மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா ?

Posted by அகத்தீ Labels:



மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா?

சு.பொ. அகத்தியலிங்கம்

தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக்கொண்டதே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா?
சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே
இறுதியானது என்பது சரிதானே?

 “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ?




தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக் கொண்டனவே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா ?

அல்பேனியா, கியூபா போன்ற நாடுகளில் செங்கொடி பறக்கத் துவங்கியபோது அவை நாத்திக நாடுகளாகவே தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஆனால் சோவியத் யூனியன் தகர்விற்குப் பின்னால் அந்த நாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளிலும் மக்களின் மதநம்பிக்கை மற்றும் வழிப்பாட்டு உரிமையை அங்கீகரித்துவிட்டன.

சோவியத் யூனியன் பிறந்த போது லெனின் அதனை நாத்திக நாடாக அறிவிக்கவில்லை; ஆயினும் தீவிர பிரச்சாரம் மூலமு, சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் , கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தைத் தொடர்ச்சியாகப் போதிப்பதன் மூலமும் ஒரு பகுத்தறிவுப் பேரொளி சுடர்விடச் செய்தார்.

மக்கள் சீனமும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது .ஆனால் கலாச்சாரப் புரட்சி இதனை மாற்றிப் போட்டது. ஒரு பத்திரிகையாளர் தூதுகுழுவில் ஒருவனாக நான் சீனம் சென்றிருந்தபோது ஒரு புத்தவிகாரைப் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது. அந்த புத்தவிகார் கலாச்சாரப் புரட்சியின்போது ஒரு தொழிற்சாலையாக மாற்றப்பட்டதாகவும், பின்னர் கலாச்சாரப் புரட்சி விலக்கிக்கொள்ளப்பட்டபோது மீண்டும் அது பழையபடி புத்தவிகாராக மாற்றப்பட்டதும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது; அதற்கான தடயங்களும் இருந்தன.

ஆக , இப்போது எந்த நாடும் தன்னை நாத்திக நாடென அறிவித்துக்கொள்ளவில்லை. எனினும் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளில் 166 நாடுகள் மதச்சார்பின்மையே அரசின் கோட்பாடாக, அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. மீதமுள்ள இஸ்ரேல், ஈரான், இராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளில் மட்டுமே மதம் அரசமைப்போடு நேரடியாக ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செய்கிறது.

வங்கதேசம் உருவான போது மதச்சார்ப்ன்மையே அதன் அரசியல் முகமாக இருந்தது . இடையில் முஸ்லீம் நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது . தற்போது மீண்டும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க மாணவர்களும் இளைஞர்களும் போராடுகின்றனர் .கானா, னைஜீரியா,அர்மேனியா, பிஜி, மெசிடோனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் ,உள்ளிட்ட சில நாடுகளில் பெரும்பான்மையோர் மதநம்பிக்கையாளராக உள்ளனர் .
அதே சமயம் சீனா, ஜப்பான், செக்குடியரசு, அல்பேனியா, பிரான்ஸ்,தெகொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்டிரியா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாண்டு ரஷ்யா,வியட்நாம், ஸ்பெயின், உக்ரெயின், இத்தாலி,ஸ்வீடன் , பெல்ஜியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மத நம்பிக்கையற்றோர் மிகுதியாக உள்ளனர் .

மதமில்லா நிலையானது - இயற்கைச் சமயவாதம், உலோகாயதம், உறுதியிலாவாதம், மத மறுப்பு, ஐயுறல்வாதம், ஏதோவொன்றெனும் சிந்தாந்தம், மதமில்லா ஆன்மிகம், சுதந்திரச் சிந்தனையியல், இறைமறுப்பியல், கடவுள் பற்றிய கவலையிலாவாதம், நம்பிக்கையின்மை, இறை சாரா பேரண்டவாதம், சமயச்சார்பிலா மானுடம், மதமில்லா இறைமை, பேரண்டமே கடவுளெனும் தத்துவம், படைத்தபின் பேரண்டமாய் மாறிவிட்ட கடவுள்வாதம் என - உலகெங்கும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் உலக மக்களில் 33 சதவீதத்தினர் நாத்திகர்கள் அல்லது மதம் சாராதவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 11 சதவீதத்தினர் நாத்திகர்கள், 22 சதவீதத்தினர் மதம் சாராதவர்கள்.

