எது ஆன்மீகம் ? [5]

Posted by அகத்தீ Labels:

 

 எது ஆன்மீகம் ? [5]

 

1932 ல் சிந்தனைச் சிற்பி தோழர் .சிங்காரவேலர் எழுதிய கட்டுரை ஒன்றில் நியூஜிலாந்தில் நடந்த ஓர் நிகழ்வைச் சுட்டி இருப்பார் .அவர் சொன்ன அந்த நிகழவை நான் ஓர் கதையாக்கி பெயர் சூட்டி இங்கே சொல்கிறேன்.

 

நியூஜிலாந்த் எனும் தீவு நாட்டில் ஆக்குலாந்து நகரில் ஆல்பர்ட் பெர்ணாண்டோ என்பவர் வாழ்ந்துவந்தார்.அவருக்கு எலிசபத் எனும் அழகிய மனைவி இருந்தார் .பக்கத்துவீட்டில் வில்லியம் சார்லஸ் என்பவர் குடியிருந்தார் .அவரும் பேரழகன் . ஆலபர்ட்டுக்கு எப்போதும் தன் மனைவியை சார்லஸ் கொத்திக் கொண்டு போய்விடுவானோ என்கிற சந்தேகம் . இந்த சந்தேக நோய் தாம்பத்தியத்தை அபஸ்வரம் ஆக்கியது . இந்த நேரத்தில் சார்லஸ் பார்வையும் எலிசபத் பார்வையும் சந்திப்பதை ஆல்பர்ட் பார்த்துவிட்டான் . ஆத்திரத்தில் எலிசபத்தை கொலை செய்துவிடுகிறான் ஆல்பர்ட் .

 

இதனை அறிந்த சார்லஸும் தற்கொலை செய்து கொள்கிறான் . மேலுல கிலாவது எலிசபெத்தோடு சந்தோஷமாக வாழ தான் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறான் .

 

இச்செய்தியால் ஆல்பர்ட் அதிர்ச்சி அடைகிறான் .தற்கொலை செய்து கொள்கிறான் .தற்கொலைக் குறிப்பில் எழுதிவைத்தான் , “ மேலுலகத்தில் கூட எலிசபத்தை சார்லஸ் சேர விடமாட்டேன் .அதற்காகத்தான் தற்கொலை செய்து அங்கு செல்கிறேன்.”

 

இந்தக் கதையைத் தொடர்ந்து தோழர் .சிங்காரவேலர் சொல்வார் ,” அந்த நியூஜிலாந்தரைப் போல தங்கள் யுத்தியை ,புத்தியை தண்ணீரில் கரைத்துவிட்டு பகுத்தறிவைத் தற்கொலை செய்து கொள்வோரை எப்படித் திருப்தி செய்ய முடியும் ? யாரால் அவர்களைத் திருத்த முடியும் ? நண்பர்களுக்கு நாம் ஒரே விடைதான் அளிக்கக்கூடும் .அதாவது ‘ Who will absolve you from this ignorance ? Onely study and reflection.’ உங்கள் அறியாமையை யார் விலக்கூடும் ? கல்வியும் விசாரணையும்தான் உங்கள் அஞ்ஞானத்தை விலக்க முடியும் என்போம்.”

 

மதத்தையும் கடவுளையும் கட்டி அழுவோரைக் கேட்கிறோம் ;

 

எல்லா மதமும் ஏதோ ஓர் தத்துவத்தை சித்தாந்தத்தை முன்வைப்பதாக நம்பப்படுகிறது .ஆயின் அந்த தத்துவத்தை ஆழ்ந்தறிந்துதான் மதநம்பிக்கை இருக்கிறதா  ?

 

 நீ எந்த மதம் என்பதை உன் தத்துவ அறிவை நீட் தேர்வில் சோதித்தா முத்திரை குத்துகிறார்கள் ? இல்லவே இல்லை .நீ பிறந்த போதே உன் தாய் தந்தையிரின் மதமும் சாதியும் உன் அடையாளத்தில் ஒன்றாக்கப்படுகிறது .பிறந்த குழந்தை எந்த தத்துவத்தை தேர்ந்து தெளிந்து மதத்தில் உறுப்பினரானது ?

 

கிறுத்துவத்தில் ஞானஸ்தானம் பெறுவது பின்னர் நடக்குமெனினும் அப்போதும் தத்துவார்த்த தேர்வெழுதி வென்ற பின்னா நடக்கும் ? இல்லவே  இல்லை .அது ஓர் வெறும் சடங்கு .

 

பிராமணர்களுக்கு உபநயனம் நடக்கிறதே எந்தத் தேர்வை எழுதி அந்தத் தகுதியைப் பெறுகிறார்கள் ?  பிராமணாத்து குழந்தை . பிராமண தாய் தந்தைக்கு பிறந்ததைத் தவிர வேறென்ன தகுதி சொல்ல முடியும் ? பிராமணாத்து பெண் குழந்தைகளுக்கு ஏன் உபநயனம் மறுக்கப்படுகிறது ?

 

எல்லா மதங்களிலும் இதே நிலைதான் . மதம் சார்ந்த நூல்களின் தத்துவத்தை முறையாகப் படித்து அறிந்தவர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் ?

