நம்பிக்கையைக் காயப்படுத்தலாமா ?

Posted by அகத்தீ Labels:








நம்பிக்கையைக்
காயப்படுத்தலாமா ?

சு.பொ.அகத்தியலிங்கம்


  • ஐயா பகுத்தறிவாளரே ! உங்க மனைவி கோவிலுக்கு போறாங்க அதை உங்களாலே திருத்த முடியலை .. ஊரைத் திருத்த வரீங்களா ?  

  • நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறுத்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?

  • உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன ?  கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் சம்மந்தம் என்ன ?

  • நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை ? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க !

  • அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ?


இப்படிப்பட்ட கேள்விகளை சாதாரண பாமரன் கேட்டால் பரவாயில்லை ; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்விகளை மெத்தப் படித்தவர்கள் முகநூலிலும் இணையதளத்திலும் குயுத்தியாகக் கேட்கும் போது சற்று வேதனையாக இருப்பினும் அறிவியல் ரீதியாக நாம் பயணம் செய்யவேண்டியது நெடுந்தூரம் எனப் புரிகிறது . மறுபக்கம் இந்தக்கேள்விகளுக்கு நாம் பொறுமையாகப் பதில் சொல்லியாக வேண்டும் . வேறு வழியில்லை .

ஐயா பகுத்தறிவாளரே ! உங்க மனைவி கோவிலுக்கு போறாங்க அதை உங்களாலே திருத்த முடியலை .. ஊரைத் திருத்த வரீங்களா ?  


இந்த வாதமே அபத்தமானது . தனிமனித உரிமையைக் கிள்ளுக்கீரையாக் கருதும் ஆதிக்க கண்ணோட்டமாகும் .என் அப்பா அம்மா பெரும் பக்திமான்கள் . ஆனால் நான் பகுத்தறிவாளன் . கம்யூனிஸ்ட் . அப்பா அம்மாவை மதிப்பது வேறு ; எனது சுயசிந்தனையும் தேடலும் என் உரிமை . அதை நான் விட்டுக்கொடுக்கவில்லை . என் பிள்ளைகளுக்கும் அவர்கள் பாதையை தேர்ந்தெடுக்க  முழு உரிமை உண்டு . மனைவி கணவனை நேசிப்பது வேறு ; தன் சுயத்தை இழந்து கணவனை மனைவி கண்மூடி பின்பற்றத் தேவை இல்லை . அவர்களுக்கு சுயசிந்தனை , சுய உரிமை எல்லாம் உண்டு .வேடிக்கை என்ன தெரியுமா முற்போக்காளர்கள் மனைவியின் சுயசிந்தனையை சுய உரிமையை மதிக்கிறார்கள் . ஆனால் மதம் பெண்களுக்கு “ சுயம் “ இல்லை என மறுக்கிறது . மத நம்பிக்கையாளர்களும் பெண்களின் சுயத்தை சுயசிந்தனையை சுய உரிமையை ஏற்கமறுப்பதன் எதிரொலியே மேலே உள்ள கேள்வி . ஒவ்வொருவரும் கடவுள் நம்பிக்கையுள்ளோராகவோ அறிவியல் பாதையில் நடப்போராகவோ இருக்க முழு உரிமை படைத்தவர்கள் . யார் மீதும் யாரும் எதையும் திணிப்பவராக இருக்க முடியாது . திணிப்புக்கு தலைவணங்குபவராகவும் இருக்கக்கூடாது .

தவறான நம்பிக்கைகளை உடைத்து நொறுக்கி புதியன புதுக்கியோர் மிகச் சிலரே . அந்தச் சிலரால் மட்டுமே உலகம் வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதன்றோ உண்மை . குடும்பத்தாரையும் தன் லட்சியப் பயணத்தில் இணைக்க எடுத்துரைக்கலாம் . பயிற்றுவிக்கலாம் . ஆனால் , ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது . அதே நேரம் யாரும் பிறருக்காக தன் கொள்கையையில் சமரசம் செய்யவும் முடியாது . கூடாது . வேற்றுமையில் ஒற்றுமை நாட்டுக்கு மட்டுமல்ல ; வீட்டுக்கும் தேவை.

நாத்திகம் பேசுறவங்க இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறுத்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ?

ஐரோப்பாவில் எழுதப்படுகிற பகுத்தறிவு நூல்களாகட்டும் இதர நூல்களாகட்டும் அவை இந்து மதத்தைத் தொடுவதில்லை . இங்கர்சால் எழுதிய நூல்களைப் பாருங்கள் கிறுத்துவ மதமே விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் . சமீபத்தில் இணையத்தில் உலாவந்த போது அகப்பட்ட எல்லா கட்டுரைகளும் அந்தந்த நாட்டில் பெரும் பாண்மையோரின் மதநம்பிக்கை சார்ந்தே கேள்வி எழுப்பியுள்ளன . இதுவே இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள நிலை . வலை தளத்தில் தேடினால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் நாத்திகர் படையைக் காணலாம் . பெரும்பாலும் அங்கெல்லாம் இந்து புரணாங்கள் சார்ந்து அல்ல அந்தந்த நாட்டின் புராணங்களே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதைக் காணலாம் . அவர்கள் பட்டியல் தருவதானால் ஏராளம் பக்கங்கள் தேவை .போய்த் தேடுங்கள் உண்மை அறியலாம் .

இங்கேயும் டாக்டர் கோவூர் எழுதிய நூல்களில் கிறுத்துவ மதம் சார்ந்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் காரணம் அவர் கிறுத்துவச் சூழலில் பிறந்தவர் . பெரியார் பெரிதும் இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார் . அவர் பிறந்த சூழல் அப்படி . அதே சமயம் இங்கர்சாலின் “ நான் ஏன் கிறுத்துவனல்ல “ என்ற நூலையும் மாவீரன் பகத்சிங்கின் “ நான் ஏன் நாத்திகனானேன் ?” நூலையும் மொழிபெயர்த்து அச்சிடச்செய்தவர் அவரே . சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எல்லா மதத்தினரின் மூடநம்பிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கினார் . ஒருவர் அவர் பிறந்த மதச்சூழல் – பிறப்பால் அவர் மீது திணிக்கப்பட்ட மதம் இவற்றையே நன்கு அறிவார் ; எனவே அது சார்ந்து பேசுவதே இயல்பு . மாறாக பிற மதத்தை விமர்சிக்கப் புகின் தேவையற்ற மதமோதலுக்கு வழிகோலிவிடக் கூடுமல்லவா ?

உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயிலில் யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தா உங்களுக்கு என்ன ? கோவில் நுழைவுப் போராட்டத்துக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் ?

