நேற்று பயணத்தில் ஓர் காட்சி .சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

Posted by அகத்தீ Labels:

 

நேற்று பயணத்தில் ஓர் காட்சி .

சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

 

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் .  அநேகமாக பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் . கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை  மணி நேரம் அவரோடு பயணம் .

 

 ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என் பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .

 

அவர் நம்பிக்கை .அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது அவருக்கு உறுத்தலாகிறது .

 

“ சார் ! கிறிஷ்டியனா ? ”

 

இல்லை என தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .

 

“ நீங்க முஸ்லீமா இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”

 

“ தலையாட்டி .புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?

 

“ எல்லாமே பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும் லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .

 

“ சார் ! அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி  சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…  வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”

 

இதுவரை பேசாமல் இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி குறைவாக உள்ள சாமிகளோ….”

 

நான் கேட்டதும் , “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு ’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன் … சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”

 

அவரின் அப்பிராணித்தனத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் .

 

அவர்  , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”

 

தொடர்ந்து வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே  சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள் சிரித்தபடி பயணித்தேன் .

 

வழியில் ஒரு தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக இருக்கும் போலும் …

 

ஓய்வு காலக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும் அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர் அப்படித்தான் .

 

இவர்களைப் போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?

 

[ சேலம் ஆத்தூர் பயண அனுபவம் ]

 

சுபொஅ.

11 /12 /25 .

 

 

 

 


தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

Posted by அகத்தீ Labels:

 

தேசபக்தி என்பது யாது ? சங்கி அகராதிப்படி அறிக !

 

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றதா ? இல்லவே இல்லை . நேரு தேசபக்தியே இல்லாதவர் . விடுதலைப் போரில் சிறையில் வாடிய கம்யூனிஸ்டுகள் தேச பக்தி அற்றவர்கள் . அப்போது காட்டிக் கொடுத்ததுதான் மாபெரும் தேசபக்தி .வாஜ்பாய் ,சாவர்க்கர் வழிதான் தேசபக்தி . பிரிட்டிஷாரின் ஷூவை நக்கியதுதான் தேசபக்தி . இன்னும் புரியலையா ?

 

கிரிக்கெட்டில் விளையாட்டு என்பதை மறந்து வெறுப்பை உமிழ்வதுதான் தேசபக்தி . தேசபக்தியும் மதவெறியும் ஒன்றுதான் .மதவெறியும் வெறுப்பு அரசியலும் ஒன்றுதான் . வெறுப்பு அரசியலும் மோடி பஜனையும் ஒன்றுதான் .ஆக , மோடி பஜனையே தேசபக்தி .

 

தேசபக்தி என்பது இந்து பக்திதான் .இந்து பக்தி என்பது பிராமணிய பக்திதான்.பிராமணிய பக்தி என்பது மனுஸ்மிருதி பக்திதான் . மனுஸ்மிருதி பக்தி என்பது ஆர் எஸ் எஸ் சொற்படி ஆடுவதுதான் . கலவர பக்திதான் . ஆக தேசபக்தி என்பது கலவர பக்தியே . அது கார்ப்பரேட்டை காக்கும் பக்தியே . அம்பானி அதானி நலமே தேசநலம் .கார்ப்பரேட் நலமே தேசநலம் .கார்ப்பரேட் பக்தியும் பிராமணிய பக்தியுமே தேசபக்தி .பொய்களையும் புராணங்களையும் கொண்டாடுவதே தேசபக்த அறிவு என்பதறிக !

 

இன்னும் தேசபக்தி என்பது இந்த மண்ணை ,மக்களை ,பன்மைப் பண்பாட்டை , பல்வேறு மொழிகளை , பல்வேறு மதங்களை ,வனத்தை ,கடலை , விவசாயிகளை ,உழைப்பாளிகளை நேசிப்பது என விளக்கம் சொல்லலாமோ ? அது முழுக்க முழுக்க தேசவிரோதம் என்பதறிக ! ஜனநாயகம் ,மதச்சார்பின்மை , சமத்துவம் ,சகோதரத்துவம் என்பதெல்லாம் தேசவிரோதச் சொல்களென அறிக ! வறுமை ,வேலையின்மை பற்றி கூப்பாடு போடுவது தேசவிரோதம் என்பதறிக !

