சமூக மாறுதலுக்கு சூத்திரம் சாத்தியமா ?

Posted by அகத்தீ Labels:





சமூகமாறுதலுக்கு
சூத்திரம் வரைவது சாத்தியமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்.



·         ஒவ்வொரு மதத்திலும் எது எது கெட்டது என்பதைத் தேடுவதை விடுத்து  ; எதுஎது நல்லதென தேடித் தெரிந்து  எல்லா மதத்தையும் கொண்டாடப் பழகின் மதப்பகைமை ஒழிந்து நல்லிணக்கம் பூக்குமே ?


·         தர்மம் , அறம் இவற்றைப் பேணுவது கடமை அல்லவா ? இவற்றை வற்புறுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் மதம் அல்லவா ? அறம் சார்ந்த வாழ்க்கை மதமின்றி சாத்தியமாகுமா ?


·         “வரலாறு தண்டிக்கும் , வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் சொல்லுகிறீர் ; இதுவும் புராணப் புனைவை நம்புவது போலத்தானே ?


·         புவியியல் , தட்பவெப்பம் , பண்பாடு சார்ந்து ஒவ்வொரு நாடும் வெவ்வேறு சூழலில் இருக்கிறது . அப்படி இருக்கும் போது உலகம் முழுவதும் சமூகமாறுதல் இப்படித்தான் நிகழ்ந்தது ; இனியும் இப்படித்தான் நிகழும் எனச் சூத்திரம் வரைவது சாத்தியமா ?


·         பொதுவாக தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் பார்பன எதிர்ப்பையே மையப்படுத்துகின்றனர் . அதிலும் பிராமணர் என மரியாதையாகக் கூடச் சொல்வதில்லை .பாப்பான் எனக் கொச்சைப் படுத்துகின்றனர் . இது சரியா ?



எப்போதும் எம்மீது ஏவ கேள்விக்கணையோடு காத்திருப்போர் அதிகம் . எல்லோரையும் ஏக காலத்தில் எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல . எனினும் வேறுவழியில்லை .கேள்வியும் உரையாடலும் விவாதமும் இல்லாமல் தெளிவு ஏது ?


ஒவ்வொரு மதத்திலும் எது எது கெட்டது என்பதைத் தேடுவதை விடுத்து  ; எதுஎது நல்லதென தேடித் தெரிந்து  எல்லா மதத்தையும் கொண்டாடப் பழகின் மதப்பகைமை ஒழிந்து நல்லிணக்கம் பூக்குமே ?


மயிலிறகால் வருடும் இவ்வாதம்  காதுக்கு இனியது . வம்பு தும்புக்கு போகவேண்டாம் என எண்ணுவோருக்கு பெரிதும் உடன்பாடானது . முதலில் இந்த கேள்வி ஒவ்வொரு மதத்திலும் பல கெட்ட கூறுகள் இருக்கிறது என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டதாகவே நான் பார்க்கிறேன் . அதற்காக கேள்வியாளருக்குப் பாராட்டுகள் . கெட்ட கூறுகளை அடையாளம் காண்பதிலோ அதனை எதிர்த்துப் போரிடுவதிலோ என்ன பிழை இருக்க முடியும் ?

குழந்தைத் திருமணம் ,கணவன் இறந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற்றும் ஸதி வழக்கம் , கணவனை இழந்த கைம்பெண் மறுமணம் முடிக்கத் தடை , தேவதாசி முறை போன்ற இந்து மதத்தின் சில தீய வழக்கங்களை எதிர்த்துப் போராடாமல் ஒழித்திருக்க முடியுமா ? இதனை சாதிக்கப் போராடிய ராஜா ராம் மோகன் ராய் , ரானடே , கோகலே . முத்துலட்சுமி ரெட்டி , பெரியார் உள்ளிட்ட பலர் பிறப்பால் இந்து மதத்தவர் . இது போல் எல்லா மதத்திலும் உள்ள கெட்ட கூறுகளை அந்தந்த மதத்தில் பிறந்தோரே நன்கு உணர முடியும் ; எதிர்த்து போராட முடியும் ; போராட வேண்டும் .


