மனதும் புண்படாது இல்லையா ?

Posted by அகத்தீ Labels:

 




மனதும் புண்படாது இல்லையா ?

 

 

உலகம் தட்டையானதுதான்

சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது

சந்திரன் ஒரு கிரகம்தான்

ராகு கேது பாம்புகள் விழுங்குவதே கிரஹணங்கள்

நெற்றியிலும் தோளிலும் தொடையிலும் பாதத்திலுல் குழந்தை பிறக்கும்

பன்றி வயிற்றில் அடிமை பிறப்பான்

உடன் கட்டை ஏறுவது உத்தமம்

குழந்தைத் திருமணம் உயர்ந்தது

பெண்கள் படிக்கக் கூடாது ; வேலைக்கு போகக்கூடாது

தாழ்ந்தப்பட்ட மக்கள் கோபுரதரிசனம் செய்தால் போதும் கோயிலுக்குள் போகக்கூடாது

அவரவர் குலத்தொழில் செய்தால் போதும்

சனாதனம் வாழ்க ! பகுதறிவு ஒழிக ! இதுவே நம் பண்பாடு !

இப்படி எழுதினால் யார் மனதும் புண்படாது இல்லையா ?

அறிவையும் மனச்சாட்சியையும் கொன்றால் போதும்….

 

சுபொஅ.

 

[ யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத பயிற்சி எடுக்கிறேன்]


ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

Posted by அகத்தீ Labels:

 


ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

 

 

காற்றே வா ! காற்றே வா !

என் சுவாசப் பையை நிரப்ப

காற்றே வா ! காற்றே வா !

 

நான் புனிதமான சனாதனி

ஆச்சாரமான ஆள் –தீட்டு

தோஷம் அண்டலாகாது !

 

காற்றே வா ! காற்றே வா !

நான் தீண்டக்கூடாத இடங்களை

நீயும் தீண்டாமலே வா !

 

சாக்கடைகளை தொடாமல் வா !

நந்தவனத்தை மட்டுமே தீண்டி வா !

சேரிக்குள் நுழையாமல் வா !

 

மசூதி சர்ச்சுகளை மறந்தும்

அணைக்காமல் வா ! – புலால்

நாற்றம் சுமக்காமல் வா !

 

மாட்டுக்கறி மாமிசக் கடை

அருகேயும் போகாமல் வா !

வியர்வை நாற்றம் கலவாமல் வா !

 

கோமாதா குசுவாக வா !

மூத்திரக் குளமானாலும் நீ

சாத்திரக் குளம் தீண்டி வா!

 

ஆச்சாரமான காற்றையே நான்

ஆச்சாரமாக சுவாசிக்க வா ! வா !

ஆச்சார விதிமீறாமல் வா ! வா !

 

சுபொஅ.

23/09/24.

 

[ இதில் நான் என்பது நானல்ல யார் என்பதை நீவிர் அறிவீர்தானே ! ]

 

 


ஆனாலும் யாராலும் இதை

Posted by அகத்தீ Labels:

 


ஆனாலும் யாராலும் இதை....


திருமண நிகழ்வோ

பிறந்த நாள் கொண்டாட்டமோ

வேறு ஏதேனும் சந்தோஷக் கூடுகையோ !

எங்கும் ஒரே பரபரப்பு

ஒரே மினுமினுப்பு

ஒரே ஜிலுஜிலு ஜொலிப்பு

 

எல்லோர் முகத்திலும்

அச்சடித்த புன்னகை

கட்டிப்பிடித்தல் கைகுலுக்கல்

வணக்கம் சொல்லல்

குசல விசாரிப்புகள்

உடன் இருப்போரை

அறிமுகம் செய்தல்

அலைபேசி எண் பரிமாறல்

செல்பி

எல்லாம் சரி !

 

விதிவிலக்குகளைத் தவிர

அந்த அலைபேசியில்

மீண்டும் எப்போதேனும்

அழைத்தது உண்டா ?

செல்பி புகைப்படங்கள்

சேமிக்கப்பட்டதுண்டா ?

 

 

அங்கே

ஜொலித்தது அழகல்ல பகட்டு

காட்சிப் படுத்தியது போலிப் பெருமை

பரிமாறியது பாசமல்ல சடங்கு

வட்டியில்லாக் கடனாய் மொய் பரிசு

ஆனாலும் யாராலும் இதை

தவிர்க்க முடிவதில்லையே !

