பழங்கறியும் கட்லெட்டும்

Posted by அகத்தீ Labels:

 

பழங்கறியும் கட்லெட்டும்

 

நான் சிறுவனாக இருந்த போது பொங்கலன்றும் மாட்டுப்பொங்கலனறும் வீட்டில் தடபுடல்தான். சர்க்கரைப் பொங்கல்,பொங்கல்,வடை , கரும்பு ,பழங்கள் ,கற்கண்டு, பனங்கிழங்கு என நாங்கள் மூழ்கிவிடுவோம் . சோறு ,காய்கறிக்கூட்டு ,அவியல் ,பச்சடி ,பொரியல் ,சாம்பார்.ரசம் எல்லாம் மீந்துவிடும் . எல்லாம் நாஞ்சில் நாட்டு பக்குவம்.

 

மறுநாள் காணும் பொங்கலன்று , மீதமான அனைத்தையும் போட்டு சுண்டவைத்து தருவார்கள் .அதனை பழங்கறி அல்லது சுண்டக்கறி என்போம். பழைய சாதத்தில் கட்டித் தயிர்விட்டு பிசைந்து பழங்கறி சேர்த்து அம்மாவோ /ஆச்சியோ உருட்டித் தரும் போது சுற்றி இருந்து உண்ணும் எங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான் . ஆச்சி எனில் கூடவே கதையும் கிடைக்கும். அதன் ருசியே தனி . வழக்கத்தைவிட அதிக உருண்டைகள் உள்ளே சென்றுவிடும் அந்த ருசி இனி எந்த ஜென்மத்திலும் கிடைக்காது .

 

[ தீபாவளியின் போதும் வேறு  பண்டிகைகளின் போதும் இதுபோல் நடக்கும்]

 

சரி ! வெறொன்றை பார்ப்போம். நான் ஐடிஐ [சிடிஐ]படிக்கிற காலம் .நான் ,உத்தண்டராமன் ,ஜெயராஜ் ,மிலான், சைதை நண்பர் சிவராஜ் எல்லோருக்கும் கட்லெட்டை எப்படியாவது ஒரு நாள் ருசி பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் . அதற்கு ஒரு திட்டம் போட்டோம். கிட்டத்தட்ட ஐந்தாண்டு திட்டம் மாதிரிதான் .காசு வேண்டுமே !

 

ஒரு நாள் எல்லோரும் சைதாப்பேட்டையில் இருந்து நடந்து தி.நகர் போனோம். அங்கு ஒரு ஹோட்டலில் [சரஸ்வதி பவன் நின நினைவு ] நுழைந்தோம் . கட்லெட் விலைக் கேட்டு உறுதி செய்துகொண்டோம் .ஆளுக்கொரு கட்லெட் சாப்பிட காசு இருந்தது . கட்லெட் விலை அப்போது ஆறு காசு [ஒரு அணா] என நினைவு. ஐந்து கட்லெட் வாங்கி ஆளுக்கு ஒன்றாய் ஐவரும் சாப்பிட்டோம் .டீ /காபி குடிக்க காசு கிடையாது .தண்ணீர் குடித்தோம்.

 

 “ நம்ம வீட்ல பழங்கறி செய்வோம்ல அதுமாதிரி ஹோட்ல மிச்சம் வர்றத எல்லாம் சேர்த்து செய்தால் அது கட்லெட்.. ஆனாலும் நம்ம பழங்கறியை அடிச்சிக்க முடியாது ” என உத்தண்டராமன் ஜோக் அடிக்க . ஆமாம் போட்டு சிரித்தோம் . எங்க ஞானமும் அப்போது அம்புடுத்தான். அப்புறம் ரொம்ப காலம் கட்லெட் பக்கம் நாங்க திரும்பிப் பார்க்கவே இல்லை.

 

பின்னர்  கட்லெட் சாப்பிட வாய்ப்புகள்  அமைந்த போதும் ; என்னை அது பெரிதாய் ஈர்க்கவே இல்லை . ஏனோ தெரியவில்லை . ஆயின் என்றோ சாப்பிட்ட பழங்கறி சுவை இன்னும் நாக்கில் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்ன செய்ய ?

 

சுபொஅ.

16/01/2024.

எலிப்பொறி வடைசாமி'

Posted by அகத்தீ Labels:

 

இடிப்புசாமி
பிறன்மனை புகுந்திட
பெருஞ்சாமி இவரென
சிம்மாசனசாமி
உத்தரவு போட
ஆமாம்சாமி
தலையாட்டிசாமி
பொம்மலாட்டசாமி
கூலிக்கு மாரடிக்கும் சாமி
எல்லோரும்
கும்பிடுறோம்சாமின்னு
சொல்ல
கூழுச்சாமி வேலைச்சாமி
ஜனச்சாமி நியாயச்சாமி
மனுஷச்சாமி எல்லோரும்
'எலிப்பொறி வடைசாமி'ன்னு
வாய்பொத்தி சிரிக்காங்க
ஏன்சாமி ?
சொல்லுங்க குலசாமி!
சுபொஅ.

பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

Posted by அகத்தீ Labels:

 





பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

 

 

 

 சிந்துவெளி அகழ்வினலே நீ சிரித்தாய் -அதை

சங்கத் தமிழ் ஆழத்திலே எதிரொலித்தோம்

கீழடி வைகை பொருணை வழி படித்தோம்

வாழும் பண்பாட்டின் நாடித்துடிப் பறிந்தோம்

 

 வள்ளுவனின் முப்பாலில் உயிர் தரித்தோம்

வையத் தமிழ்மொழி வாழக் கவிபடித்தோம்

யாவரும் கேளிரெனபாரெங்கும் முரசடித்தோம்

 பசிப்பிணி அறுகவெனபகிர்தல் அறமுரைத்தோம்

 

 சுழன்றும் ஏர்பின்னது உலகு என்றோம்அங்கே

உழவினார் கைமடங்கின் துறவுமில்லை என்றோம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்றோம்

அல்லவைதேய அறம்பெருக நல்லவை செய்வோம்!

 

உணவென படுவது நிலத்தொடு நீரே என்றோம்

உலகம் உய்யும் வாழ்வியல் ரகசியம் சொன்னோம்

பொங்கலும் புத்தாண்டும் மீட்டுக தமிழ்யாழை !

மீட்டுக தமிழ்ப்பண்ணை ! மீட்டுக தமிழர் வாழ்வை !

 

தை தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

வளம் கொழிக்க உழவர் திருநாள் வாழ்த்துகள் !

தமிழர் பெருமிதம் திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள் !

மாட்டுப்பொங்கல் வாழ்த்துகள் !

காணும் பொங்கல் வாழ்த்துகள் !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

[15/01/2024.] தை முதல் நாள் ,திருவள்ளுவராண்டு 2055.


பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

Posted by அகத்தீ Labels:

 


உன் கொள்ளுத் தாத்தா பாட்டி போன்றா நீ வாழ்கிறாய் ? இல்லவே இல்லை ! அதனினும் மேம்பட்ட வாழ்வுதான் உன்னுடையது.

அடங்கிப் போயா இதனை நீ பெற்றாய் ? இல்லவே இல்லை .

உன் கொள்ளுத் தாத்தாவை உன் தாத்தா மீறினார் ,

உன் தாத்தாவை உன் அப்பா மீறினார் ,

உன் அப்பாவை நீ மீறினாய் ,

உன்னை உன் வாரிசுகள் மீறுகிறார்கள் ,

நாளை அவர்களை அவர்களின் வாரிசுகள் மீறுவார்கள் .

இதுதான் வாழ்க்கை .

 

எல்லாம் மாறும் . மாறதது எதுவுமில்லை.

மாறாத பண்பாடோ ,பழக்க வழக்கமோ ,உணவோ ,உடையோ ,நாகரீகமோ ,கல்வியோ , அறிவோ ,மருத்துவமோ , மனோநிலையோ ,புனைவோ ,கனவோ எதுவுமில்லை .எல்லாம் மாறும் .

அடக்குமுறை ,பாசிசம் ,ஜனநாயகம் , நியாயங்கள், ஒடுக்குமுறை ,சிம்மாசனங்கள் எல்லாம் மாறும் .ஆம் எல்லாம் மாறும் !

தகர்க்க முடியாத சிம்மாசனங்களும் கொடுங்கோல்களும் எங்கும் இல்லை .

 

தேவையற்ற பஞ்சாங்கப் பழமைச் சிந்தனையை எரியூட்டுக !

புத்தம் புதிய சிந்தனைக்கு உரம் போடுக !

தொடரும் மனிதகுல வரலாற்றுச் சங்கிலியில் நீயும் ஒரு கண்ணி ! அவ்வளவுதான்….

 

போகியோ போகி !

 

சுபொஅ.

13/01/2024.

அன்பான கடவுளே

Posted by அகத்தீ Labels:

 


 “மாட்டுக்கறியை தடை செய்தால் எனக்கென்ன நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன்.”

 “பன்றிக்கறியை தடை செய்தால் எனக்கென்ன நான் பன்றிக்கறி சாப்பிடமாட்டேன் .”

 “கருவாட்டை தடை செய்தால் எனக்கென்ன அதன் வாசமே எனக்குப் பிடிக்காது.”

 “முட்டையை தடைசெய்தால் எனக்கென்ன நான் முட்டையையை விரும்புவதில்லை.”

 “ஆட்டுக்கறி , கோழிக்கறி தடை செய்தால் எனக்கென்ன நான் சாப்பிடப் போவதில்லை.”

 “மீனைத் தடைசெய்தால் எனக்கென்ன மீன் நாற்றமே எனக்குப் பிடிக்காது”

 “வெங்காயம் வெள்ளைப் பூண்டை தவிர்த்தால் எனக்கென்ன எனக்கு அது வேண்டாம்.”