இப்படிப் போராடும் போது , “ எங்க மதத்திலே மூக்கை நுழைக்கிற உனக்கு அந்த மதத்தின் தீமைகள் கண்ணுக்குத் தெரியவில்லையா ?” என கேள்வி எழுப்புவோர் வில்லங்கமானவர்களே ! ஒருவர் தான் பிறந்த மதத்தை விடுத்து அடுத்த மதத்தவர் மீது விமர்சனம் செய்யும் போது வேண்டாத காழ்ப்புணர்வும் பகைமையும் விசிறப்படும் .


இதனை பகுத்தறிவாளர்கள் அறிவர் .எனவே இங்கர்சால் , பெட்ரண்ட் ரசல் ,பெரியார் ,இபின் வராக் ,ஸ்டீபன் ஹக்கிங்க்ஸ் என ஒவ்வொருவரும் அவர்கள் பிறப்பால் ஒட்டிக்கொண்ட – அவர்கள் நன்கறிந்த மதத்தையே பெரிதும் கேள்விக்குள்ளாக்கினர் . இம்மரபைத் தொடர்வது காலத்தின் தேவையே !


அதே சமயம் பிற மதத்தின் கெட்ட அம்சங்களை மட்டும் பேசும் சங்பரிவார் , வகாபிஸம் மற்றும் தாலிபான் , கிறுத்துவ மதவெறிப் பிரச்சாரம் உள்ளிட்டவை மதப் பகைமையை உசுப்பிவிடும் என்பதில் ஐயமே இல்லை . அதனை தவிர்க்க வேண்டும் . எதிர்க்க வேண்டும் . கைவிடச் செய்ய வேண்டும் .


அடுத்து ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல அம்சங்களைக் கொண்டாட வேண்டும் என்பது நல்லதுதான் . ஆனால் கேள்வி எழுகிறதே. எது நல்ல அம்சம் ?.அன்பு , கருணை , இரக்கம் , இவற்றை எல்லா மதமும் பேசும் – ஆனால் அவை மனித குலத்தின் பொதுப் பண்பாகவே கொள்ள முடியும் .ஒரு மதத்திற்குரியதெனப் பார்ப்பதே சிக்கலாகிவிடும்  அல்லவா?


இன்னொரு மதத்தின் நல்ல அம்சம் என எதையேனும் நீ சுட்டிக் காட்டினாலே உன்னை அந்த மதத்தின் அடிவருடியாகச் சித்தரிக்கும் சூழல் தானே எங்கும் நிலவுகிறது பெண்கள் குறித்த மதத்தின் அணுகுமுறை ; உழைப்பாளர் குறித்த மதப்பார்வை இவற்றை விமர்சிக்காமல் கொண்டாட முடியுமா ?


வெள்ளம் போன்ற இயற்கை உற்பாவத்தின் போது வெடித்தெழும் மனிதமும் ;விழாக் கொண்ட்டாட்டங்களின் போது பொங்கி வழியும் பாசமும் ; அப்படியே நீடிக்குமா ? அது சாத்தியமா ? இல்லவே இல்லை . அந்த உணர்ச்சி வடிந்த பின்னர் மீண்டும் உள்ளத்தில் உறங்கிய சைத்தான் தன் வேலையைக் காட்டிவிடுவானே !


இப்படிச் சொல்வதால் துன்பதுயரத்தின் போது பொங்கும் மனிதத்தையோ , கொண்டாட்டங்களில் முகிழ்க்கும் பாசத்தையோ வேண்டாம் என ஒதுக்கச் சொல்லவில்லை .அதனைத் தொடரவும் வேண்டும் . ஆனால் அதுமட்டுமே தீர்வல்ல .அந்த இணக்கத்தைப் பயன் படுத்திக் கொண்டே மதங்களின் மீதான விமர்சனத்தை நயத்தகு நாகரீகத்தோடு முன்னெடுப்பது தவிர்க்க முடியாத வரலாற்றுக் கடமையாகும் .


தர்மம் , அறம் இவற்றைப் பேணுவது கடமை அல்லவா ? இவற்றை வற்புறுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் மதம் அல்லவா ? அறம் சார்ந்த வாழ்க்கை மதமின்றி சாத்தியமாகுமா ?