 

விதிவிலக்குகளைத் தவிர

நடிப்பு எங்கும் எல்லோருக்கும்

இயல்பாகி விட்டதோ !

 

சுபொஅ.

22/09/24.

 

[ விதிவிலக்குகளைப் பற்றி பேசவில்லை ]


திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் …..

Posted by அகத்தீ Labels:

 





திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் …..

 

 

என் இனிய நண்பரும் எழுத்தாளருமான தோழர் சு.சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” நாவலைப் படித்த பிறகே திருநங்கை ,திருநர் இவர்கள் பற்றி புரிந்து கொள்ளத் தொடங்கினேன் .என்னுள் இருந்த பழுதான பார்வை விலகத் தொடங்கியது .அந்த நூலை சு.சமுத்திரம் எழுதுகிற காலகட்டத்திலும் அதன் பின்னரும் அவருடனான உரையாடல்களில் அந்த உலகம் தனித்துவமானது என்பதும் ,அதனை முழுவதுமாக உள் வாங்க விசாலப் பார்வையோடு இன்னும் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெளிந்தேன்.

 

லிவிங் ஸ்மைல் வித்யா (Living Smile Vidhya) எழுதிய தன் வரலாற்று நூல் நான், வித்யாஎன்னுள் மேலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது . அதைப்போல மு.ஆனந்தனின் “கைரதி 377” என்னை உலுக்கியது . இதன் முன்னும் பின்னுமாய் வெளிவந்துள்ள வேறு பல சிறுகதைகளும் நூல்களும் அந்த உலகின் ஆழ அகலத்தை அறிய ஆர்வத்தை மேலும் கிளர்த்தின .

 

1970 களில் நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கிய போது திருநங்கை ,திருநர் ,ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய தவறான பார்வையே என்னுள் இருந்தது . நான் நெருங்கிப் பழகிய வழிகாட்டியாக வாய்த்த தலைவர்கள் பலரும் இவர்கள் குறித்த அருவருப்பான பார்வையையே கொண்டிருந்தனர். அன்றைய புரிதல் மட்டம் அவ்வளவே .சு.சமுத்திரம் நாவல் என்னுள் உடைப்பை ஏற்படுத்தியது .

 

கியூபத் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் ஒரு கிறுத்துவப் பாதிரியார் நடத்திய உரையாடல் [ தோழர் அ.குமரேசன் மொழிபெயர்ப்பில் ] நூலாக வெளிவந்த போது அதில் LGBTQIA குறித்த கேள்விக்கு காஸ்ட்ரோ நேர்மையாகப் பதில் சொல்லி இருந்தது ஈர்த்தது . அதாவது கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு பகுதியினர் LGBTQIA உரிமையை மனித உரிமையாக ஏற்க மறுப்பதைச் சுட்டிக்காட்டி  தாம் அவ்வாறு கருதவில்லை என்றும் ஆனால் கட்சிக்குள் அதை திணிக்க முடியாது பரவலான உரையாடல் மூலம் ஏற்கச் செய்ய முடியும் என தான் நம்புவதாகவும் முயன்றுவருவதாகவும் சொன்னார் . அதைப் படித்த பின்னர் திருநங்கைகள் ,திருநர்கள் வாழ்வு சார்ந்து பல நூல்கள் வெளிவர வேண்டியதின் தேவை புரிந்தது . அத்தகைய நூல்களை தேடி வாசிக்கத் துவங்கினேன்.

 

தன் வரலாற்று நூலான ”அவளுக்குள்ள தூரம்”  எனும் இந்தப் புத்தகம் கேரளாவில் மலையாளிகள் மத்தியில் LGBTQIA பற்றிய பார்வை எப்படி மிகவும் பழுதுபட்டதாக இருந்தது , எப்படி படிப்படியாக மாறிவருகிறது , இடதுசாரிகளின் பங்களிப்பு என்ன  என்பதை எல்லாம் அலசுகிறது . திருநர் சமூகத்தின் வாழ்வுரிமையின் குரலாய் ஒலிக்கிறது .ஆக இந்நூல் மிக முக்கியமானது எனக் கருதுகிறேன்.