இது மதநம்பிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல . மனித உரிமை சார்ந்த பிரச்சனை . சமத்துவம் சார்ந்த பிரச்சனை . நாம் அவர்களைப் பார்த்து கேட்க ஆசைப்படும் கேள்வி இதுவே , “ கடவுளை நீயும் நம்புகிறாய் ; அவனும் நம்புகிறான் . அப்படியிருக்க உனக்கு மட்டுமே பூஜை செய்ய உரிமையும் பாத்தியதையும்  உண்டு அவனுக்கு இல்லை என்பது என்ன நியாயம் ? கடவுள் எல்லோருக்கும் பொது என்பது பொய்யா ? ஒரு சாராருக்கு மட்டுமே உரியவரென்றால் அவர் எப்படிக் கடவுளாவார் ? உமது நம்பிக்கைப்படி கடவுள்தாம் உலகத்தைப் படைத்தார் எனில் அவர் ஒரு சாராரை மட்டும் படைத்தாரா எல்லோரையும் படைத்தாரா ? கடவுளுக்கு ஒரு மொழிதான் தெரியுமா ? உண்மையில் நாத்திகரைவிட கடவுளை அதிகம் கேவலப்படுத்துகிறவர் யார் ? இப்படி பிறர் உரிமையை மறுப்பவரல்லவா ? “

உங்களுக்கேன் அக்கறை என முற்போக்காளரை நோக்கி கேட்பவரே ! உரிமை எல்லோருக்குமானது . அதனை ஒருசாராருக்கு மறுக்கும் போது எதிர்த்துக் கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .அடுத்தவீட்டுக்காரன் மனைவியை தூக்கிப் போட்டு அடிக்கும் போதோ மிதிக்கும் போதோ தலையிட்டுக் கேட்பதில்லையா ? எரிவது என் வீடல்ல என சும்மா இருப்பது அறமா ? உரிமை மிதிக்கப்படும்போது பாதிக்கப்பட்டவருக்காக குரல் கொடுப்பது சமூகநியாயமே !

நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பார்க்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை ? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க !

பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தது சரியா ? தவறா ? இது நீண்ட நாட்களாக நடக்கும் விவாதம் . அவர் காலத்தில் புரையோடிப்போன சமூகத்தை சீர்திருத்த சில அதிரடி  நடவடிக்கைகள் அவருக்குத் தேவைப்பட்டது . அவர் சுயநலத்துக்காகவோ -  கலவரத்தைத்தூண்டி பதவி நாற்காலியை பிடிப்பதற்காகவோ எந்த வழிபாட்டு தலத்தையும் அவர் இடிக்கவில்லை . அவர் பிள்ளையார் சிலை உடைத்ததால் இன்று மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை வரவில்லை ; மாறாக பிள்ளையார் சதுர்த்தி ஒரு மதவெறி அரசியல் செயல்பாடாக மாற்றப்பட்டதன் பின்னணியில்தான் பிள்ளையார் சிலை பெருக்கம் என்பதறிக ! மனித வரலாற்றில் மதம் எப்போது வந்தது ? கடவுள் எப்போது வந்தது ? இன்னும் பல கடவுள்கள் பல மதங்கள் என பிரிந்து மோதுவது ஏன் ? இந்தக் கேள்விகளை எழுப்பி விடைதேட முயன்றால் அதற்கான விடை சமூக அறிவியலில்தான் கிடைக்கும் .

அம்மை நோய்க்கும் பிளேக் நோய்க்கும் ஒரு குறிப்பிட்டக் கடவுள்தான் காரணம் என எத்தனை நூற்றாண்டுகளாக மனிதகுலம் நம்பி வந்தது . அந்நோய் ஒளிக்கப்பட்ட்து சுமார் இருநூறாண்டுகளுக்குள்தானே ! அதுபோல் அறிவியல் உண்மைகளை சமூகம் ஏற்க பல்லாண்டாகலாம் . எவ்வளவு காலம் என்பது முக்கியமில்லை . எவ்வளவு பேர் ஏற்கிறார்கள் என்பது முக்கிய மில்லை . இது விழிப்புணர்வுக்கான தொடர் போராட்டமே !

மக்களில் பெரும்பாலோர் கடவுள் நம்பிக்கையில் ஆழ்ந்து கிடப்பதற்கு அறியாமை ஒரு காரணமெனில் சமூகச்சூழல் இன்னொரு காரணம் . அறிவியல் ஒளி பரவப் பரவ அறியாமை பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடியிருக்க வேண்டும் ; ஆனால் அவ்வாறு நடக்கவில்லை . இதனால் மக்கள் இன்னும் முட்டாளாகவே இருக்கிறார்கள் என வறட்டு நாத்திகவாதிகள்போல் கூறலாமோ . கூடாது . காரணம் சமூக ஏற்ற தாழ்வும் வறுமையும் கையறு நிலையும் மக்களை மேலும் மேலும் கடவுள் பக்கம் தள்ளுகின்றன . ஆகவேதான் மதம் அபின் என்று சொன்ன மார்க்ஸ் அது இதயமற்றவர்களின் இதயமாக – ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது என்கிற உண்மையையும் சுட்டிக்காட்டினார் . ஆக , சமூக ஏற்ற தாழ்வுக்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தில் மக்களை ஒன்று படுத்துவதன் மூலமே அவர்களை சரியான பாதைக்குத் திருப்ப முடியும் . வெறும் போராட்டம் மட்டுமே சாதித்துவிடாது . இடைவிடாது தத்துவ – அறிவியல் போதனையும் இணையும் போதே நீடித்த பலன் கிட்டும் .

அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ?

எதையும் மனதைக் காயப்படுத்தி திணிக்க முடியாது . காயப்படுத்தும் கூடாது ; ஆயின் காயப்படுத்துவது என்பதென்ன ? உண்மையைச் சொல்வதும் ; அறிவியலாய் கேள்வி எழுப்புவதும் காயப்படுத்துவதாகுமா ?  ஒரு காலத்தில் நரபலி மத நம்பிக்கையாக இருந்தது ? அதை எதிர்த்து முறியடிக்காமல் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீண்டிருக்க முடியுமா ? அன்று நரபலியை கேள்விகேட்ட போது மதநம்பிக்கையில் தலையிடுவதாகத்தானே கூச்சல் போட்டிருப்பார்கள் . தங்கள் உள்ளம் காயப்பட்டிருப்பதாக கூறியிருப்பார்கள் . உடன்கட்டை ஏறுவது மத நம்பிக்கையாக இருந்தது ; அதனை எதிர்த்த போது மதவாதிகள் தங்கள் மதத்தில் தலையிடுவதாகக் கூச்சல் போட்டனர் . ஆயினும் விடாது போராடியதால்தானே அக்கொடிய பழக்கம் ஒழிக்கப்பட்டது . இன்னும்  “சதிமாதா கி ஜே” என்போரை விமர்சனம் செய்வது எப்படிக் காயப்படுத்துவது ஆகும் ? தேவதாசி முறை ஒழிப்பு , தீண்டாமைக்கு எதிரான போராட்டம் எல்லாம் மனிதனை மேம்படுத்தவே ! இது யாரையேனும் காயப்படுத்துவதாக இருப்பின் திருந்த வேண்டியவர்கள் அவர்களே தவிர வேறல்ல .

