அன்னா ஹசாரே தோற்றது ஏன்? அவரின் அரசியல் எது?

Posted by அகத்தீ Labels:அன்னா ஹசாரே தோற்றது ஏன்?
அவரின் அரசியல் எது?

சு.பொ.அகத்தியலிங்கம்


அன்னா ஹசாரே போராட்டம் தோற்றுவிட்டதா?அல்லது சுயரூபம் அம்பலமாகிவிட்டதா?உணர்ச்சிவசப்படாமல் அலச வேண்டிய தருணம் வந்துவிட்டது.
கேள்வி-1
முதலாவதாக ஊழலுக்கு எதிரான மக்கள் கோபம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வீறிட்டெழுந்தது ஏன்?

பதில்:
கையூட்டு,லஞ்சம்.லாவணியம்,ஊழல்,முறைகேடு இவை எல்லா காலத்திலும் இருந்துவந்துள்ளது. ஆளும் வர்க்கமும் சுரண்டும் கூட்டமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில ஓட்டைகளை உருவாக்கும்.குறுக்கு வழியில் காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்-கோடீஸ்வரர் ஆகமுடியும் என்ற மயக்கவலையை விரிப்பதன் மூலமும்,சில எலும்புத்துண்டுகளை வீசி எறிவதன் மூலமும் வாலைக் குழைக்கும் நாய்களைத்  தன்னைச் சுற்றிவரச் செய்வது ஆளும் வர்க்கத்தின் தேவை.மக்களின் பார்வை சுரண்டலின் ஆணிவேரை அடையாளம் காணவிடாமல் தடுக்கவும் மக்கள் எழுச்சியை முடிந்தவரைத் தள்ளிப்போடவும் அது ஒரு உத்தியாகும்.அதே சமயம் ஊழலுக்கு எதிராக உரக்கக் குரைப்பதன் மூலம் தங்களை மீட்பர்களாக முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும்;அதாவது கொள்ளைகாரர்களே நியாயவாதிகளாய் மாறும் ரசவாத நிகழும்.சுரண்டலுக்கும் ஊழலுக்கும் இடையிலான மர்ம முடிச்சை அறுத்தெறியாமல் திசைதிருப்பும் வித்தையை ஆளும் வர்க்கம்  நுட்பமாக அறியும்.அந்த நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றவும் செய்யும்.

அதிலும் உலகமய யுகத்தில்.தாரளமய சகாப்தத்தில் ஒரு நாட்டின் இயற்கை வளத்தையும் ,செல்வாதாரங்களையும் தங்குதடையின்றி சூறையாட பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தப் பசியோடு நுழையும்.அதனை சாத்தியமாக்க ; இயல்பாக எழும் உள்ளூர் கோபங்களைச் சரிக்கட்ட தனக்கு கையாட்களை வளைத்துப்போடும்.அதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவு பணம் கைமாறும்.புதிய திடீர் கோடீஸ்வரர்கள் உருவாக்கப்படுவார்கள்.சுயநல அரசியல்வாதிகள் பணமழையில் திழைப்பார்கள்.தற்போது இந்தியாவில் நடப்பது இதுதான்.ஆனால் இந்த தாரளமயக் கொள்கைகள் மக்கள் வாழ்வை பெரும் பள்ளத்தில் உருட்டிவிடுவதால் எழும் கோபத்தை மடைமாற்ற ஊழல் எதிர்ப்பையே ஆளும் வர்க்கம் ஆயுதமாக்குவதுதான் முரண்நகை..இப்போது இந்தியாவில் நடப்பது இதுதான்.அவர்களின் படைப்பே அன்னா ஹசாரே.

கேள்வி-2
அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நாடகம் ஆடுகிறாரா ?அவர் நடத்திய போராட்டம் ஆரம்பத்தில் பெருமளவு மககளை ஈர்த்தது உண்மையல்லவா?

பதில்:
ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் கோபமும் ஆவேசமும் நியாயமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.அவர் போர்க்கொடி தூக்கியதும் காலத்தின் தேவையே.ஒரு பகுதி படித்த மத்தியதர வர்க்கம் அவர் பின்னால் திரண்டதும் சமூக யதார்த்தமே.அதே சமயம் அவருக்கு ஊழலுக்கு எதிராக கோபம் இருந்த அளவுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை.அவரின் தத்துவப் பின்புலம் அப்படி.அதனைப் பின்னர் பார்ப்போம்.