 

விஜயகுமார் நாயர் - உஷா விஜயன் தம்பதியரின் இளைய மகன் விநோத் தன்னுள் இருக்கும் பெண்மையை எப்படி உணர்ந்தான் ,சமூகம் எப்படிச் சீண்டியது , ஊரும் உறவும் எப்படி அவமானப்படுத்தியது , எங்கெல்லாம் ஓடினானான் ,என்னென்ன நெருக்கடிகளை ,இழிவுகளை ,சோதனைகளை,  வலிகளை எதிர்கொண்டான் என்பதை இந்நூல் பேசுகிறது .தன் அப்பா ,தம்பி எல்லோரும் புறக்கணித்த போதும் அம்மா எப்படி அரவணைத்தார் என்பதும் நம்மையும் ஆறுதல் கொள்ளச் செய்கிறது..

 

வழக்கமாகத் திருநர் இலக்கியத்தில் சொல்லப்படும் வாழ்வின் வலி ,ஏமாற்றம் ,அவமானம் ,சமூகத்தின் அறியாமை எல்லாம் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது .அத்துடன்,” எப்படி வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழுந்து வாழவேண்டும்,” என்கிற வேட்கை இந்நாவலில் ஓங்கி நிற்கிறது .சூரியாவாக மாறிய விநோத் சந்தர்ப்பச் சூழ்நிலையால் பாலியியல் தொழில் செய்து வயிற்றை நிரப்ப நேரினும் ,பிச்சை எடுக்க நேரினும் , குப்பைத் தொட்டியிலிருந்து உணவை எடுத்து உண்ண நேரினும் மனம் குலையாமல் எப்படியாவது ஏதாவது வேலை செய்துதான் சாப்பிட வேண்டும் என்கிற வெறியோடு முட்டி மோதுகிறார் .

 

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் தன் கலைத் திறமையைக் காட்டி முன்னேறுகிறாள்.அதில் வெற்றி பெறுகிறார் . அது அவரின் முகவரியையே தலைகீழாக மாற்றுகிறது . தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டுகிறார் .. தமிழ் பாடல் தொகுப்பொன்று வெளியிடுகிறார் .தெரு நாடகங்களில் ஜொலிக்கிறார். ஒரு நடிகையாக முத்திரை பதிக்கிறார். ஊரறிந்த முகமாகிறார் .

 

திருநங்கைகள் ,திருநர்கள் கொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையிலும் அவர் செயல்பட்டுள்ளார் . மதவாதத்தை சாதியத்தை எதிர்த்துள்ளார் . பாஜகவும் காங்கிரசும் சூரியாவை தங்கள் மேடைகளில் ஏற்ற முயன்ற போது அரசியல் உறுதியுடன் மறுத்திருக்கிறார்.. தன் சக இனத்தவருக்கு தொண்டு செய்துள்ளார் . கொரானா காலத்திலும் தொய்வின்றி செயலாற்றி உள்ளார்.

 

பாலுறுப்பு மாற்று சிகிட்சை செய்து பெண்ணாக மாறிய சூரியாவும் ; பாலுறுப்பு மாற்று சிகிட்சை செய்து ஆணாக மாறிய இஷானும் காதலித்து  திருமணம் செய்து கொண்டது கேரளாவில் பெரும் பரபரப்புச் செய்தியானது . சமூக நலத்துறை டீச்சர் சைலஜா இந்த திருநங்கை திருநர் தம்பதியரை அழைத்து விருந்து கொடுத்தது ; பினராய் விஜயன் முதல்வராக உள்ள இடதுசாரி அரசின் திருநர் கொள்கைக்கு சாட்சியானது .

 

மு.ஆனந்தன் சொல்வதுபோல் ,” உயிரும் உணர்வும் இரத்தமும் சதையுமாகப் பேசுகிறது இந்நூல் .அதே சமயம் இந்த கேடுகெட்ட சமூகம் என்னதான் வஞ்சித்தாலும் வசைபாடினாலும் புறந்தள்ளினாலும் வாழவேண்டும் என்கிற அவளுடைய துடிப்பும் துள்ளலும் துணிவும் ஒவ்வொரு பத்தியிலும் ஊடாடிக்கிடக்கிறது .வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் வருமானத்திலும் நிகழ்ந்த வீழ்ச்சிகளை .மேலெழுந்த தருணங்களை ,காதல் ஊஞ்சலாடிய வசந்தங்களின் வாஞ்சையை ,ஆதரவு அளித்து ,அரவணைத்த மனிதங்களை உயிரோட்டமாகப் பேசுகிறது .”