தர்மம் செய்யுங்க என்பதை பிச்சை போடுங்கள் என்றே பெரும்பாலான மக்கள் புரிந்து வைத்திருக்கின்றனர் .  “அறம் செய விரும்பு” என்பதை பள்ளியிலேயே படித்த போதிலும் ; அறம் என்பது சில மனிதாபிமான உதவிகள் என்றே நம் பொதுபுத்தியில் உறைந்து போயுள்ளது .

1]மனிதனுக்கும் மனிதருக்கும் இடையிலான நடத்தை
2]சமூகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான நடத்தை
3]இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான நடத்தை

என மும்முனையில் உள்ள உறவுகள் , கொடுக்கல் வாங்கல் , என அனைத்தும் தடங்கிலின்றி தொடர ஏற்படுத்திக் கொண்ட நடைமுறைகளே அறம் அல்லது தர்மம் என்படும் . இது யாரோ ஒருவரால் ஓரிரவில் உருவானதல்ல .மாறததும் அல்ல . காலந்தோறும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. வல்லான் வகுத்த வாய்க்காலாய் கால ஓட்டத்தில் திரண்டவையும் ஆதிக்க சக்திகளால் திணிக்கப்பட்டவையும் இதில் அடங்கும் .ஆதிக்க சக்திகள் நலன் பேண  மத நூல்களால் திரட்டப்பட்டு புனித முலாம் பூசப்பட்டவையே அறம் அல்லது தர்மம் என்கின்றனர். கடவுளின் பெயரால் மக்கள் மீது நுட்பமாய் திணிக்கப்பட்டவை .அதாவது சமூகத்தில் ஆதிக்க நிலையில் இருப்போர் நலனையும் அவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மதங்களின் துணையோடு சமூகத்தின் பொதுபுத்தியில் ஏற்றப்பட்டு ஏற்குமாறு செய்யப்பட்டவையே அறம் எனலாம் .


“ அறம் என்பது மனிதனின் ஒழுக்க நடத்தை பற்றியது என்றாலும் அதனை இயக்குவது தத்துவக் கண்ணோட்டமே என்பதைத் தத்துவத்தின் வரலாறு உறுதிப்படுத்துகிறது” என்பார் தேவ. பேரின்பன் .


தர்மம் என இந்து மதவாதிகள் சொல்வது சனாதன தர்மத்தையே – அதாவது மநு தர்மத்தையே -  அதாவது சாதிய ஒடுக்குமுறையை அப்படி ஏற்றொழுகச் சொல்லும் தர்மமே . கிறுத்துவம் , இஸ்லாம் மதங்களும் ஒடுக்குமுறைக்கு பணிந்து போவதையே தர்மம் , அறம் எனப் போதிக்கின்றன . எல்லா மதங்களும் செல்வச் செழிப்பும் வறுமையும் ஆண்டவன் வழங்கியதே எனப் போதிக்கின்றன . பெண்ணை இரண்டாம்தர குடிமக்களாய் தாழ்த்துவதை அறம் , தர்மம் சார்ந்ததாகவே கற்பிக்கின்றன . அதே நேரம் ஆதியில் சமூகம் கூட்டு சமூகமாக அனைத்தையும் பொதுவில் வைத்து பங்கிட்டு வாழ்ந்த சமூகமாக இருந்த போது உருவான பொதுக்கூறுகள் அடுத்து வந்த காலகட்டங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டது ; இன்னும் பேசப்படுகிறது . ஆயினும் அந்த சொற்களும் வர்க்க - வர்ண சமூகத்தின் நலனுக்கு ஏற்ப பொருள் திரிக்கப்பட்டுள்ளன .


ஆக அறம் ஏற்ற தாழ்வற்றதாக – வர்க்க ,வர்ண பேதமற்றதாக – பாலின சமத்துவம் மிக்கதாக மாறினால் மட்டுமே அந்த அறம் அல்லது தர்மம் எல்லோருக்கும் உகந்ததாகும் . மதம் இதற்கு எதிராகவே உள்ளது. எனவே புதிய அறம் ஓங்க மதம் சார்ந்த அணுகுமுறை ஒரு போதும் உதவாது என்பதே உண்மை . அறம் சார்ந்த வாழ்க்கை வாழ மதம் தேவையில்லை ; இன்னும் சொல்லப் போனால் தடையும் கூட.






