பழங்கதை பேசுவதுபோல் புவிக்கதை...
பழங்கதை பேசுவதுபோல்
புவிக்கதையை பேசும் புத்தகமே நிர்மல் எழுதிய ‘நிலமும் பொழுதும்’. இந்த பூமிக்கோளம்
எப்படி எப்போது உருவானது என்பது குறித்த அறிவியலின் வளர்ச்சி வரலாற்றோடு புவியியல்
வரலாற்றைச் சொல்லும் நூல். வாசிக்க வேண்டிய புத்தகமே ! நிர்மலின் இரண்டாவது புத்தகம்
இது . ‘காணாமல்போன தேசங்கள்’ இவரின் முதல் புத்தகம் . வேதியல் படித்தவர் .சுற்றுச்சூழல்
வல்லுநர்.
“ நம்மைத் தாங்கும்
பூமியை வழிபடுவதைக் காட்டிலும் அதை இன்னும் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.” என்கிற
நூலாசிரியரின் பார்வை மிகச் சரியானதே .ஆதியில் பல்வேறு நாடுகளில் மதங்களில் சொல்லப்பட்ட
, பூமியை கடவுள் படைத்த பதினோரு கதைகளைச் சொல்லும் போதே இதனை எப்படி மறுக்கப் போகிறார்
என்கிற கேள்வி எழுகிறது .தொடர்ந்து புவியில் அறிவியலாய் வளர்ந்த வரலாற்று செய்திகளூடே
பழைய கதையாடல்கள் மெல்ல உதிர்வதை சொல்லிவிடுகிறார் .
தோழர் எஸ் ஏ பெருமாள்
வகுப்பை கேட்பதுபோல் பொதுவாக உணர்ந்தேன் . தன் பரந்த வாசிப்பு மூலம் துல்லியமான தகவல்களைத்
தேடித் தொகுக்கவும் முனைந்திருக்கிறார் நிர்மல் . எளிமையாகச் சொல்ல வேண்டும் என்கிற
எத்தனம் நூல்நெடுக பார்க்கலாம்.
இந்த பூமியின்
வயது 460 கோடி ஆண்டுகள் என மொட்டையாகச் சொல்லாமல் அதனை எவ்வாறு கண்டடைந்தோம் என்கிற
அறியலின் அடிப்படையையும் சொல்கிறார் . அது நம் பார்வையை விசாலமாக்கும் .
“என்னடா உங்க அறிவியல் ? நேற்றுச் சொன்னதை இன்று
மறுக்கும் “ என ஆன்மீகவாதிகள் கிண்டலடிப்பது உண்டு . புவியைப் பற்றிய ஒவ்வொரு கண்டுபிடிப்பும்
முந்தைய தவறுகளைக் களைந்து உண்மையை நோக்கி பயணிப்பதை படிப்படியாக இந்நூலில் சொல்லிச்
செல்கிறார் .
ஆனமீகம் வறட்டுத்
தனமாய் தன் பழைய கோட்பாட்டை கிளிப்பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கிறுத்துவ
பாதிரிகள் சிலர் ஆய்வில் இறங்கியதையும் ,தங்கள் மதக் கோட்பாட்டை நிரூபிக்க இறங்கி உண்மையை
நெருங்கியதையும் சொல்கிறார் .
எப்படி புதிய கண்டுபிடிப்புகள்
புதிய பார்வையைக் கொண்டு வந்தன என்பதையும் சுட்டுகிறார் .தான் மேலோட்டமாகச் சொல்லுவதாகச்
சொன்னாலும் இந்நூலில் நிறைய தகவல்கள் அடுக்கி இருக்கிறார் .
இந்த புவிக்கோளம்
ஐந்து பேரழிவுகளைத் தாண்டி வந்திருப்பதையும் இன்னொரு பேரழிவை விரைவு படுத்துவதும் அல்லது
தடுத்து நிறுத்துவதும் மனிதர்கள் கையில்தான் இருக்கிறது .இது ‘மனிதர்களின் ஆளுமைக்காலம்’
என்கிறார் நூலாசிரியர் .
ஆசிரியரின் தமிழ்
மண் மீதான பற்று நூல்நெடுக வெளிப்படுகிறது . அதில் உண்மையும் உண்டு ; மிகையும் உண்டு
. அறிவியலால் மட்டுமே பேரழிவைத் தடுக்க முடியாது என்கிற நூலாசிரியர் மதங்களும் கோட்பாடுகளும்
இந்த உண்மையைப் புரிந்து வழிகாட்டுவதன் மூலமே சாத்தியமாகும் என கடைசியில் திடுதிப்பென
எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? கேள்வி எழுகிறது
.