 

இப்போது சொல் நீ தேச பக்தனா ? தேஷ்விரோதியா ?

 

சுபொஅ.

09/12/25.


ஏன் நினைக்கிறாய்

Posted by அகத்தீ Labels:

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

உன் காலம் வேறு !

உன் அனுபவம் வேறு !

இன்று எல்லாம் மாறிப்போனது

இன்றைய வேகமான வாழ்க்கைக்கு

ஈடுகொடுக்க நாடே திணறுகிறது !

உன்னை நினைக்க கொண்டாட

அவர்களுக்கு ஏது நேரம் ?

பாஸ்ட் புட்

பாஸ்ட் டிராக்

எல்லாம் ரெடி மேட்

எல்லாம் ஆண் லைன்

எல்லாம் கையடக்க மொபைலில்

வாழ்க்கை முழுவதும்

அப்படித்தான்…

 

உன்னை இன்னும் எல்லோரும்

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென

ஏன் நினைக்கிறாய்

உதிரப்போகும் வயதில்…

 

[ நேற்று நடை பயிற்சியில் என்னோடு வந்தவருக்கு ஆறுதலாகச் சொன்னது ]

 

சுபொஅ.

08/12/25.

 

 

தோழர் டி.ராமன் நூல்

Posted by அகத்தீ Labels:

 




ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் எப்படிப் போராட்ட நெருப்பில் புடம் போடப்படுகிறார் என்பதன் உயிர் சாட்சி தோழர் டி.ராமன் . எம் ஜி ஆர் ரசிகராய் இருந்து ஓர் கிராமப்புற விவசாயக் குடும்பத்து இளைஞன் வேலைதேடி சென்னைக்கு வந்து தொழிலாளிவர்க்க அரசியலைப் படிப்படியாக உள்வாங்கிய அனுபவம் எளிமையாய் ஆனால் வலுவாய் சொல்லப்பட்டிருக்கிறது .

 

தோழர் டி.ராமன் எழுதிய “ ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம்” எனும் நூல் ஒரு தொழிலாளியின் ஐம்பதாண்டு கால பிசிறற்ற அரசியல் பயணத்தை நமக்குச் சொல்லுகிறது . அதில் உழைக்கும் வர்க்க நலன் மட்டுமே மைய இழை . போராட்டம் ,அடி ,உதை ,சிறை எதுவும் அவர் உறுதியைக் குலைக்கவில்லை . புடம் போட்டது என்பதுதான் செய்தி . திருவான்மியூர் பகுதியின் உழைக்கும் வர்க்கப் போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத ஓர் அங்கம் தோழர் .டி .ராமன் . உழைக்கும் வர்க்கத் தலைவர்கள் தோழர்கள் வி.பி.சிந்தன் ,பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோர் வார்த்தெடுத்த அன்புத் தோழர் டி .ராமன் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சிய உறுதி மிக்கப் போராளித் தோழன் .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை உருவாக்கிய காலத்தில் எம்மோடு தோள் இணைந்தவர் டி.ராமன் . அன்று தொட்டு எனக்கும் அவருக்குமான தோழமை உறவு தொடர்கிறது . ஆட்டோ சங்கர் வழக்கு , தோழர் பிரதீப் குமார் கொலை வழக்கு , கல்லுக்குட்டை குடியிருப்பு மக்கள் போராட்டம் , பெத்தேல் நகர் வழக்கு , காலவாய் கரையோர மக்கள் போராட்டம் ,பர்மா காலனி போராட்டம் இப்படி ஒடுக்கப்பட்ட மக்களோடு இவர் நின்ற உரிமைப் போராட்டங்கள்தாம் இவர் வாழ்க்கை .

 

கம்யூனிஸ்டுகளை கீழ்த்தரமாய் விமர்சிக்கும் ’குபீர் அறிவாளிகளுக்கு’ தோழர் ராமன் போன்ற உழைப்பாளி மக்களின் நேர்மையும் அர்ப்பணிப்பும் மிக்க வாழ்க்கைதான் பதிலடி .

 

 “வகித்த பதவிகள் அல்ல போரட்டத் தழும்புகள் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அடையாளம்” என்பதன் சாட்சியே தோழர் டி.ராமன் . பேரன் தூண்டிவிட்ட தாத்தாவின் எழுத்து இந்நூல் .

