பயனுள்ள ஆயுதம் ...

Posted by அகத்தீ Labels:பயனுள்ள ஆயுதம்

மதவெறிக்கு எதிராய் உயரும் ஆயுதம் எதுவாயினும் அது நம் கவனத்துக்குரியதே . அந்தவகையில் அண்மையில் என் கண்ணில் பட்டது இந்த கருத்தாயுதம் .

மனித உரிமைப் போராளியாக அறியப்பட்ட பாலகோபால் தெலுங்கில் 1983 தொடங்கி 2009 முடிய எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மெய்யாகவே வகுப்புவாதத்தை எதிர்கொள்ள இந்த கருத்தாயுதம் மிகவும் பயன்படும் என்பதில் ஐயமில்லை .

இந்நூலுக்கு அ.மார்க்ஸ் எழுதிய முன்னுரையும் பின்னுரையும் கூடுதல் வலுசேர்க்கிறது.முன்னுரையில் அ.மார்க்ஸ் சொல்லும் ஒரு செய்தியை கீழே பார்ப்போம் :

“ 13 வது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2008 ஆம் ஆண்டில் பாஜக ‘ தொலைநோக்கு’ஆவணத்தை வெளியிட்டது .அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆவணம் சொல்பவற்றைத் தொகுக்கிறார் பாலகோபால் :

1] நீதிமன்றத் தீர்ப்புக்கு இரு தரப்பாரும் கட்டுப்பட வேண்டும்.
2] இந்துக்களும் முஸ்லீம்களும் பேச்சுவார்த்தை அடிப்படையில் தீர்வுக் காணப்பட வேண்டும்.
3]அயோத்தியில் ராமர் கோயில்  கட்டுவோம்.

இத்தகைய முரண்பட்ட கூற்றுகளை எவ்வாறு புரிந்து கொள்வது ?இவை முரண்பட்ட கூற்றுகளே அல்ல . இவற்றைப் புரிந்து கொள்ள இந்த மூன்று கூற்றுகளையும் கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் என்கிறார் பாலகோபால் .அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் . அதற்கு முஸ்லீம்கள் சம்மதிக்க வேண்டும் .[ அப்போதுதான் அவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் ]இந்த சமரசத்தை நீதிமன்றம் ஏற்க வேண்டும்.”
இது நமக்கு என்ன சொல்கிறது ?எவ்வளவு நுட்பமாய் இந்துத்துவாவை எதிர்கொள்ள வேண்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் சாட்சியாகும் .

‘ ஹிந்து தர்மம் – ஜனநாயகம்’ என்ற முதல் பகுதி  35 பக்கம் தொடங்கி 152 பக்கம் முடிய 116 பக்கங்கள் அடிப்படை தத்துவ விளக்கமாக உள்ளது . தேசபக்தி என்ற சொல்லாடலுக்கு பின்னால் ஆர் எஸ் எஸ் கட்டமைக்க விரும்புவது மநுதர்ம ஆட்சியையே என்பதை மிகச்சரியாக சுட்டுகிறது இப்பகுதி. “ இந்து மதத்தை வர்க்க சமரசத்திற்காகவும் , தேசபக்தியை மத்திய தரவர்க்கத்தைத் தூண்டி விடுவதற்காகவும் பயன்படுத்தி இந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவச்சரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதுதான் ஆஎ.எஸ்,பணி” என வெறுமே சூத்திரம் மட்டுமே எழுதிச் செல்லாமல் அதனை நிறுவி இருக்கிறது இப்பகுதி. அதிலும் பிராமண தர்மத்தில் ஜனநாயகம் குறித்த பாலகோபாலின் வாதங்களை உட்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் இன்றுள்ளது .

இந்த நூலில் ஆசிரியர் வர்ணாஸ்ரம தர்மத்தையே – மநு நீதியையே மீண்டும் நிலைநாட்ட இந்துத்துவா உள்ளூர விரும்புகிறது ; ஆனால் சமூகச்சூழல் அவர்களுக்கு சாதகமாக இல்லை ஆகவே மநுவின் மொழியில் இப்போது பேசினால் சிக்கலாகிவிடும் . எனவே புனுகு தடவி , புனித முலாம் பூசி , அறிவியல் சாயம் பூசி அதை நாசுக்காக விற்குறது சங்பரிவார் என்கிறார் பாலகோபால் . திறமை, தகுதி , நேர்மை , வல்லரசு , தேசபக்தி என ஒவ்வொரு வார்த்தையிலும் தங்களின் இந்துத்துவ வஞ்சக நோக்கத்தை பொதிந்து வைத்து ஏமாற்றுவதை இந்நூல் நெடுக பாலகோபால் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார் . ஆக இந்துத்துவாவை எதிர்த்த போராட்டம் சனாதன பிராமணிய தர்மத்தை எதிர்த்ததாகவே இறுதியில் வடிவம் பெறும் என்பதை இந்நூல் நிறுவுகிறது .