உலகம் தட்டையல்ல உருண்டை ; பூமியை சூரியன் சுற்றவில்லை சூரியனைத்தாம் பூமி சுற்றுகிறது ; உடலில் இரத்த ஓட்டம் உள்ளது ; உடலில் எலும்புகள் இத்தனை ;  சந்திரனுக்கு சுய ஒளி கிடையாது சூரியனின் பிரதிபலிப்பே ; இப்படி எந்த அறிவியல் உண்மையைச் சொல்லும் போதும் அது மத நம்பிக்கைக்கு எதிராகவே இருந்தது ; அதனால் பலர் தண்டிக்கப்பட்டனர் . மத நம்பிக்கை காயப்படுகிறது என உலகம் இந்த விஞ்ஞான உண்மைகளை ஏற்காமல் விட்டிருந்தால் நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் இல்லாமல் போயிருக்குமே !

மனித குல வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கு வளவாழ்வுக்கு எதிராக இருக்கும் தவறான பழக்க வழக்கங்களை அறிவியல் நோக்கில் சுட்டிக் காட்டுவது எப்படி காயப்படுத்துவதாகும் ? மாறாக அறிவியலின் அனைத்து பலன்களையும் அனுபவித்துக்கொண்டே அறிவியல்ரீதியான கேள்விகளை எழுப்புவதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம் ? அறிவியல் உண்மைகளை ஏற்கத் திராணியற்று நம்பிக்கையைக் காயப்படுத்துவதாகக் கூப்பாடுபோடுகிறார்கள் என்பதே உண்மை . ஆத்திகம் ஒருசாரார் உரிமை எனில் நாத்திகம் இன்னொரு சாரார் உரிமை இதை ஏற்க மறுப்பது ஏன் ?

இந்திய சிந்தனை மரபு முழுவதும் ஆத்திகருடையது என்பது விவரம் தெரியாதவர்கள் கூற்றே ! இன்னும் சொல்லப் போனால் லோகாயவாதம் எனப்படுகிற பொருள்முதல்வாத மரபு வலிமையானது . தேவிப்பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூல்களில் இதற்கான சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன . குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த “ இந்திய நாத்திகம் ” எனும் நூல் உரக்கப் பேசும் . உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகளையும் கண்மூடிப் பழக்கவழக்கங்களையும் சாடிச்சாடி கேள்விகேட்டு கேள்விகேட்டு பெறப்பட்ட முன்னேற்றம்தான் ;  நாத்திகரும் ஆத்திகரும்  - அனைவரும் அனுபவிக்கும் அனைத்துமாகும் .


இந்திய தத்துவ மரபில் விவாதம் முக்கியமானது . அதில்  “ சாமான்ய சள ” என்றொரு வகை உண்டு . அதனை தத்துவஞானிகள் ஏற்பதில்லை ஏனெனில் சாமன்ய சள என்பது விவாதத்தின் மையத்தை விட்டுவிட்டு குதர்க்கமாக குறுக்குசால் ஓட்டுவதாகும் . இந்த குயுத்தியை அவர்கள் நிராகரிப்பர் . மேலே கேட்ட கேள்விகள் அத்தகைய சாமான்ய சளதான் . ஆயினும் குழப்பம் நீக்கிட பதில் சொல்லவேண்டியது கட்டாயமாகிவிட்ட்து . எல்லா விமர்சன்ங்களுக்கும் முதன்மையானது மதங்களைப் பற்றிய விமர்சனமே என்பது மார்க்சிஸ்ட்கள் உறுதியான முடிபு ; அதே நேரம் வசைபாடுவதோ அவதூறு பொழிவதோ அல்ல சமூக அறிவியல் நோக்கில் பகுத்தாய்வதே ஆகும் . அதனைத் தொடர்ந்து செய்வோம் . யாரையும் காயப்படுத்த அல்ல : விழிப்புணர்வுக்காக – சமூக சமத்துவத்துக்காக – சமூக நீதிக்காக – சமூக முன்னேற்றத்துக்காக !.











சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 18

Posted by அகத்தீ Labels:


சும்மா கிடந்த சொல்லை எடுத்து-18


 வரம்பு மீறி வலுத்த கைகள்


சு.பொ.அகத்தியலிங்கம்


“தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே /அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே /அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் /உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணை யிருப்பேன்” இந்தப்பாடல் நெஞ்சை வருடும் . “ஆலய மணி” படத்தில் இடம்பெற்றது . கண்ணதாசன் எழுதியது. பலரை தாலாட்டித் தூங்கவைத்தது இந்தப் பாடல் .

“காலமிது காலமிது… கண்ணுறங்கு மகளே… கால மிதைத் தவற விட்டால்… தூக்கமில்லை மகளே… தூக்க மில்லை மகளே…” என “சித்தி” திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணதாசன் எழுதிய அர்த்தம் செறிந்த வரிகள் இன்றும் பசுமையாய் நெஞ்சிலாடுகிறது .“கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே” எனத் தொடங்கும் வைரமுத்து வின் பாடல் “தண்ணீர் தண்ணீர்” படத்தில் நம்மை அழவைக்கும் அதில் , “.. ஆத்தா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து தொட்டில் நனைக்கும் வரை உன் தூக்கம் கலைக்கும் வரை ..” என்ற வரிகள் நாட்டுப்புற தாலாட்டின் அடியொற்றியதெனினும் இதயத்தை ஊடுருவி நிற்பவை .

இப்படிக் காலம் நெடுகிலும் தூக்கம் என்பதை நிம்மதியின் அம்சமாகவே கண்டபோது அதிரடியாக தூங்காதே எனச் சொல்லுகிற துணிச்சல் பட்டுக் கோட்டைக்கே உரிய போர்க்குணம் மிக்க விழிப்புணர்வின் வெளிப்பாடு. பட்டுக் கோட்டையும் பதிபக்தி திரைப்படத்தில் ஒரு தாலாட்டுப்பாட்டு எழுதியிருப்பினும் அது பெருமளவு பிரபலமாகவில்லை . “ தூங்காதே..” என்ற வார்த்தையே அவருக்குத் தனி அடையாளத்தைத் தந்தது .

ஆம் ,நாடோடி மன்னன் (1958) திரைப்படத்தில் பாடிய பாடல் இன்றும் நம் தூக்கத்தை விரட்டி விழிப்புணர்வை விதைத்துக் கொண்டிருக்கிறது . “ தூங்காதே தம்பி / தூங்காதே - நீயும் / சோம்பேறி என்ற பெயர் வாங்காதே” இந்தப் பல்ல வியைத் தொடர்ந்து அடுத்தடுத்த சரணங்கள் பட்டுக்கோட்டையின் வீரியமான சமூகப்பார்வைக்கு சாட்சியாகும் .“ நீ தாங்கிய உடையும் / ஆயுதமும் - பல / சரித்திரக்கதை சொல்லும் / சிறைக்கதவும் / சக்தி இருந்தால் / உன்னைக் கண்டு சிரிக்கும் / சத்திரந்தான் உனக்கு / இடம் கொடுக்கும் ” திமுகவில் எம்ஜிஆர் இருந்த காலம் . அவர்கள் திராவிடநாடு கோரிக்கையை உரக்கப்பேசிய காலம் . பட்டுக்கோட்டையோ திராவிடநாடு கோரிக்கைக்கு எதிரானவர் . இச்சூழலில் தமிழனின் பழம்பெருமை யையும் பாரம்பரியத்தையும் நினைவூட்டிட வேண்டும் ; பிரிவினையை ஆதரிக்கவும் கூடாது . மிகச்சாதுரியமாக இவ்வரிகளில் அதனை சாதித்துள்ளார் .