 

ஒரு தொழிலாளியின் அரசியல் பிரவேசம் , டி.ராமன் , தூவல் கிரியேஷன்ஸ் , 90945 74500 , vedhaperumal@gmail.com , பக்கங்கள் : 112.


ஜெயிக்கணும் பகவானே

Posted by அகத்தீ Labels:

 

பூரி ஜெகநாதா !

ஒரிசா தேர்தல் முடிந்துவிட்டது .

ஆஞ்சநேயா !

கர்நாடக தேர்தல் இப்போது இல்லை        

துர்க்கா

மேற்கு வங்க தேர்தல் நெருங்குகிறது

முருகா

தமிழ்நாடு தேர்தல் வந்து கொண்டிருக்கிறது

சீத்தா

பீகார் தேர்தல் முடிந்துவிட்டது

ராமா                                                                                                                  

உத்திரபிரதேச தேர்தல் வரப்போகிறது

ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்போம்

ஒரே சாமி ! ஒரே பூஜை என்று சொல்ல மாட்டோம் !

தேர்தலில் ஜெயிப்பது முக்கியம் பகவானே !

 

[ இது தெய்வக் குழந்தை மோஷா தெய்வத்தோடு உரையாடியவை ]

 

சுபொஅ.

30/11/25.

 

 

நீ நீயும்

Posted by அகத்தீ Labels:

 

நீ ஏமாந்திருக்கிறாய்

நீயும் ஏமாற்றி இருக்கிறாய்

நீ அவமானப்பட்டிருக்கிறாய்

நீயும் அவமானப்படுத்தியிருக்கிறாய்

நீ கடன் வாங்கியிருக்கிறாய்

நீயும் கடன் கொடுத்திருக்கிறாய்

நீ விபத்தில் சிக்கியிருக்கிறாய்

நீயும் விபத்தை உண்டாக்கி இருக்கிறாய்

ஆனால் என்ன

உனக்கு நேர்ந்தது எதையும் நீ மறக்கவில்லை

உன்னால் பிறருக்கு நேர்ந்தது எதுவும் உன் நினைவில் இல்லை.

உன்னை ’ஞாபகப் புலி’ என்பதா ? அல்ல

இதைத்தான் ’காரியமறதி’ என்பதா ?

 

சுபொஅ.

30/11/25

சாலையே ! தெருக்களே ! நன்றி !

Posted by அகத்தீ Labels:

 

சாலையே ! தெருக்களே !
நன்றி ! நன்றி !
எம் முதியோர்களை
தினசரி
அஷ்டாவதானியாகவும்
தசாவதானியாகவும்
மாற்றுகிறாயே !
உனக்கு
கோடான கோடி நன்றி !
கண்கள் குனிந்து
சாலை மேடு பள்ளங்களைப் பார்க்க
கண்கள் நிமிர்ந்து
சாலை விதிகளை மதிக்காமல்
எதிர்வரும் வாகனங்களை கவனிக்க
காதும் கண்ணும்
பின் தொடர்ந்து முந்த எத்தணிக்கும்
வாகனங்களை கவனித்து வழிவிட
சுற்றுப்போடும் தெருநாய்களை
சாமர்த்தியமாய் விரட்ட
ஹெட் ஷெட்டில் பாட்டு கேட்டபடியும்
செல்போணை நோண்டியபடியும்
குறுக்கே ஓடும் இளைஞரை
இடிக்காமல் கடக்க
உடன் நடப்பவரோடு
உரையாடல் அறாமல் தொடர
வழியில் கடையில்
வாங்க வேண்டியதை
ஞாபகமாய் வாங்கி நகர
அடடா ! எத்தனை எத்தனை
கவனக் குவிப்புகள் ஒரே நேரத்தில்
முதியோரை இப்படி எல்லாம்
அஷ்டாவதானியாகவோ
தசாவதானியாகவோ
மாற்றிக்கொண்டே இருக்கும்
சாலையே தெருவே
நன்றி !நன்றி !

சுபொஅ.
26/11/25.

குறிப்பு : ’அஷ்டாவதானி’ எனில் எட்டு வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர். ’தசாவதானி’ எனில் பத்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்பவர் .அக்காலத்தில் இதனை பாராட்டி பட்டம் பட்டம் வழங்குவர் .

கவிதையில் விடை கிடைக்காது….

Posted by அகத்தீ Labels:

 



கவிதையில் விடை கிடைக்காது….      

