சும்மா கிடந்த சொல்லை எடுத்து 4.. கணக்கு மீறி

Posted by அகத்தீ Labels:








சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 4 




கணக்கு மீறித் தின்ற கனத்த ஆடு




சு.பொ.அகத்தியலிங்கம்

“பறவைகளோடும் சிப்பிகளோ டும் சிறுபல்லிகளோடும் நரிகளோ டும் பென்குவின் பிரதிநிதிகளோடும்  / நான் பேசுவதற்கு முடிந்திருக்குமெ னில் ..” எனத்தொடங்கும் ‘ விலங்கு நெறி’ எனும் நெடுங்கவிதையில் ஓரி டத்தில் “ எனக்கு எப்போதும் பேச நேர்ந்ததில்லை நவநாகரிக விலங்குக ளோடு” எனக் குத்திக்காட்டுவார் பாப்லோ நெருடா.

அக்கவிதையில் ஆடு, நாய், குதிரை, குளவி, , முயல், தவளை, கொசு, சிலந்தி , எருமை என அவர் பாகுபாடு காட்டாமல் உரையாட விரும்பினார்; அதன் காரணமும் சொன்னார் . “ எதைக் கண்டறிய வந் தேனோ  /அதை அறிந்து கொள்ளா மல் / இந்தப் பூமிக்கோளத்தைவிட் டுப்  /போகமாட்டேன் ” என்கிற பொருள் பொதிந்த பிரகடனம் பாப்லோ நெருடாவின் அந்த நெடுங் கவிதையின் இறுதிப் பகுதியில் இடம் பெறும்.ஆதி மனிதன் தொட்டு இன்று வரை விலங்குகளை பறவைகளை மனிதன் குறியீடாகப் பயன்படுத் தியே வந்துள்ளான் .

பாம்பைக் காமத்தின் குறியீடாய்க் காணும் வழக்கம் உலகில் பலநாடுகளில் உண்டு. நீதி நெறிக்கதைகளாகட்டும் குழந்தைகள் இலக்கியமாகட்டும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனித்துவமான இடம் உண்டு. காதலையும் இயற்கையையும் போல விலங்குகளும் கவிஞர்களின் குருதியோடு கலந்தவை போலும். பாப்லோ நெருடாவின் இளைய தோழன் பட்டுக் கோட்டையின் பாடல்களில் இவை நீக்கமற நிறைந்திருக்கின்றன. முந்தைய வாரங்களில் குருவிகளிடம் காகங் களிடம் பாடம் கற்கச்சொன்ன பட்டுக்கோட்டையைக் கண்டோம்.மனித குணங்களையே விலங்குக ளோடு ஒப்பிட்டுத் தீர்மானிப்பதும் தொடர்ந்து பட்டுக்கோட்டை தீர்ப்பு வழங்குவதும் அபாரம்.

“ உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் – காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக்குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாக வாழுதடா ! ” (சக்கரவர்த்தித் திருமகன் - 1957)


அடேயப்பா ! மிருதுவாயிருக்கும் மென்மையாய் நடக்கும் பூனை; ஆனால் அது திருடும் . குரங்கு நம்ம மூதாதையர். ஆனால் அதற்கு எதுவும் அவசரம்; பிய்த்து எறிந்துவிடும்; வைத்து அழகு பார்க்காது. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. இவை மொத்தமாய் இருக்கும் மனிதன் எப்படி இருப்பான் ?மனிதனை சிரிக்கும் விலங்கென் றும் சிந்திக்கும் மிருகமென்றும் சமூகவியலாளர்கள் கூறுவர். அந்த மனிதக் கூட்டம் என்ன செய்யுது ? “அடுக்குப் பானை போன்ற / வாழ்வை துடுக்குப் பூனை உடைக்குது ” (பாச வலை 1956), இது ஒரு பாடலின் கடைசி வரிகள். ஆமாம். வாழ்க்கை ஒன்றோடொன்று தொடர்புடை யது. ஒன்றின் மீது மற்றொன்றாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது . அதனை அடுக்குப் பானையோடு ஒப்பிடுகிறார் பட்டுக்கோட்டை. இந்த உவமையை ரசிக்க அடுக்குப் பானை பற்றி தெரிந்திருக்க வேண்டும். .

