சமூக மாறுதலுக்கு சூத்திரம் சாத்தியமா ?

Posted by அகத்தீ Labels:





சமூகமாறுதலுக்கு
சூத்திரம் வரைவது சாத்தியமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.



·         ஒவ்வொரு மதத்திலும் எது எது கெட்டது என்பதைத் தேடுவதை விடுத்து  ; எதுஎது நல்லதென தேடித் தெரிந்து  எல்லா மதத்தையும் கொண்டாடப் பழகின் மதப்பகைமை ஒழிந்து நல்லிணக்கம் பூக்குமே ?


·         தர்மம் , அறம் இவற்றைப் பேணுவது கடமை அல்லவா ? இவற்றை வற்புறுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் மதம் அல்லவா ? அறம் சார்ந்த வாழ்க்கை மதமின்றி சாத்தியமாகுமா ?


·         “வரலாறு தண்டிக்கும் , வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் சொல்லுகிறீர் ; இதுவும் புராணப் புனைவை நம்புவது போலத்தானே ?


·         புவியியல் , தட்பவெப்பம் , பண்பாடு சார்ந்து ஒவ்வொரு நாடும் வெவ்வேறு சூழலில் இருக்கிறது . அப்படி இருக்கும் போது உலகம் முழுவதும் சமூகமாறுதல் இப்படித்தான் நிகழ்ந்தது ; இனியும் இப்படித்தான் நிகழும் எனச் சூத்திரம் வரைவது சாத்தியமா ?


·         பொதுவாக தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் பார்பன எதிர்ப்பையே மையப்படுத்துகின்றனர் . அதிலும் பிராமணர் என மரியாதையாகக் கூடச் சொல்வதில்லை .பாப்பான் எனக் கொச்சைப் படுத்துகின்றனர் . இது சரியா ?



எப்போதும் எம்மீது ஏவ கேள்விக்கணையோடு காத்திருப்போர் அதிகம் . எல்லோரையும் ஏக காலத்தில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல . எனினும் வேறுவழியில்லை .கேள்வியும் உரையாடலும் விவாதமும் இல்லாமல் தெளிவு ஏது ?


ஒவ்வொரு மதத்திலும் எது எது கெட்டது என்பதைத் தேடுவதை விடுத்து  ; எதுஎது நல்லதென தேடித் தெரிந்து  எல்லா மதத்தையும் கொண்டாடப் பழகின் மதப்பகைமை ஒழிந்து நல்லிணக்கம் பூக்குமே ?


மயிலிறகால் வருடும் இவ்வாதம்  காதுக்கு இனியது . வம்பு தும்புக்கு போகவேண்டாம் என எண்ணுவோருக்கு பெரிதும் உடன்பாடானது . முதலில் இந்த கேள்வி ஒவ்வொரு மதத்திலும் பல கெட்ட கூறுகள் இருக்கிறது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டதாகவே நான் பார்க்கிறேன் . அதற்காக கேள்வியாளருக்குப் பாராட்டுகள் . கெட்ட கூறுகளை அடையாளம் காண்பதிலோ அதனை எதிர்த்துப் போரிடுவதிலோ என்ன பிழை இருக்க முடியும் ?

குழந்தைத் திருமணம் ,கணவன் இறந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற்றும் ஸதி வழக்கம் , கணவனை இழந்த கைம்பெண் மறுமணம் முடிக்கத் தடை , தேவதாசி முறை போன்ற இந்து மதத்தின் சில தீய வழக்கங்களை எதிர்த்துப் போராடாமல் ஒழித்திருக்க முடியுமா ? இதனை சாதிக்கப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் , ரானடே , கோகலே . முத்துலட்சுமி ரெட்டி , பெரியார் உள்ளிட்ட பலர் பிறப்பால் இந்து மதத்தவர் . இது போல் எல்லா மதத்திலும் உள்ள கெட்ட கூறுகளை அந்தந்த மதத்தில் பிறந்தோரே நன்கு உணர முடியும் ; எதிர்த்து போராட முடியும் ; போராட வேண்டும் .


இப்படிப் போராடும் போது , “ எங்க மதத்திலே மூக்கை நுழைக்கிற உனக்கு அந்த மதத்தின் தீமைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா ?” என கேள்வி எழுப்புவோர் வில்லங்கமானவர்களே ! ஒருவர் தான் பிறந்த மதத்தை விடுத்து அடுத்த மதத்தவர் மீது விமர்சனம் செய்யும் போது வேண்டாத காழ்ப்புணர்வும் பகைமையும் விசிறப்படும் .


இதனை பகுத்தறிவாளர்கள் அறிவர் .எனவே இங்கர்சால் , பெட்ரண்ட் ரசல் ,பெரியார் ,இபின் வராக் ,ஸ்டீபன் ஹக்கிங்க்ஸ் என ஒவ்வொருவரும் அவர்கள் பிறப்பால் ஒட்டிக்கொண்ட – அவர்கள் நன்கறிந்த மதத்தையே பெரிதும் கேள்விக்குள்ளாக்கினர் . இம்மரபைத் தொடர்வது காலத்தின் தேவையே !


அதே சமயம் பிற மதத்தின் கெட்ட அம்சங்களை மட்டும் பேசும் சங்பரிவார் , வகாபிஸம் மற்றும் தாலிபான் , கிறுத்துவ மதவெறிப் பிரச்சாரம் உள்ளிட்டவை மதப் பகைமையை உசுப்பிவிடும் என்பதில் ஐயமே இல்லை . அதனை தவிர்க்க வேண்டும் . எதிர்க்க வேண்டும் . கைவிடச் செய்ய வேண்டும் .


அடுத்து ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல அம்சங்களைக் கொண்டாட வேண்டும் என்பது நல்லதுதான் . ஆனால் கேள்வி எழுகிறதே. எது நல்ல அம்சம் ?.அன்பு , கருணை , இரக்கம் , இவற்றை எல்லா மதமும் பேசும் – ஆனால் அவை மனித குலத்தின் பொதுப் பண்பாகவே கொள்ள முடியும் .ஒரு மதத்திற்குரியதெனப் பார்ப்பதே சிக்கலாகிவிடும்  அல்லவா?


இன்னொரு மதத்தின் நல்ல அம்சம் என எதையேனும் நீ சுட்டிக் காட்டினாலே உன்னை அந்த மதத்தின் அடிவருடியாகச் சித்தரிக்கும் சூழல் தானே எங்கும் நிலவுகிறது பெண்கள் குறித்த மதத்தின் அணுகுமுறை ; உழைப்பாளர் குறித்த மதப்பார்வை இவற்றை விமர்சிக்காமல் கொண்டாட முடியுமா ?


வெள்ளம் போன்ற இயற்கை உற்பாவத்தின் போது வெடித்தெழும் மனிதமும் ;விழாக் கொண்ட்டாட்டங்களின் போது பொங்கி வழியும் பாசமும் ; அப்படியே நீடிக்குமா ? அது சாத்தியமா ? இல்லவே இல்லை . அந்த உணர்ச்சி வடிந்த பின்னர் மீண்டும் உள்ளத்தில் உறங்கிய சைத்தான் தன் வேலையைக் காட்டிவிடுவானே !


இப்படிச் சொல்வதால் துன்பதுயரத்தின் போது பொங்கும் மனிதத்தையோ , கொண்டாட்டங்களில் முகிழ்க்கும் பாசத்தையோ வேண்டாம் என ஒதுக்கச் சொல்லவில்லை .அதனைத் தொடரவும் வேண்டும் . ஆனால் அதுமட்டுமே தீர்வல்ல .அந்த இணக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டே மதங்களின் மீதான விமர்சனத்தை நயத்தகு நாகரீகத்தோடு முன்னெடுப்பது தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையாகும் .


தர்மம் , அறம் இவற்றைப் பேணுவது கடமை அல்லவா ? இவற்றை வற்புறுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் மதம் அல்லவா ? அறம் சார்ந்த வாழ்க்கை மதமின்றி சாத்தியமாகுமா ?


தர்மம் செய்யுங்க என்பதை பிச்சை போடுங்கள் என்றே பெரும்பாலான மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர் .  “அறம் செய விரும்பு” என்பதை பள்ளியிலேயே படித்த போதிலும் ; அறம் என்பது சில மனிதாபிமான உதவிகள் என்றே நம் பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது .

1]மனிதனுக்கும் மனிதருக்கும் இடையிலான நடத்தை
2]சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான நடத்தை
3]இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான நடத்தை

என மும்முனையில் உள்ள உறவுகள் , கொடுக்கல் வாங்கல் , என அனைத்தும் தடங்கிலின்றி தொடர ஏற்படுத்திக் கொண்ட நடைமுறைகளே அறம் அல்லது தர்மம் என்படும் . இது யாரோ ஒருவரால் ஓரிரவில் உருவானதல்ல .மாறததும் அல்ல . காலந்தோறும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. வல்லான் வகுத்த வாய்க்காலாய் கால ஓட்டத்தில் திரண்டவையும் ஆதிக்க சக்திகளால் திணிக்கப்பட்டவையும் இதில் அடங்கும் .ஆதிக்க சக்திகள் நலன் பேண  மத நூல்களால் திரட்டப்பட்டு புனித முலாம் பூசப்பட்டவையே அறம் அல்லது தர்மம் என்கின்றனர். கடவுளின் பெயரால் மக்கள் மீது நுட்பமாய் திணிக்கப்பட்டவை .அதாவது சமூகத்தில் ஆதிக்க நிலையில் இருப்போர் நலனையும் அவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மதங்களின் துணையோடு சமூகத்தின் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டு ஏற்குமாறு செய்யப்பட்டவையே அறம் எனலாம் .


“ அறம் என்பது மனிதனின் ஒழுக்க நடத்தை பற்றியது என்றாலும் அதனை இயக்குவது தத்துவக் கண்ணோட்டமே என்பதைத் தத்துவத்தின் வரலாறு உறுதிப்படுத்துகிறது” என்பார் தேவ. பேரின்பன் .


தர்மம் என இந்து மதவாதிகள் சொல்வது சனாதன தர்மத்தையே – அதாவது மநு தர்மத்தையே -  அதாவது சாதிய ஒடுக்குமுறையை அப்படி ஏற்றொழுகச் சொல்லும் தர்மமே . கிறுத்துவம் , இஸ்லாம் மதங்களும் ஒடுக்குமுறைக்கு பணிந்து போவதையே தர்மம் , அறம் எனப் போதிக்கின்றன . எல்லா மதங்களும் செல்வச் செழிப்பும் வறுமையும் ஆண்டவன் வழங்கியதே எனப் போதிக்கின்றன . பெண்ணை இரண்டாம்தர குடிமக்களாய் தாழ்த்துவதை அறம் , தர்மம் சார்ந்ததாகவே கற்பிக்கின்றன . அதே நேரம் ஆதியில் சமூகம் கூட்டு சமூகமாக அனைத்தையும் பொதுவில் வைத்து பங்கிட்டு வாழ்ந்த சமூகமாக இருந்த போது உருவான பொதுக்கூறுகள் அடுத்து வந்த காலகட்டங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டது ; இன்னும் பேசப்படுகிறது . ஆயினும் அந்த சொற்களும் வர்க்க - வர்ண சமூகத்தின் நலனுக்கு ஏற்ப பொருள் திரிக்கப்பட்டுள்ளன .