 

வெறுமே சடங்கு ,சம்பிரதாயம் ,பழக்க  ,வழக்கம் ,கண்மூடிப் பழக்கங்கள் ,மூடநம்பிக்கை இவற்றின் தொகுப்பே பெரும்பாலோரின் மத நம்பிக்கை .

 

மாறாக 18 வயது நிரம்பப் பெற்ற ஒருவருக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டிருப்பதைப் போல ; தாங்கள் தத்துவார்த்த ரீதியாக சரி எனக் கருதுகிற ஒரு மதத்தை ஏற்கவோ மதம் சாராமல் இருக்கவோ 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும்  உரிமை வழங்கி மதத்தை தீர்மானிப் பதுதானே சரியாக இருக்கும் ? இதைச் சொன்னால் பொல்லாப்பு

 

ஆக ,மதத்தின் வேர் தத்துவம் எனச் சொல்லபடுகிறதே அந்த தத்துவம் என்பது யாது ? யோசித்தோமா ?

 

Philosophy is 'love of wisdom' என பண்டைய கிரேக்கத்தில் ஒரு பழமொழி உண்டு . அறிவின் மீதான காதல்தான் தத்துவம் . அதை அறிவோமா ?

 

அவர்கள் அறிவென்று கருதியது என்ன தெரியுமா ?நாம் எங்கிருந்து வந்தோம் ? எங்கு போகப்போகிறோம் ? மரணத்துக்கு பிறகு என்ன ஆவோம் ? நாம் ஏன் இப்படி இருக்கிறோம் ? ஏன் அப்படி இல்லை ? உலகம் ஏன் இப்படி இருக்கிறது ? இரவு பகல் எப்படி ? இப்படியாக கேள்வி எழுப்பி விடைகாண முயன்ற மனித குலம் பலவிதமான விடைகளைச் சொன்னது . இறுதியான விடையை யாராலும் சொல்ல முடியவில்லை . சிலவற்றுக்கு விடை கண்டார்கள் . அது வானவியலாக விரிந்தது .விடை தெரியா கேள்விகளை எல்லாம் கடவுள் மீது சுமத்திவிட்டு தத்துவம் பெருமூச்சு விட்ட இடம்தான் மதமானது.அதனை ஒட்டி மத மறுப்பும் பிறந்து விட்டது .

 

விடை தெரியா கேள்விக்கு விடைதேடி அலைந்த போது உருவான தத்துவங்கள் கணக்கில் அடங்கா .வேடிக்கை என்ன தெரியுமா கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டுவரை தத்துவம் ,அறிவியல் ,மதம் எல்லாம் ஒன்றாகக் குழம்பித்தான் கிடந்தன .

 

உலகெங்கிலும் பல்வேறு தத்துவப் பார்வை விரிந்தன . அவற்றை ஒரு பருந்துப் பார்வை பார்ப்போமா ?

 

தொடர்வோம்…

 

சுபொஅ.

25/10/24.

எது ஆன்மீகம் ?[6]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [6]

 

நான் அடிக்கடி கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் கேட்கும் பழக்கம் உள்ளவன் .அதன் கருத்தோடு மாறுபடும் இடங்கள் நிறைய உண்டு .ஆயினும் பாடலின் எளிமையும் அனுபவத் தெளிப்பும் ஈர்ப்பானவை .

 

“தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெளியாமல் போனால் வேதாந்தம்” என கண்ணதாசன் திரைப்படப் பாடலொன்றில் போகிற போக்கில் சொன்ன வரிகள் மிக முக்கியமானவை.

 

தத்துவ உலகில் மரணம் ,மரணத்துக்கு பிந்தைய வாழ்வு பற்றிய விசாரணைக்கு முக்கிய இடம் உண்டு .ஆயினும் அது மட்டுமே தத்துவம் அல்ல . ஆனால் சோகப் பாடலை எல்லாம் தத்துவப் பாடலென்று சொல்லித் திரிகிறோம் .

 

“தத்துவமாகப் பேசி கழுத்தறுக்காதே!” என நீங்களும் நானும் பலரிடம் சொல்லியிருப்போம் . தத்துவம் என்பது ஏதோ நம் அன்றாட பிழைப்புக்கு அப்பாற்பட்டது என்கிற கருத்தோட்டம் சமூகத்தின் பொது புத்தியில் உறைந்து இருக்கிறது .

 

அதே நேரத்தில் வாழ்வின் போக்கில் பல்வேறு அனுபவ மொழிகளில் தத்துவத்தின் கீற்று வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் .

 

யாக்கை நிலைமை ,செல்வம் நிலையாமை ,புகழ் நிலையாமை , வாழ்க்கை நிலையாமை இப்படி பலவற்றை தத்துவ உலகம் விசாரிக்கும் . சினிமா பாடல்களிலும் அது போன்ற வரிகள் பளிச்சிடும் போது நம்மை ஈர்த்துவிட அதுவே தத்துவம் எனப் புரிந்து கொள்கிறோம் .

 

அவற்றில் பெரும்பாலானவை நம்பிக்கை வறட்சியைப் பேசுபவை .சில தன் நம்பிக்கையை ஊட்டுபவை .அப்படியாயின் தத்துவம் என்பது நம்பிக்கையா ? நம்பிக்கை வறட்சியா ? இங்கே நான் நம்பிக்கை எனச் சொல்வது கடவுள் நம்பிக்கை என புரிந்து கொள்ளக்கூடாது . தன்னம்பிக்கையையே சொன்னேன்.