 

அதே உணர்வுடன்மலையாளத்தில் இருந்து தமிழாக்கம் செய்துள்ள மு.ந. புகழேந்திக்கு வாழ்த்துகள் .

 

தமிழ் இலக்கியச் சூழலைவிட மலையாள இலக்கிய வெளியில் திருநர் இலக்கியம் வெகு தாமதமாகவே துளிர்த்துள்ளது என முன்னுரையில் மு.ஆனந்தன் சொல்கிறார் .நூலிலும் அதற்கான சாட்சியம் உள்ளது .

 

 

LGBTQIA இந்த ஏழு எழுத்து சொல்லுக்கு பின்னால் உள்ள பாலின /பாலியல் வேறுபாடுகளுக்கும் அதன் வலி மிகுந்த வாழ்க்கைக்கும் முழுப் பொருளை அறிவோமா ? ஆண் தன்பாலின ஈர்ப்பாளர் , பெண் தன் பாலின ஈர்ப்பாளர் , இரு பாலின ஈர்ப்பாளர் ,மாற்று பாலினத்தவர் ,இடையினத்தவர், திருநர்கள் ,திருநங்கைகள் இப்படி எழு வகையினரும் இது போன்றோருமே LGBTQIA என அழைக்கப்படுகின்றனர் .இவர்களின் மனித உரிமை இன்று பேசுபொருளாகி உள்ளது . “வானவில்” என அழைக்கப்படுகிற இவர்களை இவர்களின் ஆசாபாசங்களை உணர ஈரமும் விசாலமும் மிக்க இதயமும் அறிவியல் பார்வையும் தேவை .இப்போது இடதுசாரிகளிடம் வலுப்பெற்று வருகிறது. மதவாதிகளிடம் இதை எதிர் பார்க்கவே முடியாது .

 

இது போன்ற நூல்களை வாசிப்பது புரிதல் மட்டத்தை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

 

அவளுக்குள்ள தூரம் , சூரியாவினுடைய வாழ்க்கைக் கதை

ஆசிரியர் : டாக்டர் ரெஸ்மி.ஜி ,அனில் குமார் .கே.எஸ்,தமிழில் : மு.ந.புகழேந்தி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : 
bharathiputhakalayam@gmail.com  www.thamizhbooks.com
பக்கங்கள் : 416 , விலை : ரூ.460 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/09/24.


முகம் மாறிக்கொண்டே இருக்கிறது.

Posted by அகத்தீ Labels:

 


ரயில் மார்க்கமாக

சாலை மார்க்கமா

பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

 

வழிநெடுக எங்கும்

ஒரு புறம்

இடித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இன்னொரு புறம்

கட்டுமானம் நடந்துக்கொண்டே இருக்கிறது.

 

நேற்று இருந்ததுபோல்

எதுவும் இன்று இல்லை

நகரமோ கிராமமோ

முகம் மாறிக்கொண்டே இருக்கிறது.

 

எல்லாம்

வளர்ச்சி என்கிறார்கள்

ஆனால் ஏனோ

மூச்சுத் திணறுகிறது.

 

சாதியம் தொலையாத வளர்ச்சி

வறுமை தொலையாத வளர்ச்சி

உச்சத்தை நோக்கி  ஒரு சிறு கூட்டம்

படு பள்ளத்தை நோக்கி பெருங் கூட்டம்

 

 

மலைக்கும் மடுவுக்கும் இடையில்

அல்லல் படும் மானுடம்

வளர்ச்சியின் இலக்கணம்

பாமரனுக்கும் புரியவே இல்லை.

பண்டிதன் ஏமாற்றுகிறான்

புள்ளிவிவரங்களால்…..

 

வழிநெடுக எங்கும்

ஒரு புறம்

இடித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இன்னொரு புறம்

கட்டுமானம் நடந்துக்கொண்டே இருக்கிறது.

 

சுபொஅ.

16/09/24.