“வரலாறு தண்டிக்கும் , வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் சொல்லுகிறீர் ; இதுவும் புராணப் புனைவை நம்புவது போலத்தானே ?

“ தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ; தருமம் மறுபடியும் வெல்லும்” என புனைவு மூலம் கதை சொல்லி போதிக்கும் புராணங்கள் , காப்பியங்கள் , இதிகாசங்கள் போல்தான் வரலாறும் என்கிற பார்வை இக்கேள்வியில் எதிரொலிக்கிறது . இந்தியாவில் வரலாற்றைப் பதிவு செய்யும் வழக்கம் நெடுங்காலமாக இருந்ததில்லை .இங்கே புராணப் புனைவுகளுக்கும் வரலாற்றுக்கும் இடையே ஆன பெருங்குழப்பம் பல படித்தவர்களிடமே உண்டு . ராமாயணம் , மகாபாரதம் போன்றவை முழுக்க முழுக்க கற்பனைக் கதை ஆயினும் அதற்கு ஒரு தெய்வீக அந்தஸ்த்து கொடுத்து மயக்கம் கொள்கிற மனோ நிலை நம் மக்களிடையே வலுவாக உண்டு .


ஆனால் வரலாறு அப்படிப்பட்டதல்ல. “ சரித்திரமானது வெறும் சித்தரிப்பான கலையும் அல்ல ; மீற முடியாத   விதிகளைக் கொண்ட   இயற்கை விஞ்ஞானமும் அல்ல ; மாறாக இரண்டின் கூறுகளையும் ஏதோ ஒரு வகையில் கொண்ட சமூகவிஞ்ஞானம்.” என்பார் அருணன்.


வரலாற்றை வெறுமே ராஜா –ராணி கதையாக , சதி , சூழ்ச்சி , போர் , ஆதிக்கம் , வெற்றி என்கிற சாண்டில்யன்  பாணி சரித்திரக்கதைகளைப் போல் புரிந்து கொண்டால் வரலாறு தண்டிக்கும் அல்லது விடுதலை செய்யும் என்கிற வாதங்கள் கேலிக்குரியதாகவே அமையும் .   


“ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என காரல் மார்க்ஸ் சொன்னதை உள்வாங்கின் சற்று ஒளி புலப்படும் . வேட்டையாடுதல் , வேளாண்மை , நெசவு , தொழில் என பலவித உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியும் அவற்றோடு மனிதர்களின் உறவும் அதனுடன் இணைந்த சமூக அரசியல் பண்பாட்டு நிகழ்வு போக்குகளும் என  விரிந்த தளத்தில் வரலாற்றைப் பார்க்கப் பழகியோர் சில கறாரான அனுமானங்களுக்கு வருவது சாத்தியமே !


நேற்றைய உலகம் இப்படி இருந்தது – நாளைய உலகம் இந்த திசைவழியில் பயணிக்கும் என பெருமளவு உய்த்துணர்ந்து அதன்வழி மாற்றம் வரும் என கூறுவதும் சாத்தியமே . இதனை வரலாற்று இயங்கியல் பார்வை என்பர்; அதாவது மார்க்சிய பார்வை என்பர்.


“ வரலாறு தண்டிக்கும் ; வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்றெல்லாம் கூறுவது ஆருடமோ முரட்டு நம்பிக்கையோ அல்ல சமூக அறிவியல் வழிவந்த எதிர்பார்ப்பு . லட்சிய உறுதியின் வெளிப்பாடு . வரலாறு குறித்த மார்க்சிய பார்வையை அல்லது சமூக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்றழைப்பர் . அருணன் இதனை சரித்திரப் பிரபஞ்ச வாதம் என்பார் .ஆதனைத் தொடர்ந்து பயில்வோம்.




4] புவியியல் , தட்பவெப்பம் , பண்பாடு சார்ந்து ஒவ்வொரு நாடும் வெவ்வேறு சூழலில் இருக்கிறது . அப்படி இருக்கும் போது உலகம் முழுவதும் சமூகமாறுதல் இப்படித்தான் நிகழ்ந்தது ; இனியும் இப்படித்தான் நிகழும் எனச் சூத்திரம் வரைவது சாத்தியமா ?


