சும்மா கிடந்த சொல்லை எடுத்து .. [ 2 ]

Posted by அகத்தீ Labels:








சும்மா கிடந்த சொல்லை எடுத்து -  [2 ]


கூடுபின்னும் குருவிகள் கூறுகின்ற சேதி


- சு.பொ.அகத்தியலிங்கம்

காதலுக்கும் கவிதைக்கும் உள்ள உறவை சரியாக வரையறை செய்வது பெரும் சிரமம் . காதல் துளிர்க்கும் போது நெஞ்சில் கவிதை மீதான காதலும் துளிர்த்து விடுமோ? இருக்கலாம் .

காதல் இல்லாத சினிமாவை எத் தனை பேர் ரசிப்பார்கள் . திரைப்படங் கள் மௌனப்படமாய் இருந்த காலம் தொட்டு காதல் பாடல்கள் உண்டு. திரைப்படம் பேசும் படமானதிலிருந்து எத்தனை விதமான காதல் பாடல்கள்? யோசிக்க யோசிக்க சிறகுகள் விரியும். அவற்றில் மென்மையாய் வருடியகாத லும் உண்டு . காமம் கொப்பளித்தகாத லும் உண்டு .

“நெஞ்சுக்குள்ளே முள்ளு மொளச்சா...” என காதல் உறுத்தலை பாடத்துவங்கிய ஒரு பாடல் (படம்: கங்காரு) “ தள்ளிப் போட காதல் ஒண்ணும் / தேர்தல் இல்லை வாடி /தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை /தந்துவிட்டு போடி...” என காதலில் தப்பு நடப்பதை நியாயப்படுத்தும். காதலில் இரண்டு வகை சைவம் ஒண்ணு அசை வம் ஒண்ணுண்ணு தமிழ் திரைப்பட உலகம் தனி இலக்கணமே வகுத்துக் கொண்டு விட்டது . இது சரியா ? பண்பாட்டு அளவுகோலின்படி இவை ஏற்கத்தக்கதா இல்லையா என்கிற விவாதம் நடந்து கொண்டே இருக்கிறது.

தெய்வீகக் காதல் என்பதும் புனித மான காதல் என்பதும் வெறும் பகட்டுப் பேச்சே . காதல் இயற்கையானது. தவிர்க்க முடியாதது . நம்மைச் சுற்றி ஒருமுறை பாருங்கள். தலைகொடுத்தான் தம்பி (ஆண்டு 1959) திரைப்படத்தில் பட்டுக் கோட்டை இதனை காட்சிப் படுத்துகிற பாங்கே தனி.

“ துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் / என்ன சொல்லுது ?- பல / துண்டு துண் டாய் எழுந்து - அது / எங்கே செல்லுது” என அவள் கேட்க, “ கள்ளவிழிப் பார்வையைக் / கண்டுகொள்ளுது - கோபங் /கொண்டே துள்ளுது - உன் / கன்னத்தில் கிள்ளிவிட்டு சிரிக்கச் சொல் லுது !” இப்படி அவன் கூற பாடல் நீளும். நண்டு , வண்டு என ஒவ்வொன்றாய் சுட்டி அவள் கேட்க அவன் பதில் சொல்வான். இறுதியாக . “ பாக்குமரச் சோலையிலே/ பளபளக்கும் பாளையிலே/பறந்து பறந்து குருவியெல்லாம்/என்ன பின்னுது?” என அவள் வினவ அவன் சொல்வான், “அது வாழ்க்கையை உணர்ந்துகிட்டு / மனசும் மனசும் கலந்து கிட்டு/மூக்கினாலே கொத்தி கொத்தி / கூடு பின்னுது” என்பதோடு நில்லாமல் இருவரும் இணைந்து சொல்வர் , “இத்தனையும் நம்மைப் போல / இன்பம் தேடுது - இதை / எண்ணும் போது நமது மனம் / எங்கோ போகுது ”.

ஆக , காதல் இயற்கையானது என் பதை கவிஞர் எவ்வளவு இயல்பாய் பாடி விட்டார் பாருங்கள் .அதே சமயம் காதல் பொறுப்பற்றதாகக் கருத பட்டுக்கோட் டையால் முடியாது. ஏனெனில் அவர் சமூகப் பொறுப்புமிக்க கவிஞர். எனவே தான் குருவிகள் கூட பொறுப்புணர்ந்து வாழ்க்கையை உணர்ந்து தன் காதல் வாழ்வுக்கு கூடுகட்டுவதை சுட்டிக்காட்டி ‘மனிதா! காதலிக்கும் போது உனக்கும் அந்த பொறுப்பு வேண்டாமா?’ என வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் நற்பார்வையை காதலுக்குத் தருகிறார்.

