அறிவுஜீவி சமூகத்தினுள் காய்நகர்த்தும் சதி….

Posted by அகத்தீ Labels:




.


அறிவுஜீவி சமூகத்தினுள் காய்நகர்த்தும் சதி….


 “அவர் இன்றுவரை புறக்கணிப்புக்கு உரியவராக உள்ளார்.காரணம் அவர் ஒடுக்கப்பட்டவராய் பிறந்ததால் மட்டும் அல்ல , இறுதிவரை அவர் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்றார் என்பதால்தான்” என நூலின் நிறைவு வரிகளில் ஆசிரியர் சிவா கூறியிருப்பது மிகை அன்று .


ஒரு முறை ஒரு தலித் பட்டறைக்குச் சென்றிருந்தேன் அதனை துவக்கிவைத்த கிறிஸ்டோபர் காந்தி பேச்சை ஒரு கேள்வியோடு துவக்கினார் . அந்த கேள்வி பதில் முழுவதும் எனக்கு நினைவில்லை ஆயினும் அந்த கருத்தை நினைவு படுத்தும் ஒரு செய்தியை இந்நூல் முன்னுரையில் சிவா எழுப்புகிறார் .


“ இன்று தேசிய தினங்கள் என அறியப்படும் பெரும்பான்மை தினங்கள் உயர் சாதி தலைவர்களின் , அறிஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய தினங்களாக மட்டுமே உள்ளன .இவற்றின் மூலம் தேச நிர்மாணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கெடுத்தனர் என்பது போன்ற பொய்மை நிலைநாட்டப்படுகிறது .இந்தியாவின் முதல் பிரதமர் ,முதல் குடியரசுத் தலைவர் என எல்லா ‘முதல்’உம் குறிப்பிட்ட பிரிவினராக இருப்பது தற்செயல் அல்ல .அவை போல் எல்லா தேசிய தினங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிறந்த நாள் , நினைவு நாள் என இருப்பதும் தற்செயல் அல்ல .அதிகாரம் தொடர்பான அரசியல் சதி அதில் அடங்கியுள்ளது .”


ஆம் . உரக்க விவாதிக்க வேண்டிய சதி இது . அண்மையில் ரோஹித் ரெமுலாவின் தற்கொலை உயர் கல்விக் கூடங்களில் நிலவும் சாதிய அகம்பாவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது .அறிவுஜீவி சமூகத்திலும் அதிகாரபீடத்திலும் ஊடும் பாவுமாய் அப்பிக்கிடக்கும் அந்த வஞ்சக ஆட்டத்தினை முழுமையாய் எதிர்கொண்ட ஒரு போராளி விஞ்ஞானி மேக்நாட் சாகாவின்  வாழ்க்கையே இந்நூல் .


இன்றைய வங்க தேசத்தில் டாக்கா நகரிலிருந்து நாற்பத்தைந்து கிலோமீட்டர் வடக்கே சியரத்தாலி என்ற கிராமத்தில் மிகவும் தாழ்நிலையில் ஒடுக்கப்பட்ட சாகா எனும் சாதியில் 1893 ல் பிறந்தவர் . மேக்நாத் . பெயரின் பொருள் மேகங்களின் தலைவன் அதாவது இந்திரன் என்பதாகும் . இப்பெயரைத் துறந்து மேக்நாட் எனச் சூடிக் கொண்டார் . பெயர்மாற்றத்திற்கே ஒரு காரணம் உண்டு . இராமாயணத்தில் ராவணனின் தம்பி இந்திரஜித்தின் பெயர் மேக்நாட் ஆகும் . இணையற்ற போர்வீரன் .விபீஷ்ணன் காட்டிக் கொடுக்காவிடில் இவனை யாரும் தோற்கடித்திருக்க முடியாது .மேக்நாட் இளைஞனாக இருக்கும் போது இந்திரஜித்தைப் பற்றி ஆர்வமுடன் அறிந்தான் . மைக்கேல் மதுசூதன் தத்தா எழுதிய ’மேக்நாட் வதம்’ எனும் இதிகாச நூல் இப்பெயரை அவன் தேர்வு செய்ய உந்துவிசையாய் இருந்தது . இராவணன் , துரியோதனன் , என எதிர்மறையாகப் பார்க்கப்பட்டப் பெயர்களில் இதுவும் ஒன்று .