 

கொஞ்சம் அறிவியலைப் புரட்டினேன்

காதலிக்கத் தொடங்கும் அகவை முன்பே

அவனுக்கும் அவளுக்கும்

இதயமும் மூளையும் முழு அளவை எட்டிவிடுமாம்.

ஆனாலும்  அவனுக்கும் அவளுக்கும்

காதலிக்கும் போது இருந்த

இதயமும் மூளையும்

கல்யாணத்துக்குப் பின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் பிறந்தபின் இருந்த

இதயமும் மூளையும்

பிள்ளைகள் வளர வளர இருந்த

இதயமும் மூளையும்                                                    

ஒவ்வொரு காலத்திலும் களத்திலும் இருந்த

இதயமும் மூளையும்

முதுமையில் இப்போது இருக்கும்

இதயமும் மூளையும்

அளவு மாறாமலே

குணம் மாறிக்கொண்டே இருப்பது ஏன் ?

உள்ளுக்குள் நிகழும் மாற்றங்களா ?     

அனுபவ நெருப்பில் வெந்த பக்குவமா ?

கவிதையில் விடை கிடைக்காது

காலத்திடம் கேட்டுப் பார்ப்போம்.

 

சுபொஅ.

21/11/25.

 


அர்பணிப்பின் அளவீடு

Posted by அகத்தீ Labels:

 



என் மகள் பானு நவீன் கனடாவில் இருந்து அவ்வப்போது கவிதைகள் எழுதி அனுப்புவாள் . அகம் சார்ந்து புறம் சார்ந்து சமூக கோபம் சார்ந்து பல கவிதைகள் தெறித்து விழும் . அவற்றை புத்தகமாக்க வேண்டும் என்பது அவளது ஆர்வம் . அண்மையில் ஒரு கவிதை அனுப்பி இருந்தாள் . இங்கு பகிர்கிறேன் .

சுபொஅ. 2/11/25.

அர்பணிப்பின் அளவீடு


நேசத்தை சோதிப்பது போல்

அர்ப்பணிப்பைக்கூட அளவீடு கொண்டு அளக்கிறார்கள் ....

100 க்கும் 99 க்கும் இடையே குறைந்த இடைவெளி
என்று எண்ணியிருக்கையில்
10-ஐயும் 100-ஐயும் ஒரே சமகூட்டில் நிறுத்துகிறார்கள்..

கிள்ளியெடுக்கையில் கணக்கு சொல்ல முடியும்
அள்ளுவது என்றான பின் எதைக் கொண்டு
அதை நிறுத்துவது (அளவிடுவது)?

தூறுவதோ
பொழிவதோ
மேகத்தின் முடிவு

விழும் அத்தனையும் மீண்டும் வந்து சேராது
என்று மேகத்திற்கு எப்போதோ தெரியும் ...

எறும்பும்
ஆமையும்
ஒன்றென கருதும் உங்களிடம்
வேகம் குறித்து விவாதிப்பது வீண் .

பெயரிடப்பட்ட அத்தனை தெய்வங்களுக்கு
பின்னும் பெயர் தெரியா
சிற்பியும், உளியும் உண்டு ....

எல்லா அர்பணிப்பின் எதிர் வினையில்
ஏமாற்றமும், இகழ்ச்சியும் உண்டு
என்பது அறிவோம் ..

அறியாமல் போனது
இதை பற்றிய விளக்கங்களும், விவாதங்களும்
நிகழ்த்துவது நம் நேசத்திரிக்குரியவர்கள் என்பது ....

பானு நவீன் .

சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

Posted by அகத்தீ Labels:

 

சிதறிய , கலைந்த ,மிச்சமுள்ள, ஒழுக்கற்ற...........

[ என் மகள் பானுநவீனின் இன்னொரு கவிதையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன்: சுபொஅ .]                                 

 

பெருங்காதலோடு உன் கை மணம் கூட்டி,

 நீ கொடுக்க விழையும் பிரிய பிரியாணிக்கும்,

அதற்கானப் பிரயத்தனங்களுக்கும்,  காதல் கோடி ....

 

எத்தணிப்பு உண்மை எனினும்,

செயல்முறை பிழை, சேர்வது என்னை மட்டும் தான்,

 

அரிசி, எண்ணெய் தேடி கலைத்து, களைகிறாய்...