 

ஆதியில் அரிஸ்டாட்டில் ,பிளாட்டோ , சாக்ரட்டீஸ் தொடங்கி எண்ணற்ற தத்துவஞானிகளை உலகம் கண்டுள்ளது .கிரேக்கத்துவ ஞானிகள் அரேபிய தத்துவஞானிகள் ,ஆப்பிரிக்க தத்துவ ஞானிகள் ,கீழை தேச தத்துவ ஞானிகள  ,மேற்கத்திய தத்துவ ஞானிகள் என விரிந்து கொண்டே செல்லும் பட்டியல் . சீனாவில்  கன்ப்யூசினசம் [Confucianism] , டாவோயிசம்[ Taoism ] இரண்டு  சொந்த தத்துவங்கள் உண்டு  , ஆயினும் இந்தியாவிலிருந்து போன தத்துவமான புத்தமும் அங்கு வேரோடிவிட்டது.

 

இந்திய தத்துவஞானமும் விரிந்தது .மிகவும் பழமையானது. பலகிளைகளைக் கொண்டது . புத்தம் ,சமணம் ,மீமாம்சம் ,சார்வாகம் ,லோகாயவாதம் ,வேதாந்தம் ,அத்வைதம் ,துவைதம் ,விசிஷ்டாட்டவைதம் ,சைவம் , வைணவம் ,சீக்கியம் ,ஜொராதுஷ்ட்ரா [பார்சி] பட்டியல் முடியவில்லை . ரொம்பப் பெரிது .இந்துத்துவம் அல்லது இந்துயிசம் என இப்போது பேசப்படுவது தத்துவமல்ல ; அது  மத வெறி சார்ந்த அரசியல் சொல்லாடல் .

 

மணிமேகலையையும் நீலகேசியையும் வாசித்தால் தமிழ் மண்ணின் ஊடாடிய தத்துவப் போக்குகளையும் மோதல்களையும் காணலாம். இதனை இன்னொரு நாளில் பார்க்கலாம்.

 

உலகெங்கிலும் எல்லா தத்துவ ஞானமும் கடவுளை சுற்றி பின்னப்பட்டது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது . அது உண்மையே அல்ல . கடவுள் ,மதம் நோக்கி பயணித்த தத்துவங்களும் உண்டு .மாறாக அவற்றை கேள்விக்கு உட்படுத்திய த்ததுவங்களும் நிறைய உண்டு .சாக்ரட்டீஸ் தொடங்கி மார்கஸியம் வரையும் நீளும் தத்துவ மரபில் கடவுளுக்கு இடம் இல்லாத தத்துவங்கள் நிறைய உண்டு . .

 

இந்தியாவின் தத்துவ மரபு முழுவதும் வேதாந்த மரபு என்கிற பொய் வலுவாக இங்கு சொல்லப்படுகிறது .உண்மை அதுவா ? இல்லவே இல்லை.

 

சமஸ்கிருதம் தெரியாமல் இந்திய தத்துவ மரபைப் பேசமுடியாது என சொல்வோருண்டு .சிறந்த தத்துவ ஆசிரியரும்,தேர்ந்த சமஸ்கிருதப் புலமை கொண்டவருமான தோழர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய” இந்திய நாத்திகம்” என்ற நூலை இந்த இடத்தில் அசை போடுவது சாலப்பொருந்தும் .அவர் சொல்கிறார் ;

 

“இந்தியாவின் மரபு எனக் கறாராக வரையறுக்கப்படக்கூடிய தத்து வத்தை விருப்பு வெறுப்பின்றி ஆராய்கிற போது கடவுளுக்கு அங்கே இடம் தேடுவது வேண்டாத வேலையே என்பது தெளிவாகும். இந்தியாவின் தத்துவங்களில் இரண்டே இரண்டை மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை என மிகுந்த தயக்கத் துடன் கூறலாம்.....”

 

“நமது முக்கியமான தத்துவங்களுக்குள் வேதாந்தமும் (அதுவும் கூட ஒரளவுக்கே எனலாம்) நியாய - வைசேசிசமும் குறிப்பாகப் பிற்கால நியாய - வைசேசிசமும் மட்டுமே ஆத்திகம் சார்ந்தவை.இதற்கு மாறானவை பவுத்தம், சமணம், பூர்வ - மீமாம்சம், சாங்கியம், லோகாயதம் மற்றும் ஆதிநியாய - வைசேசிசம் ஆகியன; அவையனைத்தும் தீவிர நாத்திகவயமானவை. ”

 

சட்டோபாத்யாயா போகிற போக்கில் சொல்லவில்லை; ஆழ்ந்த புலமையோடு மேற் கண்ட தத்துவச் சாரங்களைக் கற்றுத் தேர்ந்து; சாறு பிழிந்து இந்நூலில் தந்துள்ளார் .“நமது நாகரீகத்தின் வரலாற்றைப் பின்னோக்கி நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது வரலாற்றுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில் அங்கே கடவுளே காணப்படவில்லை என்பதால் நாம் புரிந்து கொண்டிருக்கிற பொருளிலான மதம் இருக்கவில்லை என்பதை அறியமுடிகிறது ; ஆகவேதான் வேதங்களில் பேசப்படும் ஆதி ஆத்திகம் முக்கியமானது” என்கிறார் சட்டோபாத்யாயா.