பள்ளிபருவம் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் சவாலாகவே இருந்தது .பொருளாதார நெருக்கடி , சமூக ஒடுக்குமுறை என இரு நுகத்தடிகள்  பூட்டப்பட்டதாகவே இருந்தது . கல்லூரி வாழ்க்கையும் அப்படித்தான் . எதிர் நீச்சலடித்து பேராசிரியரானாலும் பயணம் சுலபமாயில்லை. இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1916 ல் சேர்ந்தார் .1919 வரை அங்கு பணியாற்றிக் கொண்டே மேக்நாட் சாகா எழுதிய அறிவியல் கோட்பாட்டு ஆய்வு கட்டுரைகள் வெளிநாட்டினர் கவனத்தை ஈர்த்தது .வெளிநாடு சென்று சக அறிவியலாளரோடு உரையாடவும் ஆய்வு செய்யவும் லண்டன் புறப்பட்டுச் சென்றார் .


சாகாவின்  வெப்ப அயனியாக்கக் கோட்பாடும் , அயனியாக்கச் சமன்பாடும் வானியலை நவீனப்படுத்தின. “ நவீன வானியற்பியல் சாகா கோட்பாட்டில் இருந்தே பிறந்தது” என்பார் வானியல் ஆய்வாளர் சிசிலியா. “ சாகாவிற்கு பிறகான வானியல் ஆராய்ச்சிகள் அனைத்தும் சாகா கோட்பாட்டின் நீட்சிகளாகவே இருந்தன” என்பார் ரோஸ்லேண்ட்.” இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்பாடுகளை சாகா கோட்பாடே தீர்த்து வைத்தது” என்பார் அப்துல் கலாம் .நிறமாலையியல் ,வெப்பயியல் ,அயனிமண்டல கதிர் வீச்சு ,அணுக்கரு இயற்பியல் என இயற்பியலின் பல்வேறு துறைகளில் விரிந்து பரந்தது இவரது ஆய்வு.இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளும் கோட்பாடுகளும் மிகவும் காத்திரமானவை .


இவர் 1921ல் மீண்டும் கல்கத்தா வந்து பேராசிரியராகப் பொறுப்பேற்றார் .அங்கு ஒரு ஆய்வுகூடம் அமைக்க கடுமையாகப் போராடினார். நவீன வானியலின் கர்த்தா என உலகம் இவரைக் கொண்டாடிய போது இங்கே ஒரு சாதாரண எண்ணைப் பம்புக்குக் கூட அல்லாடினார் .கல்லூரி துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில் ;


“ என்னால் திறந்துவிடப்பட்ட ஆய்வுப் பகுதியில் ஐரோப்பிய அமெரிக்க அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது ,இங்கு போதிய நிதிவசதி இல்லாத காரணத்தால் நான் கழிமடையிலும் செயலற்ற நிலையிலும் இருந்திடச் சபிக்கப்பட்டுள்ளேன்.” என்கிறார் .


இங்கு பணியாற்றும் போது சர்.சி.வி.ராமனின் மேட்டுக்குடி அணுகுமுறை மற்றும் செயல்பாடுகளால் சாகாவுக்கும் ராமனுக்கும் இடையே முரண்பாடுகள்  முன்னுக்கு வந்தன .இறுதியில் கல்கத்தா பல்கலைக் கழகத்தைவிட்டு வெளியேறி அகமதபாத் சென்றார் . மீண்டும் கல்கத்தா வர பதினாறு வருடங்களாயின.


சர்.சி.வி.ராமன் போன்றோர் தேசவிடுதலையில் நாட்டம் கொள்ளினும் பங்கேற்பைத் தவிர்த்தனர் . மாணவப் பருவத்திலேயே அனுஜீலன் சமிதி போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர் கொண்டவர் சாகா.இங்கு பணியாற்றிய போது நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது ; சாகா தன் கல்லூரியில் வகுப்பெடுக்க மறுத்து தானும் பங்கேற்றார் . சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பும் கிடைத்தது . வெள்ள நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டார் .