நுட்பமான கேள்வி .  “ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளையும்  தங்கள் காலனிகளாக மாற்ற முடிந்தது எவ்வாறு ? ஏன் சீனாவோ அமெரிக்காவோ இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பி – விடைதேடிப் பயணித்து ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் “ துப்பாக்கிகள் ,கிருமிகள்,, எஃகுகள்” .இந்த நூல் வரலாற்றின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் .


அதனை மார்க்சிஸ்ட்டுகள் மறுப்பதில்லை . புவியியல் , தட்பவெப்பம் , உற்பத்தி முறைகள் , உற்பத்தியோடு இணைந்த மனிதர்களுக்கிடையேயான உறவுகள்  , அச்சமூகத்தின் கருத்து நிலை என எல்லாம் வினையாற்றும் ; ஒவ்வொரு நாட்டின் காத்திரமான சூழலை ஆய்ந்தே அந்நாட்டின் சமூக வரலாற்றை கணிக்க முடியும் என்பதில் ஐயமே இல்லை .



அதே சமயம் இந்த பூமிப்பந்தில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனித்தனி காரணமும் சூழலும் இருப்பதுபோல் சில பொதுக்கூறுகளும் உண்டு .


ரஷ்ய வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ள  “சமுதாய வரலாற்றுச் சுருக்கம்” நூலில் கூறுகின்றனர் ; “ சிக்கல் நிறைந்த உற்பத்தி செயல்முறை முழுவதையும் தன்னந்தனியாக மனிதனால் சாதித்துவிட
முடியாது . இயற்கையின் ஆவேசத்தை எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியாக சமாளித்திருக்க முடியாது . ஏறுமாறான அந்தப் போராட்டத்தில் அவன் அழிந்தொழிந்து போயிருப்பான். சமூகங்களாக ஒன்று சேர்ந்து முந்திய பரம்பரையின் அனுபவத்தையும் , நுட்பங்களையும் பயன்படுத்துவதன் மூலமே மனிதர் பண்ட உற்பத்தியைப் பெருக்க முடியும் . உழைப்பு சமூகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்க முடியும்”


ஆனால் அந்த உழைப்பின் பலன் எப்படி பகிரப்பட்டது என்கிற கேள்வி முக்கியமானது ? இந்த கேள்விக்கு விடை தேடும் போது வர்க்க சமூகம் துலக்கமாகப் புலப்படும். சமூக வாழ்க்கையின் தனித்தனியான நோக்குகளை ஆய்வு செய்கின்ற  சிறப்பு சமூக அறிவியல்களுக்கு மாறாக வரலாற்றுப் பொருள் முதல் வாதமானது சமூக வாழ்க்கையை ஒட்டு மொத்த மாகவும் அதாவது அதனுடைய பல்வேறு நோக்குகளிடையேயான உள்  தொடர்பு மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்கிறது. இதனடிப்படையில் மனித குலம் மூன்று கட்டங்களை அல்லது யுகங்களைத் தாண்டி நான்காவது கட்டத்தில் அல்லது யுகத்தில் நிற்கிறது ; இதன் கர்ப்பத்தில் அடுத்த கட்டம் அல்லது யுகம் கருத்தரித்துவிட்டது .


1] ஆதிபொதுவுடைமை சமுதாயம் எனப்படும் ஆதியுகம் , 2] அடிமை சமுதாயம் எனப்படும் ஆண்டான் யுகம் , 3] நிலப்பிரபுத்துவ சமுதாயம் அல்லது நிலப்பிரபுத்துவ யுகம் , 4] முதலாளித்துவ சமுதாயம் அல்லது முதலாளித்துவ யுகம்  . இனி அடுத்து வருவது பொதுவுடைமை சமுதாயமாக அல்லது புதுயுகமாக அமையும் . இதுவே மனித சமூக வரலாறு குறித்தபொதுவான கோட்பாடு .ஆனால் இதனை இயந்திர கதியாக கணித சூத்திரம் போல் எல்லா நாட்டிலும் அப்படியே பொருத்த முடியாது . பொருத்தவும் கூடாது .அந்தந்த நாட்டின் தனித்தன்மையையும் சேர்த்த பரிசீலிக்க வேண்டும் . எடுத்துக்காட்டாக கிரேக்கத்திலும் ஐரோப்பியாவிலும் இருந்தது போன்ற அடிமை வியாபாரம் அப்படியே இந்தியாவில் இருந்ததா ? இங்கே நிலவும் சாதி முறை அங்கே ஏன் இல்லை ? இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன ? அடுத்தடுத்து பார்ப்போம் .