நிலமும் பொழுதும்
ஆசிரியர் : நிர்மல்
எழுத்து பிரசுரம்.
பக்கங்கள் :
212 . விலை : ரூ.260 /
சு.பொ.அகத்தியலிங்கம்.
5/11/2021.
தன்மானம் மிக்க மக்களின் நிலம்
“ தன்மானம் மிக்க மக்களின் நிலம்” என ஓர் நாட்டிற்கு
பெயர் இருக்க முடியுமா ?
மேற்கு ஆப்ரிக்காவில்
தற்போது இருக்கிறது என்பதே அதன் பதில் .
1895-96 களில்
மோசி பேரரசரை [ மோங்கோ நபா ] விரட்டியடித்து வாகாடூகாவை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் கைப்பற்றியது
. போபோ ,சார்னோ ,லூபி ,குகரூன்சி ,கோர்மாஞ் ,பெல்த் ,துவெரெக் போன்ற இனக்குழுக்களை
பணிய வைக்க பிரான்ஸ் பல ஆண்டுகள் போராட வேண்டி இருந்தது . 1919 ல் மொத்த பகுதிகளையும்
இணைத்து “ ஹூட் வோட்டா” / “ அப்பர் வோட்டா” என்ற ஓர் நாட்டை அதிகாரபூர்வமாக உருவாக்கியது
பிரெஞ்சு ஏகாதிபத்தியம்.
ஏகாதிபத்தியத்தால்
ஒரு நாடக்கப்பட்ட இப்பகுதியில் பல பழங்குடி இனத்தவர் , அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகள்
,இஸ்லாம் ,கிருத்துவம் ,பூர்வகுடி சமயங்கள் என வேற்றுமைகள் மலிந்த நாடு .பிரெஞ்சு ஆதிக்கத்தால்
பிரெஞ்சு மொழி இவர்கள் மீது திணிக்கப்பட்டு பொதுமொழி தோற்றம் கொடுத்தது .மேல்தட்டு
மக்கள் மொழியாகவே அது இருந்தது .
1981 செப்டம்பர்
13 அன்று ஒரு ராணுவப் புரட்சி மூலம் தாமஸ் சங்காரா பதவிக்கு வந்தார் . அவர் தங்களது
நிலப்பகுதிக்கு புதிய பெயர் சூட்ட நினைத்தார் .
“ புதிய அரசின் அடையாளம் பன்முகத் தன்மை கொண்டதாக
இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் . பிரெஞ்சுக்காரர்கள் தங்களுக்கு கொடுத்த ஹூட்
வோட்டா என்ற பெயருக்கு மாற்றாக தங்கள் மக்கள் சார்ந்து ,ஆப்ரிக்க அடையாளம் சார்ந்து
தங்கள் நாட்டின் பெயர் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். இரண்டாவதாக நாட்டில் உள்ள
பலதரப்பட்ட இனங்களின் பண்பை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள்
. எனவே பர்கினா ஃபாசோ எனும் பெயர் பலமொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டது .
அதன் அர்த்தத்தைப்
பொதுவாக மொழிபெயர்த்தால் ‘ தன்மானமிக்க மக்களின் நிலம்’ எனப் பொருள்வரும். இதில் பர்கினா
என்ற வார்த்தை மோர் மொழியிலிருந்து எடுக்கப்பட்டது . அது மோசி மக்கள் பேசுவது . அந்த
மொழியில் ‘பர்கினா’ என்ற சொல்லின் அர்த்தம் ‘தகுதியான மக்கள்’ அல்லது ‘கண்ணியமிக்க
மக்கள்’ என்பதாகும். ‘ஃபாசோ’ என்ற வார்த்தை
ஜூலா என்ற மொழியில் இருந்து எடுக்கப்பட்டது . இதன் பொருள் ‘வீடு’ அல்லது ‘குடியரசு’
எனப்படும் . [ அந்நாட்டு மக்களை ‘பார்க்கினபே’
என அழைக்கலாயினர்] இந்த பார்க்கினபேயில் வரும் ‘பே’ எனும் விகுதி ஃபுல்ஃபுல்டெ மொழியில்
இருந்து எடுக்கப்பட்டது.அது பெல்த் மக்களின் மொழியாகும் .”