கல்கத்தாவை மையமாகக் கொண்டு சாகா தொடங்கிய  ‘தேசிய அறிவியல் கழகம்’ மற்றும்  ‘ சயின்ஸ் அண்ட் கல்ச்சர்’ ஆய்வு  இதழ்’ ; பெங்களூரை மையமாகக் கொண்ட சர்.சி.வி.ராமன் தொடங்கிய ‘இந்திய அறிவியல் கழகம்’ மற்றும் ‘கரண்ட் சயின்ஸ்’ ஆய்வு இதழ் என இரண்டு போக்குகளின் பின்னால்  ‘அதிகாரம் தொடர்பான அரசியல் சதி’ பின்னிக்கிடப்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது .சாகா அதிகார பீடத்துக்கு நெருக்கமானவராக இல்லாமல் போனார் . அதில் அவரது சாதியும் அவரின் இடதுசாரி அரசியல் சமூகப் பார்வையும் பெரும் பங்கு வகித்தது .


இவர் மாணவப் பருவத்திலேயே முற்போக்கு அரசியல் ஈடுபாடு கொண்ட சாகா 1951ல் நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கல்கத்தா தொகுதியில் ஆர் எஸ் பி சார்பில் நின்று இடதுசாரிகள் ஆதரவோடு பெருவாரியான வாக்குகளோடு வெற்றிபெற்றார் . இவரது நாடாளுமன்றப் பணி அறிவியல் மக்களுக்காக ,சுயசார்பு , மொழிவழி மாநிலம் , ஒடுக்கப்பட்டோர் உரிமை , ஆற்றுப்படுகைத் திட்டம் என ஆக்கபூர்வ முற்போக்கு திசையில் அமைந்தது . இவரது கேள்விகள் ஆட்சியாளர்களை உலுக்கியது .இளமையில் தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்த சாகா பிற்காலத்தில் தனிநபர் சாகசங்களைவிட மக்கள் திரள் இயக்கங்களே வெற்றுபெறும் என்ற கருத்துக்கு வந்து சேர்ந்தார். 1956ல் காலமானார் .

“ ஒரு வர்க்க சமுதாயத்தில் எல்லா நிறுவனங்களையும் போல அறிவியலும் வர்க்க சார்புடையதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை . அறிவியல் தொழில் நுட்பத்தைக் கோடான கோடி ஏழை மக்களின் வாழ்வை வளமாக்கும் கருவியாகவே சாகா கருதினார் .” என்கிறார் நூலாசிரியர் .


வேதங்களைக் கொண்டாடும் மனநிலைக்கும் , சாதியைக் கொண்டாடும் மனநிலைக்கும் உள்ள நெருக்கமான உறவை சாகா புரிந்து கொண்டதால் வேதங்களை சாகா கூர்மையாகத் தாக்கினார்.அவர் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார் விளங்குகிறதா ?


சர். சி.வி.ராமன் பார்ப்பனராக இருந்ததும் ; அவரது மேட்டுக்குடி அணுகுமுறையும் ; அதிகார பீடத்தை நெருங்கி நின்றதும் ; சாகாவை பலவழிகளில் புறக்கணித்ததும் இந்நூலில் பதிவு செய்யும் போதே இந்நூல் ராமனின் அறிவியல் திறனையோ நேர்மையையோ தவறாகச் சுட்டவில்லை .ஆரம்பத்தில் சாகாவை ஆதரித்த நேரு பின்னர் மாறியது  - பார்சி வகுப்பைச் சார்ந்தவரும் டாட்டா குடும்பத்தைச் சார்ந்தவருமான  ஹோமி பாபா ,அதிகார பீடங்களோடு இணைந்து நின்ற பட்னாகர் போன்றோர் பெற்ற வாய்ப்புகள் ,அங்கீகாரம்  ;இவை சாகாவுக்கு மறுக்கபட்டது ஏன் ? இந்நூல் உரக்க எழுப்பும் கேள்வி இதுவே ! இந்திய சமூகத்தின் வர்க்க வர்ண  ஆதிக்கத்தை புரியவைக்கிறது இவரின் வாழ்க்கை .