2ஜி,காமென் வெல்த்.ஆதர்ஷ் என படை எடுத்த ஊழல் ஆள்விழுங்கி மலைப்பாம்புகள்  உருவாக்கிய வெஞ்சினத்தை தன் ஆட்சிக்கனவுக்கு மூலதனமாக்க பாஜக விரும்பியது,ஆயினும் அவர்களின் குரல் எடுபடாது என்பதையும் அறிந்து கொண்டது.எனவே அவர்களின் சங்பரிவார் வழக்கப்படி முகமூடி தேடிய வேளை வசமாக அகப்பட்டார் அன்னா.அதிலும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அறிவுஜீவிகள் களத்தில் நின்றது சுலபமானது.பாஜக பின்பலத்தோடு ஊடகங்களின் எல்லைமீறிய ஆதரவோடு அன்னா ஹீரோ ஆக்கப்பட்டார்.தொண்டு நிறுவனங்களும் அந்நிய நிதி உதவியோடு இயங்குவதும்;அவற்றின் அரசியல் உள்நோக்கமும் ஒன்றோடொன்று ஒத்துப்போக அன்னா டீம் காந்தக்கவர்ச்சியோடு களத்தில் காட்சியளித்தனர்.சுரண்டும் வர்க்கத்துக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் அடிப்படையில் அன்னா இயக்கம் ஆபத்தானதும் அல்ல. அடிப்படை மாறுதலுக்கானதுமல்ல.ஆதலால் நாலா பக்கமும் ஆதரவு பெருகியது.பாஜவின் தொண்டர் பலமும் அமைப்பு பலமும் இதன் ஆதார தளமாக இருந்ததை ஆர்.எஸ் எஸ் தலைவர் ஒரு பேட்டியில் போட்டுடைத்திவிட்டார்.ஆயினும் அதை மறுத்துவந்தனர்.

ஊடக விளம்பரமும் செல்வாக்கும் அன்னா டீமுக்கு போதை மயக்கத்தை தந்தது.விளைவு நாடாளு மன்றத்தைவிட இவர்கள் நாலைந்து பேரே சகலத்தையும் தீர்மானிக்கும் அக்மார்க் யோக்கியர்கள் என்ற ரீதியில் செயல்படலானார்கள்.பா.ஜ.கவுக்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டது.பாபா ராம்தேவை போட்டிக்கு களத்தில் இறக்கிப் பார்த்தது.குட்டை குழம்பியது.அன்னா ஹசாரேவின் இன்னொருபக்கமும் வெளிச்சத்துக்கு வந்தது.அது சமூக நீதிக்கு எதிரானது.வர்ணாஸ்ரமத்தைத் தூக்கிப்பிடித்தது.ஜனநாயகத்தை மறுத்தது.இவை எல்லாம் அன்னா மீதான மோகத்தைக் குறைத்தது.இன்றைய[ஆகஸ்ட் 4] தினமணி தலையங்கம் பாஜக அன்னா விவகாரத்தில் முழுமையாக பின்புலமாக நின்றதை ஒப்புக்கொண்டுள்ளது.தேசியக்கொடியையே முகமூடியாக்கியதுதான் சங்பரிவார் சாமர்த்தியம்.ஆனாலும் என்ன செய்ய அன்னாவின் செல்வாக்குபோதையேறிய செயல்பாடும் பேச்சும் அவர்களுக்கும் சங்கடமாகிவிட்டதே.ராம்தேவ் வாழ்த்தவரும்போது மட்டுமே ஒரளவு கூட்டம்;அப்புறம் இல்லை என்பதை செயலில்காட்டி அன்னாவுக்கு தங்கள் பலத்தைக் காட்டியும் விட்டார்கள்.காற்றடைத்த பலூனில் ஒட்டைவிழுந்து சுருங்கி,சூம்பியது கண்டி அன்னா டீம் நொந்தது.விளைவு அரசியலுக்கு வரப்போபதாக கூறி உண்ணாவிரத நாடகத்துக்கு திரை போட்டுவிட்டனர்.ஒவர் பிளே என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது போல் வரம்பெல்லை கடந்து அரங்கேற்றிய நாடகம் துன்பியலாக முடிந்தது.
கேள்வி:3  
இது ஊழல் எதிர்ப்புக்கு பின்னடைவாகாதா?அல்லது இனியும் ஊழலை பற்றி பேசுவது வீண் என்று ஆகிவிடாதா?இது அன்னாவுக்கு கிடைத்த தோல்வியா?மக்களுக்குக் கிடைத்த தோல்வியா?

