ஞானம்

Posted by அகத்தீ Labels:





ஞானம்

சு. பொ. அகத்தியலிங்கம்

ஊர் திரும்பினேன்; உளம் திரும்பக் காணேன் எனப் புலவர்கள் மடல் எழுதியதாகபள்ளிக் கூடத்தில் தமிழாசிரியர்கள் சொல்வதுண்டு.ஆனால் அவனளவில் அது நிஜமாகும் என்று எதிர்பார்த்ததே இல்லை. ஊர் திரும்பி
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஆயினும் அவள் பார்வையின்ஏக்கமும் வெப்பமும் அவனைச் சுட்டெரிந்துக் கொண்டே இருக்கிறது.

அன்றும் அப்படித்தான் அவள் வார்த்தைகள் அவனது நெஞ்சில் நங்கூரமிட
உட்கார்ந்த படியே யோசனையில் விழுந்தான். மனைவி காபியோடு எதிரில் நின்றதுஅவனுக்கு உறைக்கவே இல்லை. “ காபி எடுத்துக்கோங்க” என சொன்னது கூட காதில்விழவில்லை.

 “இன்னமும் அந்த நினைப்புத்தானா? ”ஒரு குத்தல் விழுந்த போதுதான்மனைவி எதிரே நிற்பது கண்ணில் பட்டது. எவ்வளவு சுதாகரித்தும் அவனால் தன் நினைப்பை மறக்க முடியவில்லை.

  “நினைப்பு பொழப்பைக் கெடுக்குமாம்” என மனைவி இடித்துவிட்டுச் செ;லலும் போது பதிலேதும் இன்றி அமர்ந்திருந்தான். இது அவனின் வழக்கமல்ல. வார்த்தைக்குபதில் வார்த்தை என வீசிவீசி சின்ன விஷயத்தை பெரியதாக்கிவிடும்இயல்புடையவன் அவன். இதனால் அவன் மனைவிதான் எப்போதும் சற்று இறங்கிவிட்டுக் கொடுத்து நிலையை சீர் செய்வாள். இன்று பதில் பேசாமல் இருந்தான்.

அவனது நொந்த மனதுக்கு இப்போது தனிமை தேவை எனக்கருதிய மனைவி மெல்லநகர்ந்தாள். பிள்ளைகளையும் சாடை காட்டி நகர்த்தினாள். எதிரே ஓடிக்
கொண்டிருந்த டிவியை ரிமோட் மூலம் நிறுத்தினாள்.டிவி ஓடியதோ அல்லது நிறுத்தப்பட்டதோ எதுவும் அவனைச் சலனப்படுத்தவில்லை. அவன் நெஞ்சத்தில் குறும்படமாய் அந்த காட்சி மீண்டும் மீண்டும் ஓடிக்
கொண்டே இருந்தது.

இதுதான் நான் படித்த முதல் பள்ளிக் கூடம்; இந்த பள்ளிக் கூடத்தில்தான்
பத்தாவது வரை படித்தேன். இது சாமிதேர், இது அம்மன் தேர், இது பிள்ளையார்
தேர், இது சப்பரத்தேர், மார்கழிமாதம் பத்துநாள் திருவிழா நடக்கும்.
நாலுதேரும் ஒடும். சித்திரை மாதம் சாமிதேர் ஓடாது. தெப்பத் திருவிழா  நடை
பெறும். பத்து நாளும் பள்ளி விடுமுறை. எங்கள் பள்ளிக்கூடத்தில்
பொருட்காட்சி நடக்கும். மரணக்கிணறு, மிட்டாய்கடை, உருகும் பெண்... இப்படிபழைய நினைவுகளை மனைவியிடம் சொல்லிக் கொண்டே ரத வீதியைச் சுற்றிச் சுற்றிகாண்பித்தான்.

மார்கழி, சித்திரைத் திருவிழாக்களின் போது பத்து நாட்களும் ஊரே
கொண்டாட்டமாக இருக்கும். ஆட்டம்பாட்டம் எல்லாம் தான்.
திருவிழா தொடங்கும் முன்பே பேயின் வாயை கட்டிவிடுவார்கள். தினசரி
காலையிலும் மாலையிலும் அவற்றுக்கு சோறுபோட சீவிலி கொண்டு போவார்கள்.அப்போது யாரும் குறுக்கே போகக்கூடாது. மற்றபடி இரவு எந்நேரமானாலும் வீதியில் விளையாடலாம். அவனையொத்த சிறுசுகள் போட்ட ஆட்டத்தை மனைவிக்கு விவரித்தபடி வந்தான்.