இன்றைய நகர இளைஞர்களுக்கு இந்த எடுத்துக்காட்டு சித்தரிப்பு புரியுமோ ? அன்று பிளாஸ்டிக் பொருள்கள் வீடுகளை ஆக்கிரமிக் காத காலம். ஒரு மண்பானையில் அரிசி, இன்னொன்றில் புளி , இன் னொன்றில் கருப்பட்டி , இன்னொன் றில் பருப்பு, இன்னொன்றில் கேழ் வரகு இப்படி பானைகளை ஒன்றின் மேலொன்றாய் அடுக்கி வைத்திருப் பார்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மூடி இருக்காது. மேலே உள்ள பானைக்கு மட்டுமே மூடியிருக்கும். பூனை தட்டிவிட்டால் எல்லாம் விழுந்து சிந்தி சிதறிவிடும். அது தன் தேவைக்கு இப்படி இழுத்துப்போட எல்லோருக்கும் சிக்கலாகிவிடும். சிலரின் சுயநல குணமும் அப்படித் தான். இதே பாடலில் முன் பத்தி யொன்றில் கூறுவார்;

“கணக்கு மீறித் தின்றதாலே / கனத்த ஆடு சாயுது- அதைக்  /கண்ட பின்னும் மந்தையெல்லாம்  /அதுக்கு மேலே மேயுது” இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்கூட்டு இருக்கிறது என்கிறார் பட்டுக்கோட்டை. இப்படி இலைமறைவு காய்மறைவாய் சொன்னால் போதாது என்று கரு தினாரோ என்னவோ அடுத்து ஓங்கி மண்டையில் நறுக்கெனக் குட்டுகிறார்.“ பணக்கிறுக்குத் தலை யிலேறிப் / பகுத்தறிவு தேயுது- இந்தப்  /பாழாய்ப் போற மனிதக் கூட்டம் / தானாய் விழுந்து மாயுது”

அடே 1957 ல் சொன்னார் 2014 லும் நிலைமை திருந்திவிடவில் லையே ! பணக்கிறுக்கு சமூகத்தை என்னமாய் ஆட்டுவிக்கிறது ! “காசே தான் கடவுளடா ! அந்தக் கடவுளுக் கும் இது தெரியுமடா” என்று பாடு கிறானே ! “ காசு மணி துட்டு பணம் பணம் ”என வெறிபிடித்து ஓடுகிறானே !ஆடுகிறானே . “  கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் அய்யோ பாவம் காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம் ”என கண்ணதாசன் சும்மாவா சொன்னான் ? இந்தப் பணவெறி திருடச் சொல்லுது !

ஆனாலும் எல்லா திருடனையும் சமூகம் ஒரே மாதிரி குற்றவாளியாய் பார்க்குதா ? இல்லையே ! “ பட்டப் பகல் திருடர்களைப்  /பட்டாடை கள் மறைக்குது – ஒரு  /பஞ்சையைத் தான் எல்லாஞ் சேர்ந்து / திருட னென்றே உதைக்குது” என்றானே பட்டுக்கோட்டை .

இதுதானடா சமூக லட்சணம் !பூனைக்குணம் , குரங்குக் குணம், முதலைக்குணம் எல்லாம் மொத் தமாய் இருக்கும் இந்த மனிதக் கூட்டத்தின் மந்தை உளவியல் கண்டு மனம் நொந்தார் . ஆட்டுக்கும் இந்த நாட்டுக்கும் ரொம்பக் கூட்டிருக் குன்னு சொன்னவராச்சே ! விவகாரத் தைப் பல்லை உடைத்துக் கையில் கொடுப்பதுபோல் தந்துவிடுகிறார்.

“ புரளி கட்டிப் பொருளைத் தட் டும் சந்தை .– பச்சை /புளுகைவிற்றுச் சலுகை பெற்ற மந்தை. – இதில்  /போலிகளும் காலிகளும் பொம் மலாட்டம் - ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை..” இப்படி நிலைமையைச் சொன்ன தோடாவது நின்றாரா ? இல்லை .

தொடர்ந்து பாடுகிறார் “ உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் – நம்பி / ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நாம்  /உளறி என்ன கதறி என்ன ? / ஒன்றுமே நடக்கவில்லை தோழா – ரொம்ப நாளா …”.ஒரு வகையில் நம்பிக்கை வறட் சியைச் சொல்வதுபோல் தோன்றும்; மறுபுறம் இடித்துரைத்து விழிக்கச் செய்யும் உத்தியாக இருப்பது உற்று நோக்கின் புலப்படும் .

ஒரு கவிதையில் வைரமுத்து சொல்வார்:
“விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கைவிலங்குக்கில்லை-- -- ---

காட்டுக்குள்
மூட நம்பிக்கையில்லை
அங்கே
நெருப்புக் கோழி கூடத்
தீமிதிப்பதில்லை”

பட்டுக்கோட்டையின் விலங்கு, பறவைக் காதலும் ஆழமானது அல்லவா ? கழுகு, பெருச்சாளி, நரி, காளை, இப்படி விலங்குகள், பறவைகள் எல்லாம் பட்டுக் கோட்டை பாடலில் உயிர்பெற்று நம்மைப் பகடி செய்யும் ; இயற்கையும் வாழ்க்கையைச் சொல்லித்தரும் . வரும் வாரங்களில் பார்ப்போம் !

நன்றி :தீக்கதிர் இலக்கியச்சோலை 26 -05-2014

0 comments :

Post a Comment