1884 ஆம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் இப்பெயர் சூட்டப்பட்டது . அப்போதைய பிரதமர் தாமஸ் சங்காரா இதனைச் சாதித்தார்.
இங்கே நம் நாட்டில் “இந்திய ஒன்றியம்” என அரசமைப்பு சட்டத்தில் உள்ள
பெயரைச் சொன்னாலே சங்கிகளுக்கு வயிறு எரிகிறது .வானுக்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள்
. பல மொழி பல இனம் கொண்ட நம் நாட்டில் எல்லா திட்டங்களுக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர்
சூட்டப்படுவதும் எல்லா துறையையும் அதன் அலுவலகங்களையும் சமஸ்கிருதத்திலேயே அழைப்பதும்
எவ்வளவு அநீதியானது யோசித்துப் பாருங்கள் .சுழற்சி முறையில் ஒவ்வொரு திட்டத்துக்கும்
ஒவ்வொரு மொழியில் பெயர் வைக்க வேண்டும் என்கிற பரந்த இதயமும் ஜனநாயக உணர்வும் இல்லாத
முரட்டுப் பக்தர்களிடம் நாடு சிக்கிக்கொண்டிருக்கிறது .பர்கினா ஃபாசோ என்கிற ஒரு குட்டி
நாட்டிற்கு இருக்கும் இதயம்கூட இங்கே இல்லையே !
நாட்டிற்கு புதிய
பெயர் சூட்டியது மட்டுமல்ல ; மொழிப் பிரச்சனையிலும் ,பன்முகப் பண்பாட்டை ஏற்று எதிர்கொள்வதிலும்
சங்காராவின் பரந்த பார்வையும் அணுகும்றையும்கூட நாம் அறிய வேண்டிய - பாடம் படிக்க வேண்டிய
செய்தியே . நூலைப் படித்து அறிவீர் .
தாமஸ் சங்காரா
என அழைக்கப்படும் தாமஸ் இசிடோர் நூயல் வோட்ரா [பின்னர் வோட்ரா என்பதை சங்காரா என மாற்றிக்கொண்டார் அவர் தந்தை எனவே
இவரோடும் சங்காரா ஒட்டிக்கொண்டது.] 1987 அக்டோபர் 15 ஆம் நாள் , 39 வயதில் சங்காரா
கொல்லப்பட்டார் . கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மட்டுமே பதவில் இருந்த சங்காரா மக்களின்
மனதில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் .
இவர் ஆட்சிகாலமும்
இவரது முற்போக்கான மக்கள் நலன் சார்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் செயல்பாடுகளும்
இன்றும் நாம் கற்க வேண்டியவையே ! அதே சமயம் தேர்தல் ஜனநாயகம் குறித்த பார்வையின் போதாமை
, கெடுபிடி ,கறாறர் தன்மை எல்லாம் எதிரிக்கு இடம் கொடுத்தது .
அ.சி.விஜிதரன்
தொகுத்து மொழிபெயர்த்திருக்கிற “ தாமஸ் சங்காரா வாழ்வும் பணியும்” என்கிற 430 பக்க
நூல் இதனை விரிவாக பேசுகிறது .இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் . நான் மார்ச்
5 ,2020 ல் சென்னைப் புத்தகக் காட்சியில் அவரிடம் பெற்றேன் . எப்படியோ என் புத்தக அடுக்கின்
அடியில் சிக்கி இப்போதுதான் படித்தேன் . தாமதமாயினும் படிதுத்துவிட்டது மனநிறைவைத்
தருகிறது .சிந்தன் புக்ஸ் வெளியீடு .விலை.ரூ.450/
சங்காரா இடதுசாரி
சிந்தனை உள்ளவர் . லெனினின் ‘அரசும் புரட்சியும்’
நூலை பெரிதும் வழிக்காட்டியாகக் கொண்டவர் அவரின்
பொருளாதாரக் கொள்கை எதுவென அமெரிக்கப் பத்திரிகையாளர் கேட்டார் .அவர் நிலச்சீர்திருத்தம்
,தொழில்மயமாதல் என்றெல்லாம் சொல்லுவார் என எதிர்பார்த்தார் .