ஆக அறம் ஏற்ற தாழ்வற்றதாக – வர்க்க ,வர்ண பேதமற்றதாக – பாலின சமத்துவம் மிக்கதாக மாறினால் மட்டுமே அந்த அறம் அல்லது தர்மம் எல்லோருக்கும் உகந்ததாகும் . மதம் இதற்கு எதிராகவே உள்ளது. எனவே புதிய அறம் ஓங்க மதம் சார்ந்த அணுகுமுறை ஒரு போதும் உதவாது என்பதே உண்மை . அறம் சார்ந்த வாழ்க்கை வாழ மதம் தேவையில்லை ; இன்னும் சொல்லப் போனால் தடையும் கூட.






“வரலாறு தண்டிக்கும் , வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் சொல்லுகிறீர் ; இதுவும் புராணப் புனைவை நம்புவது போலத்தானே ?

“ தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும்” என புனைவு மூலம் கதை சொல்லி போதிக்கும் புராணங்கள் , காப்பியங்கள் , இதிகாசங்கள் போல்தான் வரலாறும் என்கிற பார்வை இக்கேள்வியில் எதிரொலிக்கிறது . இந்தியாவில் வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கம் நெடுங்காலமாக இருந்ததில்லை .இங்கே புராணப் புனைவுகளுக்கும் வரலாற்றுக்கும் இடையே ஆன பெருங்குழப்பம் பல படித்தவர்களிடமே உண்டு . ராமாயணம் , மகாபாரதம் போன்றவை முழுக்க முழுக்க கற்பனைக் கதை ஆயினும் அதற்கு ஒரு தெய்வீக அந்தஸ்த்து கொடுத்து மயக்கம் கொள்கிற மனோ நிலை நம் மக்களிடையே வலுவாக உண்டு .


ஆனால் வரலாறு அப்படிப்பட்டதல்ல. “ சரித்திரமானது வெறும் சித்தரிப்பான கலையும் அல்ல ; மீற முடியாத   விதிகளைக் கொண்ட   இயற்கை விஞ்ஞானமும் அல்ல ; மாறாக இரண்டின் கூறுகளையும் ஏதோ ஒரு வகையில் கொண்ட சமூகவிஞ்ஞானம்.” என்பார் அருணன்.


வரலாற்றை வெறுமே ராஜா –ராணி கதையாக , சதி , சூழ்ச்சி , போர் , ஆதிக்கம் , வெற்றி என்கிற சாண்டில்யன்  பாணி சரித்திரக்கதைகளைப் போல் புரிந்து கொண்டால் வரலாறு தண்டிக்கும் அல்லது விடுதலை செய்யும் என்கிற வாதங்கள் கேலிக்குரியதாகவே அமையும் .   


“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என காரல் மார்க்ஸ் சொன்னதை உள்வாங்கின் சற்று ஒளி புலப்படும் . வேட்டையாடுதல் , வேளாண்மை , நெசவு , தொழில் என பலவித உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியும் அவற்றோடு மனிதர்களின் உறவும் அதனுடன் இணைந்த சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வு போக்குகளும் என  விரிந்த தளத்தில் வரலாற்றைப் பார்க்கப் பழகியோர் சில கறாரான அனுமானங்களுக்கு வருவது சாத்தியமே !


நேற்றைய உலகம் இப்படி இருந்தது – நாளைய உலகம் இந்த திசைவழியில் பயணிக்கும் என பெருமளவு உய்த்துணர்ந்து அதன்வழி மாற்றம் வரும் என கூறுவதும் சாத்தியமே . இதனை வரலாற்று இயங்கியல் பார்வை என்பர்; அதாவது மார்க்சிய பார்வை என்பர்.


“ வரலாறு தண்டிக்கும் ; வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் கூறுவது ஆருடமோ முரட்டு நம்பிக்கையோ அல்ல சமூக அறிவியல் வழிவந்த எதிர்பார்ப்பு . லட்சிய உறுதியின் வெளிப்பாடு . வரலாறு குறித்த மார்க்சிய பார்வையை அல்லது சமூக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்றழைப்பர் . அருணன் இதனை சரித்திரப் பிரபஞ்ச வாதம் என்பார் .ஆதனைத் தொடர்ந்து பயில்வோம்.




4] புவியியல் , தட்பவெப்பம் , பண்பாடு சார்ந்து ஒவ்வொரு நாடும் வெவ்வேறு சூழலில் இருக்கிறது . அப்படி இருக்கும் போது உலகம் முழுவதும் சமூகமாறுதல் இப்படித்தான் நிகழ்ந்தது ; இனியும் இப்படித்தான் நிகழும் எனச் சூத்திரம் வரைவது சாத்தியமா ?


நுட்பமான கேள்வி .  “ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளையும்  தங்கள் காலனிகளாக மாற்ற முடிந்தது எவ்வாறு ? ஏன் சீனாவோ அமெரிக்காவோ இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பி – விடைதேடிப் பயணித்து ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் “ துப்பாக்கிகள் ,கிருமிகள்,, எஃகுகள்” .இந்த நூல் வரலாற்றின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் .


அதனை மார்க்சிஸ்ட்டுகள் மறுப்பதில்லை . புவியியல் , தட்பவெப்பம் , உற்பத்தி முறைகள் , உற்பத்தியோடு இணைந்த மனிதர்களுக்கிடையேயான உறவுகள்  , அச்சமூகத்தின் கருத்து நிலை என எல்லாம் வினையாற்றும் ; ஒவ்வொரு நாட்டின் காத்திரமான சூழலை ஆய்ந்தே அந்நாட்டின் சமூக வரலாற்றை கணிக்க முடியும் என்பதில் ஐயமே இல்லை .



அதே சமயம் இந்த பூமிப்பந்தில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனி காரணமும் சூழலும் இருப்பதுபோல் சில பொதுக்கூறுகளும் உண்டு .


ரஷ்ய வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ள  “சமுதாய வரலாற்றுச் சுருக்கம்” நூலில் கூறுகின்றனர் ; “ சிக்கல் நிறைந்த உற்பத்தி செயல்முறை முழுவதையும் தன்னந்தனியாக மனிதனால் சாதித்துவிட
முடியாது . இயற்கையின் ஆவேசத்தை எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியாக சமாளித்திருக்க முடியாது . ஏறுமாறான அந்தப் போராட்டத்தில் அவன் அழிந்தொழிந்து போயிருப்பான். சமூகங்களாக ஒன்று சேர்ந்து முந்திய பரம்பரையின் அனுபவத்தையும் , நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலமே மனிதர் பண்ட உற்பத்தியைப் பெருக்க முடியும் . உழைப்பு சமூகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்க முடியும்”


ஆனால் அந்த உழைப்பின் பலன் எப்படி பகிரப்பட்டது என்கிற கேள்வி முக்கியமானது ? இந்த கேள்விக்கு விடை தேடும் போது வர்க்க சமூகம் துலக்கமாகப் புலப்படும். சமூக வாழ்க்கையின் தனித்தனியான நோக்குகளை ஆய்வு செய்கின்ற  சிறப்பு சமூக அறிவியல்களுக்கு மாறாக வரலாற்றுப் பொருள் முதல் வாதமானது சமூக வாழ்க்கையை ஒட்டு மொத்த மாகவும் அதாவது அதனுடைய பல்வேறு நோக்குகளிடையேயான உள்  தொடர்பு மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்கிறது. இதனடிப்படையில் மனித குலம் மூன்று கட்டங்களை அல்லது யுகங்களைத் தாண்டி நான்காவது கட்டத்தில் அல்லது யுகத்தில் நிற்கிறது ; இதன் கர்ப்பத்தில் அடுத்த கட்டம் அல்லது யுகம் கருத்தரித்துவிட்டது .


1] ஆதிபொதுவுடைமை சமுதாயம் எனப்படும் ஆதியுகம் , 2] அடிமை சமுதாயம் எனப்படும் ஆண்டான் யுகம் , 3] நிலப்பிரபுத்துவ சமுதாயம் அல்லது நிலப்பிரபுத்துவ யுகம் , 4] முதலாளித்துவ சமுதாயம் அல்லது முதலாளித்துவ யுகம்  . இனி அடுத்து வருவது பொதுவுடைமை சமுதாயமாக அல்லது புதுயுகமாக அமையும் . இதுவே மனித சமூக வரலாறு குறித்தபொதுவான கோட்பாடு .ஆனால் இதனை இயந்திர கதியாக கணித சூத்திரம் போல் எல்லா நாட்டிலும் அப்படியே பொருத்த முடியாது . பொருத்தவும் கூடாது .அந்தந்த நாட்டின் தனித்தன்மையையும் சேர்த்த பரிசீலிக்க வேண்டும் . எடுத்துக்காட்டாக கிரேக்கத்திலும் ஐரோப்பியாவிலும் இருந்தது போன்ற அடிமை வியாபாரம் அப்படியே இந்தியாவில் இருந்ததா ? இங்கே நிலவும் சாதி முறை அங்கே ஏன் இல்லை ? இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன ? அடுத்தடுத்து பார்ப்போம் .


மார்க்ஸோ லெனினோ வறட்டு சூத்திரத்துக்குள் எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக நுழைக்கச் சொல்லவில்லை . இது குறித்து யுகங்களின் தத்துவம் நூலில் அருணன் சுட்டிய வரிகள் மிக முக்கியமானது .



“ சோவியத் அறிஞர்கள் கீழ்வரும் முக்கியமான செய்தியைத் தருகிறார்கள் : வாழ்க்கை படு வேகமாக முன்னேறும் போது ஏற்படும் புதிய மற்றும் எதிர்பாரா விஷயங்களைக் கவனிக்கத் தவறும் போது கதேயின் ஃபாஸ்ட் படைப்பில் வரும் இந்த வரிகளை லெனின் அடிக்கடி மேற்கோள் காட்டுவார் : ‘ எனது நண்பா , கோட்பாடு என்பது பழுப்பானது , ஆனால் வாழ்வென்னும் நித்திய மரமோ பசுமையானது’ மிகவும் முன்னேறிய சமூகக் கோட்பாட்டை விடவும் உலகில் உண்மையில் என்ன நடக்கிறதோ அந்த வரலாற்றின் வாழ்வு இன்னும் வளமானது . நமது பரபரப்பான , எழுச்சிமிகு யுகத்தில் நாம் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது .வரலாற்றியல் பிரபஞ்ச வாதமானது நிகழ்வுகளின் போக்கைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புறவயமான வழிகாட்டலைத் தருகிறது ;அவற்றை அறியவும், புரிந்து கொள்ளவும் , விஞ்ஞான பூர்வமாக முன்னறியவும் , சமூக வளர்ச்சியின் வாய்ப்புகளையும் போக்குகளையும் நோக்கவும் நமக்கு வழிவகுத்துத் தருகிறது .அப்படியாக புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கோட்பாட்டு அஸ்த்திவாரத்தைப் போட்டுத்தருகிறது.”