அடுத்த சரணத்தில் பகுத்தறிவும் தொலைநோக்கும் பின்னிப்பிணைந்திருக்கும். “ நல்ல பொழுதையெல்லாம் / தூங்கிக் கெடுத்தவர்கள் / நாட்டைக் கெடுத்ததுடன் / தானுங் கெட்டார் - சிலர் / அல்லும் பகலும் / தெருக்கல்லா யிருந்துவிட்டு / அதிர்ஷ்டம் இல்லையென்று / அலட்டிக் கொண்டார் / விழித்துக் கொண்டோ ரெல்லாம் / பிழைத்துக் கொண்டார் - உன்போல் / குறட்டை விட்டோரெல்லாம் / கோட்டைவிட்டார் ” திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் அரசியல் பிரச்சாரத்தையும் மிகச்சரியாக இணைத்தவர் அவர்களின் பிரிவினை வாசம் தவறியும் வராமல் பார்த்துக் கொண்டார் .

இதனைத் தொடர்ந்து எங்கெங்கு தூங்கினால் என்னென்ன நட்டம் எனப்பாடுவார் , “ போர்ப்படையினில் தூங்கியவன் / வெற்றியிழந்தான் - உயர் / பள்ளியில் தூங்கியவன் / கல்வி இழந்தான் / கடைதனில் தூங்கியவன் முதலிழந் தான் - கொண்ட / கடமையில் தூங்கியவன் / புகழ் இழந்தான் ..” எனப் பெரியபட்டிய லிட்டவர் முத்தாய்ப்பாகத் தன் சமூக கோபத்தை வெளிப்படுத்துவார் “ இன்னும் / பொறுப்புள்ள மனிதரின் / தூக்கத்தினால் - பல / பொன்னான வேலையெல்லாம் / தூங்குதப்பா” ஆமாம் . ஆமாம் . இன்றும் இதுவே நிஜமாக உள்ளது .

உத்தம புத்திரன் திரைப்படத்தில் “மூளை நெறஞ்சவங்க / காலம் தெரிஞ் சவங்க மூத்தவங்க படிச்சவங்க / வாழுகின்ற நாடு” ஒருவன் குரலாய்ச் சொன்னார். ஆனால் என்ன நடக்குது தெரியுமா எனக் கேள்வி கேட்காமல் அடுத்தவன் மூலம் சொல்லுவார் ,

 “ மூச்சுத் திணறுதுங்க / முழியும் பிதுங்குதுங்க / பார்த்துக்குங்க கேட்டுக்குங்க / ஜனங்கள் படும்பாடு ! - இது” இதன் விளைவாய் நெலமை நெருக்குவதை “நீதி தவிப்பதை, கொடுமை மேல் கொடுமை பெருகுவதை, பொறுமை சோதிப்பதை - பாதை மாறி நடப்பதை பழம்பெருமையை , பழக்கவழக்கங்களைக் குலைப்பதை எல்லாம் சுட்டிக்காட்டி விட்டு ஒரு குட்டு வைப்பார் , “ என்ன இருந்தாலும் மனுஷன் / இப்படி ஆடக்கூடா தென ” ஒருவன் தொடங்க ; “ எதுக்கும் ஒரு முடிவிருக்கு அதிகநாள் ஆடாது ” என அடுத்தவன் இடிக்க : “ ஏழைகளை அடிச்சுப் பறிக்கும் / எண்ணம் உடம்புக் காகாது” என முன்னவன் மீண்டும் சொடுக்க ; “ காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா / கவனிக்காமெப் போகாது” என மற்றவன் அடக்க தொடரும் .

இந்த நிலைமை ஏன் என்ற கேள்விக்கு விடை தெறித்தது.“ அன்பு வளர்ந்த கோட்டைக்குள்ளே / அகந்தை புகுந்து கலைக்குது ” அதற்கு என்ன காரணமெனில் “ வரம்பு மீறி வலுத்த கைகள் / மக்கள் கழுத்தை நெரிக்குது / விருப்பம் போல நரிகள் சேர்ந்து / வேட்டையாடிக் குவிக்குது / வெறிநாய்க்கு உரிமைவந்து வீட்டுக் காரனைக் கடிக்குது ..” இந்த வரிகள் 2014 தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஆட்சிபீட மேறிய மதவெறி சக்திகளை விமர்சிப்பதுபோல் சவுக்காய் விழுகிறது . இது 1958 ல் எழுதியது. ஆனால் இன்றைக்கும் நூறு விழுக்காடு பொருந்துகிறதே அதுதான் பட்டுக்கோட்டையின் அரசியல் நோக்கின் தனிமுத்திரை.

பட்டுக்கோட்டை மக்களை நேசித்தவன் ஆயினும் மக்களின் அறியாமையைப் பகடி செய்தவன் ; அவர்களின் செயலின்மையை வெறுத்தவன் ; வாய்ப்புக் கிடைத்தபோது குத்திக் காட்டவும் தவறவில்லை ; உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் நம்பும் மனிதர்களை கண்டு நொந்தவனும் கூட .

“ பாண்டித்தேவன் ” ( 1959) திரைப்படத்தில் ஒரு பாடல் கடுமையாகச் சாடும். “ சொல்லுறதைச் சொல்லிபுட்டேன் / செய்யுறதைச் செஞ்சிடுங்க / நல்லதுன்னா கேட்டுக்குங்க / கெட்டதுன்னா விட்டுடுங்க” இப்படி ஏன் சொல்லுகிறார் ; அதற்கும் அவரே விளக்கம் சொன்னார் , “ முன்னமே வந்தவங்க / என்னென்னமோ சொன் னாங்க / மூளையில ஏறும்னு / முயற்சியும் செஞ்சாங்க / ஒண்ணுமே நடக்காம / உள்ளம் நொந்து செத்தாங்க / என்னாலும் ஆகாதுன்னு / எனக்கும் தெரியுமுங்க” சமூகயதார்த்தம் இன்றைக்கும் அப்படித்தானே உள்ளது .

இதைப் பார்க்கும் போது ஆத்திரம் வரத்தானே செய்யும் . பட்டுக்கோட்டைக்கும் வந்தது . “முடியிருந்தும் மொட்டைகளாய் / மூச்சிருந்தும் கட்டைகளாய் / விழியிருந்தும் பொட்டைகளாய் / விழுந்து கிடக்கப் போறீங்களா ? முறையைத் தெரிஞ்சு நடந்து / பழைய நினைப்பை மறந்து / உலகம் போற பாதையிலே / உள்ளம் தெளிஞ்சு வாரீங்களா ? ” இப்படிக் கேட்டவர் என்ன நடக்கும் எனக் காறி உமிழ்வதுபோல் சொன்னார், “சித்தர்களும் யோகிகளும் / சிந்தனையில் ஞானிகளும் / புத்தரோடு ஏசுவும் / உத்தமர் காந்தியும் / எத்தனையோ உண்மைகளை / எழுதி எழுதி வச்சாங்க / எல்லாந்தான் படிச்சீங்க / என்னபண்ணி கிழிச்சீங்க” உரிமையோடும் உறுத்தும் படியும் மக்களை விமர்சித்தார் . அதுவும் விழித்தெழ வேண்டும் என்கிற தணியா பேரார்வத்தால்தான் .