அவரோ , “ நாங்கள்
பாசனத்திற்கு அணைகள் கட்டுவதன் மூலம் இன்னும் அதிகமாக உணவு உற்பத்தி செய்ய இயலும்,
மேலும் பள்ளிகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கட்டுவோம் .நாட்டில் ஆங்காங்கு சிறிய
கடைகள் அமைத்து மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். எங்கள் நாட்டின் மக்கள்
சக்தியைப் பயன்படுத்தி நாட்டில் இருவேளை உணவும் குடிக்க நல்ல குடிநீரும் கிடைக்கச்
செய்வோம் .இதுதான் எங்கள் பொருளாதாரக் கனவுகள்.” என்றார். மண்ணுக் கேற்ப செதுக்குப்படுவதுதானே
மார்க்சியம்.
இந்நூலில் அவர்
உரைகள் ,பேட்டிகள் பல இடம் பெற்றுள்ளன . எல்லாவற்றையும் இங்கு பேச இடமில்லை .படித்துத்
தெரிந்து கொள்ளுங்கள் .
ஒன்று கடன் குறித்து
அவர் ஆற்றிய உரை முக்கியமானது . உலக வங்கி திணித்த கடனை ,” இந்தக் கடனுக்கும் நமக்கும்
எந்தவித சம்மந்தமும் இல்லை .அதனால்தான் அதைத் திருப்பிச் செலுத்த முடியாது என்கிறோம்…….
கடன் பிரச்சனையை
நாம் அறநெறிக் கொள்கையாக நாம் பார்க்கக்கூடாது . கடனை திருப்பிச் செலுத்துதல் அல்லது
செலுத்தாமல் இருப்பது மானம் சார்ந்த பிரச்சனையே அல்ல…..
நாம் கடனைத் திருப்பிச்
செலுத்த முடியாது .ஏனென்றால் அதில் நமக்கு எந்தப் பங்கும் இல்லை . நாம் திருப்பிச்
செலுத்த முடியாது ஏனென்றால் அதில் நமது பொறுப்பு என்று ஒன்றும் இல்லை . நாம் திருப்பிச்
செலுத்த முடியாது ஏனென்றால் ,பெரும் செல்வத்தில் கொழித்துக் கொண்டிருக்கும் அவர்கள்
நமக்கு திருப்பிச் செலுத்த முடியாத அளவுக்கு பெரும் கடனைக் கொண்டிருக்கிறார்கள். இரத்தக்
கடன் அது . நாம் சிந்திய இரத்தத்தின் கடன் அது .அவர்கள் கொழுத்துப்போன கடன் அது.”
தான்சானிய பிரதமர்
ஜூலியஸ் நைரேரேவும் இதுபோல் சர்வதேச நிதி நிறுவனக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது
என நிலை எடுத்தவர் என்பதை இங்கு நிலை எடுத்தவர் .
தென் ஆப்பிரிக்க
தலைவர் நெல்சன் மண்டேலா விடுதலைக்காக பெருங்குரல் கொடுத்தவர் சங்காரா. தன் நாட்டு குடிஉரிமையை
அவருக்கு வழங்கி முழக்கமிட்டவர் .காஸ்ட்ரோவோடு நட்பு பாராட்டியவர் . “ கருத்துகளை உங்களால்
கொல்ல முடியாது “ என சே குவேரா நினைவஞ்சலியில் முழக்க மிட்டவர் .ஏகாதிபத்திய எதிர்ப்பில்
ஊறியவர் . அவர் ஏகாதிபத்தியம் குறித்து இண்டர்காண்டினெண்டல் பிரஸ்ஸுக்கு அளித்த நேர்காணலில்
சொல்கிறார் ;
“ உங்களிடம் உண்மையைச்
சொல்ல வேண்டும் என்றால் ஏகாதிபத்தியம் என்பதை நான் கோட்பாடாக மட்டுமே புரிந்து வைத்திருந்தேன்
. அதிகாரத்தில் அமர்ந்த பின்பே எனக்குத் தெரியாத ஏகாதிபத்தியத்தின் உண்மையான பல தன்மைகளை
அறிந்து கொண்டேன். ஏகாதிபத்தியம் பற்றி நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் .இன்னும் அதன்
தன்மைகள் பலவற்றைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.கோட்பாட்டிற்கும்
நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது .
நடைமுறையில் ஏகாதிபத்தியம்
ஒரு கொடூர விலங்கு .அந்த கொடூரமான விலங்கு நகங்கள் ,பெரும் கொம்பு , நச்சுப்பல் என
எல்லாவற்றையும் கொண்டு தாக்குகிறது .அதற்கு இரக்கமே இல்லை. அதன் விஷம் அத்தனை வீரியமானது
. அதை ஒரு வீராவேசப் பேச்சின் மூலமாக நடுங்கச் செய்துவிட முடியாது .அதற்கு இதயம் இல்லை
.அதற்கு மனச்சாட்சி என்பதே இல்லை .
ஒரு நல்ல விசயம்
என்னவென்றால் , ஏகாதிபத்தியம் எந்த அளவுக்கு ஆபத்தானது என்று நாங்கள் கண்டுபிடிக்க
,கண்டுபிடிக்க இன்னும் அதை எதிர்த்துப் போராடி அதை வீழ்த்த வேண்டும் என்று மட்டும்
எங்களுக்குத் தோன்றுகிறது . அதை எதிர்க்கும் ஒவ்வொரு முறையும் அதற்கு ஆதரவாக புதிய
சக்திகள் இருப்பதை நீங்கள் காணலாம்.”
சங்காரா ஏன் கொல்லப்பட்டார்
யாரால் கொல்லப்பட்டார் என்பதற்கு இந்த நெடிய மேற்கோள்களே பதில் சொல்லுமே !
நூலாசிரியர் சங்காரா
படுகொலை நிகழ்வைச் சொல்கிறார் .ஆயின் அதன் பின்னாலுள்ள ஏகாதிபத்திய கொடுங்கரங்களை இன்னும்
வலுவாகச் சொல்லியிருக்கலாமோ என என்னக்குத் தோன்றுகிறது .
சிறந்த தொகுப்பு
.சிறந்த மொழியாக்கம் . எழில்மிகு பதிப்பு . காலங்கடந்து தமிழில் வந்தாலும் தேவையான
அறிவாயுதமே ! பாடம் படிக்க செய்திகள் நிறைந்த
நூல். ஐயமில்லை.
நூலைப் பெற :
94451 23164 / kmcomrade@gmail.com
சு.பொ.அகத்தியலிங்கம்.
13/10/2021.
ஞானியாவதற்கு அல்ல………..
எங்கே போகிறாய் ? எங்கே போகிறாய் ?
மனிதா ! மனிதா ! நீ - எங்கே போகிறாய் ?
[எங்கே..]
வெறுப்பை விதைக்கிறாய் வினையை அறுக்கிறாய்
பொறுப்பை மறக்கிறாய் பொல்லாங்கு நினைக்கிறாய்
அடுப்பை அணைக்கிறாய் வீட்டை எரிக்கிறாய்
மனிதம் சிதைக்கிறாய் மதத்தில் புதைகிறாய்
[எங்கே..]
விரல்நுனியில் உலகம் விஞ்ஞானத்தில் உயர்ந்தாய்
விரல்நுனியால் விஷத்தை அமுதசுரபியில் கலந்தாய்
கலகவிதையை கணினி மூலமும் விதைத்தாய்
பொய்யையை நம்பிநம்பி மானுடத்தை தொலைத்தாய்
[எங்கே,,,]
தலைக்குமேலே வெள்ளம் சிக்கிநீயும் தவித்தாய்
தப்பவழி தெரியாமலே சங்கடத்தில் முழித்தாய்
காப்பாற்ற சாமிகீமிவரலை நெஞ்சுடைந்து நின்றாய்
தோழமையின் போர்முரசை வெகுதொலைவில் கேட்டாய் !
[ எங்கே…]
சுபொஅ.
4/10/2021.
எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி
சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு
பகுதி .
நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 16.
நாடாளுமன்றமோ சட்டமன்றமோ எதுவாயினும்
அவையும் வர்க்கப் போராட்டத்தின் இன்னொரு களமே என்பது கம்யூனிஸ்ட்டுகளின் பார்வை . ஆயினும்
அதனை வலுவாக வெளிப்படுத்தியவர் ஒரு பட்டியலிட்டால் தோழர் ஏ.கே.கோபாலன் முதலிடத்தில்
இருப்பார் . தமிழகத்தில் இருந்து பட்டியலிட்டால் ஆர் உமாநாத் , என் சங்கரய்யா , கே.ரமணி
,ஏ.பாலசுப்பிரமணியன் , எ.நல்லசிவன் போன்றோர் முன்வரிசையில் இருப்பார்கள் . ஆர் உமாநாத்
சட்ட மன்றத்தில் ஆடிய ருத்திர தாண்டவங்களை வரலாறு பெருமையோடு பதிவு செய்திருக்கிறது
, நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு குறித்து நாளை ஓருவர் ஆய்வு செய்தால் இவர்களைத்
தவிர்க்கவே முடியாது .