அடுத்தடுத்து இதனை மேலும் கூர்ந்து பார்ப்போம் .











பொதுவாக தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் பார்பன எதிர்ப்பையே மையப்படுத்துகின்றனர் . அதிலும் பிராமணர் என மரியாதையாகக் கூடச் சொல்வதில்லை .பாப்பான் எனக் கொச்சைப் படுத்துகின்றனர் . இது சரியா ?

இந்தக் கேள்வி அடிக்கடி வீசப்படுகிறது . தமிழக பண்டைய இலக்கியங்களில் பார்ப்பான் என்ற சொல்லே பரவலாகப் புழக்கத்தில் இருந்ததை காணமுடிகிறது .” பார்ப்பன மகளே !பார்ப்பனமகளே!” என விழிக்கும் குறுந்தொகைப்பாடலாகட்டும் ;   “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்…..” என ஒலித்த சிலம்பாகட்டும் ; “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சேஎன உடுக்கை அடித்த பாரதியாகட்டும் ; பேராசைப் பிடித்த பார்ப்பானை , “ சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன’’ என வினவிய திருவிளையாடல் புராணமாகட்டும் ;  “ஊருடன் பார்ப்பார் கூடி /உயர்ந்ததோர் /சாலை கட்டி/நீரிலே மூழ்கி வந்து/நெருப்பினில் நெய்யைத் தூவி/கார்வயல் தவளைபோல/கலங்கிய உங்கள் வேதம்/பாரைவிட்டு அகன்றதேனோ?/பாய்ச்சலூர் கிராமத்தாரே” என 15 ஆம் நூற்றாண்டில் பதிகம் பாடிய உத்தரநல்லூர்நங்கை என்னும் பெண்கவிஞராகட்டும் … அல்லது தோண்டத் தோண்டக் கிடைக்கு தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் பார்ப்பான் என்று தூயதமிழில்தான் சொல்லப்பட்டிருக்கிறது . சொல்லில் என்ன பிழை ? கிராமப்புற மக்கள் மற்றும் சாமானியர்கள் சொல்வழக்கு பார்ப்பனர் என்பதே ! பிராமணர் என சம்ஸ்கிருதச் சொல்லால்  அவர் சுட்டுவதில்லை. 

பாரம் எனும் சொல் பருத்தியையும், வெண்மையையும், வெண்ணிறப் பூண்டையும் குறித்தது..பார்ப்பாரப் பூசணி, பார்ப்பாரக் கழுகு, பார்ப்பாரப் பசலை, பார்ப்பாரப் பூண்டு, பார்ப்பார நாகம் என்பவை வெண்ணிறம் குறித்தவை.தமிழர் கருப்பு அதன் எதிர்  நிறம் அமைந்த ; எதிர் பண்பாடு கொண்ட சமூகப்பிரிவைப் பார்ப்பான் என விழித்தனர் .

இந்து மதம் என்கிற ஒரு மாபெரும் குடைக்கீழ் பல்வேறு சமய நம்பிக்கைகளையும் ; வழிப்பாட்டு முறைகளையும் ; சடங்காச்சாரங்களையும் திருதிராஷ்டிர ஆலிங்கனம் செய்து தங்கள் சனாதன தர்மத்தையும் அதாவது வ்ர்ணாஸ்ரம தர்மத்தை உச்சத்தில் நிறுத்தினர் . சமஸ்கிருதமும் பிராமணனும் உச்சத்தில் இருத்தப்பட்டது . பார்ப்பான் பிராம்ணன் ஆக்கப்பட்டான் . இந்த போக்கினை மேநிலை ஆக்கம் அல்லது  சமஸ்கிருதமயமாக்கல் என சொல்லுவர் . வ்ர்ணாஸ்ராம ஆதிக்க மனோநிலையை பிராமணியம் என சமஸ்கிருதவழியிலும் பார்ப்பணியம் எனத் தமிழ் வழியிலும் குறிப்பிடுவர் .  “இந்த வர்ணச்சமூகக் காலக்கட்டத்தில் தான் பிராமணனாக, பார்ப்பான் உருமாற்றம் பெறுகிறான்” என்பார் சோலை சுந்தரப் பெருமாள்.



பார்ப்பனியம் என்கிற மேலாதிக்க உணர்வு அல்லது கருத்தோட்டம் பார்ப்பனர்களிடம் மட்டும் அல்ல ; பார்ப்பணரல்லாத பல மேல் சாதியினரிடத்தும் ; இடைநிலை சாதியினரிடத்தும் ஓங்கி இருக்கும் . சில நேரங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கூட இவ்வுணர்வு தலைதூக்கிவிடும் .மேலாதிக்க உணர்வின் குறியீட்டுச் சொல்லே பார்ப்பனியம் அல்லது பிராமணியம் .

பார்ப்பனியம் என்ற மேலாதிக்க எதிர்ப்பு என்பதை திராவிட இயக்கத்தின் முழுக் குத்தகையாகக் கருதி சுருக்கிப் பார்த்தல் கூடாது.மாறாக தமிழர் தத்துவ மரபில் பார்பணிய எதிர்ப்பு - சனாதன வைதீக எதிப்பு என்பது காத்திரமானது . நா.வானமாமலை , அருணன் , தேவபேரின்பன் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களைத் தொடர்ந்து வாசிப்பின் விளங்கும் . அதனை நவீன அரசியல் தளத்தில் வலுவாக முன்னிறுத்தியதுதான் திராவிட இயக்கம் செய்தது . ஆயினும் தேர்தல் , பதவி ,பணம் , சுயநலம் எனத் தொடங்கிய பின் அங்கும் அது நீர்த்துபோய் ; பார்ப்பனிய எதிர்ப்பு வெறும் சந்தர்ப்பவாத நிலையாக திரிந்து விட்டது .இந்நிலையில் அவர்கள் பேசும் பார்ப்பன எதிர்ப்பின் மீதான கோபத்தில் வரலாற்று உண்மையை நிராகரிக்க இயலாது .


பி.சீனிவாசராவ், ஏ.பி.பாலசுப்பிரமணியம் , எம் ,ஆர். வெங்கட்ராமன் ,பி.ராமமூர்த்தி , ஏ.எஸ்.கே .ஐயங்கார் .இ.எம்.எஸ் .நம்பூதிரிபாத், ஆர் .உமாநாத், உரா வரதராசன் , மைதிலி சிவராமன் ,கே.வரதராசன் , டி.கே.ரங்கராசன் , சீத்தாராம் யெச்சூரி , வாசுகி, தபால்தந்தி இயக்கத்தின் முன்னோடி பஞ்சாபகேசன்   உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் மட்டுமல்ல ;அக்கிரஹாரத்து அதிசய மனிதர் என அண்ணா புகழந்த வரா என அழைக்கப்பட்ட வ. ராமசாமி அய்யங்கார் , சின்னக்குத்தூசி என் அன்போடு அழைக்கப்பட்ட தியாகராஜன் , ராஜம் கிருஷ்ணன் என்ற படைப்பாளி உள்ளிட்ட. எண்ணற்ற மாமனிதர்கள் பிறப்பால் பார்ப்பனராயினும் ; சுயசாதி அபிமானத்தை உதறி எறிந்துவிட்டு ; பூணூலையும் கழற்றி எறிந்துவிட்டு  பார்ப்பனிய ஆதிக்கத்தை வேரறுக்க களங்கண்டவரண்றோ !

யாரையும் புண்படுத்த பார்ப்பனியம் என நாம் பேசவில்லை. எழுதவில்லை . தனிப்பட்ட எந்த பார்ப்பனருக்கும் நாம் எதிரியல்ல ; அவர்தாம் வாழ்நிலை மேம்படவும் பாடுபட முற்போக்காளர் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை  .

பார்ப்பனியம் என்பதை மேலாதிக்க எதிர்ப்பென்றே உணர்க . இந்து மதவெறியின் உள்ளடக்கம் வர்ணாஸ்ரமமே . அதனை சரியான கோணத்தில் எதிர்க்க பார்ப்பனியம் என்கிற  ஆதிக்கக் கண்ணோட்டத்தைக் குறிவைப்பது மிகச்சரியானதே ! அதே சமயம் மநுவை அப்படியே முன்மொழியாது இந்துத்துவக் கூட்டம் . புனுகு பூசி , கோமியம் தெளித்து , திறமை , தகுதி என நுட்பமான சொல்லாடல்களில் தன்னை மறைத்துக் கொண்டு அதே வர்ணாஸ்ரமத்தை திணிக்கவே சங்பரிவார் முயல்கிறது . எட்டாம் வகுப்புக்கு பின் தன் தந்தையின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என கல்விக் கொள்கையில் முன்மொழிவதும் ; தன் தந்தையின் தொழிலில் சிறார் ஈடுபடுவது குழந்தைத்தொழிலாளி ஆகாதென்றும் , திறமை மிகு வல்லரசு என்றெல்லாம்  பாஜக அரசு முழக்குவதின் பின்னால் மநு உள்ளார் .வர்ணாஸ்ரமம் உள்ளது . பார்ப்பனியம் உள்ளது . உலகமயம் உள்ளது . அதனை எதிர்ப்பதற்கு ஒன்று திரளும் போதும் - திரட்டும் போதும் பார்ப்பனியத்தை எதிர்ப்பது தவிர்க்க முடியாததுதானே ! தவிர்க்கக்கூடாதது தானே !   தன் சொந்த சாதி அபிமானத்தை மீறி பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பில் முனைமுகத்தில் நின்றோரே நாம் முன் சுட்டிய சான்றோர் .அவ்வழி யோசிப்போர் சினங்கொள்ளார் என்பதே எம் தாழ்மையான கருத்து.

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் , 07-02-2016
















அறிவுஜீவி சமூகத்தினுள் காய்நகர்த்தும் சதி….

Posted by அகத்தீ Labels:




.


அறிவுஜீவி சமூகத்தினுள் காய்நகர்த்தும் சதி….


 “அவர் இன்றுவரை புறக்கணிப்புக்கு உரியவராக உள்ளார்.காரணம் அவர் ஒடுக்கப்பட்டவராய் பிறந்ததால் மட்டும் அல்ல , இறுதிவரை அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றார் என்பதால்தான்” என நூலின் நிறைவு வரிகளில் ஆசிரியர் சிவா கூறியிருப்பது மிகை அன்று .