பதில்:
அன்னாவின் தவறான அணுகுமுறைக்கு கிடைத்த தோல்வியே,ஆயினும் லோக்பால் மசோதா பற்றிய ஒரளவு விழிப்புணர்வு பரவிட அன்னா போராட்டம் உதவியது எனில் மிகையல்ல.லோக்பாலோ, ஜன்லோக்பாலோ ஊழலுக்கு எதிரான சர்வரோகநிவாரணி அல்ல.ஊழலின் ஊற்றுக் கண்ணான இன்றைய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து முறியடிக்காமல் பெரும் மாற்றம் காண இயலாது.இந்தப் பார்வை இல்லாதுதான்அன்னாவின் பெரும் பலவீனம்.ஊடகங்கள் காட்டியதுபோல் ஒட்டுமொத்த இந்தியாவும் அவர் பின் திரள வில்லை.படித்த மேல்தட்டு வர்க்கத்தின் சிறுபகுதியினரே திரண்டனர்.அவர்கள் சமூகநீதிபோரில் எதிர்நிலை எடுப்பவர்கள்.ஊழலுக்கு காரணமான பொருளாதாரக் கொள்கையை ஆதரிப்பவர்கள்.அதனால் பலனடைந்தவர்கள்.இந்த வர்க்கசேர்மானமும் அன்னாவின் பலவீனம்.,உழைக்கும் மக்களை ஈர்க்கவோ இணைக்கவோ இவர்களிடம் எந்த கோஷமும் இல்லை.திட்டமும் இல்லை.நோக்கமும் இல்லை.ஆகவே இதை மக்கள் தோல்வி என்பது பேதமை.பிதற்றல்.மேல்தட்டுமக்களின் விரக்திப் புலம்பலே அது.அரசியல் உறுதி இல்லாமல் வறுமை ஒழிப்போ,ஊழல் ஒழிப்போ சாத்தியமே இல்லை.அது குறித்து இவர்கள் இப்போது பேசுவதும்கூட அரைகுறையானதே.

கேள்வி-4
அரசியல் உறுதி எனபது யாது? அன்னா கட்சி தொடங்கினால் வெற்றி கிட்டுமா?கட்சி என்றானதும் முதலாளிகள்,அந்நிய நிறுவனங்களிடம் தானே நிதி திரட்டல் இருக்கும்;அப்படியானால் ஊழல் எதிர்ப்பு எதிர்ப்பு என்ன ஆகும்?

பதில்:
அரசியல் உறுதி என்பது வெற்றுப் பிரகடமல்ல.தத்துவம் சார்ந்தது.இடதுசாரிகளின் அரசியல் உறுதி பாட்டாளிவர்க்க நலன் சார்ந்தது.அதற்கேற்ற மார்க்சிய தத்துவம் சார்ந்தது.பாஜகவின் அரசியல் உறுதி மேல்தட்டினர் மற்றும் முதலாளி வர்க்க நலன் சார்ந்தது.இந்துத்துவா எனப்படும் சனாதனம் சார்ந்தது.பாட்டாளிவர்க்கம் ஊழலுக்கு எதிரானது.முதலாளிவர்க்கம் ஊழலை ஊட்டி வளர்ப்பது.காங்கிரசும் இதர கட்சிகளும் முதலாளித்துவ நலன்களை பிரதிபலிப்பவையே.வட்டாரம்,பிராந்தியம் சார்ந்து சில கட்சிகள் சற்று மாறுபடலாம்.ஆயினும் ஊழல் எதிர்ப்பில் அரசியல் உறுதியை இடதுசாரிகளைத் தவிர வேறுயாரிடமும் எதிர்பார்க்க முடியாது.அன்னாவின் அரசியல் எத்தகையது என்பது ஏற்கெனவே ஓரளவு மக்களிடம் அம்பலமாகிவிட்டது.எனவே அடுத்த கட்ட நாடகம் இன்னும் மோசமாகவே அமையும்.

