எம் இயல்பு
சு.பொ.அகத்தியலிங்கம்
யானை பொம்மை கேட்டு
அடம்பிடித்து அழுதழுது
காய்ச்சலே வந்துவிட்டதாம்
எனக்கு..
நான் கேட்டமாதிரி
சுசீந்திரம் கோவில்
திருவிழாவில்
ஊர்வலம்வரும்
முகப்படாம் பூண்ட யானையை
மாமா வாங்கிவர
என் அழுகை நின்றதாம்
அம்மா சொல்லி இருக்கிறாள்.
எட்டாம் வகுப்பு படிக்கையில்
காது தோட்டை
கழுத்து உத்திராட்சத்தை
முடி முன்வெட்டை
தூக்கி எறிய
சாப்பாட்டை மறுத்து
அப்பாவோடு சண்டை போட்டு
சாதித்த நாட்கள்
நினைவில் நிற்கிறது .
குரோம்பேட்டை பள்ளியில்
பள்ளி இறுதி வகுப்பில்
சேர்ந்ததும்..
ஒரு நாள்
உள்ளத்தில் கனந்த நாத்திகம்
உசுப்பிவிட
கோவில் நவக்கிரக பொம்மைகள்
நகர்த்தி அங்கே ஏறி
உட்கார்ந்ததும்
தலைமையாசிரியர் கோபவிழியில்
தண்டனையாய்
101 முறை
நவக்கிரகம் சுற்றியது
நன்றாய் நினைவிருக்கிறது .
குடும்ப வறுமையை
கொஞ்சமும் யோசியாது
இருக்கிற வேலையை துறந்து
தந்தையின் மனது காயப்பட்டபோதும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி முழுநேர ஊழியனாய்
ஆனது
இன்னும்
நெஞ்சில் பதிந்திருக்கிறது..
தொடர்கிறது அந்த
பெருமிதம்
இன்னும்
சொல்லச் சொல்ல நீளும்
கொல்வறுமையோ
பாசவலையோ
என்னை சிறைப்பிடிக்க
ஒருபோதும்
அனுமதித்ததில்லை
லட்சியவெறியில்
சுழன்றுகொண்டிருந்தேன்
சோர்வு அண்டியதில்லை ..
வாங்கப்படுகிற நீதிபோல்
கார்ப்பரேட்டுகளால்
வாங்கப்பட்ட வெற்றியால்
வெறிகொண்ட பித்தனொருவன்
கடையை சாத்திவிட்டு
நடையைக் கட்டென
முகநூலில் பதிவிடுகிறான்
அவனறிவானா?
லட்சிய நெருப்பை
தோல்விக் கறையான்கள்
தின்ன முடியாதென்பதை..
அவனறிவான ?
“ அறத்தினால் வீழ்ந்துவிட்டாய்..”
என்ற பாரதிவரிகளை ...
“ கிளர்ச்சிகொண்டு உயிர்த்து வாழ்தல் “
எம் இயல்பு என்பதை ..
0 comments :
Post a Comment