ஒரு முறை ஒரு தலித் பட்டறைக்குச் சென்றிருந்தேன் அதனை துவக்கிவைத்த கிறிஸ்டோபர் காந்தி பேச்சை ஒரு கேள்வியோடு துவக்கினார் . அந்த கேள்வி பதில் முழுவதும் எனக்கு நினைவில்லை ஆயினும் அந்த கருத்தை நினைவு படுத்தும் ஒரு செய்தியை இந்நூல் முன்னுரையில் சிவா எழுப்புகிறார் .


“ இன்று தேசிய தினங்கள் என அறியப்படும் பெரும்பான்மை தினங்கள் உயர் சாதி தலைவர்களின் , அறிஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய தினங்களாக மட்டுமே உள்ளன .இவற்றின் மூலம் தேச நிர்மாணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கெடுத்தனர் என்பது போன்ற பொய்மை நிலைநாட்டப்படுகிறது .இந்தியாவின் முதல் பிரதமர் ,முதல் குடியரசுத் தலைவர் என எல்லா ‘முதல்’உம் குறிப்பிட்ட பிரிவினராக இருப்பது தற்செயல் அல்ல .அவை போல் எல்லா தேசிய தினங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிறந்த நாள் , நினைவு நாள் என இருப்பதும் தற்செயல் அல்ல .அதிகாரம் தொடர்பான அரசியல் சதி அதில் அடங்கியுள்ளது .”


ஆம் . உரக்க விவாதிக்க வேண்டிய சதி இது . அண்மையில் ரோஹித் ரெமுலாவின் தற்கொலை உயர் கல்விக் கூடங்களில் நிலவும் சாதிய அகம்பாவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது .அறிவுஜீவி சமூகத்திலும் அதிகாரபீடத்திலும் ஊடும் பாவுமாய் அப்பிக்கிடக்கும் அந்த வஞ்சக ஆட்டத்தினை முழுமையாய் எதிர்கொண்ட ஒரு போராளி விஞ்ஞானி மேக்நாட் சாகாவின்  வாழ்க்கையே இந்நூல் .


இன்றைய வங்க தேசத்தில் டாக்கா நகரிலிருந்து நாற்பத்தைந்து கிலோமீட்டர் வடக்கே சியரத்தாலி என்ற கிராமத்தில் மிகவும் தாழ்நிலையில் ஒடுக்கப்பட்ட சாகா எனும் சாதியில் 1893 ல் பிறந்தவர் . மேக்நாத் . பெயரின் பொருள் மேகங்களின் தலைவன் அதாவது இந்திரன் என்பதாகும் . இப்பெயரைத் துறந்து மேக்நாட் எனச் சூடிக் கொண்டார் . பெயர்மாற்றத்திற்கே ஒரு காரணம் உண்டு . இராமாயணத்தில் ராவணனின் தம்பி இந்திரஜித்தின் பெயர் மேக்நாட் ஆகும் . இணையற்ற போர்வீரன் .விபீஷ்ணன் காட்டிக் கொடுக்காவிடில் இவனை யாரும் தோற்கடித்திருக்க முடியாது .மேக்நாட் இளைஞனாக இருக்கும் போது இந்திரஜித்தைப் பற்றி ஆர்வமுடன் அறிந்தான் . மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய ’மேக்நாட் வதம்’ எனும் இதிகாச நூல் இப்பெயரை அவன் தேர்வு செய்ய உந்துவிசையாய் இருந்தது . இராவணன் , துரியோதனன் , என எதிர்மறையாகப் பார்க்கப்பட்டப் பெயர்களில் இதுவும் ஒன்று .


பள்ளிபருவம் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் சவாலாகவே இருந்தது .பொருளாதார நெருக்கடி , சமூக ஒடுக்குமுறை என இரு நுகத்தடிகள்  பூட்டப்பட்டதாகவே இருந்தது . கல்லூரி வாழ்க்கையும் அப்படித்தான் . எதிர் நீச்சலடித்து பேராசிரியரானாலும் பயணம் சுலபமாயில்லை. இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1916 ல் சேர்ந்தார் .1919 வரை அங்கு பணியாற்றிக் கொண்டே மேக்நாட் சாகா எழுதிய அறிவியல் கோட்பாட்டு ஆய்வு கட்டுரைகள் வெளிநாட்டினர் கவனத்தை ஈர்த்தது .வெளிநாடு சென்று சக அறிவியலாளரோடு உரையாடவும் ஆய்வு செய்யவும் லண்டன் புறப்பட்டுச் சென்றார் .


சாகாவின்  வெப்ப அயனியாக்கக் கோட்பாடும் , அயனியாக்கச் சமன்பாடும் வானியலை நவீனப்படுத்தின. “ நவீன வானியற்பியல் சாகா கோட்பாட்டில் இருந்தே பிறந்தது” என்பார் வானியல் ஆய்வாளர் சிசிலியா. “ சாகாவிற்கு பிறகான வானியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சாகா கோட்பாட்டின் நீட்சிகளாகவே இருந்தன” என்பார் ரோஸ்லேண்ட்.” இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்பாடுகளை சாகா கோட்பாடே தீர்த்து வைத்தது” என்பார் அப்துல் கலாம் .நிறமாலையியல் ,வெப்பயியல் ,அயனிமண்டல கதிர் வீச்சு ,அணுக்கரு இயற்பியல் என இயற்பியலின் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்தது இவரது ஆய்வு.இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் மிகவும் காத்திரமானவை .


இவர் 1921ல் மீண்டும் கல்கத்தா வந்து பேராசிரியராகப் பொறுப்பேற்றார் .அங்கு ஒரு ஆய்வுகூடம் அமைக்க கடுமையாகப் போராடினார். நவீன வானியலின் கர்த்தா என உலகம் இவரைக் கொண்டாடிய போது இங்கே ஒரு சாதாரண எண்ணைப் பம்புக்குக் கூட அல்லாடினார் .கல்லூரி துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில் ;


“ என்னால் திறந்துவிடப்பட்ட ஆய்வுப் பகுதியில் ஐரோப்பிய அமெரிக்க அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது ,இங்கு போதிய நிதிவசதி இல்லாத காரணத்தால் நான் கழிமடையிலும் செயலற்ற நிலையிலும் இருந்திடச் சபிக்கப்பட்டுள்ளேன்.” என்கிறார் .


இங்கு பணியாற்றும் போது சர்.சி.வி.ராமனின் மேட்டுக்குடி அணுகுமுறை மற்றும் செயல்பாடுகளால் சாகாவுக்கும் ராமனுக்கும் இடையே முரண்பாடுகள்  முன்னுக்கு வந்தன .இறுதியில் கல்கத்தா பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறி அகமதபாத் சென்றார் . மீண்டும் கல்கத்தா வர பதினாறு வருடங்களாயின.


சர்.சி.வி.ராமன் போன்றோர் தேசவிடுதலையில் நாட்டம் கொள்ளினும் பங்கேற்பைத் தவிர்த்தனர் . மாணவப் பருவத்திலேயே அனுஜீலன் சமிதி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர் கொண்டவர் சாகா.இங்கு பணியாற்றிய போது நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது ; சாகா தன் கல்லூரியில் வகுப்பெடுக்க மறுத்து தானும் பங்கேற்றார் . சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பும் கிடைத்தது . வெள்ள நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டார் .


கல்கத்தாவை மையமாகக் கொண்டு சாகா தொடங்கிய  ‘தேசிய அறிவியல் கழகம்’ மற்றும்  ‘ சயின்ஸ் அண்ட் கல்ச்சர்’ ஆய்வு  இதழ்’ ; பெங்களூரை மையமாகக் கொண்ட சர்.சி.வி.ராமன் தொடங்கிய ‘இந்திய அறிவியல் கழகம்’ மற்றும் ‘கரண்ட் சயின்ஸ்’ ஆய்வு இதழ் என இரண்டு போக்குகளின் பின்னால்  ‘அதிகாரம் தொடர்பான அரசியல் சதி’ பின்னிக்கிடப்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது .சாகா அதிகார பீடத்துக்கு நெருக்கமானவராக இல்லாமல் போனார் . அதில் அவரது சாதியும் அவரின் இடதுசாரி அரசியல் சமூகப் பார்வையும் பெரும் பங்கு வகித்தது .


இவர் மாணவப் பருவத்திலேயே முற்போக்கு அரசியல் ஈடுபாடு கொண்ட சாகா 1951ல் நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கல்கத்தா தொகுதியில் ஆர் எஸ் பி சார்பில் நின்று இடதுசாரிகள் ஆதரவோடு பெருவாரியான வாக்குகளோடு வெற்றிபெற்றார் . இவரது நாடாளுமன்றப் பணி அறிவியல் மக்களுக்காக ,சுயசார்பு , மொழிவழி மாநிலம் , ஒடுக்கப்பட்டோர் உரிமை , ஆற்றுப்படுகைத் திட்டம் என ஆக்கபூர்வ முற்போக்கு திசையில் அமைந்தது . இவரது கேள்விகள் ஆட்சியாளர்களை உலுக்கியது .இளமையில் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்த சாகா பிற்காலத்தில் தனிநபர் சாகசங்களைவிட மக்கள் திரள் இயக்கங்களே வெற்றுபெறும் என்ற கருத்துக்கு வந்து சேர்ந்தார். 1956ல் காலமானார் .

“ ஒரு வர்க்க சமுதாயத்தில் எல்லா நிறுவனங்களையும் போல அறிவியலும் வர்க்க சார்புடையதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை . அறிவியல் தொழில் நுட்பத்தைக் கோடான கோடி ஏழை மக்களின் வாழ்வை வளமாக்கும் கருவியாகவே சாகா கருதினார் .” என்கிறார் நூலாசிரியர் .


வேதங்களைக் கொண்டாடும் மனநிலைக்கும் , சாதியைக் கொண்டாடும் மனநிலைக்கும் உள்ள நெருக்கமான உறவை சாகா புரிந்து கொண்டதால் வேதங்களை சாகா கூர்மையாகத் தாக்கினார்.அவர் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார் விளங்குகிறதா ?


சர். சி.வி.ராமன் பார்ப்பனராக இருந்ததும் ; அவரது மேட்டுக்குடி அணுகுமுறையும் ; அதிகார பீடத்தை நெருங்கி நின்றதும் ; சாகாவை பலவழிகளில் புறக்கணித்ததும் இந்நூலில் பதிவு செய்யும் போதே இந்நூல் ராமனின் அறிவியல் திறனையோ நேர்மையையோ தவறாகச் சுட்டவில்லை .ஆரம்பத்தில் சாகாவை ஆதரித்த நேரு பின்னர் மாறியது  - பார்சி வகுப்பைச் சார்ந்தவரும் டாட்டா குடும்பத்தைச் சார்ந்தவருமான  ஹோமி பாபா ,அதிகார பீடங்களோடு இணைந்து நின்ற பட்னாகர் போன்றோர் பெற்ற வாய்ப்புகள் ,அங்கீகாரம்  ;இவை சாகாவுக்கு மறுக்கபட்டது ஏன் ? இந்நூல் உரக்க எழுப்பும் கேள்வி இதுவே ! இந்திய சமூகத்தின் வர்க்க வர்ண  ஆதிக்கத்தை புரியவைக்கிறது இவரின் வாழ்க்கை .


கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாற்று நூலில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ஒரு செய்தியைச் சொல்வார் ; “சமூகமுதல் [சோஷியல் கேப்பிட்டல்] நமது வாழ்வில் வகிக்கும் பங்கு குறித்து நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டும் .வறுமை கிராமச் சூழல் போன்ற தடைகள் மட்டுமில்லாது சமூக முதலின்மை எனும் சவாலையும் சந்திக்கும் நமது மாணவ மாணவியர் அவ்வளவாக நடை முறை வாழ்வில் மிளிர முடிவதில்லை . ராமானுஜம் போன்றே கணிதத் திறமை பொதிந்த ஆனால் சமூக முதலின்றிப் பிறந்த எவ்வளவோ ராமானுஜன்கள் வெளிவரமுடியாமல் சேற்றில் புதைந்து விட்டனர்” இதனைச் சொல்லும் முன்பு பார்ப்பனராகப் பிறந்ததால் ராமனுஜருக்கு ஏற்பட்ட அனுகூலங்களையும் கைத்தூக்கிவிடும் சூழலையும் விவரிப்ப்பார் . பார்பனியம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவிட்டாலும் ; பார்ப்பானகப் பிறந்ததே சமூக மூலதனம் என்பார் . சாகா வாழ்க்கையோடு இதனைப் பொருத்திப் பார்க்கும் போது நமக்கு மேலும் தெளிவு பிறக்கும்.


அடிதட்டில் இடைநிலை சாதிக்கும் தலித்துகளுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையானது . ஒழிவு மறைவற்றது .  இம்மோதல் பெரும் சவால்தான் எனினும் அறியாமையே பெரிதும் இங்கு வினையாற்றும் .ஆனால் மேல்மட்டத்தில் நடப்பதோ தெரிந்தே செய்யும் திட்டமிட்ட ஒதுக்கல் , அவமதிப்பு. ;புனுகுபூசி , நெய்தடவி கழுத்தறுப்பது . சமூகத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் சிந்தனைப் போக்கையும் தீர்மானிக்கும் இடம் அதுதான் . அங்கேதான் பார்ப்பனிய வஞ்சகம் நுட்பமாய் கோலோச்சுகிறது . இன்னும் ஏன் பார்பனிய எதிர்ப்பு என்கிற துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிச் சுமக்கிறீர்கள் என்போர் இந்த வஞ்சக சதியை உணராதோரேஅல்லது உணர மறுப்போரே . அதிகார பீடத்தோடு உள்ள நெருக்கம் ,தோலின் நிறம் , சாதி என பலகூறுகள் அறிவுஜீவி சமூகத்தில் எப்படி வினையாற்றும் என்பதற்கு சாகா வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு .இன்றும் தொடரும் கொடுமை இது . எனவே இந்நூல் உரத்த விவாதத்திற்கும் ஆழ்ந்த புரிதலுக்கும் உரியது .




மேக்நாட் சாகா ,ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, 
ஆசிரியர் : தேவிகாபுரம் சிவா,

வெளியீடு :
பாரதி புத்தகாலயம் .
7, இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,சென்னை – 600 018.

பக்கங்கள் : 288 , விலை : ரூ.230 .

சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : புத்தக மேசை . தீக்கதிர் 14-02-2015

இடம் கருதி தீக்கதிரில் இதன் ஒரு பகுதிமட்டுமே வெளியிடப்பட்டது . முழுமையாக இங்கே படியுங்கள் .








பயனுள்ள ஆயுதம் ...

Posted by அகத்தீ Labels:



பயனுள்ள ஆயுதம்

மதவெறிக்கு எதிராய் உயரும் ஆயுதம் எதுவாயினும் அது நம் கவனத்துக்குரியதே . அந்தவகையில் அண்மையில் என் கண்ணில் பட்டது இந்த கருத்தாயுதம் .

மனித உரிமைப் போராளியாக அறியப்பட்ட பாலகோபால் தெலுங்கில் 1983 தொடங்கி 2009 முடிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மெய்யாகவே வகுப்புவாதத்தை எதிர்கொள்ள இந்த கருத்தாயுதம் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை .

இந்நூலுக்கு அ.மார்க்ஸ் எழுதிய முன்னுரையும் பின்னுரையும் கூடுதல் வலுசேர்க்கிறது.முன்னுரையில் அ.மார்க்ஸ் சொல்லும் ஒரு செய்தியை கீழே பார்ப்போம் :

“ 13 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் பாஜக ‘ தொலைநோக்கு’ஆவணத்தை வெளியிட்டது .அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆவணம் சொல்பவற்றைத் தொகுக்கிறார் பாலகோபால் :

1] நீதிமன்றத் தீர்ப்புக்கு இரு தரப்பாரும் கட்டுப்பட வேண்டும்.
2] இந்துக்களும் முஸ்லீம்களும் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வுக் காணப்பட வேண்டும்.
3]அயோத்தியில் ராமர் கோயில்  கட்டுவோம்.

இத்தகைய முரண்பட்ட கூற்றுகளை எவ்வாறு புரிந்து கொள்வது ?இவை முரண்பட்ட கூற்றுகளே அல்ல . இவற்றைப் புரிந்து கொள்ள இந்த மூன்று கூற்றுகளையும் கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் என்கிறார் பாலகோபால் .அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் . அதற்கு முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும் .[ அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் ]இந்த சமரசத்தை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.”
இது நமக்கு என்ன சொல்கிறது ?எவ்வளவு நுட்பமாய் இந்துத்துவாவை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சியாகும் .

‘ ஹிந்து தர்மம் – ஜனநாயகம்’ என்ற முதல் பகுதி  35 பக்கம் தொடங்கி 152 பக்கம் முடிய 116 பக்கங்கள் அடிப்படை தத்துவ விளக்கமாக உள்ளது . தேசபக்தி என்ற சொல்லாடலுக்கு பின்னால் ஆர் எஸ் எஸ் கட்டமைக்க விரும்புவது மநுதர்ம ஆட்சியையே என்பதை மிகச்சரியாக சுட்டுகிறது இப்பகுதி. “ இந்து மதத்தை வர்க்க சமரசத்திற்காகவும் , தேசபக்தியை மத்திய தரவர்க்கத்தைத் தூண்டி விடுவதற்காகவும் பயன்படுத்தி இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவச்சரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதுதான் ஆஎ.எஸ்,பணி” என வெறுமே சூத்திரம் மட்டுமே எழுதிச் செல்லாமல் அதனை நிறுவி இருக்கிறது இப்பகுதி. அதிலும் பிராமண தர்மத்தில் ஜனநாயகம் குறித்த பாலகோபாலின் வாதங்களை உட்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இன்றுள்ளது .

இந்த நூலில் ஆசிரியர் வர்ணாஸ்ரம தர்மத்தையே – மநு நீதியையே மீண்டும் நிலைநாட்ட இந்துத்துவா உள்ளூர விரும்புகிறது ; ஆனால் சமூகச்சூழல் அவர்களுக்கு சாதகமாக இல்லை ஆகவே மநுவின் மொழியில் இப்போது பேசினால் சிக்கலாகிவிடும் . எனவே புனுகு தடவி , புனித முலாம் பூசி , அறிவியல் சாயம் பூசி அதை நாசுக்காக விற்குறது சங்பரிவார் என்கிறார் பாலகோபால் . திறமை, தகுதி , நேர்மை , வல்லரசு , தேசபக்தி என ஒவ்வொரு வார்த்தையிலும் தங்களின் இந்துத்துவ வஞ்சக நோக்கத்தை பொதிந்து வைத்து ஏமாற்றுவதை இந்நூல் நெடுக பாலகோபால் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார் . ஆக இந்துத்துவாவை எதிர்த்த போராட்டம் சனாதன பிராமணிய தர்மத்தை எதிர்த்ததாகவே இறுதியில் வடிவம் பெறும் என்பதை இந்நூல் நிறுவுகிறது .

இங்கே தர்க்கா எப்படி மதநல்லிணக்க மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லி இதனை முஸ்லீம் அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை .இந்துத்துவ அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை என்பதைக் மிகச்சரியாகச் சுட்டுகிறார் .

குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பலர் முஸ்லீம் அடையாளமின்றி வாழ்ந்தவர் என்பதையும் ஈஷான் ஜாஃப்ரி ,பந்துக்வாலா போன்ற இடது சாய்மானம் உள்ளவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதை சுட்டி அவர் சொல்லும் செய்தி முக்கியமானது ;அவர்கள் முஸ்லீம் மதவெறியை தீவிரமாக எதிர்த்துப் பேசினாலும் அத்தகையவரை குறிவைப்பதில்லை ; கொல்வதில்லை . மாறாக மதச்சார்பின்மை , மதநல்லிணக்கம் , ஜனநாயம் பேசுவோரையே குறிவைத்து கொலை செய்வர் . ஏனெனில் இவர்கள் கை ஓங்கினால் மதவெறிக்கு கடிவாளம் விழும் ; அதே வேளையில் முஸ்லீம் மதவெறியர் ஆட்டம் போட விடுவது அதைக்காட்டி இந்துமதவெறியைத் தூண்ட உதவும் என்றே  கருதி சங்பரிவார் செயல்படுவதை இந்நூல் சுட்டுகிறது .டபேல்க்ர் ,பன்சாரே ,கல்புர்க்கி கொலைகள் அதனைத்தானே சொல்கின்றது .

இந்நூலாசிரியர் ஓரிடத்தில் சொல்கிறார் , “ சங்பரிவார் நிலை நிறுத்த நினைக்கும் உலகக் கண்ணோட்டம் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டம் .அதனை நம்புவோர் இந்து ஆதிக்க சாதிகளிலும் ஒரளவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இருக்கிறார்கள் .அது அன்றாடம் வாழ்க்கையின் ஒரு பகுதி – அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதி .அரசியலில் அவர்கள் அனைவரும் பிஜேபி வாக்காளார்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை .காங்கிரஸ் வாக்காளர்களாக இருக்கலாம் .தெலுங்கு தேசம் வாக்காளர்களாக இருக்கலாம் ,சில பேர் கம்யூனிஸ்ட் வாக்காளராகவும் இருக்கலாம் . இவர்களில் பலபேர் சமூகரீதியாக அறிவுஜீவி வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த உலகக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அன்றாடம் பணியாற்றுகிறார்கள் .எழுத்தாளர்களானாலும் கலைஞர்களானாலும் இவர்கள் இந்தக் கருத்துப் பிரச்சாரத் தளங்களில் உதவிக்கொண்டே இருப்பர்.”

