தோற்கவே கூடாத கொள்கை ... வெறும் வார்த்தை அல்ல..

Posted by அகத்தீ Labels:

தோற்கவே கூடாத கொள்கை... வெறும் வார்த்தை அல்ல...

சு.பொ.அகத்தியலிங்கம்

“ பொதுவுடைமைக் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்து பதினெட்டு இடங்களில் நின்று, ஒவ்வொன்றும் இரண்டு லட்சம் வாக்குகள் பெற்றிருக்கின்றன. அரை விழுக்காடு இனி எந்தத் தலைவரும் கூட்டணியில் இடம் தரமாட்டார்கள். இதயத்தில் மட்டுமே இடம் தருவார்கள். தோற்கவே கூடாத ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.” இது பழ. கருப்பையா தினமணி ஏட்டில் “ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர் ” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள வரிகள்.

அதில் கடைசி இருவரிகளை மீண்டும் படியுங்கள். இது “ தோற்கக்கூடாத கொள்கைகள்” என ஒப்புக் கொண்டதற்கு நன்றி! தோல்வியின் காரணங்களை கட்சி நிச்சயம் பரிசீலிக்கும். குறைகளையும். விரைந்து முன்னேறும். தேர்தலோடு எல்லாம் முடிந்து போவதில்லை. இதனை பழ.கருப்பையா அறிவது அவசியம். அவர் மட்டுமல்ல மத்தியில் ஆட்சியைப் பிடித்தக் கூட்டமும் இதுபோல்தான் பிதற்றிக் கொண்டிருக்கிறது.

நுனிகொம்பர்களே! கூத்தாட வேண்டாம்.வானுள்ள வரையும் மண்ணுள்ள வரையும் நீங்கள் தான் என மக்கள் தீர்ப்புசொல்லவில்லை. இந்த வெற்றி காலவரை யறைக்கு உட்பட்டதே! தோசையைத் திருப்பிப்போடுவது போல் அடுத்தமுறை மக்கள் திரும்பமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?நான் பிறந்த ஊரில் தெருவுக்கு தெரு சுடலைமாடன் சாமி இருப்பார்.

அந்த சுடலைமாடனுக்கு எதிரே ஒரு சிறு கல்லிருக்கும். அதனை எதிர்மாடன் என்பர். ஆண்டுதோறும் கொடையின் போது எதிர்மாடனுக்கு படையல் உண்டு. எதிர்மாடன் இல்லாத சுடலைமாடன் ஊரை அழித்துவிடுவார் என்று என் அம்மா பாட்டி எல்லோரும் சொல்வர். அவர்களின் நம்பிக்கை அது. ஆனால் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி முக்கியம். இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் அதுவே பிரச்சனை. எதிர்க்கட்சிகளின் பாத் திரத்தை வகிக்க வேண்டிய ஊடகங்கள். கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை ஆகிவிட்டன. மக்களும் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் தேவையை உணரவில்லை. அதனால்தான் தன் வாக்கை ஜெயிக்கிற கட்சிகளுக்கே போடவேண்டும் என நினைக்கிறார்கள். எங்களை நல்லவர்கள் கொள்கைப் பற்றாளர்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் மக்கள் கூட தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கும் போது அளிக்கும் வாக்கு பயனற்றது எனக் கருதுகிறார்கள்.

மேலும் தேர்தலையே இறுதி புகலிடமாகக் கருதாததால் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தேர்தல் முன் தயாரிப்புகளைச் செய்யத் தவறிவிடுகின்றனர். மலைகள் மோதும்போதும், அலைஅடிக்கும் போதும் இடையில் வருபவர் நசுங்குவது இயல்பே! இவற்றினால் கொள்கை தோற்றுவிட்டதாகக் கூறமுடியாது.

சோவியத் யூனியனின் தகர்வு எவ்வளவு பெரிய துயரத்தை நெருக்கடியை கொண்டுவந்திருக்கிறது என்பதை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவிலும் இடதுசாரிகளின் பின்னடைவு நல்லதற்கல்ல என்பதை அரசியலின் பாலபாடம் அறிந்தோரும் ஒப்புக்கொள்வர்.

ஆயினும் வலது கோடியிலிருக்கும் ஆட்சியாளர்களை எதிர்க்க எல்லோரும் இனி இடதுசாரிகள் குரலில் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். `ஹிட்லர் முதலில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடுதான் வெற்றி பெற்றான். ஆனால் அவன் பாசிசத்தை முறியடிக்க சோவியத் யூனியனும் கம்யூனிஸ்டுகளும் 2 கோடிக்கும் அதிகமானோரை உயிர்த்தியாகம் செய்யவேண்டியிருந்தது. இது வெறுமே வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல. வரலாற்றுப் பாடமும் கூட.
ஒற்றையாளாய் நிற்க நேரினும் சமரசமற்றப் போரினைத் தொடர்பவர்களே கம்யூனிஸ்டுகள். பாலூட்ட முயலும் போது குழந்தை மார்பைக் கடித்துவிட்டது என்பதற்காக குழந்தையின் தலையைக் கடிக்காதவளே தாய்.அதுபோல் மக்களிடம் மாளாநேசம் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் பணியும் ஓயாது. போராட்டங்களும் நிற்காது . லட்சியமும் தோற்காது. தோற்கவிடவும்மாட்டோம். ஆயிரம் முறை விழினும் ஆயிரத்தோராவது முறை எழுவோம். வெல்வோம். “ தொலைந்த வெளிச்சம்” எனும் கவிதையில் கல்யாண்ஜி சொன்னவைகளை அசைபோட்டுப் பார்க்கிறேன்.

“ கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிற போது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.”

இதுதான் மெய்யான மாற்றை கனவுகாணும் பெரும்பாலோர் உள்ளக்கிடக்கை.

நன்றி : தீக்கதிர் 24 -05 -2014

0 comments :

Post a Comment