 

சொல்வதோடு நில்லாமல் அதனுள்ளும் நுழைந்து ஆதியில் எவ்வித சிறப்பு மற்ற எண்ணற்ற தெய்வங்களின் நம்பிக்கையில் தொடங்கி ஒரு கடவுள் நோக்கிய பயணமாக ரிக் வேதத்தில் வெளிப்படுவதை சுட்டிக் காட்டுகிறார். ஆதி நாத்திகம் தொடங்கிய சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார் .

 

ஈஸ்வரவாதமென அழைக்கப் பட்ட கடவுள் கோட்பாடு ; அதற்கு எதிர்நிலையில் நிரீஸ்வர வாதம் எனப்படும் கடவுள் மறுப்பு கோட்பாடு என இரண்டு சிந்தனைப் போக்கு உருவானதை மிகச்சரியாகச் சுட்டுகிறார். அதே போல் “ஈஸ்வர வாதத்துக்கும் ஸ்வபாவ வாதம் எனப்படும் இயற்கை வாதத்துக்கும் இடையில் தோன்றிய வாக்குவாதமே இந்திய சிந்தனை மரபில் தோன்றிய மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் தெளிவான முன்னோட்டம்” என்பதை எடுத்துக்காட்டுகிறார்.

 

“…உயிரியல் ஆய்வு நோக்கில் கடவுள் நம்பிக்கையின் பொருத்த மின்மை என்கிற ஒரம்சத்தை மட்டும் கருதுவது வரலாற்று முக்கியத் துத்தைக் குறைத்து மதிப்பிடுவதில் போய் முடியும். உண்மையில் சாங்கிய அறிஞர்கள் அதற்கும் மேலே சென்று ஏனையோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கடவுள் எனும் கருத்து தருக்கவியல்பாங்கில் எந்த அளவு உயர்ந்த பலம் கொ ண்டது என வினவினார்.”புத்தம் , சமணம் ஆகியவை ஆதியில் கடவுள் மறுப்புச் சிந்தனையோடு விளங்கியதையும்; காலப்போக்கில் அதனுள்ளும் கடவுள் நம்பிக்கை நுழைக்கப் பட்டதையும் மிக நுட்பமாக ஆதரத்தோடு நிறுவுகிறார்.

 

இவ்விடத்தின் பாரதிதாசன் பாடலொன்று நினைவுக்கு வருகிறது.

 

“மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று

வழிநடைச் சிரமம்இன்றி

மாபெரிய யுசிந்தனா லோகத்தைரு அணுகினேன்.

வந்தனர்என் எதிரில்ஒருவர்.

எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள்

என்றுபல முறைகூறினார்.

இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர்

"எனக்கில்லை கடவுள்கவலை"

 

எனவுரைத் தேன்.அவர், யுஎழுப்புசுவர் உண்டெனில்

எழுப்பியவன் ஒருவனுண்டே

இவ்வுலகு கண்டுநீ நானும்உண் டெனஅறிக!

என்றுரைத்தார். அவரைநான்

"கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?

காட்டுவீர்" என்றவுடனே

கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை

கண்ட பாரததேசமே!”

 

“ ’எழுப்பு சுவர் உண்டெனில் /

எழுப்பியவன் ஒருவனுண்டே /

இவ் வுலகு கண்டு நீ நானும் (கடவுளும் எனப் பொருள் )

உண்டென அறிக/’ என்றுரைத்தார் .

அவரை நான் /

‘கனமான கடவுளே உனைச் செய்த சிற்பி எவன் ? /

காட்டுவீர் என்றவுடனே/

கடவுளைக் காண்கி லேனே..” என்பார் பாரதிதாசன்.

 

பாரதிதாசன் சுவரை வைத்து வாதிட்டுள்ளார்; பழங்கால தர்க்கங்கள் மண்பானையை வனைந்தவர் யாரென்றேவிவாதம் தொடரும். அதனை பலகோணங்களில் பல தத்துவஞானிகள் வாதங்கள் மூலம் இந்நூல் நெடுக சொல்லியுள்ளார் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா . வாய்ப்புள்ளோர் நூலைத் தேடி வாசிப்பீர் .

 

இந்த தத்துவப் போருக்கும் ஆன்மீகத்துக்கும் தொடர்பு யாது ?

 

தொடர்வோம் …

சுபொஅ.

28/10/24.

 

 

 

எது ஆன்மீகம் ?[7]

Posted by அகத்தீ Labels:

 

எது ஆன்மீகம் ? [7]

 

 

 “உலகப் படைப்பின் வழி நிறைவடையும் கடவுளின் நோக்கம்தான் என்ன? எந்தவொரு நோக்கமுமின்றி எந்த வொரு அடி மடையன் கூட எதையும் செய்திடான்?” எனகிறார் குமரிலப் பட்டர் என்கிற அன்றைய மீமாம்ச ததுவச் சிந்தனையாளர்.