போராட எழவேண்டும் என்பதை அறைகூவலாக சொல்ல வாய்ப்பு கிடைத்த போது சொல்லவும் தவறவில்லை ; திரைப்படச் சூழல் எதுவானா லும் நவரசங்களிலும் சமூகவிடியலுக்காக சங்கு முழக்கியவரே பட்டுக்கோட்டை.

“அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களின் மீது முளைக்கும் குறுவாள்கள்” எனும் கவிதையில் இரா. தெ . முத்து எழுதுகிறார் ;
“ அம்மி நகர அடி
 உலை கொதிக்க
மூட்டுக நெருப்பு
தடம் பதிய நட
மிதிப்போரை மிதி
 மறுப்போரை மறு
விலையில்லா பொருட்களுக்கோ
 அழகூட்டப்பட்ட வெற்றுச் சொற்களுக்கோ
 சலனப்படுவதில்லை நாம்
 வேண்டுதலை மன்றாட்டு
கோரிக்கை மனு மீது
 சிலந்திகள் படரட்டும்
நமது மொழியில்
 எழுத்தில் சொல்லாடலில்
 ஒளிரட்டும் தீ .....”

இந்தத் தீயின் வெப்பம் பட்டுக்கோட்டையின் பாடல்களில் இயல்பாய் வெடித் ததை அடுத்து பார்ப்போம் .

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 1-8-2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 17

Posted by அகத்தீ Labels:




சும்மா கிடந்த சொல்லை எடுத்து –- 17


அவர் பாட்டு சொல்லும் ரகசியம்


சு.பொ.அகத்தியலிங்கம்


“சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!”



என அழகின் சிரிப்பை பாரதிதாசன் பட்டியலிடுவார் . கலப்பை சுமக்கும் உழவனையும் , நஞ்சை வயல்களையும் அதில் போற்றுவார் .



அதே கவிதையில்" நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! / நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை" என அழகினையும் நல்லழகு என்பார் .

அழகியல் கவிதையில் வசப்படுமா ? பாடலில் வசப்படுமா? நல்ல பட்டிமன்றத் தலைப்பு . இலக்கிய ஜாம்பவான்கள் கவி தையை வியந்து நயந்து உச்சி மோந்து கொண்டாடுவதுபோல் பாடல்களைக் கொண்டாடுவதில்லை . கவிதையில் கிடைக் கும் சுதந்திரமும் வெளியும் பாடல்களில் சாத்தியமில்லை என்று ஒரே போடாய் போட்டுவிடுவர் . ஆனால் மக்கள் நெஞ் சில் சிம்மாசனம் அமைத்து வீற்றிருப்பது பாடல்களே ! கவிதை கள் போய்ச் சேராத கடைக்கோடி குக்கிராமத்தையும் திரைப் படப்பாடல் எட்டிவிடுகிறது . அதன் வலிமையும் வீச்சும் அதுவே. பாடல்களே கலைகளின் மூத்தப் பிள்ளை. “ ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு / ஒரு கோலமயில் என் துணையிருப்பு / இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு / நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” இப்பாடல் கண்ண தாசனைக் காட்டிடும் கண்ணாடி என்பர் ; முதல் இரு வரிகள் அவரின் ஒரு முகம் காட்டும் .

இசைப்பாடல்தான் அவர் உயிர்த் துடிப்பு . இன்றும் கண்ணதாசன் அவரது பாடல்களில்தான் வாழ் கிறார் என்பது என் கணிப்பு . அழகின் சிரிப்பு அவரது சிறப்பு . பட்டுக்கோட்டையோ புனைந்ததெல்லாம் பாடலே . அவனைப் “பாட்டுக்கோட்டை ” என்று அழைப்பது உயர்வு நவிற்சி அல்ல; உண்மை .ஆம்! பட்டுக்கோட்டை இயல்பில் ஒரு பாடகனே . நாட்டுப் புற மரபில் உதித்த பாடகன் . பாரதியையும் பாரதிதாசனையும் தன் குருவாய் கொண்டவன். ஒரு தத்துவத்தை வரித்துக் கொண்டவன் . அவன் பாடல்களில் கொஞ்சும் இசையமுதை - உவமை நயத்தை - உவமான அழகை - பூத்துக்குலுங்கும் அழகின் சிரிப்பை எழுத எழுத நீளும். விலங்குகள், பறவை கள் , இயற்கை இவற்றோடு பின்னிய அவனது கருத்தாழமும் கவித்துவமும் மிக்க பல பாடல்களைக் கடந்த பல வாரங்க ளாய்த் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .

மீண்டும் கூறியது கூறல் வேண்டாம் என்பதால் அவற்றை நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள் . வேறு சிலவற்றைப் பார்ப் போம் . “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” (1960) திரைப்படத்தில் ஒரு பாடல் .“ என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ / இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே ” நிலவோடு காதலியை ஒப்பிடுவது கவிஞர்கள் இயல்பே. ஆனால் நில வைக் காதலிக்கு உறவாக்கிய கற்பனையில் ரத்தபந்தம் பட்டுக்கோட்டையின் தனித்துவமோ ! “கன்னத்தில் காய மென்ன வெண்ணிலாவே - உன் / காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே” என்கிற போது நகக்குறி, பற்குறி என்கிற பழந்தமிழ் பாடல் மரபின் தொடர்ச்சியும்; மெல்லிய இதயத் துடிப்பையும் ஒருங்கே காணலாம் . “ மின்னும் இயற்கையெல்லாம் / உன்னழகைக் காட்டுதடி/ எண்ணமெனும் தேன்கூட்டில் / இன்பக் கனல் மூட்டுதடி ” இப்படி தேனெடுக்க நெருப்பு மூட்டுவர் . இங்கே காதல் நெருப்பு. அழகான கற்பனை .