கணித மேதை ராமானுஜம் வாழ்க்கை வரலாற்று நூலில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் ஒரு செய்தியைச் சொல்வார் ; “சமூகமுதல் [சோஷியல் கேப்பிட்டல்] நமது வாழ்வில் வகிக்கும் பங்கு குறித்து நாம் இங்கு கவனம் செலுத்த வேண்டும் .வறுமை கிராமச் சூழல் போன்ற தடைகள் மட்டுமில்லாது சமூக முதலின்மை எனும் சவாலையும் சந்திக்கும் நமது மாணவ மாணவியர் அவ்வளவாக நடை முறை வாழ்வில் மிளிர முடிவதில்லை . ராமானுஜம் போன்றே கணிதத் திறமை பொதிந்த ஆனால் சமூக முதலின்றிப் பிறந்த எவ்வளவோ ராமானுஜன்கள் வெளிவரமுடியாமல் சேற்றில் புதைந்து விட்டனர்” இதனைச் சொல்லும் முன்பு பார்ப்பனராகப் பிறந்ததால் ராமனுஜருக்கு ஏற்பட்ட அனுகூலங்களையும் கைத்தூக்கிவிடும் சூழலையும் விவரிப்ப்பார் . பார்பனியம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தவிட்டாலும் ; பார்ப்பானகப் பிறந்ததே சமூக மூலதனம் என்பார் . சாகா வாழ்க்கையோடு இதனைப் பொருத்திப் பார்க்கும் போது நமக்கு மேலும் தெளிவு பிறக்கும்.


அடிதட்டில் இடைநிலை சாதிக்கும் தலித்துகளுக்கும் இடையேயான மோதல் வெளிப்படையானது . ஒழிவு மறைவற்றது .  இம்மோதல் பெரும் சவால்தான் எனினும் அறியாமையே பெரிதும் இங்கு வினையாற்றும் .ஆனால் மேல்மட்டத்தில் நடப்பதோ தெரிந்தே செய்யும் திட்டமிட்ட ஒதுக்கல் , அவமதிப்பு. ;புனுகுபூசி , நெய்தடவி கழுத்தறுப்பது . சமூகத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் சிந்தனைப் போக்கையும் தீர்மானிக்கும் இடம் அதுதான் . அங்கேதான் பார்ப்பனிய வஞ்சகம் நுட்பமாய் கோலோச்சுகிறது . இன்னும் ஏன் பார்பனிய எதிர்ப்பு என்கிற துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிச் சுமக்கிறீர்கள் என்போர் இந்த வஞ்சக சதியை உணராதோரேஅல்லது உணர மறுப்போரே . அதிகார பீடத்தோடு உள்ள நெருக்கம் ,தோலின் நிறம் , சாதி என பலகூறுகள் அறிவுஜீவி சமூகத்தில் எப்படி வினையாற்றும் என்பதற்கு சாகா வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு .இன்றும் தொடரும் கொடுமை இது . எனவே இந்நூல் உரத்த விவாதத்திற்கும் ஆழ்ந்த புரிதலுக்கும் உரியது .




மேக்நாட் சாகா ,ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, 
ஆசிரியர் : தேவிகாபுரம் சிவா,

வெளியீடு :
பாரதி புத்தகாலயம் .
7, இளங்கோ சாலை , தேனாம் பேட்டை ,சென்னை – 600 018.

பக்கங்கள் : 288 , விலை : ரூ.230 .

சு.பொ.அகத்தியலிங்கம்
நன்றி : புத்தக மேசை . தீக்கதிர் 14-02-2015

இடம் கருதி தீக்கதிரில் இதன் ஒரு பகுதிமட்டுமே வெளியிடப்பட்டது . முழுமையாக இங்கே படியுங்கள் .








2 comments :

  1. SELVIN

    mutrilum unmai...

  1. JUSTIN.kanyakumari

    சிறந்த பதிவு

Post a Comment