இன்றைக்கு நாடாளுமன்றமோ சட்டமன்றாமோ
முன்பு போல் இல்லை ; அது முழுமையாய்ச் சீரழிந்து போய்க் கிடக்கிறது .அதை மீட்கவே பெரும்
போராட்டம் தேவைப்படுமே !
தோழர் ஆர் .உமாநாத்தோடு அவரது
வாழ்க்கை வரலாற்றை எழுத உரையாடிக் கொண்டிருந்த
காலத்தில் ஓர் நாள் சொன்னார் ;
“ எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி
சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு
பகுதி . ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவ மோதல் அதில் நான் சிபிஎம் பக்கம்
நின்று உட்கட்சிப்போர் நடத்தினேன் .
பின் நக்சலைட் பிரிந்த போது
அதை எதிர்த்து தத்துவப் போரில் பங்கேற்றேன் , ஏஐடியுசி யிலிருந்து பிரிந்து சிஐடியு
உருவாக்க நடந்த போராட்டத்திலும் என் பங்கு உண்டு .
இப்படி நானும் தோழர்களும் நடத்திய
உட்கட்சிப் போராட்டங்களின் வரலாறே நெடியது .
பதவிக்கோ தனி நபரை எதிர்த்தோ
நடந்த சண்டை அல்ல ; அவை வர்க்க சமரசமா ,வர்க்கப்போராட்டமா என்கிற கோட்பாட்டுரீதியான
சண்டை . நான் வர்க்கப் போராட்டம் என்பதின் பக்கம் உறுதியாக நின்றேன் . “
தோழர் ஆர்யு சொன்னது எதுவும்
மிகையல்ல . ஓர் முறை தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் சொன்னார் ,” கட்சி வரலாற்றை போராட்டங்களின்
வரலாறாகச் சொல்லலாம் ; தியாகங்களின் வரலாறாகச் சொல்லலாம் , உட்கட்சி தத்துவப் போராட்டங்களின்
வரலாறாகச் சொல்லலாம் . மூன்றுமே சொல்லப்பட வேண்டியதுதான் .”
அதுமட்டுமா ? காங்கிரஸ் கட்சிக்குள்
சோஷலிஸ்டாக ,சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்டாக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள்
சிபிஎம் ஆக அன்றைய தலைமுறை நடத்திய தத்துவப் போர் அவர்களை பக்குவப்படுத்தியது என்றும்
சொல்லலாம் . அது மிகை அல்ல.
உட்கட்சிப் போராட்டம் குறித்து
தோழர் ஆர்யு தன் அனுபவமாகச் சொன்ன ஒன்றை அந்நூலில் பதிவு செய்தேன் . இப்போதும் அதை
அறிவது நன்றே .
உமாநாத் சொன்னார் ,”என் இளமைக்
காலங்களில் உட்கட்சி விவாதங்களில் என்னோடு யாராவது கருத்து மாறுபட்டாலோ ,என்னை விமர்சித்தாலோ
உடனே குறுக்கிட்டு என் நிலையைக் கூற ஆரம்பித்து விடுவேன். உணர்ச்சி வசப்பட்டதும் உண்டு
. ஆனால் காலம் போகப்போக நான் பக்குவப்பட்டேன் .
அடுத்தவர்கள் கருத்தை பொறுமையாகச்
செவிமடுக்கவும் , அடுத்தவர் விமர்சனத்தை பொறுமையாக எதிர்கொள்ளவும் ,என் சுற்று வரும்போது
சரியானவற்றை ஏற்கவும் , இதரவைகளை நிதானமாக எடுத்துச் சொல்லவும் கற்றுக்கொண்டேன் .