“பனங்கிழங்கு ,சேப்பங்கிழங்கு ,கருணைக் கிழங்கு சாப்பிடமாட்டேன் பெருமாளுக்கு ஆகாது.”

 “சனி ,ஞாயிறு ,திங்கள் ,செவ்வாய் ,புதன் ,வியாழன் ,வெள்ளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு உரியது அன்று புலால் சாப்பிடமாட்டேன்.”

 “வருடம் முழுவதும் பகவானுக்கு உரியது அன்ன ஆகாரமின்றி அமைதியில் இருப்பேன்.”

“அவ்வப்போது மாட்டு மூத்திரம் ,மாட்டுச்சாணி மட்டும் சாப்பிடுவேன்...”

 “உண்மையான இந்து வேறு எப்படி இருக்க முடியும் ?”

போய்யா! உன் மதமும் புண்ணாக்கும்… நான் மனிதனாக இருந்துவிட்டுப் போகிறேன் ; என் உணவு என் உரிமை .”

என் உணவில் ஓர் கவளம் சாப்பிடும் அன்பான கடவுளே எனக்குத் தேவை . இருந்தால் முகவரி தாருங்கள் !அன்னபூரணி !”

சுபொஅ.
12/01/2024.


பார்க்க வேண்டிய அன்னபூரணி !

Posted by அகத்தீ Labels:

 




பார்க்க வேண்டிய அன்னபூரணி !

 அன்னபூரணி” என்கிற தலைப்பை பார்த்ததும் ஒரு சாமி படமாக இருக்குமோ என எண்ணினேன் . அது அப்படி இல்லை என அறிந்தேன் .ஆயினும் படம் பார்க்கவில்லை .நயனதாரா மீதும் படத்தின் மீதும் இந்துவெறியர்கள் சேறு வாரி இறைப்பதையும் வழக்குப் போடுவதையும் பார்த்தபின் நேற்று [ 08/01/2024] நெட்ஃளிக்ஸில்  படம் பார்த்தேன். ஒரு ஐய்யங்கார் ஆத்துப்பெண் சிறந்த செப்பாக [ CHEF ] மாறுவதற்கான போராட்டம் ; தோள் கொடுக்கும் ஒரு முஸ்லீம் நண்பன்,உணவு அரசியல் ; சினிமா மசாலாவோடு பெண் வெற்றி பெறுவதைக் காட்டுவது சிறப்பு . சில காட்சிகள் மெகா சிரியல் ஒன்றை நினைவூட்டினாலும், எல்லோரும் பார்க்க வேண்டிய படம்தான் . மதவெறியர் வயிறு எரியட்டும் !

 

ஒரு வரிக் கதையாகச் சொல்வதெனில்  “சேஷம் மைக்கில் ஃபாத்திமா”

கால்பந்தாட்ட வர்ணணையாளராக விரும்பும் ஒரு முஸ்லிம் பெண்ணின் கதை. சுவாரசியமான மலையாளப் படம். அன்னபூரணி செப்பாக விரும்பும் சனாதன ஐய்யங்கார் ஆத்துப் பெண்ணின் கதை . இரண்டும் பழமைவாதத்தை உடைக்கும் படம்தான் . ஆனால் அன்னபூரணிக்கு மட்டும் எதிர்ப்பு ஏன் ? ஐயங்கார் ஆத்துப்பெண் அசைவம் சமைப்பதை சுவைப்பதைக் காட்டுவதுதானோ ?

 

 

படம் பார்த்து முடிவு சொல்லுங்கள் !

 

 

சுபொஅ.

09/01/2024.




மேரி ஷெல்லியின் பிராங்கன்ஸ்டைன் ,

Posted by அகத்தீ Labels:

 




நடிகர் ரஜின்காந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தின் கதைக்கு மூல கருவான நாவல் “ பிராங்கன்ஸ்டைன்” 1818 ல் வெளிவந்தது . மேரி ஷெல்லி எழுதியது . இந்நாவலை அடியொற்றி நிறைய ஹாலிவுட் திரைப்படங்களும் வந்துள்ளன .

கவிஞர் புவியரசு மொழியாக்கத்தில் சுருக்கப்பட்ட பதிப்பாக வெளிவந்த நூல் . 2015 ல் இரண்டாம் பதிப்பும் கண்டது .

தாமதமாக இப்போதுதான் வாசித்தேன் . தாமதமானாலும் சொல்லி வைக்கலம்தானே !

 

மேரி ஷெல்லியின்

பிராங்கன்ஸ்டைன் ,

தமிழில்: கவிஞர் புவியரசு ,

அருச்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,

NPTC – MCET வளாஆ , உடுமலைப் பேட்டை ரோடு ,

பொள்ளாச்சி – 642003    தொடர்புக்கு :91 99418 63542

பக்கங்கள் : 215 /  , விலை : ரூ.135 /