சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

Posted by அகத்தீ Labels:

 

சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

[ என் மகள் பானுநவீனின் இன்னொரு கவிதையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்: சுபொஅ .]                                 

 

பெருங்காதலோடு உன் கை மணம் கூட்டி,

 நீ கொடுக்க விழையும் பிரிய பிரியாணிக்கும்,

அதற்கானப் பிரயத்தனங்களுக்கும்,  காதல் கோடி ....

 

எத்தணிப்பு உண்மை எனினும்,

செயல்முறை பிழை, சேர்வது என்னை மட்டும் தான்,

 

அரிசி, எண்ணெய் தேடி கலைத்து, களைகிறாய்...

அணுதினம் புழங்கும் அதே சமையலறையில்,         

 

பொருள் தந்து, கலைந்ததை நேர் படுத்தும் என்னுள்ளும் தவறுண்டு,

நேர்த்தியைப் பற்றி கொண்டு, நேரத்தை தொலைப்பேன்  எப்போதும்,

 

சின்ன நேர இடைவெளியில்,  பாத்திரம் தேடி உருட்டும், உன் பெரு மூச்சின் சத்தங்கள் எட்ட,

 உன் கைகளுக்கு மிக அருகில் இருக்க்கும் வேண்டியவைகளை எடுத்து, கொடுத்து,

மீண்டும் சிதறியவைகளை சீர் செய்து வருவேன்,

 

காய் நறுக்க,

தொலி உரிக்க,

மசால் அரைக்க,

அவ்வப்போது விஜயம்... ,

அதன் தொடர்ச்சியாய் துடைத்தலும், கழுவுதலும் ..

 

முக்கால் தயாராகி, உப்பு சரிபார்க்க  உதவுகையில் ,

கையோடு வெங்காயத்  தோல்களையும் ,

கொத்தமல்லி மற்றும் இதர மிச்சங்களையும் சேர்த்து குப்பையில் வீசுவேன்,

 

மணக்கும் உன் சமையலின் ருசி பார்க்கும் மகிழ்வை விடவும் ,    

அடுப்பை துடைத்து,

மலை போல் குவிந்து கிடக்கும்,  பாத்திரம் கழுவும்  அயர்ச்சி சூழ்ந்து கொள்கிறது,

என்ன செய்ய ......

 

சிதறிய ,

கலைந்த ,

மிச்சமுள்ள,

ஒழுக்கற்ற ,

 

அத்தனையையும்  சரி செய்வது ஒன்றும் புதிதல்ல

என்பினும் சலிப்பும் இயல்பு தானே ....

 

சிதறும் உதிரத்தை   

ஒற்றைப் பஞ்சில் சேர்த்து

அனிச்சையாய் அப்புற படுத்தும் வித்தை பழகிய எமக்கு,

 

அழுக்கும்சுத்தமும் ….

எப்போதும் துரத்தி கொண்டே இருக்கும்

வரமும்... சாபமும் .....

 

பானுநவீன்

17/11/25

 


0 comments :

Post a Comment