இந்தத் தனிப்பாடலின் இறுதிவரிகளில் “ இல்லத்தில் நீ இருந்தால் / இருள்வர அஞ்சுதடி / மெல்லத் தமிழ் உனது / சொல்லில் வந்து கொஞ்சுதடி” என்பார். அடடா! அடடா !இன்னொரு தனிப்பாடல் . “ சின்னஇடை துவளச் செங்கை வளை குலுங்கத் / தென்றலொடு கூந்தல் சிலிர்த்து விளை யாட / மண்ணுக்கு மேனி வலியெடுக்கும் என்பது போல் / அன்னநடை போட்டு அழகு விழி அம்பு விட்டு” “தன்னைத் தாங்காத் தளிர்மேனி மீதிலொரு / சன்னஇழை மெல்லுடைதாங் கித் தனமிரண்டும் / முன்னே வழிகாட்ட முகத்தில் ஒளிமிதக்க / வண்ணக் கழுத்தில் மணிபுரள தோளசைய” - இளமை முறுக் கேறிய வர்ணிப்பைக் கொட்டித்தரும் இப்பா டல் திரைப்படத்தில் இடம் பெறாமல் போய் விட்டதே ! இப்பாடலின் கடைசி இருவரி பட்டுக்கோட்டை எங்கே சுற்றினாலும் தஞ்சாவூருக்கு வந்துவிடுவான் என்பதன் சாட்சியாகும், “தன்னந்தனியே தமிழ்நாட்டுச் சாலையிலே / செந்நெற் கதிர்போல் சிரம் வணங்கி வந்தாள் ” அழகான ஒரு பெண் தன்னந்தனியாய் பாதுகாப்புடன் தமிழ்நாட்டுச்சாலையில் வரும் நாளைக் காந்தி போல் கனவு கண்டது வியக்கவைக்கிறது .

இனிய கீதம் எப்போதும் பட்டுக்கோட்டையின் நாடிநரம்போடு பிணைந்திருந்தது போலும் , “கல்யாணப்பரிசு”(1959) படத்தில் பட்டுக்கோட்டையின் ஒவ்வொரு பாடலும் தேனமுது. ‘துள்ளாத மனமும் துள்ளும் / சொல்லாத கதைகள் சொல்லும் / இல்லாத ஆசையைக் கிள்ளும் / இன்பத் தேனையும் வெல்லும் – இசை / இன்பத் தேனையும் வெல்லும் ” இந்த பாட்டு வரிகள் இப்போது காற்றில் மிதந்து வந்தாலும் மனம் அதில் லயிக்கும் . அதில் தொடர்ந்து சொல்லுவார் , “ துன்பக்கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம்” மெய்தானே உழைப்போடு பிறந்ததன்றோ பாட்டு . உழைப்பின் களைப்பை சிரமத்தைக் குறைக்க பாரம் சுமக்கையிலும் கடினமான உழைப்பில் ஈடுபடும்போதும் கூட்டாக பாடப் பிறந்ததே பாடல் .

ஜார்ஸ் தாம்சன் எழுதிய “ மனித சமூகத்தின் சாரம் ” எனும் நூலில் இதனைத் தெளிவாகக் காண லாம். உழைப்பின் வலியை உணர்ந்த பட்டுக்கோட்டை துன்பக் கடலைத் தாண்ட கீதத்தைத் தோணியாக்கியது வியப்பே அல்ல. கீதத்தின் பெருமைகளை அடுக்குவார் . “ அன்புக் குரலில் அமுதம் கலந்தே / அருந்தத் தருவது கீதம்”… “ எங்கும் சிதறும் எண்ணங்களை / இழுத்து வருவதும் கீதம் / இணைந்து மகிழ் வதும் கீதம் துயர் / இருளை மறைப்பதும் கீதம் ” பாட்டு நெஞ் சுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் வருடிவிடுவது போல் உசுப்பி விடுவது போல் உற்சாகம் தருவது போல் உத்வேகம் ஊட்டுவது போல் வேறொன்று உண்டாமோ ! இந்த கீதம் போல் காதலையும் இயற்கையான மனிதத் தேடலாக தேவையாக பட்டுக்கோட்டைப் பார்த்தார் . அதனால் தான் அந்தப் பாடலில் தொடர்ந்து எழுதும் போது சொல்வார் , “சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால் / தோகை விரித்தே வளர்ந்தி டும் / சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால் / தாவி அணைத்தே மகிழ்ந்திடும்...” எவ்வளவு நயமான கற்பனை.

அதே திரைப்படத்தில் தீபாவளியை முன்வைத்து ‘உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி’ ‘கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி’ என இரு நிலைகளில் பாடிய இரு பாடல்களிலும் கற்பனை சிறகுவிரிக்கக் காணலாம் “சித்திரப் பூப்போல சிதறும் மத்தாப்பு / தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு” என ஒரு நிலையிலும் “ ஆசைக்கு அணைபோட்ட / அறிவான நங்கை ..பாசத்தின் சுமையோடு / பறந்து சென்றாளே” என மறு நிலையிலும் ..பட்டுக்கோட்டை வரிகளின் அற்புதம் இன்னும் பசுமையாய் இருக்கிறதே !சரி! சரி! பட்டுக்கோட்டை தன் பாடலை எங்கிருந்து எப்படிப் பெறுவார் ? இயற்கையோடு இயைந்து . ஆம்! .அதை அவரே சொல்லுகிறார் கேளுங்கள்! (ஆதாரம் : பா. வீரமணியின் நூல்)“உண்மையான அழகும் , மனங்கனிந்த அன்பும், செவி களுக்கு இனிமையான ஒலிகளும்தான் என் உள்ளத்தைக் கவர்ந்த காதற்துணைவிகளாகும் . நான் கவிதை எழுத ஆரம்பிக் கும் முன் பறவை இனங்களையும் , மிருக இனங்களையும், தாவர இனங்களையும் கண்டு ரசிப்பேன் .

விளைவற்ற தரிசு நிலங்களை எனக்குப் பிடிக்காது . அது போல் அன்பில்லாத முகங்களையும் அறிவில்லாத செயல்களையும் எனக்குப் பிடிக்காமற் போனதில் வியப்பில்லை என்று எண்ணுகிறேன்” “அழகியப் பூங்காவிலும் , பெருங்காடுகளிலும், வயல்வெளி களிலும் வாழும் பறவை இனங்களும் என் மனதைக் கவருவதுண்டு. அவை இரைதேடி வந்ததும் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதைக் கண்டு மெய்மறந்து ரசிப்பேன் . அவைக் கொஞ்சிக் குலவிக் கத்தும் ஒலிகள் , நான் எந்த வாத்தியத்திலும் கேட்டறியாத இனிய கீதங்களாகும் . இவை தான் நான் அமைக்கும் கவிதைகளுக்கு மூலகாரணமாகும்.” கவிஞரின் இயற்கைமீதான காதலும் அளவற்ற அன்பும் அவரை எழுதத் தூண்டின . அவர் பாடலில் இரண்டறக் கலந்து நின்ற அன்புக்கும் ஓசை நயத்துக்கும் அழகிய கற்பனைக்கும் இந்தப் பார்வை ஊற்றுக்கண்ணாய் இருந்தன . நகரத்தில் இயந்திர வாழ்க்கையில் அரைபடும் கவிஞனுக்கு இந்தப் பேரனு பவம் கிட்டுமோ ? அவர் எழுதியதெல்லாம் பாடலே . ஆயினும் அவற்றையும் கவிதை என்றே கூறினார் . கவிதையின் பேரரசி தானே பாடல்.
கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் இயற்கையை ரசிப்பவர்கள் . போற்றுபவர்கள் . வியட்நாமின் மாபெரும் தலைவர் தோழர் ஹோ –சி-மின் எழுதிய கவிதைநெடுக இம்முத்திரையைக் காணலாம் . சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது அவர் எழுதிய கவிதை இதோ ! .