 [Irreligion, which may include deism, agnosticism, ignosticism, antireligion, atheism, skepticism, ietsism,spiritual but not religious, freethought, antitheism, apatheism, non-belief, pandeism, secular humanism, non-religious theism, pantheism and panentheism, varies in the different countries around the world. In a 2014 poll 33% of the world population were estimated to be atheist or not religious, splitting into 11% atheists and 22% not religious. ]

ஆக, மதம் இன்னும் சாகவில்லை எனினும் மதமறுப்பாளர் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே போகிறது என்பதே கண்கண்ட உண்மை .

சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே இறுதியானது என்பது சரிதானே?
சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் தடம் மாறிய பின்னணியில், இனி சோஷலிசத்திற்கு எதிர்காலம் இல்லை, முதலாளித்துவமே இறுதியானது என்றனர் சில அறிஞர்கள்.

அப்போது சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பசவபுன்னையா ஒரு சவால் விடுத்தார். வறுமையை, வேலையின்மையை, ஏற்றத்தாழ்வை முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியுமா என்பதே அவரின் கேள்வி. முடியாது என்பதே உறுதியான பதில். அப்படியானால் சோஷலிசத்தின் தேவை முடியவில்லை. மீண்டெழும் என்பதே பதில் .

ஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்கு எதிராக 99 சதவீத மக்கள் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் செல்வ மையமான வால் ஸ்ட்ரீட் போராட்டம் அதனை உறுதி செய்தது .

முந்தைய வேறெந்த சமூக அமைப்போடு ஒப்பிடினும் முதலாளித்துவம் முற்போக்கானதே. எனினும் அது அடிப்படையில் முதலாளி தொழிலாளி என இரு பெரும் முகாம்களாய் உலகைப் பிரித்துவிட்டது. உற்பத்திக் கருவிகளும் , பெரும் செல்வமும் தம் கையிலே கொண்ட முதலாளிவர்க்கம் மக்கள் தொகையில் மிகச் சொற்பம் ஆனால் அதிகாரமும், செல்வமும் அவர்கள் கையில்தான். மறுபுறம் மக்கள் தொகையில் பெரும்பாலாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் கையில் செல்வமும் இல்லை . உற்பத்திக் கருவிகளும் இல்லை. வறுமையும் . துன்பதுயரமுமே மிச்சம். இந்த ஏற்றதாழ்வு சமூகத்தின் பெருங்கேடு. இதனை வீழத்தி சமத்துவமான புதுயுகம் மலர்வது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவை. ஆனால் , அது அவ்வளவு எளிதல்ல .

வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகளுடனான பழைய முதலாளித்துவ சமுதாயம் இருந்த இடத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியானது அனைவரது சுதந்திரமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமைப்பை நாம் பெறுவோம்என 1948ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் தெளிவாகச் செய்த பிரகடனமே இன்னும் உலகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கான நெடிய போராட்டம் தொடர்கிறது. இதனை மடைமாற்றவே மத அடிப்படைவாதமும் , சாதி , இனப் பகைமையும் கொம்பு சீபப்படுகின்றன. விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.முந்நூறாண்டுக்கு பேல் பல நெருக்கடிகளை யுத்தங்களைத் தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் பெரும் மூச்சுத்திணறலோடு இருந்துகொண்டிருக்கிறது. இவற்றோடு ஒப்பிடும் போது சோஷலிசத்தின் வயது மிகக்குறைவு; தனிமனிதன் நூறாண்டு வாழ்வு என்பது மிகப்பெரிது. ஆனால் வரலாற்றில் நூறாண்டு என்பது மிகக்குறைவு.

முதலாளித்துவமும் தட்டுத்தடங்கலின்றி முந்நூறு ஆண்டுகளைக் கடக்கவில்லை. யுத்தம், பிறநாடுகளை அடிமைப்படுத்தியது; – கொள்ளையடித்தது; இவை மூலமே முதலாளித்துவம் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் யுத்தங்களில் சோஷலிச நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அதன் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று. முன்மாதிரி இல்லாத ஒன்றில் சறுக்கல்களும் தடுமாற்றங்களும் இயல்புதானே! முதலாளித்துவ நாடுகளின் சூழ்ச்சியும் ஆட்சியாளர் செய்த தவறுகளும் சோஷலிசத்துக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிவிட்டது. எனினும் இதிலிருந்து பாடங்கற்று சோஷலிச சக்திகள் மீண்டெழும்.