கமிட்டி உறுப்பினர்களின் கருத்தைக்
காது கொடுத்துக் கேட்காமல் உணர்ச்சிவசப்படுவடுவது தோழர்களை வளர்க்க உதவாது என்பது மட்டுமல்ல
காரியத்தையும் கெடுத்துவிடும் . .சில நேரங்களில் எதிர்விளைவும் ஏற்படுத்தும் . இவை
புரட்சிகர கட்சிக்கு உரிய பாரம்பரியமல்ல .இதனை அனுபவத்தில்தான் கற்றுத் தேர்ந்தேன்
.”
இந்த வாக்குமூலம் நமக்குச் சொல்லுவது
என்ன ?
நான் எப்போதும் நிதானமானவன்
பக்குவமானவன் என சுய தப்பட்டம் அடிக்காமல் ,கட்சிக்குள் பயிற்சியும் அனுபவமுமே எனக்குக்
கற்றுக் கொடுத்தன ; என்னைப் பக்குவப்படுத்தியது என்று கூறுகிற அவரது நேர்மையே அவரது
பக்குவமான அணுகுமுறைக்கு சாட்சி .
“ கட்சிக் கடுப்பாடு என்பது தாம் கட்சி முடிவுகளுக்கும்
கோட்பாடுகளுக்கும் விசுவாசமாய் இருப்பது என்பது மட்டுமல்ல ; அதற்கு மாறான போக்கும்
செயல்பாடும் யாரிடம் எந்த மட்டத்தில் தலைதூக்கினாலும் அதை எதிர்த்து அதற்குரிய கமிட்டிகளில்
விட்டுக்கொடுக்காமல் போராடுவதுமாகும் ..தவறு நடக்கும் போது கண்ணுற்றால் இதில் எனக்கு
சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிச் செல்வதும் கட்சிக்கு ஊறு விளைவிப்பதே ஆகும் . “ எனச்
சுட்டும் உமாநாத் ஒரு போதும் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை . தவறுகளை எதிர்த்து சமரசமின்றி
சண்டை போடுவார் .
அந்த உட்கட்சிப் போராட்டத்தை
பொதுவெளியில் நடத்த முடியாது .நடத்தக் கூடாது .உரிய கமிட்டியில் முறையாக நடத்த வேண்டும்
.இப்போரில் நாம் சொல்வதே சரி என்று சொல்லிவிட முடியாது .தன் உணர்வுகளைவிட கட்சி முடிவே
மேலானது என ஏற்கும் பக்குவமும் வேண்டும் .
இங்கு ஓர் அனுபவத்தைச் சுட்டுவது
பொருந்தும் , “ ஓர் முறை இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஓர் கிளையில் விவாதம் . அது ஓர்
முக்கியமான அறிவுஜீவிகளின் கிளை என்பதால் ,கடைசியில் கட்சிப் பொதுச் செயலாளர் இஎம்எஸ்
அந்தக் கிளைக்கு நேராக வந்தார் . விவாதம் நடந்தது .
இறுதியில் இஎம்எஸ் சொன்னார்
, “ நான் கட்சியின் நிலை பாட்டைச் சொன்னேன் . நாம் கட்சி நிலைபாட்டில்தான் நிற்க முடியும்
. உங்களுக்கு மாற்று கருத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டு , ஆனால் கட்சி கருத்தைத்தான்
வெளியே சொல்ல வேண்டும் .நாளையே நீங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபனமானால் , கட்சி
தன்னை திருத்திக் கொள்ளும் . கட்சி சொன்னது சரியானால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்
கொள்ள வேண்டும் . இப்போது கட்சி நிலைபாட்டோடு நில்லுங்கள்.” என்றார் .
அமைப்பு பிரச்சனை ஆயினும் ,
கோட்பாட்டு பிரச்சனை ஆயினும் உட்கட்சிப் போராட்டத்தின் எல்லை இதுவே !
கட்சிக்குள் கணவனும் மனைவியும்
முழுநேர ஊழியராய் இருந்தால் , வீட்டு வாடகை ஒன்று என்பதால் மனைவிக்கு கொஞ்சம் குறைவாகக் கொடுப்பது அன்றைய பொதுவான
நடைமுறை . கட்சியின் பொருளாதார நெருக்கடியால் எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கையே இது
.
ஆயினும் இது சரியான நடை முறை
அல்ல என கட்சி செயற்குழுவில் தொடர்ந்து சண்டை போட்டிருக்கிறார் ஆர் .உமாநாத் . இதைப்
பற்றி பேசும் போது ஆர்யு சொன்னார் , “ இது காசு பற்றியது அல்ல ;சமத்துவம் பற்றியது
.” கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் போராடி வென்றார் . தனக்கு மட்டுமல்ல கட்சி முழுக்க
அமலாக்க வேண்டும் என்றார் .