அந்த தெற்குதெரு மூலைக்கு வந்ததும் அப்படியே நின்றுவிட்டான். இங்கேதான் என் தாய்மாமா வீடு உள்ளது. மாமா இறந்துவிட்டார். அத்தை என நினைவு தெரிந்த நாளிலேயே உயிரோடு இல்லை. மூத்த மகன் பரமு என்னைவிட சிறியவன், சங்கரவடிவு,ஞான வடிவு இரண்டு பெண்கள் எனக் குடும்பக்கதையை விவரித்துக்கொண்டிருந்தான்.

  “சரி... சரி... உங்க மாமா வீட்டுக்கு போகலாம், அதற்குள் கோயிலுக்கு போய்
வந்துவிடுவோம்” என மனைவி நச்சரிக்க கோயிலுக்கு வேண்டா வெறுப்பாகச்
சென்றான். கோயிலுக்குள் சிறு வயதில் நேர்ந்த எதிர்மறை அனுபவங்களை அசைபோட்டு மனைவியிடம் சொல்ல அவள் முறைத்தாள்.
  “உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லாவிட்டால் விடுங்க. நான் சாமி
கும்பிடுறதைக் கெடுக்காதீங்க” என அவள் விரட்ட அமைதியானான்.


மனைவி வாங்கி வந்த அனுமார் வடையை ருசித்தபடி மீண்டும் பழைய நினைவுகளுள் அமிழ்ந்துவிட்டான்; அவன் மெல்ல மெல்ல தனது பதின் பருவத்துக்குள் பிரவேசித்துவிட்டதை உணர்ந்து மனைவி  காது கொடுத்தாள்.

கோயிலின் ஒவ்வொரு சிலையும் தெருவின் ஒவ்வொரு அடியும் அவனுக்குள் கிளறிவிட்ட கடந்த காலத்தில் மூழ்கி எதை எதையோ அள்ளிவந்து மனைவி முன்பரப்பினான். அதில் முத்து இருந்தது. சிப்பி இருந்தது. கூழாங்கல் இருந்தது.பழைய ஹேர்பின் இருந்தது. குட்டி பென்சில் இருநதது. ரிப்பன் இருநதது.மயிலிறகு இருந்தது. வெடி தேங்காய் இருந்தது.தற்கொலை செய்து கொண்டஆறுமுகம் இருந்தார். நடுத்தெரு மாமா பெண் ராணி இருந்தார். அடுத்தவரோடுஓடிப்போன திருமணமான பெண்- தன் வாழ்வில் சந்தித்த முதல் அதிர்ச்சிஇருந்தது. இடிதாக்கிச் செத்துப் போனகுருசாமி சார் இருந்தார். இப்படிஎன்னென்னவோ...


  “உங்க பால்ய புராணம் போதும். மாமா வீட்டுக்கு போய் நேரத்தோடு கன்னியாகுமரிபோவோம். அப்போதுதான் நாளை சூரியோதயம் பார்க்க முடியும்” என மனைவி உசுப்ப கதையை சற்று நிறுத்தி காலை எட்டிப் போட்டான்.

இங்கதானே தாய் மாமனார் வீடு இருந்தது. பழைய நினைவுச்சுரங்கத்தை தோண்டிஅடையாளத்தை உரசிப்பார்த்தான். ஊரே மாறியிருந்தது. மாமா வீடு புதிதாகிவிட்டது. ஒன்றும் புரியவில்லை. எல்லை மாடன சிலையைப் பார்த்ததும் நினைவுப்பொறிதட்டியது.எல்லை மாட சாமியின் எதிர்வீடு தானே... இப்போது வீட்டைக் கண்டு பிடித்துவிட்டான்.

கதவைத் தட்டினான். நடுத்தர வயதுப் பெண் கதவைத் திறந்தாள். பரமுவின்
மனைவியாக இருக்கும். ஊகித்தது சரியாக இருந்தது. சுய அறிமுகம் முடிந்தது.உள்ளே அழைத்தாள். நாற்காலியை இழுத்துப் போட அவனும் மனைவியும்உட்கார்ந்தனர்.