 “ கடவுளின் திருவிளையாடல்” என சமாளிக்கிறார் பாதராயணர்என்ற வேதாந்தி.

 

இவை போன்ற ஏராளமான வாதங்களை ஆதாரபூர்வமாக அடுக்கி தேவிபிரசாத்சட்டோபாத்யாயா  இந்திய தத்துவ மரபில் பெரிதும் மேலோங்கி இருந்தது வேதாந்தமல்ல ; பகுத்தறிவும் நாத்திக வாதமுமே என நிறுவுகிறார் .

 

அவரின் , “ இந்திய நாத்திகம்” , “தத்துவத்தின் தொடக்கங்கள்” போன்ற அறிமுக நூல்கள் தொடங்கி , இன்றுவரை மாபெரும் ஆவணமாகத் திகழும் “ இந்திய தத்துவங்களில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்கிற நூல்வரை தமிழில் வெளிவந்துள்ளன . ஆழமாக அறிய விரும்பும் இளைய தலைமுறை வாசித்தறிக .

 

வேடிக்கை என்னவெனில் இவற்றைப் படித்து நாம் தெளிந்து கொள்ளலாமே தவிர மதவெறியர்களிடம் வாதிட முடியாது காரணம் அவர்களின் தத்துவ பலம் அல்ல ; மாறாக குதர்க்க வாதம் . நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் வேறொரு பதில் சொல்வார்கள் .

 

” பகவத் கீதை சாதிய அடுக்குமுறையை , வர்ணாஸ்ரமத்தை நியாயப்படுத்துகிறதே ! ’சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’ ‘நான்கு வர்ணத்தையும் நானே படைத்தேன்’ எனச் சொல்கிறதே ? இது நியாயமா ?” என நீங்கள் கேள்வி கேட்டால் , “ குரானை நீங்கள் விமர்சிக்கத்தயாரா?” என மடை மாற்றுவார்கள் . இது ஏதோ சங்கிகளுக்கு இப்போது வந்த வியாதி அல்ல . ஆதிமுதல் இதே வியாதிக்கு ஆட்பட்டவர்கள்தான் இந்த வேதாந்த மரபினர் . இது குறித்து சட்டோபாத்யாயா சொல்கிறார் .

 

 

 

 

விவாதத்தில் “சாமானிய சள” எனப்படும் போக்கு; அதாவது உண்மையான மைய இழையை விட்டு விட்டு குறுக்குசால் ஓட்டுகிற போக்கு; வார்த்தைகளைப் பிடித்து தொங்குகிற போக்கு; ஆத்திகவாதிகளிடம் மேலோங்கி இருந்தது .இதனை தன் எழுத்துகளில் அம்பலப் படுத்துகிறார் சட்டோபாத்யாயா.

 

ஒருவர் அர்த்தமில்லாமல் சள்சளன்னு பேசுவதை நாம் ’சளசள’ன்னு பேசுறார் என சொல்லுவது இதைத்தானோ !

 

சங்கிகளின் விவாதம் இப்படித்தானே இருக்கிறது .

 

தத்துவம் பேசுவதாகச் சொல்லி அரசியல் பேசுகிறேனோ !

 

“அரசியல் இல்லாமல் நீங்களும் இல்லை .நானும் இல்லை .எனவே தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பயில்வது அரசியல் ,அறிவியல் ,வரலாற்றுக் கண்ணோட்டம் பண்பட அவசியமாகும்.

 

ஆக ,ஒரு மனிதனுக்கும் அல்லது அமைப்புக்கும் இந்த உலகம் பற்றி இருக்கும் கண்ணோட்டமே தத்துவம்.

 

தத்துவத்தின் முதல் பிரச்சனை இயற்கைக்கும்[மனிதன்,பொருள் ] ஆன்மாவுக்கும் [ உயிர் ,கருத்து ] உள்ள தொடர்பு பற்றியதாகும்.

 

அடுத்த பிரச்சனை இந்த பிரபஞ்சத்தை அறிய முடியுமா முடியாதா என்பதாகும் “

 

இப்படி “ தத்துவதின் வரலாறு” எனும் சிறு பிரசுரத்தில் தோழர் .வீ.பழனி குறிப்பிடுகிறார் .

 

 

இப்படி சில நூல்களை நாம் சுட்டிக்காட்டினால் , “ உங்களுக்கு இந்து மதத்தை குறை சொல்லாவிட்டால் தூக்கம் வராது ; அப்படிப்பட்ட நூல்களத்தான் தேடித்தேடி படிப்பீர்கள் என என் மீது பாய காத்திருப்பார்கள் .கொரானா காலத்திலும் முகநூலில் அப்படி ஒரு புகார் என்மீது எழுந்தது . அப்போது சொன்ன பதிலை நாளை பார்ப்போம்.