மின் விபத்து ஏற்பட்டதால் மின்சாரமே பிழையானது என்பரோ? மின்சாரமும், மார்க்சியமும் இல்லாமல் இனி உலகம் உய்ய முடியாது. தாமதமாகலாம். தவிர்க்க முடியாது.முதலாளித்துவம் வீழ்த்தப்படுமா? மதம் , கடவுள் , சாதி இல்லாத சமுதாயம் உருவாகுமா? சமத்துவம் பூக்குமா? அரசும் அடக்குமுறையும் இல்லாத சமூகம் மலருமா? பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் நிரந்தர விடுதலை எப்போது? இறுதிப்பகுதியில் பேசுவோம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமேஎன்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ?
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே / அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமேஎன்றார் தாயுமானவர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மிகவும் உன்னதமானது. மிகவும் பரந்த உள்ளம். “பராபரமேஎன கடவுளை நோக்கிச் சொன்னதாலேயே நமக்குப் பிடிக்காமல் போகாது .

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்என்கிற பெருங்கனவோடு நமக்கும் உடன்பாடு உண்டு. “நாமார்க்கும் குடியல்லொம் நமனையஞ்சோம்” “மற்றுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மாஇப்படியான மனதைக் கவ்வும் வரிகளும் ; அது சொல்லும் பொதுமை நலமும் எக்காலத்தும் மனிதர்களின் மனதை விசாலப்படுத்தும். ஆன்மிகம் சார்ந்த சான்றோர் சொல்லினும் அதில் உள்ள பொதுமைக் கருத்துக்காக இது போன்றவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதில் பிழையே இல்லை.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே / சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே / ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் / அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவேஎன வள்ளலார் சொன்னதையும் கூடவே அசை போடவேண்டும். அதுதான் முக்கியம்.

சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல / தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம் / விதவித மானவான வேறுநூல்களும் / வீணான நூல்களே என்று ஆடு பாம்பே!” எனப் பாம்ப்பாட்டிச் சித்தரின் சீற்றம் இன்றும் தேவைப்படுகிறதே !

பிறப்பிலே சாதி மதத்திலே சாதி / பேசிடும் மொழியிலே சாதி /நிறத்திலே சாதி நாட்டிலே சாதி / நீதியில் நிறையில் சாதி / அறத்திலே சாதி ஆலயச் சாதி / அழுகிய பிணத்திலும் சாதி / புறத்தகஞ் சாதி நாற்றமும் சாதி எங்கும் / புங்கவ அழித்தல் நிற்கெளிதோஎன நெஞ்சுடைந்து தமிழ்த் தென்றல் திரு.வி.. வேதனைப்பட்ட நிலை மாறிவிட்டதோ இன்று ?இப்படி நிறையவே தொகுக்கலாம் இடம் போதாது .
மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு மரபுஎனும் நூலில் இளங்கோவன் சொல்லுவதை இங்கு நினைவு கூர்தல் சாலப்பொருந்தும்:

காலந்தோறும் தமிழ்ச்சமூகம் வைதீகத்திற்கு எதிரான வேலைத் திட்டத்தை தனக்கானபாதையாக வகுத்துக்கொண்டு போராடி வந்துள்ள நிலையில் இன்று அதனை மிகப் பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது . இதற்கு முற்போக்கு தமிழ் மரபுகளை நினைவு படுத்துவதும் மக்களிடையே பரப்புரை செய்வதும் அவசியமாகிறது.”

அதே நேரம் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு செய்தி உண்டு. நல்லெண்ணத்தால் மட்டுமே நல்லது விளையாது; மாறாக எது நல்லது அதற்கு எது தடை , ஏன் தடை என்பன போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளே நுழையும் போதுதான் திரை அகலும் . தெளிவு பிறக்கும்

.“உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறதுஎன்றார் காரல் மார்க்ஸ். இந்த வாழ்க்கை அவலங்களுக்கான காரணத்தைத் தேடுவதும்; அதற்கு எதிராக போராடுவதுமே நாம் நினைப்பது போல்எல்லோரும் இன்புற்றிருக்கவழியாகும் . வெறும் வார்த்தைகளாலோ, இறைவனிடம் மண்டியிடுவதாலோ எதுவும் மாறாது என்பதே வாழ்க்கை அனுபவம் நேற்றும் , இன்றும் .

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 03-04-2016


1 comments :

  1. தேனி சுந்தர்

    அழகான கட்டுரை..
    அருமையான விளக்கங்கள்..
    மிகவும் நன்றி தோழர்

Post a Comment