அறையிலிருந்து ஒரு இளைஞனும் ஒரு இளைஞியும் வெளிப்பட்டனர். உங்கஅப்பாவுக்கு அத்தை மகனாம் ஐம்பது வருஷத்துக்கு பிறகு வந்திருக்காங்க என சுரத்தில்லாமல் அறிமுகம் நடந்தது. அவர்களும் ஒப்புக்கு வணக்கம்சொல்லிவிட்டு மின்னலாக அறைக்குள் புகுந்து கம்ப்யூட்டரில் மூழ்கினர்.


அடுக்களையில் கிழிந்தபுடவை, ஒடுங்கிய தேகம் கொண்ட ஒரு பெண் பாத்திரம்தேய்த்துக் கொண்டிருந்தாள். இயந்திரம் பேல் இருந்தாள். திரும்பிப்
பார்க்கவே இல்லை.

  “ஏய்! உங்க அத்தை மகன் வந்திருக்காங்க காபி போடு” ஏன உத்தரவு போட அந்தஇயந்திரத்துக்கு மனித உயிர் வந்தது. துள்ளிக் குதித்து முன்னே நின்றது

  “அத்தான் சொகமா இருக்கேளா.. எங்களையெல்லாம் மறந்தே போச்சா..” என பொரியத்தொடங்கினாள்.மதினி முறைக்க அடுப்படிக்கு ஓடி அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தைவைத்து பாலை ஊற்றிவிட்டு.. பழையபடி பரக்க பரக்க திரும்பினாள்.  “அத்தான்”  என அழைப்பதற்குள் மதினி முறைக்க உள்ளே அடுப்படியில் புகுந்தாள்.

மூத்தவன் சங்கரவடிவு செத்துப் போனது அவன் அறிவான். எனவே இது ஞானவடிவு.இவளோடு பாண்டி ஆடியது, பல்லாங்குழி ஆடியது - ரிப்பனை கோயில் முகப்பு பந்தக்காலில் கட்டிவைத்திட அவன் அழுதது. அந்த பசுமையான காட்சிகளைஅசைபோட்டபடியே இருக்க, காபி வந்தது. அந்த நேரம் பார்த்து வாசலில் யாரோ அழைக்க மதினி  நகர்ந்தாள்.

  “அத்தான்... நீங்க என்னை கட்டிட்டு போயிருந்தா.. நான் இப்படி நாதியற்று..
வேலைக்காரியைவிட கேவலமாக நாறணுமா.. என் தலையெழுத்து...” என அவன் மண்டையில்அடித்துக் கொள்ளவும் மதினி திரும்பவும் சரியாக இருந்தது.

ஒப்புக்கு காப்பியை விழுங்கிவிட்டு.புறப்படத் தயாரானான். ஞானம்
அடுக்களையிலிருந்து பார்த்தாள் பேசவில்லை. அவள் கண்கள் ஆயிரம் செய்திகளைஅஞ்சல் அனுப்பியது.வெளியே வந்த அவன் நடையில் துள்ளல் இல்லை. பிறந்த ஊருக்கு வந்த பூரிப்பு செத்துவிட்டது. மவுனமானான். அப்புறம் இரண்டு நாள் கணவனும் மனைவியும் கன்னியாகுமரியில் பல இடங்களுக்கு போய் வந்தனர். அவன் எதுவும் பேசவில்லை.மனைவிக்கு சூழல் புரிந்தது மவுனம் காத்தாள்.

வீட்டிற்கு வந்த பிறகு ஞானம் அவன் நினைவிலிருந்து அகல மறுக்கிறாள். அவள்கேள்விக்கு அவனிடம் என்ன விடை இருக்கப் போகிறது?

சின்ன வயதில் ஞானத்தை அவனுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் இவனை
ரொம்பப் பிடிக்கும்.இப்போது அவள்... எதையோ கேட்கிறாள். நினைவூட்டுகிறாள்.

  “நீங்க சின்ன வயதில உங்க மாமா பொண்ணு ஞானத்தை காதலிச்சிங்களா?” மனைவியின் கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முயடிவில்லை.

யாரும் அப்புறம் அதைக் கிளறத் துணியவில்லை. ஆயினும் அடிக்கடி அவன் இப்படிமவுனமாகிப் போகிறான்... 65 வயதில்.

0 comments :

Post a Comment