கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் உரையாடல் …

Posted by அகத்தீ Labels:

 



கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் உரையாடல் …

 

சாத்தானின் வெடிச் சிரிப்பில் கடுப்பான கடவுள் கோபத்தோடு கத்தினார் ;    “ அங்கென்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு ; இங்க ஒருத்தன் அவதிப்படுறது வேடிக்கையா போச்சா உங்களுக்கு…”

 

“ இல்லை ஆண்டவரே ! எங்களுக்காக சொல்லப்பட்ட அனைத்தையும் உங்கள் செல்லப் பிள்ளைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் ; அதை யோசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது..” என சாத்தான் புன்முறுவலோடு சொன்னார்.

 

“ எதையும் நான் செய்வதுமில்லை ; செய்விப்பதும் இல்லை . நல்லதோ கெட்டத்தோ எதற்கும் நான் பொறுப்பல்ல ஆனாலும் என் தலையைத்தான் பக்தர்கள் உருட்டுகிறார்கள் . என்ன செய்து தொலைக்க.” கடவுள் தன் கவலையைப் பிழிந்தார் .

 

“ சரி ! அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு விடியும் என்றால் ; பிள்ளை செய்யும் பாவத்துக்கு அப்பன்தானே பொறுப்பேற்க வேண்டும் . மோடி ,அமித்ஷா , யோகி ,டிரம்ப் , நெதன்யாஹு , கார்ப்பரேட் சாமியார்கள் இப்படி எங்கும் ’தெய்வப் பிறவி’ என தம்மைச் சொல்லித் தெரியும் பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் நீங்கள்தானே பொறுப்பு ? இப்போது எம் கண்களுக்கு பாவமூட்டையாக அல்லவா நீங்கள் தெரிகிறீர்கள் ?” சொல்லிவிட்டு சாத்தான் மீண்டும் சிரித்தார் .

 

“ சரியாகத்தான் சொல்கிறாய் ! நீயும் கற்பிதம் .நானும் கற்பிதம் . உன் மீது சுமத்தப்பட்ட அனைத்தையும் என் பெயரலாயே செய்து கொண்டிருக்கிறார்கள் ; என் பெயரால்தான் அனைத்து அட்டூழியங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் . உன் பிள்ளைகளோ உழைத்து நேர்மையாக வாழ முயற்சிக்கிறார்கள் ஆனால் அவர்கள் தான் பாரம் சுமக்கிறார்கள் …” கடவுள் கண்கலங்கி நின்றார் .

 

“ ஆம் ! ஆண்டவரே ! நீயும் நானும் மட்டுமல்ல ; பாவம் ,புண்ணியம் ,சொர்க்கம் ,நரகம் ,தீட்டு ,புனிதம் எல்லாம் அவனவன் அடுத்தவனை மிதிக்க ஏமாற்ற உருவாக்கிய கற்பிதங்களே !” சாத்தான் சொல்ல கடவுள் வேகமாக “ ஆம் .ஆம்.” என தலையாட்டினார்.

 

“ வரம் ,சாபம் எதையும் நாம் வழங்குவதில்லை .நம் பெயரால் அவர்களே ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்கிறார்கள் ! மனிதர்கள் செய்கிற அனைத்துக்கும் நாம் வெறும் முகமூடி ; முகம் அல்ல .” இருவரும் கோரஸாக சொல்லிக் கொண்டிருக்கும் போது “ ஸ்ரீ ஜெய் ராம்”  கோஷம் கேட்க தங்களைக் காப்பாற்ற கடவுளும் சாத்தானும் தலமறைவானார்கள் .

 

தங்களை  காப்பாற்றிக் கொள்ளக்கூட முடியாத கடவுள்களையும் சாத்தான்களையும் ; தன்னைக் காப்பாற்றும் தண்டிக்கும் என நம்பி துக்கிச் சுமக்கும் மனிதனை என்ன சொல்லி அழைப்பது ?

 

 

சுபொஅ.

06/11/25

 


0 comments :

Post a Comment