பாலகோபாலின் மேற்கண்ட வாதம் மிக முக்கியமானது; வாஜ்பாய் கால அனுபவத்தில் இதை அவர் சொன்னார் ; மோடி ஆட்சிகாலம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது . எல்லா கட்சிகளிலும் , எல்லா நிறுவனங்களிலும் ,கல்வி , நீதித்துறை , போலிஸ் , ராணுவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இப்படி விஷம் பாய்ந்திருக்கிறது ; அதன் அளவில் மாறுபடலாம் ஆனால் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதே நிஜம் .

பாலகோபாலின் எழுத்துகளில் அங்கொன்று இங்கொன்றாக காணப்படும் அரை காலனியம் , தரகு முதலாளித்துவம் போன்ற நக்சலைட்டுகளின் சொற்பிரயோகங்கள் சரியா  தப்பா என்கிற கருத்தில் மாறுபடலாம், சுட்டிக்காட்டலாம்  ; ஆயின் மதவெறி எதிர்ப்பில் அவர் தந்துள்ள இந்த கருத்தாயுதம் மிக முக்கியமானது , தேவையானது என்பதை மறுதலிக்க இயலாது .c இடதுசாரி மாற்றம் விரும்புவோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது .

தோழர் .க.மாதவின் மொழியாக்கம் நம்பிக்கை தருகிறது ; இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் நல்ல மொழி பெயர்ப்பாளராகிவிடலாம் . தெலுங்கிலிருந்து பலநூல்களைத் தமிழுக்குத் தரலாம் .

கருத்தாயுதம்
வகுப்புவாதத்தை எதிர்கொள்ள
ஆசிரியர் : பாலகோபால்,
தமிழில்: க.மாதவ்,
வெளியீடு : சிந்தன் புக்ஸ் ,
132/251 ,அவ்வை சண்முகம் சாலை ,
கோபால்புரம் , சென்னை – 600 014.

பக் :344 , விலை : ரூ.250/

- சு.பொ.அகத்தியலிங்கம் . 


தலைப்பை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்

Posted by அகத்தீ Labels:



தலைப்பை நீங்களே சூட்டிக்கொள்ளுங்கள்


சு.பொ.அகத்தியலிங்கம் .


இரவின் நிசப்தம் கொடூரமாய் உறுத்தியது
நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையில்
ஒவ்வொரு நொடித்துளியும் நகர்ந்தது
தூங்கிக் கொண்டிந்தேன் ஆனால் தூங்கவில்லை
விழித்துக் கொண்டிருந்தேன் ஆனால் விழித்திருக்கவில்லை
என் இதயத்துடிப்பை நான் கேட்கிறேன்
அது ஏன் சீறிப் பாய்ந்து  ஆர்ப்பரிக்கிறது ?
மூளைக்குள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள்
ஒருவேளை அந்நிய நாட்டுச் சதியாக இருக்குமோ ?
நேற்று படித்த செய்திகள் ஒவ்வொன்றாய்
காற்றில் புரண்டு புரண்டு அச்சுறுத்துகிறது
மாண்புமிகு இதயங்கள் மரத்துப்போன தேசத்தில் – இனி
மனச்சாட்சிக்கும் காவி வர்ணம் பூசாவிடில் தேசவிரோதி என்பார்களோ ?
மநுவைக் கொண்டாடி மநுவுக்கு அடிபணிந்து இழிவைச் சுமந்து
செயலற்று இருப்பதைவிட செத்துப்போவது மேலல்லவா ?
அந்த மரணத்துக்கும் வலிமை இருக்கும் !!!!

23.01.2016



யுகக் கர்ப்பம்

Posted by அகத்தீ Labels:











யுகக் கர்ப்பம்

சில நேரங்களில்
நம்பிக்கையின் உச்சத்தில்…

பல நேரங்களில்
நம்பிக்கை வறட்சியில்….

நாளும் காணும் நிகழ்வுகளின்
தொடர்வினையாய்
நம்பிக்கையும் மாறி மாறி …

நான் கனவு காணும்
சமத்துவயுகம்  பகற்கனவல்ல
அறிவியல் நெருப்பில்
புடம்போட்ட சமூகக்கணக்கு….

இன்றோ நாளையோ
என் மூச்சடங்கும் முன்போ
கைக்கூடுமென எதிர்பார்க்கவில்லை …

நானறிவேன்
இது ரிஷி கர்ப்பமல்ல
இராத்தங்காமல் பிரசவிக்க …..

இதுஇராட்ஷச கர்ப்பம்
அதுவும்
புதுயுகத்துக்கான
யுகக் கர்ப்பம் .

கருத்தரித்துவிட்டது
பிறப்பது நிச்சயம்
கருக்கலைப்புகளையும் மீறி……

ஆயின்
அது சுகப்பிரசவமாக இருக்காது
என்பது மட்டும்
சர்வ நிச்சயம் .

- சு.பொ.அகத்தியலிங்கம்.




விஞ்ஞானம் முன்னேறியதால் நோய்நொடிதானே பெருத்திருக்கிறது?

Posted by அகத்தீ Labels:









விஞ்ஞானம் முன்னேறியதால்
நோய்நொடிதானே பெருத்திருக்கிறது?

சு.பொ. அகத்தியலிங்கம்


·         தப்பு செய்தால் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார்.  சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி. இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா?

·         என்ன சேர்த்துவைத்து என்ன? வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டதே! இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படித்தான் நடக்கும்.   தலையில் பிரம்மன் எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும்? கடவுளைச் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி?

·         நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா?

·         டார்வின் பரிணாம தத்துவத்தை சொன்னாலும் கிறுத்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா ?

·         இறைவழிபாட்டில் ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம் முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே பெருத்துள்ளது ?



மழைவெள்ளத்தைத் தொடர்ந்து கேள்விமழையும் பொழிகிறது .
அறிவியல் படிப்பு என்பது மட்டுமே அறிவியல் பார்வையைக் கொடுத்துவிடுவதில்லை .
ஆகவே நாம் இயன்றவரை அறிவியல் பார்வையைக் கொடுக்க தொடர்ந்து முயல்வோம்.


தப்பு செய்தால் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார்.  சென்னை வெள்ளமே அதற்குச் சாட்சி. இப்போதாவது கடவுள் இருப்பை உணர்கிறீர்களா?


 இவ்வாறு பேசுவது புதிதல்ல. உத்தர்கண்ட் வெள்ளப் பாதிப்பின்போது மாட்டுக்கறி சாப்பிடுவதன் மேல் பழி போட்டார் ஒரு சாமியார். ஏசு வழங்கிய தண்டனை; என் கனவில் சொன்னார் என ஒரே போடாய் போட்டார் கிறித்துவ மதப்பிரச்சாரம் செய்யும் ஐஏ எஸ் அதிகாரி உமாசங்கர். 

கடவுள் தண்டித்து விட்டார் என சாதாரண மக்கள் சொல்வது இந்த வகையானது அல்ல மாறாக அது சுயசமாதானம் அல்லது இயலாமையின் வெளிப்பாடு; இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சமூகக்கோபத்தின் வடிகால் என்றுகூட சொல்லலாம் .

 இன்னொரு வகையில் காலங்காலமாய்  அவனுள் இருக்கும் ஒரு விதக் கருத்தோட்டம் . ஆதியில் இயற்கை சீற்றத்தைக் கண்டு பயந்த மனிதன் மண்டியிட்டான் . வணங்கினான் . கடவுளை மனிதன் உற்பத்தி செய்ய அதுவும் காரணமானது .

இயற்கையின் சீற்றத்திற்கு கடவுளே காரணம் என நம்பி மனிதகுலம் மண்டியிட்டு மட்டுமே கிடந்திருந்தால் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கமாட்டோம் . மாறாக இயற்கையைப் படித்தான், பயன்படுத்தினான். வளைத்தான். வளங்களை அனுபவிக்க வழிகண்டான் . இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு முன்னேற்றமும் பலலட்சம் வருடங்கள் இயற்கையோடு மனிதகுலம் மல்லுக்கட்டி பெற்ற வெற்றி அன்றோ ?

இப்போது மட்டுமீறி இயற்கைச் சூறையாடிவிட்டதை மனிதகுலம் உணரத் தலைப்பட்டுவிட்டது. ஆயின் அதன் சமூகக் கோப வெளிப்பாடும் பாமர வார்த்தைகளில் கடவுள் தண்டித்து விட்டான் என வெளிப்படலாம்; அவ்வளவே. மதத்தை வைத்து பிழைப்பவர் பிதற்றலுக்கும் பாமரர் வெளிப்பாடும் ஒன்றல்ல .

 கடவுளின் தண்டனை இதுவெனில் வறியவனை மட்டும் எப்போதும் ஏன் கடவுள் தண்டிக்க வேண்டும்? சென்னை வெள்ளம் பற்றிப் பேசத்தொடங்கினால் அது நெடிய அரசியல் உரையாக நீளக்கூடும். எனவே பொதுவாக பேரிழப்புகள் என கருதிப் பதில் தேடுவோம் .

சுனாமி ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்டது; அத்தனை பேரும் பாவம் செய்தவர்களா? உலகில் நடக்கும் பல மோதல்களுக்கும் அழிவுக்கும் சூத்தரதாரியாகத் திகழ்வது அமெரிக்க ஏகாதிபத்தியமும்  அதன் ஆயுத வியாபாரிகளும். அவர்களை கடவுள் ஒரு முறைகூடத் தண்டிக்க வில்லையே! 

அன்பும் கருணையும் மிக்கவராகக் கொண்டாடும் தெய்வம் இப்படி இயற்கையை ஏவி மனிதர்களைப் பலிவாங்குவது முரண்பாடாக இல்லையா? 

சர்வசக்தி படைத்த கடவுள் எனில்  தப்பே நடக்காமல் தடுப்பதைவிடுத்து தண்டிப்பது அறிவுக்கும் அறத்துக்கும் பொருத்தமாக இல்லையே !

இயற்கையைப் மேலும் அறிவியல் ரீதியாக அணுகுவதும் தற்காப்புமே சிறந்த வழி .


என்ன சேர்த்துவைத்து என்ன? வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விட்டதே! இதெல்லாம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்படித்தான் நடக்கும்.   தலையில் பிரம்மன் எழுதியதை யாரால் மாற்றி எழுத இயலும்? கடவுளைச் சரணடைவதைத் தவிர நமக்கு வேறு என்ன வழி?