மார்க்ஸோ லெனினோ வறட்டு சூத்திரத்துக்குள் எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக நுழைக்கச் சொல்லவில்லை . இது குறித்து யுகங்களின் தத்துவம் நூலில் அருணன் சுட்டிய வரிகள் மிக முக்கியமானது .



“ சோவியத் அறிஞர்கள் கீழ்வரும் முக்கியமான செய்தியைத் தருகிறார்கள் : வாழ்க்கை படு வேகமாக முன்னேறும் போது ஏற்படும் புதிய மற்றும் எதிர்பாரா விஷயங்களைக் கவனிக்கத் தவறும் போது கதேயின் ஃபாஸ்ட் படைப்பில் வரும் இந்த வரிகளை லெனின் அடிக்கடி மேற்கோள் காட்டுவார் : ‘ எனது நண்பா , கோட்பாடு என்பது பழுப்பானது , ஆனால் வாழ்வென்னும் நித்திய மரமோ பசுமையானது’ மிகவும் முன்னேறிய சமூகக் கோட்பாட்டை விடவும் உலகில் உண்மையில் என்ன நடக்கிறதோ அந்த வரலாற்றின் வாழ்வு இன்னும் வளமானது . நமது பரபரப்பான , எழுச்சிமிகு யுகத்தில் நாம் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது .வரலாற்றியல் பிரபஞ்ச வாதமானது நிகழ்வுகளின் போக்கைப் புரிந்து கொள்வதற்கான ஒரு புறவயமான வழிகாட்டலைத் தருகிறது ;அவற்றை அறியவும், புரிந்து கொள்ளவும் , விஞ்ஞான பூர்வமாக முன்னறியவும் , சமூக வளர்ச்சியின் வாய்ப்புகளையும் போக்குகளையும் நோக்கவும் நமக்கு வழிவகுத்துத் தருகிறது .அப்படியாக புரட்சிகர நடவடிக்கைகளுக்கான கோட்பாட்டு அஸ்த்திவாரத்தைப் போட்டுத்தருகிறது.”


அடுத்தடுத்து இதனை மேலும் கூர்ந்து பார்ப்போம் .











பொதுவாக தமிழகத்தில் நாத்திகம் பேசுவோர் பார்பன எதிர்ப்பையே மையப்படுத்துகின்றனர் . அதிலும் பிராமணர் என மரியாதையாகக் கூடச் சொல்வதில்லை .பாப்பான் எனக் கொச்சைப் படுத்துகின்றனர் . இது சரியா ?

இந்தக் கேள்வி அடிக்கடி வீசப்படுகிறது . தமிழக பண்டைய இலக்கியங்களில் பார்ப்பான் என்ற சொல்லே பரவலாகப் புழக்கத்தில் இருந்ததை காணமுடிகிறது .” பார்ப்பன மகளே !பார்ப்பனமகளே!” என விழிக்கும் குறுந்தொகைப்பாடலாகட்டும் ;   “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்…..” என ஒலித்த சிலம்பாகட்டும் ; “பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சேஎன உடுக்கை அடித்த பாரதியாகட்டும் ; பேராசைப் பிடித்த பார்ப்பானை , “ சாம்பிழி வதென்ன பார்ப்பான் என்ன’’ என வினவிய திருவிளையாடல் புராணமாகட்டும் ;  “ஊருடன் பார்ப்பார் கூடி /உயர்ந்ததோர் /சாலை கட்டி/நீரிலே மூழ்கி வந்து/நெருப்பினில் நெய்யைத் தூவி/கார்வயல் தவளைபோல/கலங்கிய உங்கள் வேதம்/பாரைவிட்டு அகன்றதேனோ?/பாய்ச்சலூர் கிராமத்தாரே” என 15 ஆம் நூற்றாண்டில் பதிகம் பாடிய உத்தரநல்லூர்நங்கை என்னும் பெண்கவிஞராகட்டும் … அல்லது தோண்டத் தோண்டக் கிடைக்கு தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் பார்ப்பான் என்று தூயதமிழில்தான் சொல்லப்பட்டிருக்கிறது . சொல்லில் என்ன பிழை ? கிராமப்புற மக்கள் மற்றும் சாமானியர்கள் சொல்வழக்கு பார்ப்பனர் என்பதே ! பிராமணர் என சம்ஸ்கிருதச் சொல்லால்  அவர் சுட்டுவதில்லை. 

