூர்தாஸ் பார்க்கவா போன்ற அதிகம்
புகழப்படாத வீரர்களின் சமூக சீர்திருத்த சட்ட முயற்சிகளை இந்நூல் அழகாக எடுத்துரைக்கிறது
.இதில் பார்ப்பனர் ,சூத்திரர் ,தலித் என அனைவரும் உண்டு .
அதுபோல டி.மாதவராவ் , எம் ஜி ராணடே , பாலகங்காதரத் திலகர்
, மோதிலால் நேரு , மதன் மோகன் மாளவியா ,சுரேந்திரநாத் பானர்ஜி , சி.ராஜகோபாலாச்சாரி போன்றோர் எப்படி சமூக சீர்திருத்தத்தை பின்னோக்கி
தள்ள உதவினர் என்பதும் இந்நூலில் பதிவாகி உள்ளது .
அம்பேத்கர் , மகாத்மாகாந்தி மோதலும் இருவரின் பங்களிப்பும்
தடுமாற்றமும் ,பதித்த தடங்களும் உரிய முறையில் பதிவாகி உள்ளது இந்நூலில் .அம்ரித்
கவுர் , ஹன்சா மேத்தா , துர்க்காபாய் தேஷ்முக் போன்ற பெண் ஆளுமைகள் பங்களிப்பும் ,
அரசியல் சட்ட வரைவு குழுவில் இருந்த ஒரு தலித் பெண் உறுப்பினரான கேரளாவைச் சார்ந்த
தாட்ச்ஷாயினி வேலாயுதத்தின் தடுமாற்றங்களும் நூலில் பதிவாகி உள்ளன.
சமூக சீர்திருத்தத்தை கடுமையான சட்டங்களினாலும் தண்டனைகளாலும்தான்
சாதிக்க முடியுமா ? மனமாற்றம்தானே நிரந்தரமான தீர்வு என இன்றைக்கும் வாதிடுவோர் உண்டு
.அனறைக்கும் அதுவே விவாதங்களின் மையமாகிப் போனது வியப்பில்லை . இரண்டும் ஒருங்கிணைக்கப்பட
வேண்டும் .ஆம் . ஒரு புறம் கடுமையானச் சட்டங்கள் ; மறுபுறம் தொடர் விழிப்புணர்வு கருத்துப்
பரப்புரை .இரண்டும் வேண்டும் . அத்துடன் கல்வி ,வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்
. இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவும் வேண்டும் என்பதே நூல் உணர்த்தும் செய்தி .கூடவே
நாரயணகுரு ,சாட்டாம்பி சுவாமிகள் ,அய்யன் காளி ,வைகுண்டசாமி ,வள்ளலார் , திருமூலர்
,இராமனுஜர் , பசவய்யா ,கபிர்தாஸ் ,துக்காராம் , சொக்கமேளா , சைதன்யர் உட்பட நிறைய ஆன்மீகப்
பெரியோர்கள் மனமாற்றத்துக்கு பெரிதும் பாடுபட்டனர் . இது இந்நூலில் சொல்லப்படாவிட்டாலும்
நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
இந்நூலைப் படித்த பிறகு என் கருத்து : சமூக சமத்துவதுக்கான
இப்போராட்ட வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும் . வர்க்கப் போராட்ட
வரலாற்றோடு இந்த வர்ணப் போராட்ட வரலாற்றையும் கம்யூனிஸ்டுகள் தங்கள் பாடத்திட்டத்தில்
சேர்க்க வேண்டும் .
அதே போல் எனக்கொரு கேள்வியும் எழுகிறது இக்காலகட்டம் முழுவதிலும்
கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி வர்ண எதிர்ப்புக்கு முக்கியத்துவம்
கொடுப்பதில் பின்னின்று விட்டனரோ ? அது குறித்த
தகவலோ பார்வையோ இந்நூலில் இல்லை. ஆனால் விடுதலைப் போராட்ட காலங்களில் வீறுகொண்டெழுந்த
புன்னப்புரா வயலார் , வோர்லி ,தெலுங்கான போன்ற பல்வேறு போராட்டங்களில் வர்க்க ஒடுக்குமுறையையும்
சமூக ஒடுக்குமுறையையும் ஒரு சேர எதிர்த்தது கம்யூனிஸ்ட் வரலாறு அல்லவா ?
“குரூரமான பழைய பாகுபாட்டு வடிவங்களுக்கு பதிலாக மேலும்
நவீனமான நுட்பமான புதிய முறைகளை மேற்கொண்டு சாதி தன்னை உருமாற்றம் செய்து கொண்டே இருக்கிறது.”
இந்நூலின் கடைசி பத்தியில் சுட்டி இருப்பது மிகச் சரியானது .அதை உள்வாங்கவும் போராடவும்
இந்நூல் நல்ல உந்துசக்தி ஆகும் . 744 பக்கங்கள்
கொண்ட இந்நூலை மிகச் சிறப்பாக தமிழில் மொழியாக்கம் செய்து ; முற்போக்கு இயங்களுக்கு
ஆயுதமாகத் தந்திருக்கும் ஆர் .விஜயசங்கருக்கு
என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் .
சாதிப் பெருமை ,[ இந்து இந்தியாவில் சமத்துவத்துக்கான போராட்டங்கள்],
ஆசிரியர் : மனோஜ் மிட்டா , தமிழில் : ஆர். விஜயசங்கர்
,
எதிர் வெளியீடு , ethirveliyeedu@gmail.com 04259
226012 / 99425 11302 ,
பக்கங்கள் : 744 , விலை : ரூ.899 /

0 comments :
Post a Comment