கேள்வி-5
நல்லவர்கள்,நேர்மையாளர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா?வருவதற்கு முன்பே முன்கணிப்புகள் சொல்லலாமா?
பதில்:
நல்லவர்களும் நேர்மையாளர்களும் அரசியலைவிட்டு ஒதுங்கி இருப்பதுதான் தப்பு.அரசியல் கிரிமினல் மயமாவதற்கு இப்போக்கும் ஒரு காரணம்.எனவே அவர்களின் அரசியல் வருகையை இருகைதட்டி வரவேற்போம்.அன்னா அவர் கிராமத்தில் தேர்தலே நடத்த விடுவதில்லைஎன்பதும்.தாழ்த்தப்பட்ட மக்கள் வர்ணாஸ்ர அடிப்படையில் நடத்தப்படுகிறார்கள் என்பதும்,மாட்டுக்கறி சாப்பிடுகிறவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைக்கிறார் என்பதும்,கூட்டுறவு சங்கத்துக்கு  தேர்தலே நடத்துவதில்லை எல்லாம் நியமனம்தான் என்பதும்,சிறுபாண்மையோருக்கும்,சமூகநிதிக்கும்,இடஒதுக்கீட்டுக்கும் எதிரானவர் என்பதும் அம்பலமான உண்மைகள்.அன்னாவின் தீவிர ரசிகர் ஜெயமோகன் இதுதான் இந்தியபாணி கிராம ஆட்சி என அவர் நூலில் வியந்துள்ளார்.இந்த பின்னணியில் அன்னாவின் அரசியல் பிரவேசம் நம்பிக்கை அளிப்பதைவிட ஐயத்தையே அதிகம் தருகின்றது.இதற்கிடையில் அன்னா காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை சிதறடித்து காங்கிரசுக்கு சாதகம் செய்துவிடுவார்;பாஜவுக்கு இழப்பாகும் என அலறுகிறது தினமணி தலையங்கம்.இல்லை இல்லை மாநிலக்கட்சிகளின் வாக்கைக் கவருவதன் மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடிதருவார்;பாஜகவுக்கு சாதகம் ஆகும் என்கிறார்கள்  வேறு சில விமர்சகர்கள்.பெரிதாக யாருக்கும் எந்த பாதிப்பையும் அவரால் ஏற்படுத்த முடியாது என்கிறார்கள் இன்னொருசாரார்.காலம் அனைத்துக்கும் உரிய பதிலை வைத்துக் கொண்டு புன்னகைக்கிறது.

4 comments :

 1. sankaranarayanan

  மதிப்பிர் குரிய தோழரே
  படித்தேன் ஒரு ரெட் சலுயுட்.
  அன்னாவும் கை நிட்டி விட்டார்

 1. AIESES

  useful materials provided by you to educate the misled middle class. congrats. pl keep it up and continue your efforts. continuous education will bring desired result. kng

 1. Unknown

  அண்ணா குழுவினரின் முழுமையான பின்புலத்தையும் சேர்த்திருக்கலாம்... அவர்களின் உண்மையான முகம் தெரிந்திருக்கும் எல்லோருக்கம்..........

 1. அகத்தீ

  மேற்படி கட்டுரையை பதிவிட்டபின் இன்றுவரை என்ன நடந்துள்ளது?கெஜ்ரிவால் தனி ஆவர்த்தனம் தொடங்கிவிட்டார்.சில ஊழல் குறித்த விவரங்களை அவ்வப்போது சரவெடியாய் கொழுத்திப் போடுகிறார்.அன்னா கட்சி தொடங்குவதில்லை என முடிவெடுத்துள்ளார். ஓய்வுபெற்ற ராணுவத்தளபதி உடன் சேர்ந்துள்ளார். எதையாவது அறிவித்துக் கொண்டே இருக்கிறார் அவ்வளவே. ஆக எனது கட்டுரையின் சாரம் சரிதான் எனபதையே இவை சுட்டுகின்றன.

Post a Comment