இங்கே தர்க்கா எப்படி மதநல்லிணக்க மையமாக இருக்கிறது என்பதைச் சொல்லி இதனை முஸ்லீம் அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை .இந்துத்துவ அடிப்படைவாதிகளும் விரும்பவில்லை என்பதைக் மிகச்சரியாகச் சுட்டுகிறார் .

குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் பலர் முஸ்லீம் அடையாளமின்றி வாழ்ந்தவர் என்பதையும் ஈஷான் ஜாஃப்ரி ,பந்துக்வாலா போன்ற இடது சாய்மானம் உள்ளவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டதை சுட்டி அவர் சொல்லும் செய்தி முக்கியமானது ;அவர்கள் முஸ்லீம் மதவெறியை தீவிரமாக எதிர்த்துப் பேசினாலும் அத்தகையவரை குறிவைப்பதில்லை ; கொல்வதில்லை . மாறாக மதச்சார்பின்மை , மதநல்லிணக்கம் , ஜனநாயம் பேசுவோரையே குறிவைத்து கொலை செய்வர் . ஏனெனில் இவர்கள் கை ஓங்கினால் மதவெறிக்கு கடிவாளம் விழும் ; அதே வேளையில் முஸ்லீம் மதவெறியர் ஆட்டம் போட விடுவது அதைக்காட்டி இந்துமதவெறியைத் தூண்ட உதவும் என்றே  கருதி சங்பரிவார் செயல்படுவதை இந்நூல் சுட்டுகிறது .டபேல்க்ர் ,பன்சாரே ,கல்புர்க்கி கொலைகள் அதனைத்தானே சொல்கின்றது .

இந்நூலாசிரியர் ஓரிடத்தில் சொல்கிறார் , “ சங்பரிவார் நிலை நிறுத்த நினைக்கும் உலகக் கண்ணோட்டம் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டம் .அதனை நம்புவோர் இந்து ஆதிக்க சாதிகளிலும் ஒரளவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இருக்கிறார்கள் .அது அன்றாடம் வாழ்க்கையின் ஒரு பகுதி – அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதி .அரசியலில் அவர்கள் அனைவரும் பிஜேபி வாக்காளார்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை .காங்கிரஸ் வாக்காளர்களாக இருக்கலாம் .தெலுங்கு தேசம் வாக்காளர்களாக இருக்கலாம் ,சில பேர் கம்யூனிஸ்ட் வாக்காளராகவும் இருக்கலாம் . இவர்களில் பலபேர் சமூகரீதியாக அறிவுஜீவி வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த உலகக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அன்றாடம் பணியாற்றுகிறார்கள் .எழுத்தாளர்களானாலும் கலைஞர்களானாலும் இவர்கள் இந்தக் கருத்துப் பிரச்சாரத் தளங்களில் உதவிக்கொண்டே இருப்பர்.”

பாலகோபாலின் மேற்கண்ட வாதம் மிக முக்கியமானது; வாஜ்பாய் கால அனுபவத்தில் இதை அவர் சொன்னார் ; மோடி ஆட்சிகாலம் இன்னும் கூர்மையடைந்திருக்கிறது . எல்லா கட்சிகளிலும் , எல்லா நிறுவனங்களிலும் ,கல்வி , நீதித்துறை , போலிஸ் , ராணுவம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இப்படி விஷம் பாய்ந்திருக்கிறது ; அதன் அளவில் மாறுபடலாம் ஆனால் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதே நிஜம் .

பாலகோபாலின் எழுத்துகளில் அங்கொன்று இங்கொன்றாக காணப்படும் அரை காலனியம் , தரகு முதலாளித்துவம் போன்ற நக்சலைட்டுகளின் சொற்பிரயோகங்கள் சரியா  தப்பா என்கிற கருத்தில் மாறுபடலாம், சுட்டிக்காட்டலாம்  ; ஆயின் மதவெறி எதிர்ப்பில் அவர் தந்துள்ள இந்த கருத்தாயுதம் மிக முக்கியமானது , தேவையானது என்பதை மறுதலிக்க இயலாது .c இடதுசாரி மாற்றம் விரும்புவோர் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது .

தோழர் .க.மாதவின் மொழியாக்கம் நம்பிக்கை தருகிறது ; இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் நல்ல மொழி பெயர்ப்பாளராகிவிடலாம் . தெலுங்கிலிருந்து பலநூல்களைத் தமிழுக்குத் தரலாம் .

கருத்தாயுதம்
வகுப்புவாதத்தை எதிர்கொள்ள
ஆசிரியர் : பாலகோபால்,
தமிழில்: க.மாதவ்,
வெளியீடு : சிந்தன் புக்ஸ் ,
132/251 ,அவ்வை சண்முகம் சாலை ,
கோபால்புரம் , சென்னை – 600 014.

பக் :344 , விலை : ரூ.250/

- சு.பொ.அகத்தியலிங்கம் . 


0 comments :

Post a Comment