 முன்னதன் தொடர்ச்சிதான் இதுவும். தனிமனிதனுக்குத் தாங்க முடியாத இழப்பு ஏற்படும் போது வெந்து நொந்து புலம்ப நேரிடுகிறது . எப்படி தன்னைத் தேற்றிக் கொள்வது ? எப்படி தன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுவது ? எப்படி ஆற்றுப்படுத்துவது ? எப்படி மீண்டும் முட்டி மோதி போராடி எழுவது ? சமூகப் பாதுகாப்பையும் பொறுப்பையும் அரசு கைகழுவும் போது அல்லது ஏதோ கொஞ்சமாக அதாவது  யானைப் பசிக்குச் சோளப்பொரி போல் கொடுத்துவிட்டு ஒதுங்கும்போது என்ன செய்வது ? சமூக , அரசியல் , பொருளாதாரக் கேள்விகளுக்கு சரியான விடை அவர்களுக்குவழங்கப்படாதபோது அல்லது வழிகாட்டப்படாதபோது அவர்கள் இப்படித் தடுமாறுவதும் சலிப்பதும் சரண்டைவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது .


 ஆம் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் பார்வையும், பிரச்சனைகளை எதிர்கொள்ள அறிவியல் அனுகுமுறையும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படாதபோது மதமும் சமூகமும் அவரவர் தலையில் ஏற்றிவைத்திருக்கும் “தலையெழுத்து” என்பதில் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு என்ன நடக்கும் ?

 ஆயினும் இது தீர்வல்ல ; பெருமூச்சு அவ்வளவே . மீண்டெழ அரசு செய்ய வேண்டியதென்ன? தனிமனிதர் செய்ய வேண்டியதென்ன ? சமூகம் செய்ய வேண்டியதென்ன ? உடனடியாகச் செய்ய வேண்டியதென்ன? தொலை நோக்கில் செய்ய வேண்டியதென்ன? இவ்வாறு பல கோணங்களில் அலசி வழிக்காட்டுவதும், அதற்காகப் பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைப்பதுமே தீர்வு . சரியான வழி .


 எடுத்துகாட்டு : சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்ற முக்கியமானவற்றை நெருப்பு, நீர் , கரையான் அணுகாமல் பாதுகாப்பதும், – ஆபத்தான நேரத்தில் எளிதில் அப்புறபடுத்த வழிகாண்பதும் சாத்தியமல்லவா?
 வீடு ஒரு மியூசியமோ குடானோ அதாவது கிடங்கோ, குப்பைத்தொட்டியோ  அல்ல ; கண்ணில் பட்டவற்றை வாங்கிக் குவிக்காமல் - குறைந்த பொருட்களோடு வாழவும்; அவ்வப்போது தேவையற்றவற்றைக் கழிக்கவும் பழக வேண்டும். போகிப் பண்டிகை அதற்குத்தானே !


 அடிக்கடி எரிமலை சீறும் ஜப்பானில் அதற்கொப்ப வீடுகளைக் கட்டவில்லையா ? வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ளவில்லையா?

அடிக்கடி சுனாமி மிரட்டும் கியூபாவில் லட்சக்கணக்கானோரை ஒரிரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தவும் பாதுகாக்கவும் நிரந்தர ஏற்பாடு செய்துள்ளதைப் பார்க்கிறோமே !


ஆக ,  ஆண்டவனிடம் சரண்டைவதல்ல, கொஞ்சம் ஆற அமர யோசித்தால் வழி புலப்படும். கூடிப் பயணம் செய்தால் இலக்கை அடையலாம் .


நாம் நினைத்துப் பார்க்காத ஓர் நொடிக்குள் எல்லாம் நடந்து போகிறது. அப்படியாயின் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்றுதானே பொருள்? அதனை உங்களால் நிராகரிக்க முடியுமா?


 அப்படி ஓர் நொடிக்குள் நடந்து முடிவதாக நாம் கருதுகிறோம், ஆனால் அது மெய்யல்ல.

 “ பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்”  -என்பார் வள்ளுவர் .

மென்மையான மயிலிறகுதான் என்றாலும், ஏற்றியுள்ள வண்டி, அம்மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முறிந்து கெடும். அளவு மாறும் போதும் குணம் மாறுகிறது. ஆம் மயிலிறகை ஏற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆயினும் ஒரு கட்டத்தில்தான் அச்சு முறிக்கிறது. இதன் பொருள் அந்தக் கணத்தில் ஏற்றப்பட்ட ஒற்றை மயிலிறகின் பாரம் தாங்காமலா அச்சு முறிந்தது . இல்லை மயிலிறகு ஏற ஏற அச்சு இற்றுக்கொண்டே வந்தது.  ஒரு கட்டத்தில் அதன் தாங்கும் சக்தி தகர அச்சு முறிகிறது . அளவு மாற்றத்தால் ஏற்பட்டது குணமாற்றம் . அந்த நொடியில் பாய்ச்சல் வேகத்தில் முடிந்துவிட்டது .


 “ அளவு மாற்றம் குணமாற்றம் மற்றும் பாய்ச்சல் வேக மாற்றம்” என்பது மார்க்சிய இயங்கியல் தத்துவத்தில் அடிப்படையான நான்காவது விதியாகும் .


 நீரை கொதிக்க வைத்தால் 99 டிகிரி வரை சூடேறும் 100 டிகிரியில் கொதிக்கும். அதுபோல் குளிர்வித்தால் 0 டிகிரிக்கு போகும்போது பனிக்கட்டியாக மாறும். .ஆக அளவு மாற மாற குணம் மாறிக்கொண்டே வந்து ஒரு கட்டத்தில் முந்தைய நிலையை மறுத்து அடுத்த நிலைக்கு பாய்ச்சல் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது .


 இந்தப் பூமிப்பந்தில் பெருவெள்ளமும் இயற்கைப் பேரழிவும் ஆதிமுதலே அவ்வப்போதைகு நடந்து வந்தது. இந்த பெருவெள்ளம் அப்போதிருந்த வேடர்களின் நாகரீகத்தை அழித்தது . அதிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள் குகைகளில் வாழ்ந்து தங்கள் வாழக்கை முறையைப் பூரணமாக மாற்றிக் கொண்டார்கள் என்பதைச் சுட்டும் ஜார்ஜ் பொலிட்ஸர்,  “ ஆக , நில இயல் வகைப்பட்ட ஒரு பேரழிவின் விழைவாக பூமியும் நாகரிகமும் திடீரென மாறுதல் அடைந்தது,” என்கிறார் .


இது போல் வரலாற்றில் சில திடீர் திருப்பங்கள் புரட்சிகள் நிகழ்ந்ததுண்டு. இவற்றை சில வரலாற்றாசிரியர்கள்  “ தற்செயல் நிகழச்சி” என வருணிப்பர். இது சரியல்ல. ஏனெனில் “ நடந்திருக்க வேண்டாதது எப்படியோ நடந்துவிட்டது என்கிறபோதே அது தற்செயல் நிகழ்வாகும் ; ஆனால் சமூகத்தில் நடந்த புரட்சிகள் எதுவும் அப்படிப்பட்டதல்ல. அவசியத் தேவையாக ஏற்பட்டவையே . ஏனெனில் தொடர்ச்சியாக மாறுதல் நிகழந்த வண்ணமே உள்ளன; அவை கூட்டாகச் சேர்ந்து திடீர் மாறுதல்களில் போய் முடிகின்றன என்பதே மெய் .


 “எங்கெல்ஸ் எழுதிய டூரிங்குக்கு மறுப்பு என்ற நூலை எடுங்கள் . அதில் ‘இயக்க இயல் : அளவும் குணமும்’ என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தைப் புரட்டுங்கள். அதில் பல உதாரணங்களைத் தந்துள்ளதைக் காண்பீர்கள். “அளவு மாறுபாடு சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியவுடனே திடீரென்று குணவேறுபாட்டை உருவாக்குகின்றது’ என்ற விதி இயற்கை  விஞ்ஞானத்தைப் போல சகல விஷயங்களிலும் கறாராகச் செயல்படுகிறது என்பதை அந்த உதாரணங்கள் நிரூபித்துக் காட்டுவதைப் புரிந்து கொள்ள முடியும்,” என எடுத்துக்காட்டுக்கிறார் ஜாட்ஜ் பொலிட்ஸர் .


 ஆம், சொந்த வாழ்வும் அப்படித்தான். பூப்பெய்தல் என்று கூறப்படும் இயற்கையான  நிகழ்வு உங்கள் மகளுக்கோ தங்கைக்கோ இன்று காலை அல்லது மதியம் திடீரென ஏற்பட்டிருக்கலாம்; அதற்கான மாறுதல் சில மாதங்களாக அவர் உடலில் ஏற்பட்டுவந்தது என்பதே மெய். அதன் அளவு மாற்றம் குண மாற்றமாகி திடீரென நிகழ்ந்தது அவ்வளவே .


 ஒருவருக்கு திடீரென வேலை இழப்பு ஏற்பட்டது .  அவர் சுற்றிலும் நடப்பதை அறியாதவராக இருந்தால் ஏதோ தனக்கு கிரகம் சரியில்லாததால் திடீரென வேலை பறிபோய் விட்டது எனக் கருதுவர் . உண்மை என்ன ? நாட்டில் நிலவிய பொருளாதார மந்தமும் தொழில் தேக்கமும் பல மாதமாக உருவாக்கிவந்த நெருக்கடியின் கோரவிளைவால் நூற்றுக்கணக்கானோர்  வேலை இழந்து வந்தனர் அதன் ஒரு அம்சமே இவரின் வேலை இழப்பும் என்பதே உண்மை .
 ஆக திடீர் நிகழ்வுகள் எதுவாயினும் அதனை சற்று ஊடுருவிப்பார்த்தால் அது தானாய் விளங்கும். எந்த வகையிலும்  அது கடவுளின் திருவிளையாடல் அல்ல .


 டார்வின் பரிணாம தத்துவத்தை சொன்னாலும் கிறுத்துவத்தை நம்பினார் என்பது மெய்யல்லவா ?

 அப்படித்தான் நம்பப்பட்டு வந்தது ; சொல்லப்பட்டு வந்தது . அதே சமயம் அன்றைய மத ஆதிக்கச் சூழலில் புருனோ எரிக்கப்பட்ட சூழலில் கோப்பர் நிகஸ் கடும் சவாலை ச்ந்தித்த வேளையில் தன் கருத்தை முன்னெடுத்துச் செல்ல கிறுத்துவத்தை நம்புவதாக ஒரு நாடகத்தை அவர் தந்திரமாக மேற்கொண்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டு வந்தது .

ஏனெனில் உலகில் பல நாடுகளில் அப்படித்தான் நடந்தன . இந்தியாவிலும் மிகச்சிறந்த வானியல் நிபுணர்களாகத் திகழந்த;  பூமிமின் வடிவம் உருண்டை என்பதையும் – சூரியனே மையமானது என்பதையும் கண்டு சொன்ன ஆரியபட்டரும் , வராகமித்திரமும் கூட அவற்றை எழுதும் போது சில மதநம்பிக்கை சார்ந்த சுலோகங்களோடு கலந்தே தர வேண்டியிருந்தது .