முழு நேர ஊழியர்களின் ஊதியத்தை
முறைப்படுத்த வேண்டும் , அவர்கள் பட்டினியிலும் கடனிலும் தவிக்க விட்டால் அது முறைகேட்டிற்கும்
ஊழலுக்கும் நாமே வழிசெய்வதாகப் போய்முடியும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆர்யு
.
ஆர் உமாநாத் சிதம்பரம் அண்ணாமலை
பல்கலை கல்லூரியில் பயிலவும் கட்சி வேலை செய்யவும் வந்த போது தோழர் கே .முத்தையாவின்
தோழரானார் . படிப்பை முடிக்கும் முன்பே , படிப்பை பாதியிலேயே உதறிவிட்டு கட்சிக் கட்டளையை
ஏற்று சென்னை தலைமறைவு மையத்துக்கு பணியாற்ற வந்தார் . சென்னை தி.நகரில் அம்மையம் இயங்கியது
. தோழர் பி.ராமமூர்த்தியோடு உமாநாத்துக்கு அங்கு தொடங்கிய தோழமை இறுதிவரை நீடித்தது
. “தோழர் பி.ராமமூர்த்தியே என் மூன்று மகள்களுக்கும்
ஞானத்தந்தை” என ஆர்யு பெருமையுடன் குறிப்பிடுவார்
.
பொதுவாக அலுவலகம் வந்தால் படிப்பது
,குறிப்பெடுப்பது ,கூட்டங்களில் பங்கெடுப்பது என திட்டமிட்டு இயங்குவார் . பொதுவான
அரட்டைகளில் பங்கேற்கமாட்டார் . வாராந்திரிகளில் வரும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பார்
.தேவைப்படும் போது அந்தக் குட்டிக் கதைகளை பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக் கொள்வார்
. எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கும் பழக்கம் ஆர்யுவிடம்
கிடையாது . “ஒரு வகையான கறார்பேர்வழி” தோற்றமே
அவருக்கு கட்சியில் உண்டு .
தன் காதல் இணையர் பாப்பாவின்
மரணம் அவரை மிகவும் பாதிக்கவே செய்தது .கடைசி காலத்தை திருச்சியில் கழிக்க விரும்பிச்
சென்றார் . அவரின் கடைசி காலத்தைப் பற்றி ஸ்ரீதர் சொல்லுவார் ,
“ தினசரி காலை பத்து மணிக்கு
அவரை அலுவலுகத்துக்கு வண்டியை அனுப்பி கூட்டிவர வேண்டும் ; மதியம் கொண்டுவிட வேண்டும்
. இடையில் ஒரு டீ மட்டும் குடிப்பார் . தினசரி பேப்பர்கள் படிப்பார் .புத்தகம் படிப்பார்
. தேவை இருந்தால் மாநிலக்குழுவுக்கு போண் செய்து பேசுவார் . யார் வந்து அவரிடம் என்ன
கேட்டாலும் , கட்சி மாவட்டச் செயலாலாளரிடம் பேசுங்க , என கையைக் காட்டி தள்ளிவிடுவார்
. சம்மந்தம் இல்லாமல் எந்த விவகாரத்திலும் மூக்கை நுழைக்கவே மாட்டார் . எப்போதும் மிகவும்
கட்டுப்பாட்டோடும் கண்ணியமாகவும் நடந்து கொள்வதுதான் ஆர்யு பாணி !
இன்னும் பேச எவ்வளவோ உள்ளது
…. பேசுவோம்.
குறிப்பு : தொடர்ந்து பேசுவோம்
, ஆயின் இப்போதல்ல . நான் கண்புரை அறுவை சிகிட்சைக்கு செப் .4 ,9 [ இடது ,வலது ] செல்ல
வேண்டும் .அதற்கு முன் வேறு சில அவசர எழுத்துப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது . எனவே
சிகிட்சை முடிந்து அக்டோபர் இறுதியில் வருவேன் .,,, காலமும் களமும் அனுமதித்தால் நினைவலைகளைத்
தொடர்வேன் . இப்போது விடைபெறுகிறேன் .நன்றி ! நன்றி !
சு.பொ.அகத்தியலிங்கம்,
31 ஆகஸ்ட் 2021.