 “ யன்னல் வழியாக

அழகு நிலா பொழிகிறது

யாத்திடுக ஓர் கவிதை

என்றெனக்குச் சொல்கிறது

மின்னல் மனப் போர் வீரன்

நிலைமையிலே யானுள்ளேன்

மீதமில்லை நேரமிங்கு

கவியேதும் பாடுதற்கு”

பட்டுக்கோட்டை தம் பாடல்களில் சமூக அக்கறையையும் பொதுவுடைமைச் சிந்தனையையும் வலிந்து திணித்தாரா ? அடுத்து பார்ப்போம்.

நன்றி : தீக்கதிர் இலக்கியச் சோலை 25 ஆகஸ்ட் 2014

சும்மா கிடந்த சொல்லை எடுத்து .. 16

Posted by அகத்தீ Labels:




சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 16

அறிவுக்கதவைச் சரியாய் திறந்தால்...

சு.பொ.அகத்தியலிங்கம்

“எரிமலை எப்படிப் பொறுக்கும்? / நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்?” - எனத் தொடங்கும் சிவப்புமல்லி திரைப்படப் பாடல் இன்னும் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது .இப்பாடலில் இந்த வரிகளுக்கு அடுத்து வந்த வரியை தணிக்கைத் துறையின் கத்திரி காவு வாங்கியிருக்கிறது. அடுத்து ‘ரத்தச் சாட்டை எடுத்தால் /கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்‘ என்று எழுதியிருந்தார் வைரமுத்து . ‘ரத்தச் சாட்டை’ என்ற சொல் லில் வன்முறை இருப்பதாக தணிக்கைத்துறை கருதியது.பாடல் பதிவாகி படம் எடுத்து முடிக்கப்பட்டுவிட்ட நிலையில்.. இந்தப் பாடலின் வரிகளை தணிக்கைக்காக பின்வரு மாறு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது என்கிறார் வைரமுத்து . “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் /துன்பச் சிறையின் கதவு தெறிக்கும்.” இந்த வரிகளே திரைப்படத்தில் இடம் பெற்றது .“நாம் கண்ணீர் விற்கும் ஜாதி / இனி அழுதால் வராது நீதி” போன்ற வரிகள் நரம்பை முறுக்கேற்றும் .

“ஓடி ஓடி உழைக்கணும்... / ஊருக்கெல்லாம் கொடுக்கணும்... ” என்கிற பாடல் நல்லநேரம் திரைப்படத்தில் இடம் பெற்றது . புலமைப் பித்தன் எழுதியது . “வயித்துக்காக மனுஷன் இங்கே / கயித்தில் ஆடுறான் பாரு / ஆடி முடிச்சி இறங்கி வந்தா / அப்புறம் தாண்டா சோறு” என்ற வரிகள் நெஞ்சைப் பிசையும் . பாடலில் ஒவ்வொரு வரியும் கருத்துச் செறிவோடு இருக்கும் . அதே பாடலில் ஒரு சரணத்தில் பாடுவார் , “ வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் / சட்டம் ஆகாது தம்பி/ பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் / சட்டம் ஆகணும் தம்பி” இப்படி சமூகச் சிந்தனையும் சமத்துவத் தேடலும் தமிழ் திரைப்பட பாடல்களில் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது .

இங்கே திராவிட இயக்கமும் , பொது வுடைமை இயக்கமும் வீரியமாகச் செயல்பட்ட அரசியல் - சமூகச் சூழல் தொடர்ந்து திரைப்பட உலகிலும் தாக்கத்தை உருவாக்கியது . முன்னத்தி ஏர் எனச் சொல்லத் தக்கவர் நம் பட்டுக்கோட்டையே ! அவர் பார்வை நெருப்பு வார்த்தைகளால் அல்ல நெருப்புச் சிந்தனைகளால் வார்க்கப் பட்டிருந்தது .கூர்மையாக இருந்தது .

“ வாழவைத்த தெய்வம் ” ( 1959) திரைப்படப் பாடல் ஏழைகளின் புது உலகம் எதுவென முகவரி காட்டும் . “ வெங்கிமலை உச்சியிலே ! - புது / வெற்றி நின்று அழைக்குதடா ! - புகழ் / மங்கிக் கிடந்தவர்க்கே ! - அங்கே / வாழ்க்கை இருக்குதடா” என ஒருவன் அழைப்பு விடுகிறபோது மேலும் சொல்வான் , “ பொங்கி ஓடும் வெள்ள மெல்லாம் / பள்ளத்தில் வீழந்து வீணாய்ப் / போகுதடா ! உள்ளம் வேகுதடா ! / புறப்படடா ! உடனே புறப்படடா ! பொறுப்புடன் உழைத்துழைத்து / வெறுப்படைந் திருப்பவனே / வரப்பெடுத்து வயலமைத்து / வானம் பார்த்து நிற்பவனே ! / புறப்படடா ! புறப்படடா ! “ என இவன் அழைக்க கூட்டமே “ புறப்படுவோம் ! உடனே புறப்படுவோம்” என வழிமொழிய பாடல் விறுவிறுப்பாகும் .

ஓட்டுவீட்டு முருகப்பா , ஓலைக்குடிசை மருதப்பா , மேட்டுக்கொல்லை வேலப்பா,வேப்பந்தோப்பு மாரப்பா , கருப்பாயி , செவப்பாயி , காடக்குப்பம் வெள்ளை யம்மா .. என பெயர் சொல்லி அழைக்கும் போது இப்பாடல் ஒவ்வொருவரோடும் நேரா கப் பேசி விடுகிறது . மண்ணின் வாசமும் மனதின் உறவும் பளிச்சிடும் . “ ஈரமில்லா பாறைகளை / நொறுக்கிடுவோம் ! - அணையை / எழுப்பிடுவோம் / மரங்கள் போட்டுத் / தடுத்திடுவோம் ! / ஏழைகளின் திசையிலதைத் / திருப்பிடுவோம் தண்ணியை / ஏரி குளம் வயல் நிறையப் / பெருக்கிடுவோம் ” அடடா ! தண்ணியை குறியீடாக்கி சமூகத் தில் யாருக்காக சட்டங்களும் திட்டங்களும் வேண்டும் என விவசாயியின் நெஞ்சில் கருத்தை பதியம் இடுகிறார் பட்டுக்கோட்டை .

அதே பாடலில் ஆணும் பெண்ணுமாய் மாறிமாறி தொடரும் வரிகள் நறுக்கெனப் பாயும். “ கொடுமையையும் வறுமையையும் / கூடையிலே வெட்டிவை ! ” “ கொஞ்ச நஞ்ச பயமிருந்தால் / மூலையிலே கட்டிவை !” “ நெடுங்கவலை தீர்ந்ததென்று / நெஞ் சில் எழுதி ஒட்டிவை !” “ நெரிஞ்சிக் காட்டை அழித்து - அதில் / நெல்லுவிதையைக் கொட்டிவை !” “ ஏழைகளின் புது உலகம் தெரியுதடா !- நாம் / ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா !” அதை நோக்கி அனைவரையும் புறப்படச் சொன்ன பட்டுக்கோட்டை நெருப்பு, எரிமலை என வார்த்தைகள் போடாமலே நெஞ்சில் எரிமலையை கொதிக்கச்செய்தார் .