 டார்வின் விவகாரத்தில் உண்மை வெளிப்பட்டு, நாம் கருதியது சரிதான் என நிரூபணமாகியுள்ளது .

அண்மையில் வெளிவந்த செய்தி இது:

“பரிணாம உயிரியல்வாதக் கோட்பாட்டை உருவாக்கிய இயற்கை அறிவியல்வாதி சார்ல்ஸ் டார்வின், தான் ஒரு நாத்திகன் என்று எழுதிய கடிதம் ஏலம் விடப்படுகிறது.இந்தக் கடிதம் சுமார் நியூயார்க் ஏலத்தில் சுமார் 90,000 டாலர்களைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”


டார்வினின் மத நம்பிக்கை பற்றி எப்போதும் கடும் விவாதங்கள் நடைபெற்று வருவது வழக்கம். டார்வின் பொது இடத்தில் தனது நம்பிக்கை அல்லது நாத்திகம் பற்றி கூறியதில்லை, தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காக அவர் தன் கருத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார் என்றும் கூறப்படுவதுண்டு.மேலும் நாம் மேலே கூறியது போல் சூழ்நிலையின் கைதியாய் அப்படி தந்திரமாக நடந்திருக்கலாம் .
இந்நிலையில் இளம் பாரிஸ்டர் ஒருவருக்கு டார்வின் எழுதிய கடிதம் ஒன்றில் அவர் வெளிப்படையாக தனக்கு பைபிள் மீதும், ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.


இளம் பாரிஸ்டர் பிரான்சிஸ் மெக்டர்மட் 1880ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி டார்வினுக்கு எழுதிய கடிதத்தில், “உங்கள் நூல்களை வாசிப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாலும், பைபிள் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை. இருப்பினும் நான் உங்களுக்கு இதனை எழுதும் காரணம் என்னவெனில் உங்களுக்கு பைபிள் மீது நம்பிக்கை இருக்கிறதா? ஆம் அல்லது இல்லை என்ற பதில் எனக்கு போதுமானது” என்று எழுதியிருந்தார்.


இதற்கு பதில் கடிதம் எழுதிய டார்வின், "பைபிள் ஒரு இறைவெளிப்பாடு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆகவே, ஏசு கிறிஸ்து கடவுளின் புதல்வன் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை," என்று எழுதினார். 


இந்தக் குறிப்பை அவர் எழுதுவதற்கு ஓரு மாதம் முன்பு, அவருடைய சமகாலத்திய முக்கிய நாத்திகவாதியான எட்வர்ட் ஏவ்லிங் என்பவருக்கு அவர் எழுதிய போது, “மதம் பற்றி நான் எழுதுவதை எப்போதுமே தவிர்த்து வருகிறேன். நான் ஒரு அறிவியல்வாதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார்.


டார்வினுக்கு மெக்டர்மட் இந்த கடிதம் வெளியிடப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது வெளிவரவில்லை. 


டார்வின் நாத்திகர் என்பதே இந்த செய்தி உண்மையை உணர்த்தும் . அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கை கொண்ட அறிவியலாளர் பலர் உண்டு என்பதையும் மறுக்க இயலாது . ஏனெனில் ஒரு துறையில் வல்லுநர் என்பதாலேயே அவர் அனைத்தயும் அறிந்தவர் என்று பொருளல்ல . வாழ்க்கையைப் பற்றிய அறிவியல் கண்ணோட்டம் கூட இல்லாதிருக்கலாம் .அவருக்கும் தத்துவதுறையில் அறியாமை இருக்கலாம் அதனால் கடவுளை நம்பலாம் . ஆகவே எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் காண்பதே அறிவு .


இறைவழிபாட்டில் ஈடுபட்டு நம் முன்னோர் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். விஞ்ஞானம் முன்னேறி என்ன பயன், நோய் நொடிகள்தானே பெருத்துள்ளது?


 “காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு . நோய் நொடிகள் பெருகிப் போச்சு . அல்ப ஆயுசில் சாவது அதிகமாயிடிச்சி.” –-இப்படி பொதுவெளியில் புலம்புவோர் அதிகம் . ஆனால் உண்மை என்ன ? தகவலும் தவறானது பார்வையும் தவறானாது .

 கடந்த நூறு ஆண்டுகளின் விவரங்களைச்  தெரிந்து கொண்டால் கொஞ்சம் தெளிவு பிறக்கலாம் . உலக அளவில் எடுத்துக் கொண்டால் 1900 ஆம் ஆண்டில் உலகின் சராசரி வயது 31 இது 2010 ஆம் ஆண்டில் 67.2 ஆக உயர்ந்திருக்கிறது . இந்தியா விடுதலை அடையும் போது – 1947ல் சராசரி வயது 32 இன்று 67.8 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, நூறாண்டுகளுக்கு முன் நம்மைப்போலவே இருந்த ஜப்பானின் இன்றைய சராசரி வயது 82.7 . ஜப்பானில் இறை நம்பிக்கை இல்லாதோர் அதிகம் என்பது கூடுதல் தகவல் . பொதுவாக சராசரி வயது ஆணை விட பெண்ணுக்கு அதிகமாகவே இருக்கிறது . இந்த புள்ளிவிவரங்கள் ஆயுளும் ஆரோக்கியமும் முன்னிலும் அதிகரித்திருப்பதன் சாட்சி .

 “ஐயா ! எங்க தாத்தா 94 வயசு வரை வாழ்ந்தார், எங்க அப்பா 80 ல் காலமானார் எனக்கோ இப்போதே சர்க்கரை, இரத்தக் கொதிப்பு எல்லாம்.”- இப்படிச் சொல்லுவோர் உண்டு . தனிப்பட்ட சிலரின் அனுபவம் அதுவாக இருக்கக் கூடும். அவரிடம் , “உங்க பாட்டிக்கு எத்தனை குழந்தைகள் ?” என்ற விவரத்தை சற்று கிளறினால் , “ அவருக்கு மொத்தம் பொறந்தது பத்து ; கருவிலே செத்தது , குழந்தையிலேயே பறிபோனது எல்லாம் போக நான்கு மிச்சம்” என பதில் வரும் . ஆக பிறந்ததில் இறந்ததே அதிகம் . இதுதான் அன்றைய நிலை . இது போக காலரா, பிளேக் , வைசூரி  போன்ற நோய்களால் கிராமம் கிராமமாக கொள்ளை கொண்டு போனது. இதையெல்லாம் சேர்த்துத்தான் அன்றைய சராசரி வயது .


 நூறாண்டுகளுக்கு முன் ஸ்வீடனில் பிறந்த ஒவ்வொரு மூன்று குழந்தையிலும் இரண்டு இறந்தது. ஜெர்மனியில் ஒவ்வொரு இரண்டு குழந்தையிலும் ஒன்று இறந்தது. உலகெங்கும் குழந்தை இறப்பு விகிதம் இப்படி கடுமையாகவே இருந்தது . இன்று உலகில் சராசரி குழந்தை இறப்பு ஒரு சதவீதத்திற்குக் கீழே குறைந்து விட்டது. சில நாடுகளில் இன்னும் கவலை அளிக்கும் விகிதத்தில் உள்ளது என்பது வேறு சங்கதி . இந்தியாவில் 1947ல் பிறந்த 1000 குழந்தைகளில் 146.5 இறந்ததெனில் இன்று அது 42 ஆகக் குறந்துள்ளது. மருத்துவ அறிவியலில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றமும் , கொள்ளை நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டதும் முக்கிய காரணங்களாகும் .
 இதனைச் சொல்லும் போது இன்றும் புதிய புதிய நோய்களின் மிரட்டலும் ; ஆரோக்கியச் சவால்களும் தொடர்வதை மறுக்கவில்லை . அதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் சந்திக்கும் சவால்களும் – அதிலும் மருத்துவம் வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு வரும் சூழலின் கடுமையையும் நாம் மறுக்கவில்லை. இதுகாறும் பெற்ற முன்னேற்றம் கூட பின்னுக்குப் போய்விடுமோ என்கிற கவலையையும் புறந்தள்ள முடியாது .அதைப்பற்றி விரிவாக தனிக் கட்டுரையே எழுதலாம் .


 நேற்று சராசரி ஆயுள் குறைவாக இருந்ததற்கும் , குழந்தை மரணம் அதிகம் இருந்ததற்கும் அன்றைய கடவுள் பத்தியே காரணம் என்றோ ; மக்களின் முட்டாள்தனமே காரணம் என்றோ நாம் குற்றஞ்சாட்டினால் அது பிழையானது. அது அன்றைய சமூகச் சூழல் சார்ந்தது.  அதே போல் இன்றைக்கு சராசரி வயது அதிகரித்திருப்பதற்கும் – குழந்தை இறப்பு விகிதம் குறைந்திருப்பதற்கும் மக்கள் நாத்திகராகிவிட்டதா காரணம்? இல்லவே இல்லை. விழிப்புணர்வுக்குக் காரணம் மக்களிடம் செய்யப்பட்ட தொடர் பிரச்சாரமும் சமூகச் சூழலுமே. அரசுத் திட்டங்களிலேயே அதிகமாய் வெற்றி பெற்றது குடும்பக் கட்டுப்பாடு திட்டமும், போலியோ சொட்டு மருந்து திட்டமும்தான். குழந்தை கடவுளின் வரமல்ல என்கிற பகுத்தறிவுக் கருத்து வலுப்பெற்றதால்தான் குடும்பக் கட்டுப்பாடு வெற்றி பெற்றதாக முடிவுக்கு வருவது பிழையாகிவிடும் அல்லவா?


 நீண்ட ஆயுளுக்கும் வலுவான ஆரோக்கியத்துக்கும் இறை நம்பிக்கை ஒரு போதும் காரணமாகாது. சமூக , பொருளாதார , பண்பாட்டுச் சூழலில்தான் விடை தேடவேண்டும் .

ஜாரெட் டைமண்ட் எழுதிய ப்ரவாஹன் மொழி பெயர்த்த “ துப்பாக்கிகள் , கிருமிகள் , எஃகு” என்ற புத்தகத்தில் நோய்க் கிருமிகள் மனிதகுலத்தைப் படுத்திய பாடும் ; பிரதேச ஏற்றத் தாழ்வுக்கு அதுவும் ஒரு காரணியானதும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. கிருமிகளின் வரலாறும் , வரலாற்றில் தடம் பதித்த கிருமிகளும் அறிய வியப்பால் விழிகள் விரியும். ஆக தனி நபர் ஆரோக்கியத்திற்கும் அவரின் கடவுள் நம்பிக்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. 

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 10-01-2016