காதலை வர்ணிப்பதில் நெகிழ்ந்து நெக்குருகுவதில் எல்லா கவிஞர்களும் ஒன்றே. ஆனால் எல்லையற்ற காமவிர சத்தைக் கொட்டி எழுதுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு எடுத் துக்காட்டு சொல்லப் போயின் இந்தப் பக்கமே ஆபாசத்தின் எல்லை கடக்கும் அபாயம் உண்டு. “கட்டிப் பிடி கட்டிப்பி டிடா...” “கடித்து தின்னேண்டா..” “ தப்பு பண்ணேண்டா..” என்றெல்லாம் நேரடி யாக எல்லைதாண்டும் பாடல்கள் உண்டு.அவை மட்டுமே இன்றைய திரைப்படத்தில் காதல் லட்சணம் என்று கூறுவது மிகவும் குறுகிய பார்வை . அப்படிப்பட்ட பாடல்களுக்கு இடையே அந்திமழை பொழிவதுபோல் இதயத்தை வருடுகிற ஏராளமான பாடல்களும் அன் றாடம் காதில் புகுந்து நெஞ்சில் கலக்கி றது . அதே சமயம் சமூகப் பொறுப்பும் ஆண்பெண் சமத்துவமும் மிக்க காதல் பாடல்கள் மிகச் சொற்பமே .இங்கே தான் பட்டுக்கோட்டையின் தனித்துவம் வெளிப்படுகிறது . காதலும் காமமும் வரம்புகட்டி சமூகப்பொறுப்புடன் அவன் பாடல்களில் சிரித்தது .

“மலர்க் கொடி தலையாட்ட / மரக்கிளையும் கை நீட்டக் / கிளையில் இணையும்படி ஆனதுமேனோ ” - இங்கே யும் பெண்தான் கேட்கிறார்.ஆனால் மலர் தலையாட்டுகிறது கிளை கை நீட் டுகிறது என இருவரையும் பொறுப்பாக்கு கிறார் . காதலில் ஒருவர் மட்டுமே குற்ற வாளி ஆகமுடியாதல்லவா ? அதைத் தொடர்ந்து அவன் விளக்குகிறான், “ இயற்கையின் வளர்ச்சி முறை / இளமை செய்யும் கிளர்ச்சி முறை /ஏனென்று நீ கேட்டால் யானறிவேனா? (இரும்புத் திரை - 1960.) இயற்கை, இளமைக் கிளர்ச்சி எனக் கூறியபின் அது வரம்புக்குள் கட்டுப்படுமா ?

முகத்தில் முகம் பார்க்கலாம் பாடலின் கடைசியில் கவிஞர் பாடுகிறார், “ கலையெல்லாம் பழசாகலாம் - சதங்கை / குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் / குறும்பு படர்ந்திடும்” ஆம், ‘வரம்பு ’ கடக்கும் போதும் அது ‘ குறும்பு என்கிற அளவோடு நிறுத்துகிறார் கவிஞர் . “ தப்புபண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி ” என்று ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய கவிதை போல் கோரிக்கை வைக்கவில்லை.

கல்யாணப்பரிசு (1959) திரைப்படத் தில் இந்த குறும்பு எல்லை மீறும் போது பெண் சொல்லுவது போலுள்ள வரிக ளில் , “ பொறுமை இழந்திடலாமோ ? - பெரும் / புரட்சியில் இறங்கிடலாமோ? - நான் / கருங்கல்லுச் சிலையோ காத லெனக் கில்லையோ...” என கடிவாளம் போடுகிறார் .இது காதலுக்கு கடிவாளம் அல்ல .
“ கழியக் காதல ராயினும் சான்றோர் /பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” எனச் சங்க இலக்கியம் , சான்றோர் பழியுடன் வரும் இன்பத்தைக் காதலர் விரும் பார் எனச் சுட்டுகிறது . இது காதலர்க்கு மட்டும் அன்று கவிஞர்க்கும் உரியது என்கிறார் திறனாய்வாளர் பா. வீரமணி .