 


பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

Posted by அகத்தீ Labels:

 


 

 


பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

 

” எத்தனை மனித வக்கிரங்கள் ஊர்ந்த மேனி இது . இன்று நீயுமா ?! வா என் அன்பே !” என்று முனங்கியபடியே கருநாகத்தை ஆரத்தழுவினாள் .அது அன்பாய் அவள் உதட்டில் ‘பச்’ என்று முத்தமிட்டது .

 

சமூகத்தால் கைவிடப்பட்டு  புற்று நோயில் அழுகிய பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் அந்திமக் காலத்தில்   இரண்டு இட்லிக்காக வேலியோரம் ஒதுங்கும் கோர வாழ்வை இந்நூலின்  “பசி கொண்ட இரவு” கதை சொல்கிறது . நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி அழவைக்கிறது .

 

இக்கதை இத்தொகுப்பில்  கடைசிக் கதை இது .

 

இக்கதையை வாசித்த போது புகழ்பெற்ற  “சாதத் ஹாசன் மாண்டோ” என் நினைவுக்கு வந்து போனார். இப்படி ஒதுக்கப்பட்டோர் வாழ்வில் ரணத்தை எழுத்தில் தந்தவர் ; உருது மொழி எழுத்தாளர் சாதத் ஹாசன் மாண்டோ .

 

கள்ளச் சாராயம் விற்கிற பெண் என எவ்வளவு இளக்காரமாகச் சொல்லி விடுகிறோம் . ஆனால் அவர்களின் வாழ்க்கை வலியை அறிவோமா ? ” இந்த மாந்தோப்பு வேலை எவ்வளவோ மேல் .எல்லா இடத்திலும் கோவிந்தன் மாதிரி பொறிக்கிப் பயல்கள் இருக்கத்தான் செய்றானுக…” இந்த வரிகளில் காறித் துப்பும் சமூக யதார்த்தம் ஆயிரம் ஹேமா கமிட்டி அறிக்கைகளில் சொன்னாலும் தீராது .ஆனால் சரோஜா வாழ்வு என்ன ஆனது .”பாக்கெட் சாராயம்” என்னும் கதையின் உறுத்தும் நிஜம் வாசிப்பவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது .

 

கஞ்சா வழக்கில்  சிறையில் வாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் எத்தனை சோகம் !  “காதல் என்னும் ஊழ்வினை” என்னும் கதை சமூகத்தின் இன்னொரு கோர முகத்தைக் காட்டும். அவள் பெயரோ ஜெயக்கொடி அவள் வாழ்வோ வெறும் கந்தல் துணி . செய்யாத குற்றத்துக்காக சிறைபட்டு , “அவளுக்கு [பெற்ற மளுக்கு ]யாராச்சும் சாப்பாடு கொடுத்திருப்பாளோ” எனக் கதறும் குரலை அமைதியாக் கடந்து போக முடியவில்லை.

 

 “ சீதை வேசியாக்கப்பட்டாள்” கதைத் தலைப்பே அதிர்வெடி . மனைவியை தவறாய்ப் புரிந்து சந்தேகிக்கும் கணவன் .சந்தேக நெருப்பில் தற்கொலை செய்து கொள்கிறான் . ”அம்மா ! சீதை! என் மகன் கொழுப்பெடுத்து செத்துப் போனதுக்கு நீ ஏம்மா வருத்தபடுற? …” என தலைகோதும் மாமியார் மானுடம் செத்துப் போகவில்லை என்பதன் சாட்சி.

 

கறுப்பு ஆடுகள் மலிந்த காவல் துறைக்குள் நேர்மையாய் இருக்கும் ஒருவன் ; அவனுக்குள்ளும் தலை விரித்தாடும் சாதியம் ; சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி பெண்ணை வேட்டையாடும் சக காவல் மிருகங்கள்  “ மூன்றாம் நாளும் விடிந்தது” கதை காட்டும் சமூக இருட்டு நினைக்கவே பயமாக இருக்கிறது .

 

குடிகார கணவனால் நிம்மதியை இழக்கும் தாய் , தப்பி ஓடும் சிறுவன் ,அணைக்கும் சக அபலைக் கிழவி , உழைத்து வாழவும் விடாத சமூகம் என குத்திக் கிழிக்கும் கதை “ பூரணச் சந்திரன்.”