பாரம் எனும் சொல் பருத்தியையும், வெண்மையையும், வெண்ணிறப் பூண்டையும் குறித்தது..பார்ப்பாரப் பூசணி, பார்ப்பாரக் கழுகு, பார்ப்பாரப் பசலை, பார்ப்பாரப் பூண்டு, பார்ப்பார நாகம் என்பவை வெண்ணிறம் குறித்தவை.தமிழர் கருப்பு அதன் எதிர்  நிறம் அமைந்த ; எதிர் பண்பாடு கொண்ட சமூகப்பிரிவைப் பார்ப்பான் என விழித்தனர் .

இந்து மதம் என்கிற ஒரு மாபெரும் குடைக்கீழ் பல்வேறு சமய நம்பிக்கைகளையும் ; வழிப்பாட்டு முறைகளையும் ; சடங்காச்சாரங்களையும் திருதிராஷ்டிர ஆலிங்கனம் செய்து தங்கள் சனாதன தர்மத்தையும் அதாவது வ்ர்ணாஸ்ரம தர்மத்தை உச்சத்தில் நிறுத்தினர் . சமஸ்கிருதமும் பிராமணனும் உச்சத்தில் இருத்தப்பட்டது . பார்ப்பான் பிராம்ணன் ஆக்கப்பட்டான் . இந்த போக்கினை மேநிலை ஆக்கம் அல்லது  சமஸ்கிருதமயமாக்கல் என சொல்லுவர் . வ்ர்ணாஸ்ராம ஆதிக்க மனோநிலையை பிராமணியம் என சமஸ்கிருதவழியிலும் பார்ப்பணியம் எனத் தமிழ் வழியிலும் குறிப்பிடுவர் .  “இந்த வர்ணச்சமூகக் காலக்கட்டத்தில் தான் பிராமணனாக, பார்ப்பான் உருமாற்றம் பெறுகிறான்” என்பார் சோலை சுந்தரப் பெருமாள்.



பார்ப்பனியம் என்கிற மேலாதிக்க உணர்வு அல்லது கருத்தோட்டம் பார்ப்பனர்களிடம் மட்டும் அல்ல ; பார்ப்பணரல்லாத பல மேல் சாதியினரிடத்தும் ; இடைநிலை சாதியினரிடத்தும் ஓங்கி இருக்கும் . சில நேரங்களில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கூட இவ்வுணர்வு தலைதூக்கிவிடும் .மேலாதிக்க உணர்வின் குறியீட்டுச் சொல்லே பார்ப்பனியம் அல்லது பிராமணியம் .

பார்ப்பனியம் என்ற மேலாதிக்க எதிர்ப்பு என்பதை திராவிட இயக்கத்தின் முழுக் குத்தகையாகக் கருதி சுருக்கிப் பார்த்தல் கூடாது.மாறாக தமிழர் தத்துவ மரபில் பார்பணிய எதிர்ப்பு - சனாதன வைதீக எதிப்பு என்பது காத்திரமானது . நா.வானமாமலை , அருணன் , தேவபேரின்பன் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களைத் தொடர்ந்து வாசிப்பின் விளங்கும் . அதனை நவீன அரசியல் தளத்தில் வலுவாக முன்னிறுத்தியதுதான் திராவிட இயக்கம் செய்தது . ஆயினும் தேர்தல் , பதவி ,பணம் , சுயநலம் எனத் தொடங்கிய பின் அங்கும் அது நீர்த்துபோய் ; பார்ப்பனிய எதிர்ப்பு வெறும் சந்தர்ப்பவாத நிலையாக திரிந்து விட்டது .இந்நிலையில் அவர்கள் பேசும் பார்ப்பன எதிர்ப்பின் மீதான கோபத்தில் வரலாற்று உண்மையை நிராகரிக்க இயலாது .