அணுதினம் புழங்கும் அதே சமையலறையில்,         

 

பொருள் தந்து, கலைந்ததை நேர் படுத்தும் என்னுள்ளும் தவறுண்டு,

நேர்த்தியைப் பற்றி கொண்டு, நேரத்தை தொலைப்பேன்  எப்போதும்,

 

சின்ன நேர இடைவெளியில்,  பாத்திரம் தேடி உருட்டும், உன் பெரு மூச்சின் சத்தங்கள் எட்ட,

 உன் கைகளுக்கு மிக அருகில் இருக்க்கும் வேண்டியவைகளை எடுத்து, கொடுத்து,

மீண்டும் சிதறியவைகளை சீர் செய்து வருவேன்,

 

காய் நறுக்க,

தொலி உரிக்க,

மசால் அரைக்க,

அவ்வப்போது விஜயம்... ,

அதன் தொடர்ச்சியாய் துடைத்தலும், கழுவுதலும் ..

 

முக்கால் தயாராகி, உப்பு சரிபார்க்க  உதவுகையில் ,

கையோடு வெங்காயத்  தோல்களையும் ,

கொத்தமல்லி மற்றும் இதர மிச்சங்களையும் சேர்த்து குப்பையில் வீசுவேன்,

 

மணக்கும் உன் சமையலின் ருசி பார்க்கும் மகிழ்வை விடவும் ,    

அடுப்பை துடைத்து,

மலை போல் குவிந்து கிடக்கும்,  பாத்திரம் கழுவும்  அயர்ச்சி சூழ்ந்து கொள்கிறது,

என்ன செய்ய ......

 

சிதறிய ,

கலைந்த ,

மிச்சமுள்ள,

ஒழுக்கற்ற ,

 

அத்தனையையும்  சரி செய்வது ஒன்றும் புதிதல்ல

என்பினும் சலிப்பும் இயல்பு தானே ....

 

சிதறும் உதிரத்தை   

ஒற்றைப் பஞ்சில் சேர்த்து

அனிச்சையாய் அப்புற படுத்தும் வித்தை பழகிய எமக்கு,

 

அழுக்கும்சுத்தமும் ….

எப்போதும் துரத்தி கொண்டே இருக்கும்

வரமும்... சாபமும் .....

 

பானுநவீன்

17/11/25

 


சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்

Posted by அகத்தீ Labels:

 



      


                                                                                                                                    

சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்         

கற்பிக்க அல்ல கற்க ஒரு கையேடு.                    

 

நான் கல்வியாளனும் அல்ல , ஆசிரியனும் அல்ல ;  ஆயினும் ‘சமூக ஜனநாயக் கையேடு ‘ எனும் நூல் கிளர்த்திய ஆர்வத்தில் நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் . காரணம் இந்நூல்  செய்திருக்கிற பிரகடனமும் ; அதற்கொப்பச் செயல்வடிவம் கொடுத்திருப்பதும்தான் .       

 

ஆம் .” சாதிய வன்கொடுமைகளின் தோற்றுவாய் எது ? சாதிய  வன்கொடுமைகள் நிகழாமல் எவ்வாறு தடுப்பது ? சாதிய வன்கொடுமை     நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? என்பன குறித்து ஒரு புரிதலைப் பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் ,ஆசிரியர்களுக்கும் , ஊழியர்களுக்கும் ஏற்படுத்துவதே இக்கையேட்டின் நோக்கம் .” என்கிற பிரகடனப் படுத்திய தம் நோக்கத்தை நிறைவேற்ற கடும் உழைப்பை நல்கி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது . வாழ்த்துகள் .

 

21 அத்தியாயங்கள் . ஒவ்வொன்றும் எந்தெந்த வயதினருக்கு என்கிற நுட்பத்துடன் ; ஆசிரியர்களின் பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது . காலிஃப்ளவர் ,முட்டைக் கோஸ் ,நூக்கல்  என காய்களின் பரிணாம அறிவியலோடு சாதியை நன்கு உருவகப்படுத்தி “ நாம் ஒருத் தாயின் பிள்ளைகள்’ என அறிவுறுத்தும் அழகிய கதை வடிவம் முதல் அத்தியாயத்திலேயே முத்திரை பதித்துவிட்டது .      