 

பிழைப்பு தேடி சென்னை செல்லும் பெண் எதிர்கொள்ளும் சிக்கலை யதார்த்தமாய் பேசி நம்மை உறைய வைக்கும் கதை “கனலி”

 

 “ ஏண்டா சடங்கானோம் ?” என வேணியை அழவைத்து , புயலில் சாகவிட்ட கொடுமை .மாதவிடாய் இயல்பானது . அதுவே  தீட்டு  என இந்திய சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பெருங்கூற்றாய்  ஆடுவதை சொல்லும் கதை “தீட்டு” .

 

“இத்தொகுப்பில் ஒப்பீட்டளவில் மனதை அழுத்தும் பெரிய துக்கம் எதையும் தராத மென்மையான கதை இது ஒன்றுதான்.”என ச.தமிழ்ச் செல்வனே சொல்லும் கதை “ மீனாட்சி அத்தை” ஒன்றுதான். ஆனால் அக்கதையிலும் கண்ணீரும் ஈரமும் உண்டு.

 

“இந்த சமூகத்திற்கு எது தேவையோ அதை எழுது அதனால் ஏற்படும் விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாதே ,விமர்சனமே இல்லாத கதைகளை எழுத வேண்டுமென்றால் நீ எழுதுவதைவிட சும்மா இருப்பதே மேல் என்று திரும்பத் திரும்பச் சொல்லி எழுதத் தூண்டிய என் அன்புக் கணவர் ஜெயசீலன் என ‘ என்னுரையில் ‘ கி.அமுதா செல்வி குறிப்பிடுகிறார் .

 

சமூகம் பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலியை எழுத்தில் தருவது என்பது சவாலான செயல்தான் .  ‘பசி கொண்ட இரவு என்கிற சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒன்பது  கதைகளையும் எழுத துணிச்சல் மட்டுமல்ல , எல்லையற்ற மானுட நேசமும், சமூகப் பார்வையும் , பெண்ணின் இதயமும் கண்ணும் வேண்டும் . அமுதா செல்விக்கு அது வாய்த்திருக்கிறது. ஆகவேதான் தன் முதல் கதைத் தொகுப்பிலேயே முத்திரை பதித்திருக்கிறாள் .

 

அடிதட்டு மக்களின் - விழிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மட்டுமே கூர்ந்து நோக்கி ; பெண்ணின் வற்றா அன்புடன் கதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் அமுதா செல்வியை வாழ்த்துகிறேன் . அவருக்கு தோள் கொடுக்கும் கணவர் ஜெயசீலனையும் வாழ்த்துகிறேன் . லட்சியத் தம்பதியராய் பல்லாண்டு வாழ்க நீவீர் ! உங்கள் எழுதுப் பயணம் மேலும் மேலும் தொடர்க இவ்வழியே !

 

வாசகர்களே ! உங்களுக்கு ஓர் சவால் !

கண் கலங்காமம் இத்தொகுப்பை உங்களால் வாசித்து முடிக்க முடியுமா ?

 

பசி கொண்ட இரவு ,

ஆசிரியர் : கி.அமுதா செல்வி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

E mail :     bharathiputhakalayam@gmail      /   www.thamizhbooks.com

பக்கங்கள் : 144 , விலை : ரூ.150 /

 

 

 சு.பொ.அகத்தியலிங்கம்.

16/09/24.

 

 

 

                                              

 


வெறும் வார்த்தை அல்ல...

Posted by அகத்தீ

 







வெறும் வார்த்தை அல்ல...

இறகு உதிரவில்லை
மாமலை சாய்ந்துவிட்டது.

வெற்றிடம் வெறும்
வார்த்தை இல்லை

எம் உயிர்த் தோழா !
யெச்சூரி எனும் நம்பிக்கையே !

நாங்கள் இழந்தது
தனி மனிதரில்லை

தத்துவ விளக்கன்றோ
அணைந்து விட்டது

சூழும் பகை முடிக்க
வியூகம் வகுக்கும் நேரத்தில்

பாழும் மரணம் வந்து
மறித்ததே எம் பாதையை!

உன்னை வார்த்தது மார்க்சியம்
மார்க்சியத்தை வாளாக்கினாய் நீ !

