பொது அடுக்களை

Posted by அகத்தீ Labels:

 

பொது அடுக்களை

 “ஒரு கிராமம் முழுவதும் பொது அடுக்களைஅமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும் உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !.....”

 

என் தம்பி சு.பொ.ஐயப்பன் தன் இணையரோடு சென்னையிலிருந்து வந்திருந்தான் . அவன் நெடுங்காலம் பிழைப்பு நிமித்தம் குஜராத்தில் வாழ்ந்தவன் . ஓய்வு காலத்தில் சென்னைக்கு வந்துவிட்டான் .

இருநாட்கள் அரசியல் ,சமூகம் ,குடும்பம் ,புத்தகம் எல்லாம் பேசித் தீர்த்தோம். குஜராத்திகள் எப்போதும் ‘பிஸினெஸ் மயிண்டோடு’தான் இருப்பார்கள் எனபதோடு ’சுபம் லாபம்’ என்பதுதான் அவர்கள் ஒரே நோக்கம் .லாபம் ஈட்ட எதையும் துணிந்து செய்வார்கள் . அதில் பாவ புண்ணியம் பார்க்க மாட்டார்கள் . இப்படி அவன் சொல்லச் சொல்ல உரையாடல் நீண்டது .

 

இடையில் சாப்பாடு அடுக்களை என பேச்சு திரும்பியதும் ; குஜராத்திலுள்ள ஓர் கிராமத்தில் பொது அடுக்களை அமைத்து கிராமமே உண்டு உயிர்த்து வாழ்வதைச் சொன்னான் . அசந்துவிட்டேன் .

 

இங்கு முதியோர் கிராமங்கள் என வசதி படைத்தவர்களுக்காக உருவாக்கப்படுகிறது . பெங்களூர் ,சென்னை எங்கும் இப்போது இதைக் காணலாம் . அடிக்கடி விளம்பரங்களையும் காணலாம் .

 

ஆனால் ஒரு கிராமம் முழுவதும் பொது அடுக்களை அமைத்து உண்பது நல்ல செய்திதானே ! அது எந்த ஊராக இருப்பினும் உரக்க சொல்லுவதில் பிழையில்லைதானே !

 

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்திலிருந்து 89 கி.மீ தொலைவிலுள்ள கிராமம் சந்தான்கி [Chandanki ] . இந்த கிராமம் கிட்டத்தட்ட முதியோர் கிராமமாகி விட்டது .

ஆம் .

இங்குள்ள இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தொழில் நிமித்தம் வியாபார நிமித்தம் வெளிநாட்டுக்கோ வெளி மாநிலத்துக்கோ புலம் பெயர்ந்து விட்டனர் . செத்தாலும் இந்த மண்ணில்தான் சாவோம் என வைராக்கியத்தோடு முதியோர்கள் அங்கேயே தங்கிவிட்டனர் . அதனால் முதியோர் கிராமமாக ஆகிவிட்டது சந்தான்கி.  

முதியோர்களுக்கு தினசரி உணவு சமைப்பது ஒவ்வொரு வீட்டிலும் பெரும் சிரமமான காரியம் .பணப் பிரச்சனை அல்ல . உடல் ஒத்துழைக்கவில்லை .வேலைக்கு ஆள் கிடைப்பதும் பிரச்சனை .

 

நெடுங்காலம் வெளிநாட்டில் தங்கிவிட்டு ஊர் திரும்பிய ஒருவர் முன்கை எடுக்க , கிராமத்துக்கு பொது அடுக்களை சாப்பாட்டுக்கூடம் உருவானது .

 

அங்கு வந்து மூன்று வேளையும் உணவு அருந்துவோரும் உண்டு .

இயலாதவர்களுக்கு மூன்று வேளையும் டிபன் கேரியரில் உணவு வீடுதேடிச் வென்றுவிடும் . விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கும் அங்கேதான் உணவு .

 

செலவை உரிய முறையில் பங்கிட்டுக் கொள்கின்றனர் . [மொத்தபேரும் ஒரே சாதிப்பிரிவு என்பது இங்கு கவனிக்கத்தக்கது .]

 

இந்தச் செய்தியை என் தம்பி சொன்னான் . தானே நேரடியாக அந்த கிராமத்துக்கு போய் பார்த்து வந்ததாகவும் சாட்சி சொன்னான் .

 

ஒரு வீடியோ கிளிப்பிங்கையும் பகிர்ந்தான் . அது கீழே !

 

நல்ல முன்னெடுப்புத்தான் .

இங்கும் முயற்சிக்கலாமே !

சாதி ,மதம் மீறியதாக இங்கு முயற்சிக்கலாமே !!!!

 

சுபொஅ.

6/11/25

 

https://youtu.be/22dpDRN38YM?si=s1KZ5BkWs_TKxz-4


0 comments :

Post a Comment