 

சிந்தனைச் சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் 1932 ல் குடியரசு ஏட்டில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரை “ பொதுவுடைமை விளக்கம்” கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் கொண்ட இக்கட்டுரை பின்பு நூலாகவும் வெளிவந்தது அதில் சொல்கிறார் ;

 

“இந்திய தேசத்தில் மாத்திரம் மூன்று தீமைகள் குடிகொண்டிருப்பதைக் காணலாம். அவையாவன மத பேதம் ,ஜாதி பேதம் , பொருளாதார பேதம்.மற்ற தேசங்களில் இம்மூன்றில் பொருளாதார பேதம் மட்டுமே காணப்படும். [ சில நாடுகளில் மத பேதமும் / நிற பேதமும் உடன் சேரும் : இது என் கருத்து] இந்திய தேசத்தில் மாத்திரம் இம்மூன்றும் நிலை பெற்றுள்ளன .ஆதலின் இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசத்தை மாத்திரம் போக்குவது தேச சீர்திருத்ததிற்கு போதுமானதாகாது. இந்திய தேசத்தில் பொருளாதார வித்தியாசம் ஒழிவதோடு ,மத வித்தியாசமும் ஜாதி வித்தியாசமும் ஒழிய வேண்டியது அவசியமாகும் .பல ஆண்டுகளாய் பல பெரியோர் மதச் சீர்திருத்தத்தை மாத்திரம் முயற்சித்து வந்தனர். அது பலிக்காமல் போயிற்று.”

 

ஆக ,மதம் ,சாதி , வர்க்கம் இம்மூன்றும் நிலவும் இந்திய மண்ணில் ஓர் ஒருங்கிணைந்த பார்வையும் வியூகமும் தேவைப் படுகிறது .ஆனால் நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்தால் நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியே எழுகிறது .. 

 

தீபாவளி நெருக்கத்தில் ஓர் ஏட்டில் ஆன்மீகப் பகுதியில் வந்த கட்டுரை இப்படி ஆரம்பிக்கிறது ,

 

“எங்கே அச்சமும் கவலையும் இருக்கிறதோ அங்கே நிச்சயம் கடவுள் தன்மை இருக்காது என்கிறது ஆன்மிகம். ஒரு கடவுளை நம்பி சரண் புகுந்து, அடைக்கலமான பிறகு, `எல்லாம் அவன் செயல்' என்று உணர்ந்த பிறகு, அங்கு எப்படி அச்சமும் கவலையும் இருக்க முடியும். நானே செய்கிறேன் எனும்போதுதான் எல்லாப் பிரச்னைகளும். `அவன்தான் செய்விக்கிறான்' எனும்போது அங்கே ஒரு நிம்மதி வந்துவிடும். அப்படி ஒரு கடவுள் ……….. இருக்கிறார்.”

 

நான் எந்த கடவுளுக்கும் பிராண்ட் அம்பாசிடர் அல்ல ஆகவே பெயரைத் தவிர்த்துவிட்டேன். இப்படி ஒரு கடவுள் இருந்தால் எங்கும் அச்சமும் கவலையும் இல்லாமல் தொலையுமோ ?

 

இது மட்டுமல்ல ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு கோயில் என்றும் ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமென்றும் , பரிகாரம் இவை என்றும் வாரந்தோறும் இந்த  “ஆன்மீக” ஏடுகள் புளி போட்டு விளக்கு விளக்கு என விளக்கிக் கொண்டிருக்கின்றன .

 

 

கவி ரவீந்திரநாத் தாகூரின் ஒரு கவிதையை  இங்கு நினைவிற்கு வந்தது . பலமுறை படித்திருப்போம் ,கேட்டிருப்போம் அன்றாட வாழ்வோடு சேர்ந்து அலசி இருப்போமா ?

 

“ எங்கு மனம் அச்சமற்றதாக ,தலைநிமிர்ந்து இருக்கிறதோ ,

எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ,

எங்கே உலகம் குறுகிய உள்நாட்டுச் சுவர்கள் என்ற பிளவுகள் அற்றதாக இருக்கிறதோ ,

எங்கே வார்த்தைகள் உண்மையின் அடியாழத்திலிருந்து வெளிப்படுகிறதோ,

எங்கே சலியாத உழைப்பு விழுமிய நிலையை நோக்கி நீள்கிறதோ,

எங்கே பகுத்தறிவு என்னும் தெள்ளிய நீரோடை மூடப்பழக்கமெனும் பாலையில் வழிதவறிப் போகாதிருக்கிறதோ,

எங்கே என்றும் விரிந்து நோக்கும் எண்ணத்திலும் செயலிலும்,

மனதை முன்னிறுத்தி நீ அழைத்துச் செல்கின்றாயோ ,

அங்கே ,அந்த சுதந்திரமான உலகத்தில்

என் தந்தையே , என் நாடு விழித்தெழுவதாக !”

[ கவிதை மொழியாக்கம் : வி.பா.கணேசன் ]

 

பேசுவோம் தொடர்ந்து …

 

சுபொஅ.

29/10/24.

 

 

 

 

 

 

 

 

 

எது ஆன்மீகம் ?[8]

Posted by அகத்தீ Labels:

 

எ து ஆன்மீகம் [8]

 

ஒருவர் இறைவனை நோக்கி தவம் இருந்தார் .இறைவனும் நேரில் வந்து அவர் தவத்தை மெச்சி ,” உனக்கு என்ன வரம் வேண்டும் ?” என்று கேட்டார்.

 

அவர் , “ எனக்கு சாவே வரக்கூடாது” என வரங்கேட்டார்.

 

இறைவனும் ,”தந்தேன்.” என்றார் .