மாணவனாய் களம் வந்தாய்
மார்க்சிய ஆசானாய் வலம் வந்தாய்!

துணிச்சலின் முகவரி நீ !
சுடரும் அறிவுத் தீ நீ!

இடர்மிகு காலத்தில்
இயக்கத்தை வழி நடத்தினாய் !

கொந்தளிக்கும் கடலில்
மாலுமியை இழந்தோமே !

சுபொஅ.

மணிப்பூர்

Posted by அகத்தீ Labels:

 


மணிப்பூர்

 

 

கனவு எப்போது வரும் ?

தூக்கத்துக்காக

படுக்கையில் புரளும்போதா ?

தூக்கம் கலைந்து

சுகமாய் கிடக்கும் போதா ?

தூங்கியும் தூங்காமலும்

நெளிந்து கிடக்கும்போதா ?

ஆழ்ந்த தூக்கத்தில்

உலகை மறந்து கிடக்கும் போதா ?

நள்ளிரவு வருமா ?

அதிகாலை வருமா ?

பகலில் வருமா ?

கனவிலாவது

 “அச்சா தீன்..” பார்ப்பதெப்போ ?

 

சுபொஅ.

11/09/24.


வயதாக வயதாகத்தான்

Posted by அகத்தீ Labels:

 

வயதாக வயதாகத்தான்

தெரிகிறது

நாம் அறிந்தது கொஞ்சம் !

சரி தவறு என்பதும்

முதிர்ச்சியோடு சம்மந்தப்பட்டது

தனி நபர் முதிர்ச்சி மட்டுமல்ல

சமூக முதிர்ச்சியும்

பண்பாட்டு முதிர்ச்சியும்தான்

ஞானத் தேடலில் ஆயுள் கழியும்

நம் அனுபவத் தடத்தில் அடுத்த

தலைமுறை பாடம் கற்கும்

யுகந்தோறும் இதுதானே நடக்கும் !

 

சுபொஅ.


மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

Posted by அகத்தீ Labels:





மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

 

பாலஸ்தீனம் குறித்த இரண்டு நூல்கள் அண்மையில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன .

 

1] “பாலஸ்தீனம் ”  - தோழர் வெ.சாமிநாத சர்மா எழுதியது .1939 ல் வெளிவந்தது .2024 ல் மறுபதிப்பு கண்டுள்ளது .

2] “ பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ?” -  இ.பா.சிந்தன் எழுதியது . தற்போது [2024 ல்] வெளியிடப்பட்டது .

 

85 ஆண்டு கால இடை வெளியில் வந்துள்ளன இரண்டு நூல்கள் .

 

முதல் நூலில் 1938  வரையிலான வரலாற்றில் எப்படி எல்லாம் பாலஸ்தீன மக்கள்  வஞ்சிக்கப் பட்டுள்ளனர் என்பதையும் ; இஸ்ரேல் எனும் யூத நாட்டை பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணில் ஏகாதிபத்தியம் எப்படித் திணித்தது என்பதையும் ; ஜியோனிசத்தின் தோற்று வாயையும் நுட்பமாக வரைந்து காட்டி இருக்கிறார் வெ.சாமிநாத சர்மா .

 

85 ஆண்டுகளில் நிலமை சீரடையவில்லை .மாறாக மேலும் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் பாலஸ்தீனம் ஆளாகி உள்ளது  என்பதையும் ; ஏகாதிபத்தியங்களின் இதயமற்ற காய் நகர்த்தகளையும் இஸ்ரேலின் வஞ்சகமும் குரூரம் கொண்ட ஜியோனிச போக்கு எப்படி உச்சத்தை எட்டி இருக்கிறது என்பதையும் இ.பா.சிந்தனின் நூல் எடுத்துக் காட்டுகிறது .

 

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா முதலில் காட்டிய அரசியல் உறுதி எப்படி மெல்ல மெல்ல தளர்ந்து இப்போது இஸ்ரேலின் கூட்டுக் களவாணியாய் கூட்டுக் கொடூரனாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்நூல் சொல்கிறது .

