அர்த்தமுள்ள வாழ்வு ...

Posted by அகத்தீ Labels:




அர்த்தமுள்ள வாழ்வு ...

தோழர் ஆர் உமாநாத் மறைவு . ஒரு லட்சியவாதியின் தொடர் ஓட்டம் முடிந்தது . அதே தீப்பந்தத்துடன் தடைதாண்டி பயணம் தொடர உறுதிகுலையா போராளிகள் இன்னும் இன்னும் வந்துகொண்டே இருப்பர்..

உமாநாத் வயது 93 . கல்லூரி காலம் தொட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டவர் . லட்சிய உறுதி குன்றா அவரின் வாழ்க்கை வரலாற்றை 2000 ஆண்டில் நான் எழுதிய தருணங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது . அந்நூலின்அர்த்தமுள்ள வாழ்வுஎன்ற  கடைசி அத்தியாயத்திலிருந்து சில பத்திகள் கீழே ...

நாட்டுக்காக சமூகத்திற்காக உழைப்பாளி வர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்ட உன்னத கம்யூனிச லட்சியங்களுக்காக ..

*  9 ஆண்டுகள் 6 மாதங்கள் ஆக மொத்தமாக 3465 நாட்கள் சிறையில் வாடினார் ..

*  7 ஆண்டுகள் அதாவது 2555 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்துள்ளார் ..

*  தலைமையேற்ற போராட்டக் களங்கள் , உண்ணாவிரதங்கள் , சந்தித்த தாக்குதல்கள் ..  அளவிலடங்கா ..

* சுமார் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் பல லட்சம் மணி நேரம் மக்களுக்காகப் பேசி இருக்கிறார் . அவர் குரல் நாடாளுமன்றம் , சட்டமன்றம் ,ஆலைவாயில் , தெருமுனை , வீதிகள் , கருத்தரங்குகள் ,பேரவைகள் , மாநாடுகள் , குழுக்க்கூட்டங்கள்  என ஒலித்தது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராளி குரலாய் ஒலித்தது .

*  7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் .

*  தன் வாழ்நாளில் சோவியத் யூனியன் , மக்கள் சீனம் , ருமேனியா , பல்கேரியா , ஆஸ்திலேரியா , ரோமாபுரி , யுகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்தார் .

*  கட்சி உறுப்பினராய் தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராய்த் உயர்ந்தார்.

இப்படி கம்ப்யூட்டரில் அவரைப் பற்றி புள்ளிவிவரங்கள் தொகுக்கலாம் . உமாநாத் அதில் மட்டும் வாழவில்லை .

தான் ஏற்றுக் கொண்ட சோஷலிச லட்சியத்தை உடனடியாக அடைய முடியாது . நீண்ட நாள் ஆகும் . உழுவதும் , விதைப்பதும் , களை எடுப்பதும் , உரமடிப்பதுமே தம்பணி . அறுவடைப் பலன் அடுத்த தலை முறைக்கு உரியது .

ஒரு வேளை இன்னொரு தலைமுறையோ , இரண்டு தலைமுறையோகூடக் காத்திருக்க நேரிடலாம் . நம்பிக்கை கீற்றை நோக்கி சோர்வின்றி பயணப்பட தெளிந்த சிந்தனையும் - திடங்கொண்ட நெஞ்சமும் - பார்வையில் புதுமையும் - பயணத்தில் உறுதியும் வேண்டும் . அந்த லட்சியக் கனவுகளுக்காக நிகழ்கால வாழ்வை மெழுகுவர்த்தியாய் எரித்துக் கொள்ளவேண்டும் . வெற்றிப் புன்னகைக்காக தலைமுறை தலைமுறையாய் தவம் நோற்க வேண்டும் . அர்ப்பணிப்பின் முழுப்பொருளே அந்தலட்சிய தவத்தில்அன்றோ உள்ளது .

[ இந்த வரிகள் இன்று எழுதியதல்ல 2000 ல் எழுதியது . தோழர் ஆர் . உமாநாத்தின் ஒப்புதலோடு எழுதப்பட்ட வரிகள் .இன்றும் பொருந்துகிறது . ]

தோழர் . ஆர் .உமாநாத் என்கிற மனிதனின் - தோழனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் - லட்சியதவ  வாழ்வாய் - பார்வை புதிதாய் - பயணம் நெடிதாய்..

இந்த நொடிவரை தொடர்ந்தது .

இனி நாம் தொடர்வோம் !

- சு.பொ.அகத்தியலிங்கம் .

0 comments :

Post a Comment