“ உண்மை ஒரு நாள் வெளியாகும் - அதில் / உள்ளங்களெல்லாம் தெளிவாகும்/ பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப் பொய்யும் புரட்டும் பலியாகும் ” என ‘ பாதை தெரியுது பார் ’ ( 1960) படத்தில் நம்பிக்கை ஊட்டுவார் . “ காலம் அறிந்து கூவும் சேவலைக் / கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது ; / கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும் / கணக்காய் கூவும் தவறாது ” என உறுதியாய் உரைப்பார் . “ தாழம்பூவைத் தலையில் மறைத்தாலும் / வாசம் மறைவது கிடையாது / சத்தியத்தை உலகில் எவனும் / சதியால் மறைக்க முடியாது ” இப்படி அவர் சொல்வது ஆழமானது . ஏனெ னில் நமது நாடு மகாபாரதத்தை கேட்டு வளர்ந்த நாடு. அதில் சதிகள் அதிகம் . அதி லும் வஞ்சகன் கிருஷ்ணன் செய்யும் சதிகள் மூலமே அர்ச்சுணன் கர்ணனைக் கொல் லுவான் . போர் நெடுக கிருஷ்ணனின் சதிகளே வெற்றிக்கு வழிசமைக்கும் .ஆனால் இங்கே சதியால் முடியாதென்று அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னார் . தீர்வும் சொன்னார் ,

“ அன்பு நெஞ்சிலே ஆத்திரம் வந்தால் / ஆண்டவன்கூட அஞ்சிடு வான் ; / அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்தால் பிறவிக் குருடனும் கண் பெறுவான் ” அறிவுக்கண்ணைச் சரியாகத் திறக்கும் போது வம்பும் கலகமும் சிக்கலும் தீரும் ; மனிதனை மனிதன் நம்பிடுவான் ; அப்போது மடையனும் அதிலே திருந்திடு வான் . இந்தத் தெளிவும் தீர்க்கமான பார்வையும்தான் பட்டுக்கோட்டையின் சிறப்பு என தோழர் என்.நன்மாறன் அடிக்கடிச் சொல்லுவார் ; நீ ஆத்திரப்பட்டுப் பயனில்லை; உன் பேச்சைக் கேட்பவன் உணரவேண்டும் . பட்டுக்கோட்டை பாடலைக் கேட்பவர் எழுச்சி கொள்வர் . அவன் ஒரு பாட்டுப் போராளி. அறிவுக்கதவைச் சரியாகத் திறக்க நாம் பயில வேண்டும் ; பட்டுக்கோட்டை அதற்கு உதவுவார் .

பழம் பெரும் நடிகர் டி.கே.பாலசந்திரன் தனது நினைவுகூரலில் பட்டுக்கோட்டை வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை சொல்லுகிறார் (ஆதாரம் தாமரை 1959 / 3 ) “ ஒரு நாள் கவிஞரும் நானும் மைலாப்பூர் லஸ் கார்னரிலிருந்து 3- ஆம் நம்பர் பஸ் ஏறி னோம் . ஆழ்வார்பேட்டைத் திருப்பத்தை நெருங்கிக்கொண்டிருந்தது . வேக மாக வந்து கொண்டிருந்த பஸ் மெதுவாகப் போக ஆரம்பித்தது .ரோட்டை எட்டிப் பார்த்த கவிஞர் ‘ என்ன செங்கொடி தெரிகிறது ?’ என்றார் என்னிடம் . நான் ரோட்டைப் பார்த்துவிட்டு ‘ தண்ணீர்க் குழாய் பழுது பார்ப்பதற்காகப் பள்ளம் தோண்டியிருக்கிறார்கள் . அதற்காக எச்சரிக்கை செய்யும் முறையில் அபாயக் கொடி போட்டிருக்கிறார்கள் ’ என்றேன் .அதற்கு நம் கவிஞர் , ‘ ஓ ஹோ.. ஏற்றத்தாழ்வு எங்குண்டோ அங்கெல்லாம் இந்தக்கொடி உயர்ந்துவிடும் போலிருக்கிறது ’ என்றார் . சிரித்தார் . நானும் சிரித்தேன். ஆனால் என்னை வெகுநேரம் சிந்திக்க வைத்தது . எவ்வளவு கருத்தாழம் ?”

“ உன் நாள் காட்டியை / நீதான் கிழிக்க வேண்டும்../ நாளுக்கென்ன ” .. “ பையைத் துழாவுகிறேன் / புரண்டு படுக்கிறேன் / நகம் உராய்கிறது அரிசிப்பானையில்” என்பார் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் . குறுகத்தறித்த சமூக வெடிப்பல்லவா இது !

சிவசாகர் எனும் தெலுங்கு கவிஞர் எழுதினார் , “ ஒரு புன்னகை ../ அது / இதயத்தை நெருடும் / கண்ணீர் ஓடையைப் / பெருக்கெடுத்து ஓடச் செய்யும் , / ஒரு போராளியின் / முகத்தில் பூவாக மலரும் / என்றெல்லாம் நான் / எண்ணியதே இல்லை.. / அந்தப் புன்னகை - / கத்தியைவிட கூர்மையானது../ரத்தத்தைவிட பிரகாச மானது ../ அந்தப் புன்னகை ஒளிவீசிக் கொண்டிருக்கிறது / அந்த ரத்தசாட்சிகளின் முகத்தில்....” ஆம் மெய்யே. … தொடர்ந்து பார்ப்போம்...
நன்றி : தீக்கதிர் 18 ஆகஸ்ட் 2014

கொடியென்பது..

Posted by அகத்தீ Labels:





கொடியென்பது...


தேசியக் கொடியை - எங்கும்
கம்பீரமாய்ப் பறக்கவிடுங்கள்
அது வெறும் துணி அல்ல
எம் தேசத்தின் ஆத்மா ...

நூலால் நெய்யப்படதல்ல
தியாகவேள்வியில் முறுக்கேறிய
எமது மக்களின் நரம்புகளே
ஊடும் பாவுமாய் பிணைந்திருக்கிறது

வண்ணங்கள் சாயப்பூச்சல்ல
மக்கள் ரத்தமும் வியர்வையுமே..
அதில் மதம் இல்லை சாதி இல்லை
தியாகம் உண்டு தீரம் உண்டு

நேற்றைய தியாகத்தைப் போற்றுவோம்
நாளைய தியாகத்துக்கு தயாராவோம்
ஆனால் .. ஒன்று .. அப்போது - அசோகச்சக்கரம்
மேட்டுக்குடி பக்கமாய் சுழலவிடமாட்டோம் .

சு.பொ.அகத்தியலிங்கம் .
[ 1998 ஆம் ஆண்டு ‘ விடுதலைத் தழும்பு’ நூல் முதல் பதிப்பு வந்தபோது அதில் இடம்பெற்றது ]