 

இரண்டு நூல்களின் உயிர் சரடும் ஒன்றுதான் . சாதாரண வாசகரை நோக்கி எளிமையாக சுருக்கமாகப் பேசுவதுதான் இரண்டு நூல்களுக்கும் கூடுதல் சிறப்பு .மொழி நடையில் இரண்டுக்குமான கால இடைவெளி வெளிப்படும் . 85 ஆண்டுகாலத்தில் ஜீயோனிசம் ஆழக்கால் பதித்து மூர்க்கமாயிருப்பதையும்; ஏகாதிபத்தியம் கூட்டாளி ஆயிருப்பதையும் நூல் சொல்கிறது .

 

 

[ வழக்கமாக நூல் அறிமுகம் செய்யும் போது நூலில் இருந்து சில செய்திகளை நான் எடுத்துச் சொல்வேன் .இம்முறை அப்படிச் செய்யவில்லை . ஏனெனில் நீங்களே முழுதாய் வாசித்து உள்வாங்க வேண்டும் என்பதால் ]

 

இந்த இரண்டு நூல்களையும் வாசிப்பது என்பது பாலஸ்தீனப் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும் என்பது மட்டுமல்ல ; இங்கே இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர் பேசும் குரலும் இஸ்ரேல் ஜியோனிசத்தின் குரலும் ஒருப்போல் இருப்பதை உணரவும் இந்நூல் உதவுகிறது .

 

ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பும் இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதும் ; அது சீழ்பிடித்த முதலாளித்துவ [Crony capitalism] எதிர்ப்பின் இன்னொரு முகம்தான் என்பதும் இந்நூல் சொல்லும் பாடம் .

 

நாம் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழமாகப் புரிந்து கொண்டால்தான் ; நம்முடைய எதிர்ப்பு கூர்மையும் வலுவும் கொண்டதாகும் . அதற்கு இந்நூலை அவசியம் படியுங்கள் ! பரப்புங்கள் !

 

மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் இளைய தலைமுறைக்கு அரசியல் உறுதி வேண்டும். அதற்கு இந்நூல் வாசிப்பு முதல் அடிவைப்பாக ஆகட்டும் ! நம் குரல் வலுக்கட்டும்.

 

1]பாலஸ்தீனம்  ,  ஆசிரியர் : தோழர் வெ.சாமிநாத சர்மா,

பக்கங்கள் : 80 , விலை : ரூ.80 /

2] பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ? , ஆசிரியர் : இ.பா.சிந்தன் ,

பக்கங்கள் : 144 , விலை : ரூ.140 /

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / 
www.thamizhbooks.com

சுபொஅ.

05/09/24.




மாண்பமை நீதிமான் அவர்களே !

Posted by அகத்தீ Labels:

 



மாண்பமை நீதிமான் அவர்களே !

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

அவர்கள் ஆண்டுக் கணக்காய்

பாலஸ்தீனக் குழந்தைகளை

ஏறெடுத்து பார்க்கவும் மறுக்கிறார்கள் !

 

அவர்கள் சோமாலியா குழந்தைகளுக்கு

எந்த அரிசியிலும்

பெயர் எழுத மறுக்கிறார்கள் !

 

தன் கண்ணெதிரே நடக்கும்

பாலியல் வன்புணர்வை தடுக்காமல்

கண்டு களிக்கிறார்கள் !

 

ஆதிக்க கொடுஞ்சிறையில்

பாட்டாளி தோழர்களுக்கு

கடைக்கண் திறக்கவும் மறுக்கிறார்கள் !

 

மதம் பிடித்த மனிதர்களின்

மனிதமற்ற வன்முறைகளை

ஆசீர்வதித்து மகிழ்கிறார்கள் !

 

வல்லான் வகுத்ததே வாய்க்காலென

அவர்கள் பக்கமே சாய்ந்து

அறம் கொல்கிறார்கள் !

 

அச்சமும் அறியாமையும் அடிமைத்தனமும்

உச்சத்திற்கொண்டு வாழ்வதே

ஏழைக்கு விதிக்கப்பட்டதென நம்பச் சொல்கிறார்கள் !

 

இன்னும் இன்னும் சொல்லச் சொல்ல நீளும்

அத்தனை கொடுமைகளுக்கும்

சாட்சியாய் , கல்லாய் நிற்கிறார்கள் !

 

மாண்பமை நீதிமான் அவர்களே !

அருள்கூர்ந்து…

 

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

சுபொஅ.

03/09/24.