உனக்கு 18 வயதாகிவிட்டது…

Posted by அகத்தீ Labels:

 

உனக்கு 18 வயதாகிவிட்டது…

 

 

 

உனக்கு 18 வயதாகிவிட்டது

இனி

உன் வாழ்வை நீயே தீர்மானிக்கலாம்

 

நீ விரும்பிய மதம் ஏற்கலாம்

நீ மதம் மறுத்து பகுத்தறிவு தேடலாம்

நீ விரும்பிய உணவை உண்ணலாம்

நீ விரும்பிய உடையை உடுக்கலாம்

நீ விரும்பிய இசையைக் கேட்கலாம்

நீ விரும்பிய சினிமாவை ரசிக்கலாம்

நீ விரும்பிய புத்தகத்தைப் படிக்கலாம்

நீ காதலிக்கலாம் இருபக்கமும் இசைவிருந்தால்

நீ காதலித்த வரையே திருமணம் செய்யலாம்…

அது சரி ! அது சரி !

நீ விரும்பியதை படிக்க முடியுமோ ?

நீ விரும்பிய வேலை உனக்கு கிடைக்குமோ ?

உன் காதல் கைகூடுமோ எளிதில் ?

 

ஆயினும்

நீ விரும்பிய கட்சிக்கு வாக்களிக்கலாம்

நீ விரும்பிய இயக்கத்திற்காக உழைக்கலாம்

உன் மூளையும் மனச்சாட்சியும் சுட்டும்

கருத்தை பேசலாம் எழுதலாம்….

 

ஆனால் ஒன்று ,

ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கமும்

தனக்கு ஆபத்தில்லாதவரைதான் அனுமதிக்கும்

ஜனநாயகத்தின் சூத்திரக்கயிறு எப்போதும்

ஆளும் வர்க்கத்தின் கைகளில் தான்

சுரண்டலும் சனாதனமும் மதவெறியும் சாதி ஆதிக்கமும்

கைகோர்க்கும் பாசிச காலத்தில்

எல்லா உரிமைகளும்

வெறும் சொற்களே ஆழந்த பொருளில்லை

 

“ அநீதிக்கு எதிராய் சமரசமின்றி போராட

எப்போதும் எங்கும் யாரிடமும் என்றும்

அனுமதி கேட்கவே வேண்டாம் .

ஒல்லும் வகையெல்லாம் உன் எதிர்ப்பைக் காட்டலாம்.

ஆயின் பரந்த கூர்த்த தொலைநோக்கோடு

வியூகம் வகுக்காமல் வீணே மடிவது

விழலுக்கு இறைத்த நீரே !

போராடப் படி ! போராடிப் பழகு !”

 

உனக்கு 18 வயதாகிவிட்டது

இனி

உன் வாழ்வை நீயே தீர்மானிக்கலாம்

 

 

சுபொஅ.

10/4/2022.


0 comments :

Post a Comment