அதே பாடலில் கடைசியில் இருவ ரும் சேர்ந்து பாடும் வரிகள் நயமானவை, ஆண்-பெண் சமத்துவத்தின் குறியீடுமாகும் . “ சைக்கிளும் ஓடும் மண்மேலே - இரு / சக்கரம் சுழல்வது போலே - அணை / தாண்டிவரும் சுகமும் தூண்டிவிடும் முகமும் / சேர்ந்ததே உறவாலே ” ஆம் வாழ்க்கை என்பது ஒற்றைச் சக்கர வாகனமாகாது . இரு சக்கரமாய் ஒன்றோ டொன்று இணைந்தும் ஈடுகொடுத்தும் ஓடுவதன்றோ வாழ்க்கை ? “அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்ப மில்லை” - இது ஆண் . “வீணை மட்டு மிருந்தால் நாதமில்லை”- இது பெண் . “மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை”- இது ஆண்.இவ்வாறு காதல் கீதம் இசைக்கும் போது அங்கே இதயம் கனிந்து, எதையும் மறந்து, இருவர் மகிழ்ந்து உறவாடுவர் என்கிறார்... ஆயின் இவர்களின் உறவாடல் எப்படி கண்ணியமாக இருந்தது என்பதற்கு இப்பாடலின் ஆரம்பவரிகளை அசை போட்டுப் பாருங்கள் . “ ஆடை கட்டி வந்த நிலவோ - கண்ணில் / மேடைகட்டி ஆடும் எழிலோ - இவள் / ஆடைகட்டி வந்த நிலவோ - குளிர் / ஓடையில் மிதக் கும் மலர் / ஜாடையில் சிரிக்கும் இவள் / காடுவிட்டு வந்த மயிலோ - நெஞ்சில் / கூடுகட்டி வாழும் குயிலோ ”. (அமுத வல்லி 1954) இதற்கு விளக்கம் தேவையா என்ன?

“எப்படி அல்லது எப்பொழுது அல்லது எங்கிருந்து / என்று தெரியாமல் உன்னைக் காதலிக்கிறேன் / எந்தவிதப் பெருத்த சிக்கலோ இறுமாப்போ இல்லா மல் / உன்னை நான் நேரடியாக காதலிக் கிறேன் ” என்றான் பிரபஞ்சக் கவிஞன் பாப்லொ நெருதா. அந்தக் காதலை வெறுத்தால் என்னவாகும்? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். கலீல் ஜிப்ரன் சொன்ன கதைக் கவிதை நினைவுக்கு வருகிறது;

“வெள்ளைக் காகிதம் ஒன்று
பனிக்கட்டி போலப்
பிரகாசமாய், பரிசுத்தமாய் இருந்தது...
அது சொன்னது,
“நான் பரிசுத்தமானதாய்ப் படைக்கப்பட்டேன்..
இறுதி வரை பரிசுத்தமானதாகவே இருப்பேன்...
இருள் என் அருகில் வர
இறுதி வரை நான் அனுமதிக்க மாட்டேன்...
சுத்தமில்லாத எதுவும்
என்னைத் தொடவும் கூடச் சம்மதிக்க மாட்டேன்..!”

கறுப்பு மைபுட்டி ஒன்று
காகிதம் சொன்னதைக் கேட்டது..
தனக்குள் சிரித்துக் கொண்டது...
ஆனாலும் காகிதத்தை நெருங்க
அதற்குத் தைரியம் வரவில்லை..!

பல வண்ண வண்ண பென்சில்கள் கூட
வெள்ளைக் காகிதம் சொன்னதைக் கேட்டன..
ஆனால் அவையும்
அதை நெருங்கத் துணியவில்லை
இன்று வரை
வெள்ளைக் காகிதம்தான்
விரும்பியபடிபரிசுத்தமானதாகவே இருக்கிறது ...

ஆனால்,
வெறுமையாக இருக்கிறது ..!! ”

ஆமாம் , மெய்தானே உளிக்கு பயந்த கல் சிலையாகுமா ? உலக் கைக்குப் பயந்தால் நெல் அரிசியா குமா? இந்த வெறுமை தேவையா ? பட்டுக்கோட்டை வாழ்க்கையை எவ்வாறு அணுகினான்? அடுத்து பார்ப்போம்.

 - நன்றி ; தீக்கதிர்  இலகியச் சோலை 12-05- 2014​

0 comments :

Post a Comment