 

பொதுவாய் இந்நூல் உரையாடல் வழி கற்பிக்கவே அல்ல கற்கவே [ முன்னுரையில் விளக்கம் உள்ளது ] மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது . இரத்தம் , அணுக்கள் ,மரபணு ,நடசத்திரத் துகள்கள் என பல்வேறு அறிவியல் செய்திகளோடு சாதி மறுப்பையும் நன்கு பிசைந்து வலியுறுத்தி உள்ளது மிக முக்கியமானது. கூர்மையானது .  

          

அதுபோல் அரசியல் சட்டம் சார்ந்து பல செய்திகளை மாணவர்களின்   நெஞ்சில் பதிய வைக்க முயலுவது நன்று . “சகோதரத்துவம் இல்லை எனில் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்கள்.” எனும் பாபா சாகேப்             அம்பேத்கரின் கருத்துக்கு இந்நூல் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறது .   வென்றிருக்கிறதா என்பதை கல்வியாளர்கள்தாம் சொல்ல வேண்டும் .    

   

அண்மையில் ’biason காளமாடன்’ என்றொரு திரைப்படம் பார்த்தேன் .அதில் ஒரு இடத்தில் பள்ளியில் மாணவர்களிடையே கபடிப் போட்டி நடக்கையில்  ஆசிரியர் ஒவ்வொரு மாணவன் கையிலும் கட்டி இருந்த சாதிக் கயிற்றை கத்திரியால் வெட்டி எறிகிற காட்சி  அமைக்கப்பட்டிருந்தது .நாம் செல்ல வேண்டிய தூரத்தை அது எனக்குச் சொன்னது ? இந்நூலில்’வீதியில் விளையாட சாதி எதற்கு ?’ , ’நாம் பார்வையாளர்களாக அல்ல பகுத்தறிவாளர்களாக’  [ இருப்பதிலேயே பெரிய அத்தியாயம் இதுதான் ] என்கிற அத்தியாயங்களைப் படிக்கிற போது அப்படக்காட்சி என்னுள் வந்து போனது .  

 

என் நெஞ்சைக் கவர்ந்த எங்க ஊர்க் கவிஞர் கவிமணி தேசிய விநாயகத்தின் எளிய ஆயினும் ஆழமான கவிதை வரிகள் தொடங்கி கவிஞர் தமிழ் ஒளி வரை பல கவிஞர்களின் வீரியமிக்க வரிகள் ஆங்காங்கே அர்த்தச் செறிவுடன் பொருந்தி மிளிர்கின்றன . நன்று .

 

ஆழ்ந்த படிப்பறிவுமிக்க பலரின் பொறுப்பான பங்களிப்பாய் இந்நூல் மலர்ந்துளது . ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள் . பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் சீரிய முயற்சியை எவ்வளவு பாராட்டினும் தகும் .

 

 

அதேநேரத்தில் , சாதிய மறுப்பு போலவே பள்ளியிலேயே வேரூன்ற வேண்டிய இன்னொரு சிந்தனை ‘ பாலின சமத்துவம்’ . இந்நூல் அதிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டுமல்லவா ?                    

 

நடைமுறையில் இந்நூலில் பயன்பாடு , எதிர்கொள்ளும் சவால்கள் , விமர்சனங்கள்  இவை பற்றி எல்லாம் பேசுவது , இத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வம் மிக்க செயல்பாட்டாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் . நான் இப்போது தூரத்துப் பார்வையாளனே !

 

சமூக ஜனநாயக் கையேடு Manual  for Social Democracy  , பொதுப் பள்ளிக்கான மாநில மேடை , தொடர்புக்கு : spcsstn2025@gmail.com ,9445683660 ,பக்கங்கள் : 136 , விலை : ரூ.300 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

17/11/25 .

 


குழந்தைக் கதை

Posted by அகத்தீ Labels:

 




 


 

 

 

 

தோழரே ! [ அமெரிக்காவிலிருந்து எழுதியது

என் பேத்தி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த ஒரு புத்தகம் என்னைக் கவர்ந்தது . உடனே என் வழியில் மொழியாக்கிவிட்டேன் .

உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்.                                                            

 

ஒவ்வொரு பக்கத்துக்கும் வண்ணப்படம் முக்கியம் .

 

நூலாசிரியர் அனுமதி இல்லாமல் வெளியிட முடியாது .

 

சுபொஅ.

02/04/25.