பி.சீனிவாசராவ், ஏ.பி.பாலசுப்பிரமணியம் , எம் ,ஆர். வெங்கட்ராமன் ,பி.ராமமூர்த்தி , ஏ.எஸ்.கே .ஐயங்கார் .இ.எம்.எஸ் .நம்பூதிரிபாத், ஆர் .உமாநாத், உரா வரதராசன் , மைதிலி சிவராமன் ,கே.வரதராசன் , டி.கே.ரங்கராசன் , சீத்தாராம் யெச்சூரி , வாசுகி, தபால்தந்தி இயக்கத்தின் முன்னோடி பஞ்சாபகேசன்   உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் மட்டுமல்ல ;அக்கிரஹாரத்து அதிசய மனிதர் என அண்ணா புகழந்த வரா என அழைக்கப்பட்ட வ. ராமசாமி அய்யங்கார் , சின்னக்குத்தூசி என் அன்போடு அழைக்கப்பட்ட தியாகராஜன் , ராஜம் கிருஷ்ணன் என்ற படைப்பாளி உள்ளிட்ட. எண்ணற்ற மாமனிதர்கள் பிறப்பால் பார்ப்பனராயினும் ; சுயசாதி அபிமானத்தை உதறி எறிந்துவிட்டு ; பூணூலையும் கழற்றி எறிந்துவிட்டு  பார்ப்பனிய ஆதிக்கத்தை வேரறுக்க களங்கண்டவரண்றோ !

யாரையும் புண்படுத்த பார்ப்பனியம் என நாம் பேசவில்லை. எழுதவில்லை . தனிப்பட்ட எந்த பார்ப்பனருக்கும் நாம் எதிரியல்ல ; அவர்தாம் வாழ்நிலை மேம்படவும் பாடுபட முற்போக்காளர் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை  .

பார்ப்பனியம் என்பதை மேலாதிக்க எதிர்ப்பென்றே உணர்க . இந்து மதவெறியின் உள்ளடக்கம் வர்ணாஸ்ரமமே . அதனை சரியான கோணத்தில் எதிர்க்க பார்ப்பனியம் என்கிற  ஆதிக்கக் கண்ணோட்டத்தைக் குறிவைப்பது மிகச்சரியானதே ! அதே சமயம் மநுவை அப்படியே முன்மொழியாது இந்துத்துவக் கூட்டம் . புனுகு பூசி , கோமியம் தெளித்து , திறமை , தகுதி என நுட்பமான சொல்லாடல்களில் தன்னை மறைத்துக் கொண்டு அதே வர்ணாஸ்ரமத்தை திணிக்கவே சங்பரிவார் முயல்கிறது . எட்டாம் வகுப்புக்கு பின் தன் தந்தையின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என கல்விக் கொள்கையில் முன்மொழிவதும் ; தன் தந்தையின் தொழிலில் சிறார் ஈடுபடுவது குழந்தைத்தொழிலாளி ஆகாதென்றும் , திறமை மிகு வல்லரசு என்றெல்லாம்  பாஜக அரசு முழக்குவதின் பின்னால் மநு உள்ளார் .வர்ணாஸ்ரமம் உள்ளது . பார்ப்பனியம் உள்ளது . உலகமயம் உள்ளது . அதனை எதிர்ப்பதற்கு ஒன்று திரளும் போதும் - திரட்டும் போதும் பார்ப்பனியத்தை எதிர்ப்பது தவிர்க்க முடியாததுதானே ! தவிர்க்கக்கூடாதது தானே !   தன் சொந்த சாதி அபிமானத்தை மீறி பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பில் முனைமுகத்தில் நின்றோரே நாம் முன் சுட்டிய சான்றோர் .அவ்வழி யோசிப்போர் சினங்கொள்ளார் என்பதே எம் தாழ்மையான கருத்து.

நன்றி : தீக்கதிர் , வண்ணக்கதிர் , 07-02-2016
















0 comments :

Post a Comment