 

மகிழ்ந்தவர் , எல்லாம்  ‘டீக்கரம்’ வாங்கன்னு கூவினார் . ஒருவருக்கும் விளங்கவில்லை . வந்தவர்கள் விழிக்க , ஏன் எல்லோரும் ‘டாணி’ மாதிரிவிழிக்கீங்க என இவர் கேட்க ஒரே சிரிப்பு .அப்போது அவர் மனைவியும் அங்கு வந்தார் .அவர் பெயர் சகுந்தலா . சந்தோஷத்தோடு “ வா ‘டகுந்தலா’ !” என அழைக்க எல்லோரும் சிரித்தனர் . மனைவி என் பெயர் சகுந்தலா என திருத்த அவர் ‘டகுந்தலா’ என மீண்டும் சொல்ல குழப்பமானது .

 

 ‘சா’வே வரக்கூடாது என கேட்டதற்கு இறைவன் கொடுத்தவரம்; பேச்சில் ச ,சா, சி,சீ… மெய்யெழுத்தும் உயிர்மெய் எழுத்தும் வராமல் இருக்க வரம் கொடுத்துவிட்டாராம் .

 

இறைவனே நினைத்தாலும் சாவைத் தவிர்க்க முடியாது என்பது செய்தி .

 

“ யதா ஸர்வே ப்ரபித்யந்தே ஹ்ருதயஸ்யேஹ க்ரந்தய :

அத மர்த்யோசம்ருதோ பவதி ஏதாவத்யனு சாஸ்னம் .”

 

 “ மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான் .” உபதேசம் இவ்வளவுதான் .

 

 என்ன தோழரே ! ஊரடங்கில் ஒரு மாதிரி ஆகிட்டீங்கன்னு நீங்க கேட்கலாம் . ஆனால் இது நேற்று ஒரு நண்பர் என்னை உசுப்பியதின் எதிர்வினை .[ இது கொராணா காலத்தில் நடந்தது .]

 

ஆம் .எம் பள்ளி கால நண்பர் .சுசீந்திரத்திலிருந்து அழைத்தார் . “ என்ன நண்பா ! உன் அலமாரி முழுவதும் கம்யூனிச புத்த்தகங்கள் மட்டும்தான் இருக்குமா ? ஆன்மீகம் மருந்துக்கும் இருக்காதா ?” எனக் கேட்டார் .

 

நான் அவருக்குச் சொன்னேன் . “ நண்பா ! பகவத் கீதை ,குரான்  எல்லாம் இருக்கிறது .பைபிள்  பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இணைந்தது .இருந்தது .வீடு மாறும் போது தவறிவிட்டது .யாரேனும் நன்கொடையாத் தரலாமே !

 

நான் எந்த நூலாயினும் ஆன்மீக  ,ஜோதிடம் ,மந்திரம் ,பலான புத்தகம்   என எது கிடைத்தாலும்  ஒதுக்காமல் வாசிப்பவன் . கம்யூனிஸ்ட்டுகள் எதையும் ஒதுக்காமல் வாசித்து உண்மை ,பொய் அறிபவரே .

 

சரி ! நண்பர் கேட்டுவிட்டார் ! அதுவும் பால்ய நண்பர் . எனவே  ,

 

“ கட உபநிஷதம் “  மரணத்துக்கு பின்னால் எனும் உபதலைப்போடு 190  பக்கங்களில்  சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கதோடு ,ஸ்ரீ ராமகிருஷ்ன மடம் வெளியீட்ட நூலை முன்வைத்துப் பேசப்போகிறேன்.

 

கதைச் சுருக்கம் : வாஸசிரவஸ் எனும் பிராமணர் ஒருவர் விசுவஜித் என்கிற ஒரு யாகத்தைச் செய்தார் . அந்த யாக முடியில் தான் விரும்பிய அனைத்தையும் தியாகம் செய்ய வேண்டும் என்பது விதி . ஆனால் அவரோ வறண்ட நிலம் ,பால்வற்றிய மாடு போன்ற தனக்கு பயனற்றவற்றையே தானம் செய்தார் .

 

இதைக் கண்ட அவர் மகன் நசிகேதன் வருந்தினான் .இப்படி பயனற்றவைகளை தானம் செய்தால் நரகம் கிட்டுமே என கலங்கினான் . தந்தை தனக்குப் பிரியமானதை தானம் செய்ய வலியுறுத்த எண்ணி , “ தந்தையே ! என்னை யாருக்குத் தானம் செய்யப் போகிறீர்கள் ?” எனக் கேட்டான் . கோவம் கொண்ட தந்தை , “ உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் .”என்றார் .

 

தந்தை ஆத்திரத்தில் சொன்னாலும் சொன்னதுதான் .அதுதான் யாகவிதி .

 

தந்தை கண்ணீர் உகுக்க நசிகேதன் எமனுலகம் புறப்பட்டான் .

 

நசிகேதன் போனபோது அங்கே எமனில்லை .எனவே மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது .

 

எமன் திரும்பியதும் அவனிடம் மந்திரிகள் சொல்கிறார்கள் .“யாருடைய வீட்டில்  ‘பிராமணன்’ ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ ,அற்ப புத்தியுடையவனான அவனுடைய நம்பிக்கைகள் , எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன … ” எனத் தொடங்கி ராஜ்யமே அழியும் என எமதர்மனை மிரட்டிவிடுகின்றனர் .