வர்ஜீனியா

 

 

 

 நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

Be Who You Are

ஆசிரியர் : டாட் பார்

Todd Barr

 

https://www.bing.com/ck/a?!&&p=1bb3a006a30d9a811aff5383bf89b3fabe1bcb7efdffe7d8d7e8ed21c5ef1485JmltdHM9MTc0MzU1MjAwMA&ptn=3&ver=2&hsh=4&fclid=3f4e9636-41d8-6ab4-3063-841e406a6b0e&u=a1L3ZpZGVvcy9yaXZlcnZpZXcvcmVsYXRlZHZpZGVvP3E9YmUrd2hvK3lvdSthcmUmbWlkPTc5QjBFQkIxQUEwQTJDN0FFQjI1NzlCMEVCQjFBQTBBMkM3QUVCMjUmRk9STT1WSVJF&ntb=1

 

Be Who You Are

 

[1]

Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[2]

Be old . be young.

வயது மிகக்குறைந்த சிறுவராக இருங்கள்

இளைஞராக இருங்கள்

 

[3]

Be different colour .

எந்த நிறமாக வேண்டுமாயினும் இருங்கள் !

எந்த மதமாக சாதியாக வேண்டுமாயினும் இருங்கள்

 

[4]

Wear everything you need to be you .

நீங்கள் எப்படியாக இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே ஆடை அணிகலன் அணியுங்கள் !

 

[5]

Speak your language

உங்கள் மொழியில் பேசுங்கள் !

 

[6]

Learn in your own way

உங்களுக்கு பிடித்தமான வழியில் கற்றுக்கொள்ளுங்கள்

 

[7]

Be proud of where you’re from

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள்

 

[8]

Be your own family

நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்தோடு இருங்கள்

 

[9]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[10]

Be silly

ரொம்ப வாலாக விளையாட்டுத்தனமாக இருங்கள் !

 

[11]

Be brave

தைரியமா இருங்கள் !

 

[12]

Dance

ஆட்டம் போடுங்கள் !

 

[13]

Play

Discover

Learn

Read

விளையாடுங்கள்

கண்டுபிடிங்க

கற்றுக்கொள்ளுங்கள்

படிங்க ள்

 

[14]

Share your feelings

 உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

 

[15]

Happy

Mad

Sad

Silly

Scared

Proud

மகிழ்ச்சியாக இருங்கள்

பைத்தியம் போல குதிங்கள்

சோகமா இருங்கள்

விளையாட்டுத்தனமான இருங்க

பயந்து இருங்கள்

பெருமையா திரியுங்கள்

 

[ 16 ]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

[17]

Try new things

புதியன  முயற்சி செய்யுங்கள்

Eat

Tacos

சாப்பிடுங்க

பிரியாணி ,சமோசா

இட்லி , கொழுக்கட்டை

 

[18]

Pizza

Noodles

பீசா , நூடுல்ஸ்

பருப்பு சாதம் ,

முட்டை ஆம்ப்லெட்

 

[19]

Be confidence

நம்பிக்கையோடு செயல்படுங்கள் !

 

[20]

Stand up for yourself

உங்களுக்காக நீங்களே எழுந்து நில்லுங்கள்

 

[21]

Be energetic

சுறுசுறுப்பாக இருங்கள் !

 

[22]

 

Be peacefull

நிம்மதியாக இருங்கள்

நிம்மதியாய் உறங்குங்கள் !

Be calm and do yoga

அமைதியாக இருங்க சந்தோஷமாக உடற்பயிற்சி செய்யுங்கள்

 

 

 

[23]

Be the  best that u can be

முடிந்தவரை நல்லவராய் இருங்கள்

 

 [24]

Just Be Who You Are

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்

 

 

[25]

It doesn’t matter what colour you , where you are from , Or who is in your family . Every one needs to be loved . Always Love yourself and be who you are !

 

Love !

நீங்கள் எந்த நிறம்,

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்,

நீங்கள் எந்த சாதி , எந்த மதம் , எந்த இனம்

உங்கள் மொழி யாது

அல்லது உங்கள் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் அல்லது இல்லை

நீங்கள் ஏழையா பணக்காரரா  

என்தெல்லாம்  முக்கியமல்ல.

 

ஒவ்வொருவரும் நேசிக்கப்பட வேண்டும்.

எப்போதும் உங்களை  நீங்களே நேசியுங்கள் !,

நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்!

 

அன்பென்று கொட்டு முரசே !