 

பயந்துபோன எமதர்மன் நசிகேதனை அழைத்து என்னால் மூன்று இரவுகள் காத்திருக்க நேரிட்டதால் மூன்று வரங்களைக் கேள் தருகிறேன் என்கிறான் .

 

கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு செய்தி .

 

ஓன்று , மேலே  ‘பிராமணன் ஒருவன் உணவின்றி’ என்று நான் சொல்லியுள்ளேன் .நூலிலோ ’தூயவன்’ என்றே தமிழில் தரப்பட்டுள்ளது . ஸ்லோகத்திலோ ’ப்ராஹ்மணோ’ என்றே இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முந்தைய பதிப்புகளில் பிராமணன் என்ற மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் .[ பார்ப்பனர் என்றே தமிழாக்கம் செய்திருக்க வேண்டும் ] .இப்போது தூயவன் ,சான்றோன் , அறிவாளி ,ஞானி என இடத்திற்கு ஏற்ப ராமகிருஷ்ண மட வெளியீடுகள் அனைத்திலும் ஆம் எல்லா நூல்களிலும் இடம் பெறுவதை தொடர்ந்து கவனிக்கிறேன் .இது ஒரு கருத்துத் திரிபு ,  கருத்துத் திணிப்பு ஆகும். 

 

மீண்டும் கதைக்கு வருவோம் .

 

தன்னை தந்தை மகிழ்ச்சியோடு வரவேற்க வேண்டுமென புத்திசாலித்தனமாய் முதல் வரம் கேட்டான் நசிகேதன் .அதன்மூலம்   தனக்கும் , தந்தைக்கும் நல்ல உயிர் காப்பரண் அமைத்துக் கொண்டான் .

 

இரண்டாவது வரமாக , மரணத்தை வெல்லும் யாகம் செய்யும் முறையை கேட்டறிகிறான் .அந்த யாகத்துக்கு “ நசிகேத யாகம்” எனும் பெயரும் பெறுகிறான் .

 

மூன்றாவதாக ,  “மரணம் என்றால் என்ன ? மரணத்துக்கு பின் என்ன ?” என்கிற கேள்விக்குப் பதில் கேட்கிறான் . எமனோ சாவே இல்லாத வாழ்க்கை தருகிறேன் ,காமதேனு தருகிறேன் ,கற்பகதரு தருகிறேன் , அது தருகிறேன் ,இது தருகிறேன் என ஆசையை விதைக்கிறானே தவிர கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மறுக்கிறான் . நசிகேதன் பிடிவாதமாக இருக்கிறான் .

 

எமதர்மன் , “ வாக்கினாலோ ,மனதினாலோ ,கண்களாலோ அந்த இறுதி நிலையை அடைய இயலாது .’இருக்கிறது’ என்று சொல்பவனைத் தவிர வேறு யார் இதனை அடைய முடியும் “ இப்படித் தொடங்கி ஆத்மா அனுபூதி என உபதேசம் நீள்கிறது . நாம் முதலில் சொன்ன வரிகளோடு உபதேசம் முடிகிறது . கடைசி வரை நசிகேதன் கேள்விக்கு கறாரான பதில் சொல்லவே இல்லை .

 

ஆயின் இந்த  ‘கட உபநிஷதம்’ சொல்ல வருவது என்ன ?

 

மரணம் யாருக்கு வேண்டுமானாலும் ,எப்போது வேண்டுமானாலும் வரும் அதற்கு தயாராய் மனதை விசாலப்படுத்து . வாழும் போது பிறருக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ் என்பதுதானே !

 

இதனை சுவாமி விவேகானந்தர் தன் பிரச்சாரங்களில் போதனைகளில் எடுத்தாண்டார் ; ஆனால் ஆர் எஸ் எஸ் கடைக்கோடி சங்கி முதல் உச்சாணி தலை வரை இந்த உபநிஷத்தை – உபதேசத்தை எடுத்துச் சொல்வது கிடையாது .சொன்னால் அவர்களுக்கே அது கேடாகிவிடுமே !

 

நாம் சொல்வோம் ; தாங்க முடியா துன்பஙளை ,துயரங்களை ,அவமானங்களை ,அடிஉதைகளைத் தாங்கிக் கொண்டு மனித குலத்துக்காக உழைப்போர் மட்டுமே பல நூறாண்டாயினும் சாகாது மக்கள் மனங்களில் வாழ்பவர் ஆகிறார் ,

 

காந்தி ,அம்பேத்கர் ,பெரியார் ,மார்கஸ் ,எங்கெல்ஸ் ,பகத்சிங் போன்றோரே அதற்கு உதாரணம் . மரணத்தைத் தாண்டி மக்கள்நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ள ‘ஆன்ம பலம் மிக்க ‘ மானுடர்   இவர்களே !

 

உயிர் பயம் ,மரணமயம் ,எதிர்காலம் குறித்த பயம் இவை போன்ற பயத்திலேதான் ஆன்மீகமும் மதமும் ஜீவிக்கிறதோ ?

 

தொடர்ந்து பேசுவோம் [ இப்போது இடை வேளை ]

 

தொடர்ந்து பேசுவோம்,

 

சுபொஅ.

30/10/24.